மத்தியதர மனிதர்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பு – ஸ்ரீநிவாஸ் பிரபு

மத்தியதர மனிதர்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பு – ஸ்ரீநிவாஸ் பிரபு

 

யதார்த்த வாழ்வில் சந்திக்கக்கூடிய பல்வேறுபட்ட குணாதிசயங்களை உள்ளடக்கிய மனிதர்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களை தன் கதைகளின் வழியாக கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார் ராஜேஸ்வரி கே தொன்னக்கள். படிக்கும் போது நம்மால் உணர முடிகிறது.

ராஜேஸ்வரி கே தொன்னக்கள் திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள மேல் தென்னங்கள் என்ற ஊரில் பிறந்தவர். திருவனந்தபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தவர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ‘வேஷம் கட்டுன்னவர்‘, ‘அபினவ குப்தன்‘, ‘உல்லாச காலணியில் பாக்கியஸ்ரீ‘ ஆகிய கதைத் தொகுப்புகள், அச்சு சர்க்கஸ் என்ற குழந்தைகளுக்கான நூல், பழமையைத் தேடி என்ற குழந்தைகளுக்கான கட்டுரைத் தொகுப்பு நூல், நாட்டு விசேஷம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவை இவருடைய படைப்புகள் ஆகும்.

உணர்வுப்பூர்வமான வாழ்வைத் தமக்கு விதிக்கப்பட்ட வாழ்வாகவே நினைத்து வாழ்ந்து வரும் மத்தியதர மனிதர்களின் வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்திருக்கும் ராஜேஸ்வரி கே தொன்னக்கள்ளின் கதைகளை மலையாளத்திலிருந்து தமிழில் வெகு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் சிதம்பரம் இரவிசந்திரன்.

சிதம்பரம் இரவிச்சந்திரன் விழித்திரனற்ற மாற்றுத் திரனாளி. கதைகளை செவி வழி கேட்டு அதை வாய் மொழியே மொழி பெயர்த்தருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய சீரிய முயற்சி. ‘மாற்றங்கள்‘ என்கிற இத்தொகுப்பு முழுவதும் இரவிச்சந்திரன் இன்றைய மலையாள எழுத்தாளர்கள் எத்தகைய எழுத்தை முன்வைக்கிறார்கள் என்பதைத் தமிழ் வாசகர்கர்களுக்கு புரிய வைக்கிறார்.

தொகுப்பில் மொத்தம் 20 கதைகள் இருக்கிறது. பல கதைகள் கேரள நாட்டில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வாங்கியிருக்கிறது. பல கதைகள் தமிழகத்தின் பின்புலத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பின்புலமாக இருக்கிறது. இருந்தாலும் ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

ஒரு தாய் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள், ஆனால் ஒரு தந்தையோ குழந்தையை தலையில் சுமக்கிறான் என்றொரு பொன் மொழி உண்டு. அப்படி தங்கள் குழந்தைக்காக, அவர்களின் சந்தோஷத்திற்காக ஓடாகத் தேய்ந்து அதை வெளியில் காட்டிக் கொள்ளாத அப்பாக்கள் நிறையவே உண்டு. அப்படியான ஒரு அப்பாதான் ஜிட்டுவினுடைய அப்பாவும். ஜிட்டு ஆசைப்பட்டு கேட்கும் எதையும் அவன் சந்தோஷத்திற்காக உடனே வாங்கித்தந்து விடுகிறார். ஜிட்டுவும் அவன் அம்மாவும் ஊரில் வசிக்கிறார்கள். அவன் அப்பா வடக்கே வேறு ஒரு ஊரில் வசிக்கிறார். மாதத்திற்கு ஒரு முறை வந்த போகிறார். ஜிட்டு கேட்டதை வாங்கித் தருகிறார்.

