அதிகாலை வாசலில் சிதறிக் கிடக்கும்
மஞ்சள் அரளிப்பூக்களை இச்சையாய் நுகரும்
இளம் அணிலொன்றின்
வெள்ளை முதுகுக்கோடுகள்
மூன்றில் புதிதாக
எந்த வெண் புள்ளியுமில்லை
உள்ளே வர வழிமறிக்கும்
சல்லடையடித்த சமயலறைச் சன்னலுக்கு
அந்தப்புறம் நகராமல் நின்றுகொண்டே
விரோதமாய் முறைக்கும்
சங்குப்பூனையின் பச்சை நிற கண்களில்
ஜூவாலிக்கும் குரோதம்
கொஞ்சமும் குறையவில்லை இன்னும்
இரவு உணவுக்கும் முன்னால்
உரத்த குரலில் குற்றப்பத்திரிகை வாசிக்கும்
அப்பாவின் வன்ம குரலும்
படுக்கையில் சாய்ந்த பின்பு
மெல்ல விகசிக்கும் அம்மாவின் தேம்பலும்
கொஞ்சமும் மாறவில்லை
நள்ளிரவில் ஒளிந்து கொள்ள இடம் தேடி
பதட்டமாய் கதவை தட்டும் அகதியான
இந்த நள்ளிரவு சூறைக்காற்றும்
வன்முறையேற்றிக்கொண்டே செல்வதும்
வியப்பாக படவில்லை
மாற வேண்டும் என்று நினைத்த எதுவொன்றும்
மாற்ற வேண்டுமென்று நினைத்த யாவரொருவரும்
மாற்றம் மாற்றம் என்று கதைத்த வேறு எவரும்
மாறவேயில்லை என்பது தெரியாவண்ணம்
முகத்தில் புன்னகையைத் தேக்கியலைவதும்
மாறவில்லை
மற்றும் நான் எழுதுவதாக நான் நினைக்க
என் கை விரல் பிடித்து எழுதிப்போன
மாயக்கரமொன்றும்
இதை எழுத ஆரம்பித்த
நானும்
எழுதிய நானும்
வழக்கம்போலவேஎங்கிருந்தோ
புன்னகைத்துக்கொண்டிருக்கும்
இதை வாசிக்கப்போகும் நீயும்
எதுவும் பெரிதாக மாறிவிட்டதாக
தோணவேயில்லை
தங்கேஸ்