பா.அசோக்குமார் எழுதிய "மாற்று வகுப்பறைகள்" சிறுகதை | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | Tamil School Students Short Story

பா.அசோக்குமார் எழுதிய “மாற்று வகுப்பறைகள்” சிறுகதை

“மாற்று வகுப்பறைகள்” சிறுகதை

“இந்நாள் பொன்னாள்! காலை வணக்கம், கீதா” என்று மாலா கூறினாள்.

” இந்நாள் பொன்னாள்! காலை வணக்கம், மாலா”

இவ்வாறே எதிர்ப்பட்ட யாவரிடமும் வணக்கமும் பதில் வணக்கமும் கூறிக் கொண்டே பள்ளி வளாகத்திற்குள் நடந்தாள் கீதா.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த வினய்,

” ஏய், கீத்தா… இங்க வந்து பாரேன்… சாமந்தி மொட்டுவிட்டுச்சு” என்று கூவினான்.

ஓடிச்சென்று பார்த்து வியந்தவள் பக்கத்திலிருந்த வாடாமல்லிச் செடியை காட்டி, ” இதுவும் நாளை பூத்திடும்போல” என்றாள்.

அவனது பதிலுக்குக் காத்திராமல் ஒவ்வொரு வகுப்பிலும் நுழைந்து கரும்பலகையில் எழுதியிருந்த வாசகங்களை எல்லாம் படித்துவிட்டு வரைந்திருந்த படங்களை எல்லாம் ரசித்த வண்ணம் நடந்தாள்.

தனது ஆறாம் வகுப்பறைக்குள் நுழையும்போது பள்ளி மணி ஒலிக்க, தனது புத்தகப்பையை சுவரோமாக வைத்துவிட்டு வழிபாட்டுக் கூட்டத்திற்கு விரைந்தாள்.

நீலவண்ண சேலையில் மஞ்சள் நிற ரோசாப்பூ சூடி சிரித்த முகத்துடன் மாணவர்களை வரிசையில் நிற்க வைத்துக் கொண்டிருந்த மேரி டீச்சரைப் பார்த்து புன்னகைத்தவாறே கைகூப்பினாள்.

வழிபாட்டுக் கூட்டத்தினுள் நுழைந்தவுடனே தலைமையாசிரியர், ” சாப்பிடாம வந்தவங்க எல்லாம் அப்படி ஓரமா போய் உட்காந்துக் கொள்ளுங்க” என்று கூறிவிட்டு வழிபாட்டுக் கூட்டத்தைத் தொடங்கச் செய்தார்.

வழிபாட்டுக் கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

பின்னர் மணியடிக்க, அனைவரும் அவரவர் வகுப்பறைக்குள் நுழைந்தனர். வருகைப் பதிவு நிறைவு பெற்றவுடன் மீண்டும் மணி ஒலித்தது. அவரவர் விரும்பிய வகுப்பறைக்குள் நுழைந்து விரும்பிய பாடம் படிக்க முனைந்தனர்.

அந்தப் பள்ளியில் ஒவ்வொரு பாடத்திற்குமென பிரத்யோகமாக தனித்தனி வகுப்பறைகள் இருந்தன. தமிழ் வகுப்பறையில் தமிழ் சம்பந்தப்பட்ட வரைபடங்கள், நூல்கள், அகராதிகள், விளக்கப்படங்கள், ஓவியங்கள் என சகலமும் நிறைந்திருந்தன. விரும்பியவற்றை எடுத்து படித்துக் கொள்ளலாம். இதுபோலவே ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக வகுப்பறைகளும் வண்ண வண்ணப் பொருட்களும் இருந்தன.

இந்த வகுப்பிற்கு இதுதான் படிக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. எதையும் எடுத்து படிக்கலாம். விரும்பினால் எழுதலாம். சந்தேகமிருந்தால் ஆசிரியரைக் கேட்டு தெளிவு பெறலாம்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு ஆசிரியர் கட்டாயம் இருப்பர். முதல் மற்றும் இரண்டு வகுப்புகளுக்கு மட்டுமே ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி அருகிலிருந்து சொல்லிக் கொடுப்பார்கள். அவர்களும் தாங்கள் விரும்பும் பாடங்களையே படிக்கலாம்; எழுதலாம்.

ஆங்கில வகுப்பறைக்குள் நுழைந்த கீதா, கணினியை இயக்கி ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினாள். கணினி உச்சரிப்பைக் கேட்டு நகைத்துக் கொண்டே உச்சரித்துப் பழகியவள், ” இன்னைக்கு இவ்வளவு போதுமே” என்று தனக்குள் முணங்கிக் கொண்டே கணினியை நிறுத்தினாள்.

அறிவியல் ஆய்வகத்திற்குள் நுழைந்தவள் , இந்த வாரம் வியாழக்கிழமை மதியம் செய்துக் காட்ட நினைத்திருந்த “காந்தப்புலச் சோதனை” குறித்து ஆசிரியரிடம் வினவினாள்.

தினமும் பிற்பகல் மதிய உணவு இடைவேளைக்கு பின் இரண்டு மணி முதல் மூன்று மணி வரை கழகச் செயல்பாடுகள் நடைபெறும். அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டு பங்களிப்புச் செய்வர்.

நேற்றைய வரலாற்றுக் கழகத்தில் மீனா நடித்துக் காட்டிய, “வேலுநாச்சியார்” கதாபாத்திரம் கீதாவின் கண்களில் வந்து போனது.

பா.அசோக்குமார் எழுதிய "மாற்று வகுப்பறைகள்" சிறுகதை | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | Tamil School Students Short Story

இன்று நடைபெறும் கணிதக் கழகத்தில் நடைபெறும் புதிர் விளையாட்டிற்காக தான் தயாரித்து வைத்துள்ள புதிர்க்கணக்கைச் சொல்லி பார்த்துக் கொண்டாள்.

நான்காம் வகுப்பு ரம்யா வரைந்து கொண்டிருந்த மீனின் படத்தைப் பார்த்து மெய்மறந்தவள், “ஆற்றில் நீந்தும் அயிரை மீனை அள்ளியெடுக்காமல் ஆழ்ந்து மூழ்கினாள் கயல்விழி கண்கொட்டாமல்!” என்று புதுக்கவிதைப் பாடினாள்.

இதனைக் கேட்ட ஐந்தாம் வகுப்பு ரதி, “எக்கா.. எக்கா…இன்னொரு முறைச் சொல்லக்கா” என்று மீண்டும் மீண்டும் கீதாவைச் சொல்லச் சொல்லி ஒரு நோட்டில் எழுதிக் கொண்டாள்.

மதிய உணவு இடைவேளைக்கு பின் பாடல் பாடுதல், ஆத்திச்சூடி சொல்லுதல், வாய்ப்பாடு கூறுதல் போன்ற குழுச் செயல்பாடுகள் வகுப்புவாரியாக நடைபெற்றன. குழுவாக இணைந்து உரக்க கத்தி ராகத்துடன் பாடி படிப்பதில் ஏகாந்த ஆனந்தமாக இருந்தனர்.

அடுத்ததாக தொடங்கிய கழகச் செயல்பாடுகளில் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கீதா, தன் தாத்தாவிடமிருந்து கேட்டு வந்து கூறிய புதிருக்கு விடை காண முடியாமல் எல்லோரும் திண்டாடினர். ஒவ்வொரு புதிருக்கும் ‘நான்’, ‘நீ’ என்று முந்திக்கொண்டு, போட்டி போட்டுக் கொண்டு பதிலளித்தனர். தவறாக சொல்லும்போது கிண்டல் செய்து கேலி பேசவும் தவறவில்லை.

சுவாரஸ்யமான அனுபவம் முடியும் தருவாயில் ஒலித்த மணியோசை கேட்டு கழிப்பறைக்குக் கூட செல்லாமல் பிடித்த விளையாட்டுப் பொருட்களைக் கைப்பற்ற ஓடினர்.

வளைபந்து, கேரம், சதுரங்கம், கைபந்து என ஆளுக்கொன்றாக கைபற்றி விளையாட முனைந்தனர். கீதா தனது நண்பர்களுடன் இணைந்து கபடி விளையாடுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

பள்ளி இறுதி மணியடித்த போதிலும் யாருமே ஆட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்கவே இல்லை.

“ஏய், பசங்களா.. கிளம்புங்க…கிளம்புங்க” என்று ஆசிரியர்கள் குரல் கொடுத்தனர்…

” இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் டீச்சர்… டீச்சர் ப்ளீஸ்” என்று ஆங்காங்கே மாணவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

“நீங்க இப்படி வெளயாடிக்கிட்டே இருந்தா, நாங்கெல்லாம் வீட்டுக்கு போக வேண்டாமா?” என்று மேரி டீச்சர் கேட்க, ஒவ்வொருவராக தங்களது புத்தகப்பையை எடுக்க விரைந்தனர்.

” நீங்க போறதுனா போங்க… நாங்க போகல டீச்சர்.. அப்புறம் போறோம் டீச்சர்” என்று கீதா சொல்ல, மற்றவர்களும் சேர்ந்து “ம்ம்ம்.. போகல டீச்சர்” என்று கத்தினர்…

மேரி டீச்சர் ” ஏய்!” என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி கண்களை உருட்டி மிரட்ட, “இன்னும் கொஞ்ச நேரம்,,ப்ளீஸ் டீச்சர்” என்றாள் கீதா.

“ப்ளீஸ் டீச்சர்… டீச்சர் ப்ளீஸ்” என்று தூக்கத்தில் பிதற்றிய கீதாவை , “அடியேய், எந்திரிடி, தூக்கத்திலும் ஸ்கூல் நினப்புதானா” என்ற அதட்டினார் அவள் அம்மா.

கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்த கீதா, “எல்லாமே கனவா???” என்று அதிசயத்துடன் மலங்க மலங்க முழித்தாள்.

வீட்டுப்பாடம் ஞாபகம் வரவே முடங்கி மீண்டும் படுக்கத் துவங்கினாள் கீதா.

எழுதியவர் : 

✍🏻 பா.அசோக்குமார்
சத்தியமங்கலம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. KARTHICK MALAR

    அப்துல் கலாம் காணச் சொன்ன கணவு போல உள்ளது.

  2. Preethi

    மிக அருமையான பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *