மதிமகள் எழுதிய "அருகில் பயணிக்கும் நிழல்" சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Mathimagal's Arugil Payanikkum Nizhal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மதிமகளின் “அருகில் பயணிக்கும் நிழல்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

எழுத்தாளர் மதிமகளின் முதல் சிறுகதைத் தொகுப்பு. தமிழ் சிறுகதை வரலாற்றில் கோவில்பட்டியை மையமாக வைத்து நிறைய சிறுகதைகள் வந்துள்ளன. இந்த வரிசையில் எழுத்தாளர் மதிமகளின் இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் கோவில்பட்டியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சிவகாசி கிளையின் சார்பில் 2021ஆம் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் நினைவாக சிறுகதைப் போட்டியை அறிவித்தோம். அந்தப் போட்டிக்கான கதைகள் கொரோனா கால வாழ்வியலை மையமாக வைத்து எழுத வேண்டும் என அறிவித்தோம்.

எழுத்தாளர் மதிமகளின் கதையும் அப்போட்டிக்கு வந்தது. போட்டிக்கு வந்த பெரும்பாலான கதைகள் ஊரடங்கு காலத்தில் குடும்பங்களின் பொருளாதார சிக்கல்கள் குறித்துப் பேசின, ஆனால் ஊரடங்கு காலத்தில் குடும்பத்திலுள்ள பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து வந்த ஒரே சிறுகதை ”நட்சத்திரங்கள் சிரித்தன”. அந்த போட்டியில் மதிமகளின் கதை முதல் பரிசை பெற்றது. அடுத்தடுத்து அவருடைய கதைகள் செம்மலர், சிறுகதை காலாண்டிதல்களில் பிரசுரமானது. இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைகளாகவே உள்ளது. பத்து கதைகளிலும் பெண்களுடைய வலி,பெண்களின் ஆசைகளை எந்த ஒரு வர்ணனையும்மின்றி நேரடியாகப் பேசுகிறது.

நிச்சயமற்ற ஒரு மருத்துவமனைச் சூழலில், தனது பச்சிளம் குழந்தையின் உயிருக்காகப் போராடும் ஒரு தாயின் (கண்மணி) மனப்போராட்டமே “பேபி ஆஃப் கண்மணி”.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தையைப் பார்க்கக் காத்திருக்கும் பெற்றோர்கள், அங்கு நிலவும் மரண பயம், சக பெற்றோரின் வலிகள் என ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது.

“எம் பிள்ளை கஷ்டப்படும் போது கூட நான் நல்லா சாப்பிட்டுட்டு இருந்தேனே” என்று கண்மணி குற்றவுணர்ச்சியில் துடிப்பது மனதை உருக்குகிறது.

கண்மணியின் கணவர் வெளியில் தைரியமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் “குழந்தைக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டி வருமோ”, “உடல் தாங்காது என்று நர்ஸ் சொன்னாரே” எனப் பயந்து தவிப்பத்தை நம்மால் உணரமுடிகிறது.

“பேபி ஆஃப் கண்மணி” என்பது வெறும் கதையல்ல; அது பல பெற்றோர்களின் நிஜக்காலப் போராட்டம். கண்மணி இறுதியாகத் தன் கணவனின் கையைப் பற்றிக்கொண்டு உள்ளே செல்லும் போது, வாசகர்களாகிய நமக்கும் “குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது” என்ற எண்ணம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

ஒரு பட்டதாரிப் பெண் திருமணத்திற்குப் பின் அவளது கனவுகள் மங்கிப் போய், சமையலறைப் பாத்திரங்களே அவளது உலகமாக மாறியதை கதா”பாத்திரம்” கதை பேசுகிறது.

இந்தக் கதையின் மிகப்பெரிய பலமே அதன் தனித்துவமான எழுத்து வடிவம். சமையலறையில் உள்ள பாத்திரங்கள் (தோசைக்கரண்டி, சாம்பார் பொடி டப்பா, கரண்டிகள்) பெண்ணுடன் பேசுவது போலவும், அவள் அந்தப் பாத்திரங்களுடன் தனது மனக்குறைகளைப் பகிர்ந்துகொள்வது போலவும் கதை நகர்கிறது.

ஒரு பெண்ணின் வீட்டுச் சூழலை ‘மேஜிக்கல் ரியலிசம்’ (Magical Realism) பாணிக்குக் கொண்டு செல்கிறது இக்கதை.

சமைக்க மூன்று மணி நேரம், பாத்திரம் கழுவ இரண்டு மணி நேரம் என ஒரு பெண் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அந்த நான்கு சுவற்றுக்குள் எப்படிச் செலவிடுகிறாள் என்பதைப் பாத்திரங்களின் வாயிலாகவே கதைசொல்லியது சிறப்பு.

“நான் ஏன் உன்னை (பாத்திரங்களை) வாங்கினேனோ, அதற்காக உன்னை உபயோகிக்கவில்லை” என்று அவள் கூறும்போது, ஒரு வேலையைப் பெற்றுத் தன்னிறைவு அடைய நினைத்த அவளது ஏக்கமும், அதற்குப் பதிலாக வீட்டு வேலைகளில் முடங்கிப்போன விரக்தியும் வெளிப்படுகிறது.

“இறகு மட்டும் இருந்தா என்னையும் தூக்கிட்டுப் பறந்திருப்ப…” என்று ஒரு பாத்திரம் சொல்லும் வரி, அந்தப் பெண்ணின் விடுதலை உணர்வை மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.

சமையலறையை ஒரு சிறையாகப் பார்க்காமல், அங்கிருக்கும் பொருட்களையே தோழிகளாக மாற்றிக்கொள்ளும் அவளது மனநிலை வாசிப்பவர்களுக்கு ஒருவிதமான கனத்த உணர்வைத் தருகிறது.

சமையலறையில் ஒரு பெண் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் சமூகம் ஒருபோதும் ‘வேலை’யாகக் கருதுவதில்லை என்பதை இக்கதையைப் போலவே ”ஜீரோ வேஸ்டேஜ்” கதையும் உரக்கச் சொல்கிறது.

‘செல்வி’ என்ற கதாபாத்திரத்தின் வழியே, கருச்சிதைவு போன்ற ஒரு துயரமான நிகழ்வுக்குப் பிறகு ஒரு பெண் எதிர்கொள்ளும் பிந்தைய மனஉளைச்சலை மிக யதார்த்தமாகப் பேசுகிறது ”வெருள்” கதை.

கதை தொடங்கும் போதே கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் செல்வி தவிப்பது வாசகர்களையும் அந்தப் பதற்றத்திற்குள் இழுத்துச் செல்கிறது. படுக்கை நனைந்திருப்பது, கைகளில் ரத்தம் ஒட்டுவது போன்ற அவளது பிரமை, அவளது காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

“பனிக்குடம் உடைந்தால் அடுத்தே பிள்ளை பிறக்காது”

“இவளுக்குப் பிள்ளையே பிறக்காது”

என்பது போன்ற பேச்சுகள், ஏற்கனவே துயரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை எவ்வளவு பாதிக்கும் என்பதை எழுத்தாளர் மிகச்சரியாகச் குறிப்பிட்டுள்ளார்.

“நானே ஒரு கொலைகாரி தானா?” என்று செல்வி கேட்கும் இடம் மிகவும் கனமானது. ஒரு கருச்சிதைவு நடக்கும்போது, இயற்கை அல்லது உடல்நிலையைக் கடந்து, ஒரு பெண் தன்னைத்தானே குற்றவாளியாகப் பார்க்கும் மனநிலையை நம்மால் உணரமுடிகிறது.

பொருளாதார நெருக்கடி ஒருபுறம், கந்துவட்டிக்காரரின் மிரட்டல் மறுபுறம், வீட்டு உரிமையாளரின் வாடகை உயர்வு மற்றும் காலி செய்யச் சொல்லும் அழுத்தம் என பல பிரச்சனைக்கு உள்ளாகும் ஒரு குடும்பத்தை “நாளையும் சுடும் அனல்” படம் பிடித்துக் காட்டுகிறது.

உழைப்பால் உயர முடியாத நிலையில், கையில் இருக்கும் கடைசிப் புகலிடமான ‘தாலி’யையும் இழக்கத் துணியும் ஒரு பெண்ணின் மனநிலையை மிகுந்த வலியோடு பதிவிசெய்கிறது இக்கதை.

தாலியை அடகு வைப்பதா அல்லது விற்பதா என்ற முடிவை எடுக்கும்போது, அவர் சென்டிமென்ட்களை விட யதார்த்தத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். “ஆத்திர அவசரத்துக்கு உதவாத தங்கம் அப்புறம் எதுக்கு?” என்ற அவரது கேள்வி ஏழ்மையின் யதார்த்தம்.

தாலியை அப்படியே அடகு வைத்தால் அதன் மதிப்பு குறையும் அல்லது தரம் பார்க்கப்படாது என்பதற்காக, தாயம்மாள் தன் கையாலேயே தாலியைத் தட்டி அதன் வடிவத்தை மாற்றும் காட்சி நெஞ்சை உலுக்கியது.

தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பால், வங்கியில் கூடும் கூட்டம் மற்றும் அதனால் தங்கத்தின் விலை நிர்ணயத்தில் ஏற்படும் மாற்றம் ஆகியவை சமகால அரசியலைப் பேசுகிறது.

இந்தக் கதை வெறும் ஒரு குடும்பத்தின் சோகம் மட்டுமல்ல; இது ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் தினசரி வாழ்வியல் போராட்டம். தாலியை விற்று கடனை அடைத்தாலும், நாளை மீண்டும் சூரியன் சுடும் (பிரச்சனைகள் வரும்) என்ற யதார்த்தமான முடிவோடு கதை முடிகிறது.

ஒரு பெண்ணின் கனவு மற்றும் நினைவுகளின் வழியே குடும்ப அமைப்பிற்குள் ஒரு பெண் எதிர்கொள்ளும் மௌனமான வலிகளையும் மிக உருக்கமாகப் பேசுகிறது ‘அருகில் பயணிக்கும் நிழல்’ கதை.

ஒரு பேருந்து பயணத்தின் நினைவலைகளாகத் தொடங்கி, ஒரு பெண்ணின் வாழ்நாள் ஏக்கங்களைச் சொல்லி முடிகிறது இக்கதை

மகா, தன் தந்தையுடன் தூத்துக்குடிக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்காகப் பேருந்தில் பயணிக்கிறாள். அந்தப் பயணம், பத்து வருடங்களுக்கு முன்பு அதே பேருந்தில் தன் தாயுடன் சென்ற ஒரு பயணத்தை அவளுக்கு நினைவூட்டுகிறது. அன்று உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்தப் பயணத்தில், மகா தன் தாயுடன் பகிர்ந்துகொண்ட உரையாடல்களே கதையின் மையம்.

“உனக்கு என்ன கலர் பிடிக்கும்?” என்று மகா கேட்கும்போது, தன் தாய்க்குப் பிடித்த பச்சை நிறத்தைக் கூறிவிட்டு, பிறகு தனக்கும் அதுவே பிடிக்கும் என அந்தத் தாய் சொல்லும் இடம், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்களே இல்லாமல் போனதைக் காட்டுகிறது.

“என்னை மாதிரி நீ வீட்டில் இருந்துவிடக் கூடாது, சொந்தக் காலில் நிற்க வேண்டும்” என்று மகாவில் அம்மா உருக்கமாகப் பேசும் வரிகள் நமக்குல் பேரதுர்வை ஏற்படுத்துகிறது.

“அவ அடுப்படிய ஏன் தாண்டவே இல்லனு நாம யோசிச்சதே இல்லேலடா!” என்ற தந்தையின் கடைசி வரிகள், காலம் கடந்த குற்றவுணர்ச்சியை வாசகர்களிடமும் கடத்துகின்றன.

கொரோனா கால ஊரடங்கின் போது தனது அக்கா வீட்டில் குழந்தையுடன் தங்கி இருக்கும் மாரியின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை நட்சத்திரங்கள் சிரித்தன என்கிற கதை மிக அழுத்தமாகப் பேசுகிறது.ஒவ்வொரு முறையும் இ- பாஸ் நிராகரிக்கப்படும் போது மாரியை விட கதையை வாசிக்கும் நமக்கும் கவலை தொற்றுகிறது. எப்படியாவது அந்த வீட்டை விட்டு மாரி போய்விட வேண்டுமென நமக்கும் பதட்டமாகிறது. இறுதியாக இ-பாஸ் கிடைத்து தனது குழந்தைகளுடன் காரில் செல்லும் போது மாரி விடும் நிம்மதி பெருமூச்சு அவளுக்குமட்டுமல்ல நமக்கும் தான்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மலர் பெரிய மனுஷியாகும் போது அவளுக்கும், மலரின் அம்மாவிற்கும் ஏற்படும் மனச்சூழலை அழுத்தாம தூரம் கதையில் பதிவு செய்துள்ளார்.

இப்படி பெண்களின் புற, அக வாழ்வைப் பேசும் கதைகளாக இத்தொகுப்பை எழுதிய மதிமகளுக்கு வாழ்த்துகள்.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் முன்னுரையில் கூறியது போல “கோவில்பட்டியின் புதிய முகவரி” மதிமகள் தான்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: அருகில் பயணிக்கும் நிழல்
ஆசிரியர்: மதிமகள்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.120
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 நா.ஜெகன், சிவகாசி

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *