விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்
விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்
ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்
ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்
கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்
வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்
குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்
கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா
தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்
சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்
கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா
காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்
கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்
தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்
வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்
வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…
ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.