ஜிட்டு வளர வளர அவன் ஆசைகளும் பெரிதாகிக் கொண்டே போகிறது. பதினான்காவது வயதில் பைக் கேட்கிறான்.வாங்கித் தராவிட்டால் வீட்டை விட்டு ஒடிப்போய்விடுவதாக மிரட்டுகிறான். ஜிட்டுவின் அப்பா தன் குடும்பத்தை தான் வேலை பார்க்கும் இடத்திற்கே மாற்றிக் கொள்கிறார். அப்படிச் செய்வதால் வந்து போகும் செலவை மிச்சப்படுத்தி அதை டியூவாக கட்டி ஜிட்டுவுக்கு பைக் எடுக்கலாம் என்கிறார். வடக்கே குடிபோகிறார்கள். ஒரு நாள் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு ஜிட்டுவும், அவன் அம்மாவும் போகிறார்கள். அங்கே ஜிட்டுவின் அப்பா ஒரு குட்டித் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வியர்வை வழிய தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் மரப்பலகைகளை சுமந்து போகிறார். அவர் படும் கஷ்டத்தைக் கண்டு ஜிட்டு துக்கத்தோடு திரும்புகிறான். பைக் என்ற வார்த்தையைக் கூட அவன் வாய் விட்டு சொல்லவேயில்லை என்று முடிகிறது ‘அப்பா கற்றுத் தந்த பாடம்‘ சிறுகதை.

குழந்தைகள் கொஞ்ச நாளைக்கு மனதுக்குள் தோன்றுகின்ற ஆசைகளை மனதுக்குள்ளேயே போட்டு அதை ஆசை ஆசையாக வளர்க்க வேண்டும். அதற்குப் பிறகே அவை கையில் கிடைக்கணும். அப்போதுதான் கிடைக்கின்ற பொருளின் மதிப்புத் தெரியும் என்று சிறுகதையில் (பக்-13) ஒரு இடத்தில் அம்மா சொல்கிறாள். நிச்சயம் ஒவ்வொரு பெற்றோரும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை.

தனிமை ஒரு வரம் என்று சொல்வார்கள். அந்தத் தனிமையை சாபம் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி ஊரில் ஒரு பெரிய வீட்டில் தனிமையோடு வாழ்ந்திருப்பவள்தான் சாரதா அம்மாள். அவள் வீட்டிற்கு மாதத்திற்கு ஒரு முறை வந்து துணிகளை எடுத்துச் சென்று இஸ்திரி செய்து தருகிறாள் சரஸ்வதி. சாரதா அம்மாளை வந்து சந்தித்து பேசிவிட்டுப் போகும் ஒரே பெண் சரஸ்வதிதான். சரஸ்வதியும் மாதா மாதம் வருவதில்லை. ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி தாமதமாகத்தான் வருகிறாள். சரஸ்வதி பொய் சொல்கிறாள் என்று தெரிந்தாலும் சாரதா அம்மாள் அவளுக்காகவும், அவள் பேச்சுக்காவும் காத்திருக்கிறாள்.

சாரதா அம்மாளுக்கு நான்கு மகன்கள். ஒவ்வொருவரும் வேலை விஷயமாய் வேறு வேறு இடங்களில் வசிக்கிறார்கள். யாரும் சாரதா அம்மாளையும், அவள் தோட்டத்தையும் வந்த பார்ப்பதே இல்லை. ஆனாலும் தாயின் முகத்தை மறந்து போன மகன்களுடைய வீரக்கதைகளை, சேற்றில் மறைத்து வைக்கிற பரங்கிக்காயைப் போல விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறாள் சாரதா அம்மாள்.  ஒரு முறை சரஸ்வதி, சாரதா அம்மாளிடம் அவள் மகன் ஹரி கட்டும் புதிய வீட்டைப் பத்தி கேட்க, அதைப் பெருமை பொங்க சொல்கிறாள். கிரஹப்பிரவேசம் எப்போது என்று கேட்க, இன்னும் நாள் குறிக்கவில்லை என்கிறாள். இல்லை போன ஞாயித்துக் கிழமை நடந்து முடிஞ்சிடுச்சு என்று சொன்னதைக் கேட்டு, என்ன பதில் சொல்வது என்று வெகு நேரம் யோசிக்க வேண்டி வந்தது அவளுக்கு என்று நிறைகிறது ‘மாற்றங்கள்‘ கதை.

ஒவ்வொரு ஊரிலும் சாரதா அம்மாளைப் போன்ற மனிதர்களை  சாதாரணமாகப் பார்க்க முடியும் என்பதுதான் யதார்த்தம். வாழ்ந்த வீட்டையும், வளர்த்த ஊரையும், பெற்ற தாயையும், பிரிந்து செல்லும் பிள்ளைகளின் நினைவுடனேயே பெற்றோர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது கதை. கடந்த கால சுகங்களை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்க எழுதப்பட்ட தலையெழுத்தோடு தனிமையில் வாழ்கிற வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சாரதா அம்மாள் கதாபாத்திரம் வழியாக அப்பட்டமாய் விவரிக்கிறது கதை.

ஒவ்வொருவருக்கும் உடன் படித்த நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை தீராமல் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் நாட்களின் இடைவெளி அதிகரித்து ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சந்திப்பது ஒரு பரவசமான அனுபவம்தான். அப்படி பெண்களுக்குள் நடக்கும் ஒரு சந்திப்பு அனுபவத்தை விவரிக்கிறது ‘முன்னால் மாணவர் சங்கமம்‘ கதை.

நிர்மலா, பமீலா, சைலஜா மூவரும் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழிகள். தற்போது அரசுத்துறையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். செய்தித்தாள்களில் ‘முன்னால் மாணவர் சங்கமம்‘ என்ற வாசகத்தைப் பார்த்ததும் தங்களுடன் படித்த கல்லூரி தோழிகளை பார்த்து வரலாம் என்று எண்ணி காரில் புறப்படுகிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சபியா, கிரிஜா, கஸ்தூரி, ஜெயஸ்ரீ பற்றிய சம்பவங்கள் ஒவ்வொன்றாக விரிகிறது. முதலில் சபியா வீட்டிற்குப் போகிறார்கள். அவள் இயல்பாய் வரவேற்கிறாள்.டிபன் சாப்பிடுகிறார்கள்.நால்வருமாக கிரிஜா வீட்டிற்குப் போகிறார்கள்.கிரிஜா நோயுற்றிருக்கிறாள்.அவள் தோற்றம் மாறி பொழிவிழந்து போயிருக்கிறாள்.கல்லூரி நாட்களில் கிரிஜா கிளாசுக்குள் நுழையும்போதே ஒரு வாசனைத் தைலத்துடைய நறுமணம் ஊடுருவிச் செல்வதை நினைத்துப் பார்க்கிறார்கள்.பழைய நண்பர்களைப் பார்த்ததும் கிரிஜா மகிழ்ந்து போகிறாள்.

தனது உடல் உபாதையை மறந்து தனக்கு ஜோக் அடிக்கத் தோணுவதாய் குறிப்பிடுகிறாள்.அடுத்து கஸ்தூரியைக் காணச் செல்கிறார்கள்.அவள் கல்லூரி நாட்களில் என்சிசி கேடட்.ஜனாதிபதியிடம் சான்றிதழ் பெற்றவள்.இப்போது தன் கணவனோடு சிறிய ஹோட்டலை நடத்துகறாள்.கஸ்தூரி முகத்தில் வடுக்களுடனும், குழி விழுந்த கண்களுமாக காட்சி தருகிறாள்.அவளை தங்களுடன் வெளியே வரச் சொல்கிறார்கள்.கடையின் ஒரு நாள் வியாபாரம் போய்விடும் என்று யதார்த்தமாக மறுத்து விடுகிறாள்.கடைசியாய் ஜெயஸ்ரீயை பார்க்கச் செல்கிறார்கள்.அவள் வீட்டை அடைந்து கதவைத் தட்டுகிறார்கள்.ஒரு ஜன்னல் கதவு திறக்கிறது. காவி வேஷத்தோடு ஒரு பெண்…கழுத்தில் ருத்ராட்சத்துடன் நகைகள் ஏதுமின்றி இருக்கும் மெலிந்த உருவம் தென்பட்டு ஜன்னலை மூடிக் கொள்கிறது.பிறகு ஜன்னல் திறக்கப்படவே இல்லை. கனத்த மனதோடும், கண்ணீரோடும் இனி யாரையும் சந்திக்கக்கூடாது என்று அவரவர் கூரைகளுக்கு திரும்புகிறார்கள் என முடிகிறது கதை. நகர்ந்து விட்ட பின் நதி ஒரு போதும் பழைய இடத்தை அடைவதில்லை, மனித வாழ்வும் அப்படிப்பட்டதுதான்.

சுப்ரைக்கா என்றழைக்கப்படும் சுப்ரபாவுக்கு நிச்சயிக்கப்ட்ட திருமணத்தையும், அது குறித்தான தம்பியின் சந்தோஷத்தையும், அக்காவுக்கும் தம்பிக்குமான உறவையும், அக்காவின் திருமணத்தை எதிர் கொள்ளும் தம்பியின் உணர்வுகளையும் காட்டுகிறது ‘வடக்கில் இருந்து வருகின்ற கார்மேகங்கள்‘ சிறுகதை.

சுப்ரைக்காவுக்கு திருமணம் என்ற செய்தியே தம்பி சுப்ரமணியத்துக்கு புதிதாக இருக்கிறது.ஊருக்கு கணக்கெடுக்க வந்த ஆள்தான் தங்களுக்கு பெயர் வைத்தான்  என்பதையும், அக்காவுக்கு எப்படி கல்யாணம் நடக்கும் என்பதையும் எண்ணி வியக்கிறான். சுப்ரைக்கா பள்ளிக் கூடம் போகாமல் தோட்டத்தில் கொப்பரை அள்ளி கொட்டிக் கொண்டிருக்க, தன் தம்பியை கட்டாயம் படிக்க பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என பெற்றோரிடம் சொல்கிறாள். சுப்ரைக்காவுக்கும் பள்ளிக்கூடம் வரவேண்டும் என்று ஆசை இருப்பதை அறிந்து அக்காவை பள்ளிக்கூடத்தைப் பார்க்க வைக்கிறான்.

வீடு அக்காவின் திருமணத்திற்காக கழைகட்டுகிறது. சுப்ரைக்காவை கட்ட மாப்பள்ளை வடக்கில் இருந்து வருகிறார். முகூர்த்த நேரம் நெருங்கி வரும் போது ஒரே களேபரம். யாரோ ஒரு பெண் இரண்டு குழந்தைகளை தூக்கிப் பிடித்தபடி, “ஒத்துகக மாட்டேன், என்னையும் இந்தக் குழந்தைகளையும் கொன்னுட்டுத்தான் அந்த ஆளோட கல்யாணம் நடக்கும்“ என்கிறாள். சுப்ரமணிக்கு எதுவா புரிய, சுப்ரைக்கா கொப்பரை ரூமுக்குள் போய் மூடிக் கொள்கிறாள்.யார் யாரோ பலம் கொண்ட மட்டும் இடிக்கும் ஓசை அவனுக்கு கேட்பதாய் நிறைகிறது கதை. எளிய மனிதர்களின் ஆசா பாசங்களும்,அவர்களுன் கனவுகளும் சிதைந்து போவதை வலியுடன் சித்தரிக்கிறது கதை.

மனிதர்களின் சுபாவங்களும், நடவடிக்கைகளும் எப்போதும் விசித்திரமானவைதான். பெரும்பாலான மனிதர்கள் எப்போதும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். தங்கள் பலவீனத்தை மறைக்க ஏதேனும் ஒரு வேஷத்தை போட்டுக் கொள்ளவே செய்கிறார்கள். அப்படியானவர்களை காட்டுகிறது ‘வேஷம் போடுபவர்கள்‘ சிறுகதை.

நர்மதா ஒரு ஸ்கூல் டீச்சர். ‘குட் மார்னிங் டீச்சர்‘ என்று ஆங்கிலத்தில் சொன்னால் அவளுக்கு பிடிக்காது. அது ஆங்கிலேயர் விட்டுச் சென்ற மொழி என்று பொருமுவாள். டென்ஷனாகாதே மிஸஸ் தேவ் மாதிரி இரு என்று அறிவிறுத்துகிறார்கள். ஸ்டாஃப் ரூமில்  மிஸஸ் தேவ் எப்போதும் கூலாக இருக்கிறாள், யாருடனுடனும் சேராமல் தனித்திருக்கிறாள். மிஸஸ் தேவ்வின் நிஜப்பெயர் என்னவாக இருக்கும் என்று பலருக்கும் சந்தேகம். தேவி மிஸ் என்பது மறுவி மிஸஸ் தேவ்வாக மாறி இருக்குமோ என் யோசிக்கையில் என் பெயர் தேவி இல்லை மிஸஸ் தேவ் என்று தெளிவு படுத்துகிறாள். ஸ்கூல் முடிந்ததும் நர்மதாவை தன் வீட்டிற்கு ஒரு பார்ட்டிக்கு அழைத்துப் போகிறாள் மிஸஸ் தேவ்.

அன்று மிஸஸ் தேவ் வீட்டில் அவள் நாய் டிங்குவிற்கு பிறந்தநாள். அதை கொண்டாடுகிறாள். கிளம்பும் போது நர்மதா மிஸஸ் தேவ்வின் கணவனைக் குறித்து கேட்க, அவர் மாடில இருக்கார், ரெண்டாவது பையனைப் பிரசவிக்கிறப்ப அது பெண் குழந்தையா இல்லாததாலே அவரோட 35 வருஷமா பேசறதில்லை. ஒரே கூரை கீழே அந்நியரா வாழ்ந்துகிட்டிருக்கோம் என்கிறாள் மிஸஸ் தேவ். ‘இந்த மிஸஸ் தேவ்ப் பார்த்து கத்துக்க‘ என்று சக டீச்சர் சொன்னது கேட்கிறது. மனிதர்கள்தான் எத்தனை விதமாக வேஷம் போடுகிறார்கள் என்ற விசித்திரத்தை எண்ணி நிற்கிறாள் நர்மதா.

தொகுப்பில் மேலும் பல கதைகள் கருத்தைக் கவர்வதாக இருக்கிறது. ‘இயற்கையை நேசிக்கும் ஒருவன் இங்கே பட்டினி கிடக்கிறான்‘, ‘கனவுகள் இல்லாதவர்கள்‘, முற்றுப்பெறாத வாக்கியங்கள்‘ என்று கவிதைத் தலைப்புகளைக் கொண்ட கதைகளும் இருக்கிறது. ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் எழுத்துப் பிழைகள்தான் கொஞ்சம் உறுத்துகிறது. குறிப்பாக பக்-119ல். ஐ விகுதிகள் நிறைய வார்த்தைகளில் விடுபட்டுப் போயிருக்கிறது. அதே போல் ஆங்கில எழுத்துக்கள் தமிழுக்கு மாறும் போது தமிழ் எழுத்துரு மாறாமல் இடிக்கிறது (பக்- 70,71)

உண்மையில் மலையாள எழுத்துக்களின் சமகால போக்கு எப்படியானது என்பதை இத் தொகுப்பிலுள்ள கதைகள் தெளிவாக புரிய வைக்கின்றன.

தலைப்பு : மாற்றங்கள்
மலையாள மூலம் : ராஜேஸ்வரி கே தொன்னக்கள்
தமிழில் : சிதம்பரம் இரவிச்சந்திரன்
வெளியீடு : புதுப் புனல், சென்னை- 5
பக்கம் : 130 விலை : ரூ.150/-

ஸ்ரீநிவாஸ்பிரபு

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *