‘மாத்தியோசி’ வகுப்பறைகள் – 4 | ஹாரி பாட்டர் வகுப்பறை | ஆயிஷா .இரா. நடராசன்

‘மாத்தியோசி’ வகுப்பறைகள் – 4 | ஹாரி பாட்டர் வகுப்பறை | ஆயிஷா .இரா. நடராசன்

 

ரவீந்திரநாத் தாகூர் சொன்னதாக ஒரு மேற்கொள் உண்டு. நான் அதை விரும்பி என் உரைகளில் இணைத்திருக்கிறேன். ஒரு சிறுவன் பூனை வளர்த்தான். அது புஷ்டியாக வளர்வதற்குப் பால் முக்கிய உணவு என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அது ஒரு குட்டிப்பூனை. எனவே குழந்தைகளுக்குத்  தருவதுபோல ஒருபாட்டிலில் பாலை ஊற்றி ரப்பர் இணைத்து குட்டியை மடியில் வைத்து வாயில் அந்த ரப்பரைத் திணிக்க முயற்சி செய்கிறான். பூனை திமிறுகிறது. பூனையைத் தப்ப விடாமல் இறுக்கிப் பிடித்து பாலை புகட்ட முயற்சிக்கிறான். பால் அருந்தாமல் போனால் பூனை இறந்துவிடும். என்பது அவனது எண்ணம். பூனை கதறத் தொடங்கியது. பிறகு போராடத்தொடங்கியது. பாலை குடிக்கவில்லை. இருவருக்குமான போராட்டத்தில் அந்த பாட்டில் கீழே விழுந்து  நொறுங்கிவிட்டது. பூனைக் குட்டியைச்  சிறுவன் விடுவித்தான். இப்போது அது தரையில்  சிதறிய பாலை வேகமாக நக்கி நக்கி குடித்தது.

நம் கல்விமுறையும் அப்படித்தான். தானாகவே சுவைத்து சுய முயற்சியோடு கற்றிட விரும்பும் ஒரு விஷயம் குழந்தைகளின் ரத்தத்திலேயே உள்ளது என்பதை யோசிப்பதில்லை. எதையும் வகுப்பறையில் வைத்துத் திணிப்பது. குழந்தையின் சுயவிருப்பம் என்கிற சுதந்திர மனநிலையை ஒழுங்கு –வகுப்பறை விதிகள் தேர்வுகள் மூலம் கட்டுப்படுத்தி அவர்களது கற்றலை விலங்காகப் பூட்டி அதை கசப்பான அனுபவமாக மாற்றி விடுகிறோம். பள்ளிப் பருவத்திற்குள் 13 பொதுத்தேர்வுகளைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கை நிலைமையை மேலும் மோசமாகி விடும் என்று நாம் அலற வேண்டி இருக்கிறது.

கற்றலின் முக்கிய படிநிலையான புத்தக வாசிப்பை – அன்றாட பொழுதுபோக்காக மாற்ற நமது  வகுப்பறைகள் தவறிவிடுகின்றன. தெனாலிராமன் கதை ஒன்றில்  வருவதுபோல வேறு ஒரு பூனைக்குட்டியும் நினைவுக்கு வருகிறது.

கொதிக்கும் பாலை பசிக்கும் பூனைக்குக் கட்டாயமாகத் திணித்து – பால் என்றாலே விழுந்தடித்து ஓடிய பூனை தெனாலிராமனின் பூனை. பாடப்புத்தகங்கள் மீதான அளவுக்கு அதிகமான வெறுப்பு காரணமாக வேறு கதை புத்தகங்களைக் கூட தொடுவதற்குக் குழந்தைகள் தயங்கி ஓடுவதைப் பார்க்கிறோம். நமதுகரார் வகுப்பறைகளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று வாசிப்பிற்கும் வகுப்பறை கற்றல் செயல்பாட்டிற்கும் ஒரு ஒப்புமை உண்டு இரண்டுமே ஆர்வத்தை ஏற்படுத்தாவிட்டால்  கைவிடப்படும். எப்படி என்கிறீர்களா?

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் பிளாட்டோ வகுப்பறைகள் பற்றி சொன்ன ஒரு விஷயம் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. கற்றல் என்பது அறிவுப்பூர்வ செயல்பாடு  அல்ல. கற்றல் உணர்வுப்பூர்வமானது. வகுப்பறைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்குவது ஆசிரியர்களா? புத்தகங்களா? தேர்வுகளா? கல்வித்துறையா? என்று கேட்டால் இதில் எதுவும் இல்லை என்கிறார். இஸ்ரேலிய நரம்பியல் நிபுணர் டாக்டர். குர்ரான். குழந்தைகளுக்கு  டோப்போமைன் (Dopamine)  எனும் ஆர்வ ஹார்மோன் சுரந்தால் மட்டுமே கற்றல் நடக்கிறது. ஆர்வ ஹார்மோன் சுரக்காத ஒரு வகுப்பறையில் ஒருபோதும் கற்றல் நடப்பது இல்லை.

Geek Brief: Harry Potter – The Campus Chronicle

ஹாரிபாட்டர் அறிமுகமானது 1997ல். தானாகவே ஆர்வ ஹார்மோனை நொடியில் கோடிக்கணக்கான  குழந்தைகளுக்குச் சுரக்கவைத்த கற்றலின்  சொர்க்கம் ஹாரிபாட்டரின்  வகுப்பறை. புத்தக வாசிப்பு எனும் பழக்கத்தையே உலகம் மறந்தபோது கோடி பிரதிகள் வரை விற்பனை எண்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு. திரும்பப் பாடப்புத்தகத்தைத் தாண்டி குழந்தைகள் கையகப்படுத்தி கீழே வைக்க முடியாமல் அந்த மந்திர வகுப்பறைக்குள் தங்களைக் கிடத்திக்கொண்டார்கள். படி.படி.படி.. என  சதா அலறியும் படிப்பிற்கு டிமிக்கி கொடுக்கும் அவர்கள். எப்போது அடுத்த பாகம் வரும் எனத் துடித்ததைக் கண்டு உலகம் வியந்தது. பிரபல சூப்பர் ஸ்டார் (மற்றும் ஏனைய ஸ்டார்கள்) படம் எப்போ வரும் என படம் வெளியாகும் நாளன்று  தியேட்டர் வாசலில் கூடும். நம்ம வெறி ரசிகர்களை விட ஹாரிபாட்டர் இதோ வந்துவிடும் எனப் புத்தகக் கடை வாசலில் குவிந்த சிறார்களைச் சென்னைகூட பார்த்து வியந்தது.

குழந்தைகளின் பரவசம் என்பது லாலிபாப் முதல் நூடுல்ஸ், ஐஸ்கிரீம்  என பல்கிப்பெருகிய  உலகம். அதில் ஹாரிபாட்டரும் இடம் பெற்றது எப்படி அந்த பரவச உலகில் நம் வகுப்பறைகளின் இடம் என்ன? முதலில்  ஹாரிபாட்டரிடம் நாம் செல்வோம்.

ஹாரிபாட்டர் கல்வி கற்க செல்லும் பள்ளி, மந்திரவாதிகளை உருவாக்கும் வெளி உலகம் அறியாத ரகசியப்பள்ளி,  தனது பதினொரு வயது வரை அனாதை சிறுவன் ஹாரி தன் மாமாவோடும் ஒன்று விட்ட சகோதரன் ஒருவனோடும் நம் ‘சாதா’ உலகில் வசிக்கிறான். ஒரு அலமாறி தட்டில் படுக்கை. எப்போதாவது உணவு. மற்றபடி அனாதை என்பதால் மாமா பயங்கரமாக வேலை வாங்குவார். அடித்து உதைப்பார் . சட்டென்ற ஒருநாள் ஹாரிதான் சாதாரண மனிதர்களில்  சேத்தி இல்லை என உணர்கிறான்.  மாய மந்திர உத்திகளை அவனால் கைக்கொள்ள முடியும் என்று அவனை சந்திக்கும் ஹாக்ரிட் தெரிவிக்கிறார். அவனை ஹாக்வார்ட் மாயமந்திர இயல் பள்ளிக்கு (Hogwart School of Witch Graft & wi Zarding)  அனுப்புமாறு மாமாவைப் பணிய வைக்கிறார். உலகின் கோடானுகோடி குழந்தைகளைக் கட்டிப்போட்ட மாயமந்திர வகுப்பறை இப்படித்தான் கதவுகளைத் திறந்தது.

ஹாரிபாட்டர் தான் யார் என்பதையே அந்த மாய மந்திர இயல் சிறப்புப் பள்ளிக்குள் நுழைந்து  பல்வேறு சாகசங்களுக்குப்  பிறகு மெல்ல மெல்ல அறிந்து கொள்கிறான். ஹாரிபாட்டர் வகுப்பறையின் சக மாணவர்களாக நம் குழந்தைகள் தங்களைப்  புத்தகம் வாங்கிய விலையைக்  கட்டணமாகச் செலுத்தி தாங்களாகவே சேர்த்துக்கொண்டார்கள்.

ஹாரிபாட்டர் குழந்தைகளுக்குச் சொல்லாமல் சொல்லிய பாடங்கள் பல. நம்மிடம் உண்மை இருந்தால் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை- எதையும் மனோதைரியத்தோடு எதிர்கொள்வோம் என்பதை ஹாரிபாட்டர் பாத்திரம் விதைத்தது. தோல்விகள் தற்காலிகமானவை. நமது முயற்சி நிரந்தரமானது. தோழமை என்றால் என்ன என்பதை உணர்த்தும் ஹாரியின்  சகாக்கள் ரொனால்டு வெஸ்லி மற்றும் ஹெர்மியோனி.  ஆசிரியர் –வழிகாட்டி ஆசிரியர் – சக தேடல்வாதி; ஆசிரியர் –குழந்தைகளின் உணர்வுமானி (Emotion – meter) என தெளிவாக முன்வைக்கும் டம்புள்டோர் பாத்திரம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஹாரிபாட்டர் ஒரு வகுப்பறையாக நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? ஹாரிபாட்டர் வகுப்பறை என்பது  முதலில் ஒரே ஒரு அறை அல்ல. மொத்தம்18 விதவிதமான இடங்களில் கற்றல் நடக்கிறது. மாந்திரீகன் ஆவதற்கான பயிற்சிபோலவே தான் இருக்கிறது. ஆனால் நாவலில் இடம்பெறுவது எல்லாம் நமது கற்றல் நடவடிக்கைகளே உதாரணமாக ஹாரிபாட்டர் பாம்புகளின் மொழியான  பார்ஸல்டங் மொழியைப் பேசத் தொடங்கும் இடம் நம்மொழிப்பாட வகுப்பறைகளின்  சூப்பர் வழிகாட்டி. டெமன் டார்கள் எனும் உயிரற்ற வில்லன் பிசாசுகள் தான் குழந்தைகள் சந்திக்கும் அன்றாட சவால்கள். அவைகளை வெல்லாவிட்டால் அவை உங்களுக்குள் புகுந்து உயிர்பெற்று  உங்களுக்கான நிரந்தர பலவீன அடையாளமாக மாறும்.

harry, Potter, Fantasy, Adventure, Witch, Series, Wizard, Magic Wallpapers HD / Desktop and Mobile Backgrounds

ஹாரிபாட்டர் விளக்குமாறு பறத்தல், தன் மந்திர கோலை பயன்படுத்த கற்றல், மாயதாவரங்கள், மாயப்பறவைகள், பிரமாண்ட ஓநாய்களை இவைகளை சமாளிக்க கற்றல்… இவை எல்லாமே நமது தாவரஇயல், விலங்கியல், சைக்கிள் ஓட்டும்  பயிற்சி, அறிவியல் சோதனைகள் என பலவற்றோடு ஒப்பிட்டு உணரத்தக்கவை. குறிப்பாக ஹாரியும் அவனது சகாக்களும் இறந்த காலத்தோடு கைகுலுக்கும் பென்சீவ் எனும் தொடுதிரை நம் வரலாறு பாடம். ஆனால் அதில் சிறப்பு என்னவென்றால்… அவை வெறும் தகவல்கள் அல்ல. ஹாரியின்  தந்தை, பாட்டி, பாட்டியின்  தந்தை என வரலாற்றை நம் சொந்தங்கள் சாதாரண நம் குடும்ப முன்னோர்கள் பார்வையில்  கற்கும் அசாதாரண அற்புதம் அது. பிரிட்டிஷ்காரார்கள் காலத்தில் என முன்னோர் யார் இருந்திருப்பார்கள் என்ன செய்திருப்பார்கள். என்பதன் வழிகற்றல் என்பது புதிய விஷயம். அல்லவா

ஹாரியும் அவனது சகாக்களும்  அவ்வப்போது தங்கள் மாந்திரீக வகுப்புகளை  கட் அடிப்பார்கள்… தாங்கள் பார்க்க அனுமதிக்கப்படாத இருள் மூலைகளை அந்த கல்வி சாலை முழுதும் தேடித்தேடிச்சென்று புதிய உலகை  நோக்கிய புரிதலை விசாலமாக்குவார்கள். யாருமே அறியா வண்ணம் ஆசிரியரே அறியாமல் தான் ஒன்றை கற்கிறோம் எனும் சாகச உணர்வு உயர்ந்த பட்சம் ஆர்வ ஹார்மோனை சுரக்கிறது என்பதே உண்மை.

கற்றலுக்கு எதிரான ஹாரிபாட்டரின் வில்லன் பாத்திரமான வெல்டோமார்ட் பற்றிய ஒரு இடம் மிக கச்சிதமான உளவியல் பாடம். அந்த கோட்பாடு ஜெ.கே. ரௌலிங் (நாவலாசிரியை) நமக்கு கொடுத்திருக்கும் கற்றல் குறித்த புதிய சிந்தனை ஹார்கிரஸ் (Horcrux) தகர்ப்பு என்பதே அந்த அடிப்படை கோட்பாட்டின் பெயர். வில்லன் வெல்டோமார்ட் என ஒரு உருவம் இல்லை. அவன்            பயங்கரமானவன் ஆனால் தன் ஆன்மாவிற்கு ஒரு உருவம் கிடைக்க அவன் அலைகிறான். அவனை கற்றல் ஆர்வம் ஏற்படாத அறியாமை எனும் கொடிய விஷயத்தின் அடையாளமாக நாம் காணமுடியும் ஹாரியின் பெற்றோர்களை கொன்றவன் அவன்தான். ஹாரி குழந்தையாக இருக்கும் போதே அவனை (மாய மந்திர) கல்வி கற்க விடாமல் செய்ய துடித்தவன். அவனது ஆன்மா- உள்ளம் பலஆயிரம் துண்டுகளாக  சிதறி எல்லா குழந்தைகள் – பெரியவர்கள் உள்ளேயும் துளிதுளியாக படிய – அவன் பலரிடம் உள்ளத்திற்குள் இருப்பான்.தீய எண்ணங்களை தந்து இருள் மனதை ஏற்படுத்தி கற்றலுக்கு எதிராக அவன் செயல்படுவான் அவன் தனக்குள்ளும் இருக்கிறான் என்பதை தன் டீன் ஏஜ் பிறழ்வின் ஒரு கட்டத்தில் ஹாரிபாட்டர் உணர்கிறான். எத்தனை முறை நீதிபோதனை  செய்தாலும் குழந்தைகளுக்கு  கற்பிக்க முடியாத  ஒன்றை சத்தமின்றி சந்தடி இன்றி ஹாரிபாட்டர் கற்றுத் தந்துவிடுகிறான். 

ஹாரிபாட்டரின் வகுப்பறை தனித்தனியே குழந்தைகளை தரம் பிரித்து ரேங்க் / மார்க் போடும் வகுப்பறை அல்ல. அங்கே நடப்பது கூட்டாகக் கற்றல் (Collaborative Learning) கூட்டாக இணைந்து ஒருவருக்கு ஒருவர் அளவளாவி கற்றல் என்பது சோவியத் யூனியனில் அதாவது ரஷ்யாவில் அறிமுகமான அபாரமான –அற்புதமான வகுப்பறைகள் ஆகும். ஹாரிபாட்டர், அவரது உற்ற கூட்டாளிகளான ரொனால்டு வெஸ்லி மற்றும் ஹெர்மியோனி கிராங்கர் மூவருமாக இணைந்து கற்றலை எதிர்கொள்ளும் ஏழாண்டுகள்தான் நாவல். மந்திரவாதி ஆவதற்காக கற்கும் ஏழாண்டு பள்ளிப்படிப்பின் ஒவ்வொரு வருடமும் ஒரு பாகம்.

கூட்டாக இணைந்து கற்றல் (Collaborative Learning) எனும் கற்றல் கோட்பாட்டை முன்மொழிந்தவர் சோவியத் கல்வியாளர் லெவ் வயகாட்ஸ்கி (Lev vygotsky) ஆவார். அமெரிக்க கல்வியாளர் பியாகட் வயது அடிப்படையில் மட்டுமே ஒரு குழந்தைக்கு  புரிதல் சாத்தியம் என்று அறிவித்தபோது , அதற்கு எதிராக தன் உளவியலை முன் வைத்தார், வயகாட்ஸ்கி. தனித்து விடப்பட்ட ஒரு குழந்தையின் கற்றல் திறனை விட இரண்டு மூன்று (அல்லது நான்கு) குழந்தைகள் கூட்டாக கற்றலில் ஈடுபடும்போது புரிதலுக்கான எல்லைகளை கடக்க முடியும் என்று வயகாட்ஸ்கி நிருபித்தார்.            

மிகக்கடினமான புதிர்களையும் வில்லன் வோல்டர் மார்ட்டின் ரகசிய சிமிக்கைகளையும் ஹாரிபாட்டர் தனது சகாக்களோடு  உரையாடி உடைக்கும் இடங்கள் வயகாட்ஸ்கியின் வெற்றியை பறைசாற்றும் நாவலின் பகுதிகள் ஆகும். ஒரு குழந்தை தானாகவே கற்கமுடிந்த விஷயங்களுக்கும் தனி ஒருவராக கற்றுபுரிந்து கொள்ள முடியாத ஒன்றிற்கும் இடையே தனது கூட்டாக கற்றல் என்பதை ஒரு பாலமாக பயன்படுத்தினார் வயகாட்ஸ்கி. அந்த இடைப்பட்ட பகுதி ‘அருகாமை வளர்ச்சி பகுதி‘ (Zone of Proximal Development )  என்று அழைக்கப்பட்டது.

  1. கற்றலின் கூட்டாளிகள் இடையே  உரையாடி சுதந்திர அளவளாவுதல் மூலம் –குழுவாக கற்றல்
  2. ஒரு விஷயத்தின் மீதான தன் விமர்சனப்பூர்வ சந்தேகங்களை – தகவல் மீது வீசி, அதை கட்டுடைத்து அலசி விவாதித்து கற்றல்.
  3. ஆசிரியர் அல்லது மூத்தவர் தலையீடு அவரது குறுக்கீடு குறைந்து – மாணவர்களே சுயமாக ஒன்றிணைந்து தேடி கற்றல்.

வயகாட்ஸ்கியின் கற்றல் தத்துவத்தை ஜான்சன், ஸ்லேவின், கூப்பர் போன்ற உளவியல் அறிஞர்கள்  ஆப்பிரிக்க கருப்பின சமூகத்தின்  சுரங்க வேலை கற்றல் மற்றும் மாயன் கலாச்சார சந்ததி கற்றலிலும் பொருத்தி விரிவுபடுத்தினர்.

ஜே.கே.ரவுலிங் வாழ்க்கை வரலாறு: harry potter author jk rowling's life history | Samayam Tamil Photogallery

ஹாரிபாட்டர் நாவலை குழந்தைகள் விரும்பி வாசித்து அதனால் ஆர்வம் தூண்டப்பட்டதற்கு காரணம், நம் பள்ளிகளை அந்த கற்றல் சூழலோடு ஒப்பிட்டு அது போல இங்கு எப்போது வரும் என்ற ஏக்கத்தேடலும் அப்படி  ஒரு இனிய கூட்டாக கற்கும் அனுபவம் தனக்கும் ஏற்படவேண்டும் எனும் விருப்பமும் ஆகும்.

ஐ. நா சபையின் கல்வியின் அடிப்படை தேவை – நோக்கம் சிலவற்றை முன்வைக்கிறது. 1996ல் வெளியான டிலார் கல்விக்குழு அறிக்கையை முன்வைத்து 2000 மாம் ஆண்டு இந்த நோக்கங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி நான்கு அடிப்படை நோக்கங்களை  யுனெஸ்கோ 21ம் நூற்றாண்டு கல்வியின் தேவையாக அறிவித்தது.

  1. அறிந்து கொள்ள கற்றல்
  2. செயல்படுத்திட கற்றல்
  3. ஒன்றிணைந்து செயல்பட கற்றல்
  4. இருப்பிற்காக கற்றல்.

கற்றல் செயல்பாடு என்பது மனிதனுக்குள் இயற்கையாகவே அமைந்த ஒன்று ஆனால் அதை தூண்டிவிட ஆர்வம், குதுகலம், உணர்வுப்பூர்வ ஈடுபாடு, சாகச நோக்கம், மகிழ்ச்சி என யாவும் தேவை. அதற்கு கூட்டாக கற்றல் சூப்பர் தீர்வு.

ஹாரிபாட்டர் வகுப்பறைகளே எதிர்கால குழந்தைகளை கற்றல் தூண்டலுக்கு உட்படுத்த முடிந்த வழிகாட்டி ஆகும். நாம் பள்ளிகளை சதுர வடிவ அறை அறையாக அடுக்கு கட்டிடமாக வடிவமைப்பதை நிறுத்தும் நாள் வரும். இனி தீம் –பார்க் சாகச வகுப்பறைகளே எடுபடும்.

•••••••

தொடர் 1ஐ வாசிக்க: 

வகுப்பறைகள்: மாத்தியோசி – 1 |சுந்தர்பிச்சையின் வகுப்பறை| ஆயிஷா .இரா. நடராசன்

தொடர் 2ஐ வாசிக்க: 

வகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்
தொடர் 3ஐ வாசிக்க: 
‘மாத்தியோசி’ வகுப்பறைகள் – 3 | சகுந்தலா தேவியின் வகுப்பறை | ஆயிஷா .இரா. நடராசன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *