நூல் அறிமுகம்: சதீஷ் சந்திராவின் “மத்தியகால இந்திய வரலாறு” – பொ.சங்கரசுப்பிரமணியன்வரலாறு என்றால் மன்னர்களும், ஆண்ட வருடங்களும், நடத்திய போர்களும், அவர்களது வீரபிரதாபங்களும் கைப்பற்றிய பிரதேசங்களுமென பாடப்புத்தகங்களில் படித்து சலித்திருக்கிறோம்.

அப்படியான கி பி 800 முதல் கி பி 1800 வரையிலான ஆயிரமாண்டு மத்தியகால இந்திய வரலாறு நமக்கு தெரியும்தான்.

ஆனால், அந்த ஆயிரமாண்டில் தொழில், வர்த்தகம், சாதி அமைப்பு முறை, பெண்களின் நிலை, உடை…உணவு… கேளிக்கைகள், கல்வி, அறிவியல் மற்றும் மதக்கல்வி, மத இயக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் என்னவாக இருந்திருக்கும் ?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நூல்: மத்திய கால இந்திய வரலாறு
ஆசிரியர்: சதீஷ் சந்திரா | தமிழில் : வேட்டை. எஸ்.கண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
480 பக்கங்கள்
விலை: ₹ 420
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mathiya-kala-india-varalaru/
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆயிரமாண்டு இந்திய வரலாற்றை 20 அத்தியாயங்களில் மன்னர்கள் , ஆண்டுகள் இத்யாதிகள் மட்டுமல்லாது அத்தியாயம் 4, 11, 15, 16, 17 களில் அன்று வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பற்றியும் பேசுகிறது இந்த புத்தகம்.

கி பி 800- 1200 ல் இந்தியா என்னவாக இருந்தது?

தொழில், வர்த்தகம் இந்த காலத்தில் தேங்கிப்போனதாக கருதப்படுகிறது.

தங்க காசுகள் பத்தாம் நூற்றாண்டுவரை இல்லாமல் போனது இதற்கான அத்தாட்சியாக கூறப்படுகிறது.

ஆனால், இது உண்மையல்ல.

ரோமானிய பேரரசு வீழ்ச்சி அடைந்த போதிலும் பைசாண்டிய பேரரசும், சானியப் பேரரசும் இக்காலத்தில் எழுச்சியுற்ற நிலையில் இந்திய வர்த்தகம் தொடர்ந்து தங்கத்தையும் வெள்ளியையும் குவிக்கத்தான் செய்தது.

ஆனால், தங்கமும் வெள்ளியும் கோயில்கள் மற்றும் மாளிகைகளை அலங்கரிக்க அல்லது நகைகளுக்காக அல்லது எதிர்காலப் பயன்பாட்டிற்காக புதைக்கப்பட்டதே தவிர, நாணயங்களுக்காக பயன்படுத்தாமல் போனது ஏன் என்ற கேள்விக்கு நிறைவான பதில் இல்லை.

மக்கள் நிலை…

நெசவு, தங்கம் மற்றும் வேலைப்பாடுகள், உலோகத்தொழில், பிற தொழில்கள் உயர்ந்த தரத்தில் இருந்தன. விவசாயம் செழிப்பாக இருந்தது. பெருவணிகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் வாழ்க்கை அரசரின் வழியை பின்பற்றி …சிலர் மூன்று ஐந்து மாடி மாளிகைகளில் வாழ்ந்தனர். ஆனால் நகரங்களில் வாழ்ந்த மக்கள் உணவுபொருள்கள் மலிவாக இருந்த போதிலும் உண்பதற்கு போதுமான உணவு வாங்க முடியாமல் தவித்தார்கள்.

அரசவையினர் பொறித்த மாமிசமும், மதுவும் அருந்தி மலர்களால் மணம் வீசிக் கொண்டிருந்தார்கள் என்றால் சாதாரண குடிமக்கள் வெறும் அரிசி சோறும் கடுப்படிக்கும் கொடுஞ்சுவையான உத்பல- சாகாக் காயுடன் முடித்து கொண்டார்கள் என பனிரெண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரில் எழுதப்பட்ட ராஜதரங்கிணி நூல் கூறுகிறது.சாதி அமைப்பு முறை

பிராமணர்களின் நிலை வலிமையடைந்தது. ராஜபுத்திரர்கள் என்ற ஒரு புதிய பிரிவின் எழுச்சி ஏற்பட்டது. இவர்கள் யார் என்பது குறித்து கல்வித்துறை அறிஞர்களிடையே ஏராளமான கருத்து மாறுபாடுகள் உள்ளன. சூத்திரர்கள் படிப்படியாக சமுதாய தகுதியில் மேலேறி வந்தனர். அவர்கள் வேதங்களை படிக்கக் கூடாது என்று இருந்தபோதிலும் பிறப்பு, இறப்பு, பெயர் வைத்தல் சடங்குகளுக்கு தகுதி உடையவர்களானார்கள்.

தலித்கள் நிலை

மிக இழிவாக இருந்தது. கழிவு வாறுவோர், செத்த விலங்குகளின் தோல் உரிப்போர், காலணி செய்வோர், வேட்டையாடுவோர் தலித்கள் எனப்பட்டனர். இந்த மக்கள் அத்தியஜா என்ற பெயரில் நால்வருணத்திற்கு அப்பால் வைக்கப்பட்டு ஐந்தாம் வருணத்தினராய் தீண்டப்படாதவராக வைக்கப்பட்டனர்.

பெண்களின் நிலை..

பெண்கள் வேதங்களை படிப்பது தொடர்ந்து மறுக்கப்பட்டது. திருமண வயது கீழிறக்கப்பட்டு அவர்களது உயர்கல்விக்கான வாய்ப்பு அழிக்கப்பட்டது. ஆறு வயதிலிருந்து எட்டு வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும். கணவர் என்ன ஆனார் என தெரியாமல் போனால், இறந்து போனால், துறவறம் மேற்கொண்டால், ஆண்மையற்றவராக இருந்தால் அல்லது வெளிச்சாதியினர் என தெரியவந்தால் மறுமணம் அனுமதிக்கப்பட்டது. இவை மேல்தட்டு பெண்களின் நிலை பற்றியவையே.

சாதாரண குடிப்பெண்கள் பற்றி சிறிதளவே தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் தங்கள் வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு வேலைகளுடன் தங்கள் குடும்ப ஆண்களுடன் அக்கம் பக்கமாக கடுமையாக உழைக்கும் நிலையிலேயே இருந்தனர்.

உணவு, உடை, கேளிக்கைகள்…

வட இந்தியாவில் ஆண்கள் மேல்ச் சட்டையையும் பெண்கள் ரவிக்கையையும் பயன்படுத்தினார்கள். பருத்தி ஆடைகள் பெரிதும் பயன்படுத்தபட்டன. குளிர்காலத்தில் கம்பளி. இருபாலாரும் நகைகள் அணிவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். மரக்கறி உணவு பொதுவானதாக இருந்தது. மயில், குதிரை, காட்டுக்கழுதை, காட்டுக்கோழி, காட்டுப்பன்றி ஆகியவையும் ஏற்கதக்க உணவுகளாகவே இருந்தன.கல்வி, அறிவியல், மதக்கல்வி…

வெகுமக்கள் கல்வி என்ற கருத்தாக்கமே அக்காலத்தில் இல்லை. மக்கள் அவர்கள் வாழ்க்கையை நடத்த எது தேவையென உணர்ந்தார்களோ அதை கற்றார்கள். பெரும்பாலும் கல்வி பிராமணர்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தின் சில பிரிவினர் , சிறப்பாக காயஸ்தர்களுக்கானது என்ற சிறிய பிரிவினருக்குள் அடங்கிப்போனது. மேட்டிமைக்குடியினரிடம் அரசியல், அறம் உள்பட படிப்பது பிரபலமாக இருந்தது.

காயஸ்தர்கள் அவர்களுக்கென்று சொந்தமான கணக்குபணி உள்பட நிர்வாக முறையை போதிக்கும் கல்வி முறையை வைத்திருந்தனர். பல கல்வி மையங்களில் கணிதம் உள்பட அறிவியல், வானவியல் மற்றும் மருந்தியல் ஆகியவை கூட கற்பிக்கப்பட்டன. குறிப்பிட்ட கைவினை தொழிற்கல்வியை தரும் பொறுப்பு பொதுவாக தொழிற் கழகங்கள் ( Guilds) அல்லது தனிப்பட்ட குடும்பங்களை சேர்ந்ததாக இருந்தது.

மதக் கருத்துகளிலிருந்து விடுதலையான கல்விக்கு அதிக அழுத்தம் தரும் மேம்பட்ட முறைசார்கல்வி சில புத்த விகாரங்களால் தொடர்ந்து கற்பிக்கப்பட்டது. பிகாரில் இருந்த நாளந்தா இவற்றில் மிக புகழ் பெற்றது. விக்கிரம சீலா, உத்தாண்டபூர் போன்றவையும் பிகாரில் இருந்த பிற கல்வி நிலையங்கள். நாளந்தா 200 கிராமங்களை மானியமாக பெற்றிருந்தது.

கல்விக்கான மற்றொரு மையம் காஷ்மீர். மதுரை, சிருங்கேரி மடங்கள் தோன்றி மதம் தத்துவம் கற்கும் மையமாக இருந்தன. நாடு முழுதும் இத்தகைய மடங்கள் மதம் தத்துவம் கற்கும் இடங்களாக இருந்தன. இந்த எல்லா மடங்களிலும் சென்று கற்று தேர்ந்தவரே முழுமையாக கல்வி பெற்றவராக கருதப்பட்டது. இக்காலகட்டத்தில் அறிவியற்கல்வி வளர்ச்சி குன்றியது. அறுவை சிகிச்சை மருத்துவம் குன்றிப் போனது. செத்த உடலை அறுப்பது தாழ்ந்த சாதிக்கானது என கருதியதால்… உண்மையில் அறுவை சிகிச்சை நாவிதர்களின் தொழிலாயிற்று. வானவியல் படிப்படியாக சோதிடத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் இரண்டாம் பாஸ்கரரால் எழுதப்பட்ட லீலாவதி எனும் நூல் நீண்ட காலத்திற்கான தரப்படுத்தப்பட்ட நூலாக இடம் பிடித்தது.

இப்படி இந்நூலில் நிறைய சுவாரசியமான விசயங்கள் உள்ளன.

வாசியுங்கள்….
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பொ.சங்கரசுப்பிரமணியன், சிவகங்கை.