1947 அக்டோபர் 23 ஜும்மா மசூதியில் மௌலானா ஆசாத் ஆற்றிய உரை (தமிழில்: தா.சந்திரகுரு)இந்தியப் பிரிவினைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தவராக மௌலானா ஆசாத் இருந்து வந்தார். காந்தி, நேரு படேல் ஆகியோர் வேறு சில காரணங்களால் பிரிவினைக்குச் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரிவினைக்கு எதிரான தனது நிலையில் உறுதியாக இருந்த ஒரே இந்தியத் தலைவர் மௌலானா என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. 1947ஆம் ஆண்டில் இந்தியா பிரிவினைக்குள்ளாக்கப்பட்ட போது, ​​இந்தியாவில் இருந்தும், புதிதாக உருவாக்கப்பட்டிருந்த பாகிஸ்தானிலிருந்தும் மக்கள் வெளியேறியத் தொடங்கினர்.

1947 அக்டோபர் 23 அன்று வரலாற்று சிறப்புமிக்க ஜும்மா மசூதியின் படிக்கட்டுகளில் நின்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத், அங்கே கூடியிருந்த முஸ்லீம்களிடம் அவர்களுடைய புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவுபடுத்திப் பேசினார். புதிதாக உருவாக்கப்பட்ட நாட்டிற்கு குடிபெயர்ந்து செல்வதிலிருந்து விலகி இருக்குமாறு அப்போது அவர்களைக் கேட்டுக் கொண்டார். அன்று அவரது உரை மௌலானா ஆசாத்தின் சொற்பொழிவுத் திறனுக்கான சான்றாக இருப்பது  மட்டுமல்லாது, அதனுள் பொதிந்திருக்கும் ஆற்றல் மிக்க செய்தியால்  இன்றைக்கும் உத்வேகம் அளிப்பதாகவே இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Abul Kalam azad\eid-at-delhis-jama-masjid.jpg

என் சகோதரர்களே,

இன்று எது என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஷாஜகானின் வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மசூதியில் கூடியிருக்கின்ற இந்தக் கூட்டம் எனக்கு அறிமுகமில்லாத ஒன்று அல்ல. இங்கே பல சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் உரையாற்றி இருக்கிறேன்.  அப்போதிருந்தே நாம் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்திருக்கிறோம்.  அப்போதெல்லாம் சோர்வுக்குப் பதிலாக, அமைதியையே உங்கள் முகங்கள் பிரதிபலித்தன; சந்தேகங்களுக்குப் பதிலாக, நம்பிக்கையையே உங்கள் இதயங்கள் வெளிப்படுத்தின. ஆனால் இப்போது உங்கள் முகங்களில் இன்று நான் காண்கின்ற சங்கடமும், உங்கள் இதயங்களில் ஏற்பட்டிருக்கும் வெறுமையும் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளை எனக்கு நினைவூட்டுகின்றன.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் உங்களை வாழ்த்திய போது, என்னுடைய நாக்கை நீங்கள் துண்டித்தீர்கள்; பேனாவை எடுத்த போது, என் கையைத் துண்டித்தீர்கள்; முன்னேறிச் செல்ல நான் விரும்பிய போது, என் கால்களை உடைத்தீர்கள்; ஓட முயற்சித்த போது, என் முதுகில் தாக்கினீர்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக கசப்பான அரசியல் விளையாட்டுக்கள் உச்சத்தில் இருந்த போதெல்லாம், விளையப் போகின்ற ஆபத்துகள் குறித்து எந்தவொரு சமிக்ஞை கிடைத்தாலும், அதுகுறித்து எச்சரித்து உங்களை எழுப்ப நான் முயற்சித்தேன். என்னுடைய அழைப்பை புறக்கணித்தது மட்டுமல்லாமல், உங்களுடைய கடந்த காலத்து மரபுகளான அசட்டை, மறுப்பு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் நீங்கள் புதுப்பித்துக் கொண்டீர்கள். அதன் விளைவாக, ஆரம்பத்தில் உங்களை நேர்மையான பாதையிலிருந்து திசை திருப்பிய அதே அபாயங்கள் இன்றைக்கு மீண்டும் உங்களைச் சூழ்ந்திருக்கின்றன.

இன்று என்னுடைய நிலைமை செயலற்றுப் போன, கைவிடப்பட்டவனின் கதறலாகவே இருக்கிறது; எனது சொந்த தாய்நாட்டிலேயே நான் இப்போது அனாதையாக இருக்கிறேன். எனக்காக தேர்வு செய்து கொண்ட தேர்வில் நான் சிக்கிக் கொண்டு விட்டதாக இதை நான் உணரவில்லை. என்னுடைய கூட்டிற்கான இடம் இங்கே இல்லை என்றும் நான் நினைக்கவில்லை. உங்களுடைய துடுக்கான கைகளால் என் ஆடை தளர்ந்து போயிருக்கிறது. என்னுடைய உணர்வுகள் காயமடைந்துள்ளன. என் இதயம் கனத்துக் கிடக்கிறது. ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இப்போது எங்கே சென்றடைந்திருக்கிறீர்கள், எங்கே நிற்கிறீர்கள்? உங்கள் உணர்வுகள் அற்றுப் போய் விட்டனவா? தொடர்ந்து நீங்கள் அச்ச உணர்வுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இந்த அச்சம் நீங்களே உருவாக்கிக் கொண்டதுதான், அது உங்களுடைய செயல்களுக்கு கிடைத்திருக்கும் பலனே ஆகும்.

அர்த்தமுள்ள, கண்ணியமான வாழ்விற்கு இருநாடுகள் என்ற கோட்பாடு மரணச் செய்தியாகவே இருக்கும் என்று நான் உங்களை எச்சரித்து, அதைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது வெகு காலத்திற்கு முன்பு நடந்ததல்ல; நீங்கள் சாய்ந்து நிற்கின்ற தூண்கள் நொறுங்கப் போகின்றன என்று நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை. நீங்கள் அதை உணர்ந்திருக்கவில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Abul Kalam azad\5390273b44d70.jpg

என் சகோதரர்களே! அரசியலை தனிப்பட்ட ஆளுமைகளிடமிருந்து ஒதுக்கி வைக்கவே நான் எப்போதும் முயற்சித்து வந்திருக்கிறேன். அதன் மூலமாக இடர் மிகுந்த பகுதிகளை நான் தவிர்த்திருக்கிறேன். அதனாலேயே எனது சில செய்திகள் பெரும்பாலும் மறைகுறிப்புகளாகவே இருக்கின்றன. இந்தியப் பிரிவினையானது ஓர் அடிப்படைத் தவறு. மதவேறுபாடுகள் தூண்டப்பட்ட விதத்தால், தவிர்க்க முடியாமல் நம்முடைய கண்களால் நாம் கண்ட இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக, இன்னும் சில இடங்களில் அது தொடர்ந்து நடந்து வருவதை நாம் காண்கிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் நடந்திருக்கும் நிகழ்வுகளை விவரிப்பதால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை, அதனால் எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதுமில்லை. ஆனாலும் தவறாக வழிகாட்டிய முஸ்லீம்லீக் தலைமை செய்த  பெரும் தவறுகளே இந்திய முஸ்லீம்களின் தோல்விக்கான காரணம் என்பது  நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டும். இந்த விளைவுகள் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை; ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு நடக்கும் என்பதை நான் எதிர்பார்த்தே இருந்தேன்.

இப்போது இந்திய அரசியல் செல்கிற புதிய திசையில், முஸ்லீம்லீக்கிற்கு இடமில்லை. ஆக்கபூர்வமான சிந்தனைக்கு தகுதியுள்ளவர்களாக நாம் இருக்கிறோமா, இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. இந்திய முஸ்லீம் தலைவர்களை இதற்காகவே நான் நவம்பர் இரண்டாவது வாரத்தில் டெல்லிக்கு வருமாறு அழைத்திருக்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இருள் தற்காலிகமானது; நமது சொந்தங்களைத் தவிர வேறு யாராலும்  நம்மை வெல்ல முடியாது என்பதை நான் உங்களிடம் உறுதியாகச் சொல்ல முடியும்! நான் எப்போதுமே இதைச் சொல்லி வந்திருக்கிறேன். அதையே இன்று உங்களிடம் மீண்டும் சொல்கிறேன்; உங்களிடம் இருக்கின்ற குழப்பத்தை, உங்கள் அவநம்பிக்கையைத் தவிர்த்து விடுங்கள். உங்களுடைய தவறான செயல்களை நிறுத்தி விடுங்கள். இந்த மூன்று முனைகளைக் கொண்ட தனித்துவமான ஆயுதம், ஆபத்தான காயங்களை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முனைகள் கொண்ட இரும்பு வாளை விட மிகவும் ஆபத்தானது.

ஹெஜ்ரத்தின் புனிதப் பெயரால் நீங்கள் தேர்ந்தெடுத்த தப்பித்தல்வாத வாழ்க்கை குறித்து சற்றே சிந்தியுங்கள். உங்கள் மூளைகளைப் பயன்படுத்துகின்ற, உங்கள் இதயங்களைப் பலப்படுத்திக் கொள்கின்ற பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அவ்வாறு செய்யும் போதுதான், நீங்கள் எடுத்த முடிவுகள் எந்த அளவிற்கு முதிர்ச்சியற்றவை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

C:\Users\Chandraguru\Pictures\Abul Kalam azad\Delhi_Jama_Masjid_Main.jpg

நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள், ஏன் போகிறீர்கள்? கண்களை சற்றே உயர்த்திப் பாருங்கள். உங்கள் வரலாற்றின் புகழ்மிக்க பக்கங்களை நீங்கள் எங்கே இழந்தீர்கள் என்ற கேள்வியை இந்த ஜும்மா மசூதியில் உள்ள மினார்கள் உங்களிடம் கேட்க விரும்புகின்றன. நேற்று யமுனைக் கரையில், உங்கள் கூட்டத்தினர் வழிபாட்டிற்காக உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு இங்கே வாழ்வதற்கு நீங்கள் அச்சப்படுகிறீர்கள். இந்த தில்லி உங்கள் ரத்தத்தாலேயே ஊட்டி வளர்க்கப்பட்டது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். சகோதரர்களே, உங்களுக்குள்ளே அடிப்படையான மாற்றத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய நேற்றைய கொண்டாட்டத்தை இன்றைக்கு உங்களிடம் இருக்கின்ற அச்சம் ஆக்கிரமித்திருக்கிறது.

முஸ்லீம் என்ற வார்த்தையின் அதே அளவிலே கோழைத்தனம், வெறித்தனம் போன்ற சொற்களை வைத்துப் பேச முடியாது. அவதூறு அல்லது அச்சத்தால் உண்மையான முஸ்லீமைத் தூண்டி விட முடியாது. சில முகங்கள் இப்போது நம்மிடமிருந்து மறைந்து விட்டதால் பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் உங்களை ஒன்றாக அடைத்து வைத்திருந்ததற்கான ஒரே காரணம் தங்களுடைய உயர்வை எளிதாக்கிக் கொள்ளத்தான். இன்று அவர்கள் உங்களிடமிருந்து தங்களுடைய கைகளை விடுவித்துக் கொள்கிறார்கள் என்றால், அதற்கான பொருள் என்ன?  உங்கள் இதயங்களில் அவர்கள் ஒட்டவில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் இதயங்கள் இன்னும் சரியான இடத்தில்தான் இருக்கின்றன என்றால், கடவுளின் தங்குமிடமாக அவற்றை மாற்றுங்கள். ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்து, தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குப் பயமோ, துக்கமோ இருப்பதில்லை’ என்று 1300 ஆண்டுகளுக்கு முன்பு இறைவன் அறிவித்தார். காற்று சுழன்று வீசிச் செல்லலாம். சூறாவளி வீசக் கூடும். ஆனாலும் அவையனைத்தும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும். துயரங்களின் காலம் முடிவடைய உள்ளது. ஒருபோதும் நாம் இதுபோன்ற மோசமான நிலையில் இருந்ததில்லை என்பது போல உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

C:\Users\Chandraguru\Pictures\Abul Kalam azad\crp_THE-ABSENT-HELMSMAN.jpg

வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்பது எனக்கு வழக்கமில்லாத ஒன்று. உங்களிடம் உள்ள பொதுவான அலட்சியத்தை கண்டவனாய், நான் இப்போது மூன்றாவது படை புறப்பட்டுச் சென்று விட்டது என்பதையும், அதனுடன் சேர்ந்து அதன் மாயப் பொறிகளும் சென்று விட்டன என்பதையும் மீண்டும் கூறுவேன். என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்திருக்கிறது. உங்களுடைய இதயங்கள் இன்னும் மாறவில்லை அல்லது உங்கள் மனதில் இன்னும் தயக்கம் இருந்தால், அது வேறு விஷயம். ஆனால், நீங்கள் ஒரு மாற்றத்தை விரும்புவீர்கள் என்றால், வரலாற்றிலிருந்து உங்களுக்கான குறிப்பை எடுத்து, புதிய அச்சுக்குள் வைத்து உங்களை வார்த்தெடுத்துக் கொள்ளுங்கள். புரட்சிகரக் கட்டத்தைத் தாண்டியிருக்கும் வேளையில், இந்திய வரலாற்றில் இன்னும் சில வெற்றுப் பக்கங்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமிருக்கும் என்றால், அந்தப் பக்கங்களை நிரப்புவதற்குத் தகுதியுடையவர்களாக நம்மை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.

சகோதரர்களே, மாற்றங்களுடன் தொடர்ந்து செல்லுங்கள். ‘மாற்றத்திற்கு நாங்கள் தயாராக இல்லை’ என்று மட்டும் சொல்லாதீர்கள். தயாராக இருங்கள். நட்சத்திரங்கள் வீழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனாலும் சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டுதானிருக்கிறது. அதனிடமிருந்து சில கதிர்களைக் கடன் வாங்கி, அவற்றை உங்கள் வாழ்க்கையின் இருண்ட குகைகளுக்குள் தெளித்துக் கொள்ளுங்கள்.

புதிய ஆட்சியதிகாரத்திடமிருந்து நற்சான்றிதழ்களை நீங்கள் பெற வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கவில்லை. அன்னிய ஆட்சியின் போது நீங்கள் செய்ததைப் போல ஒத்துழைப்பு வாழ்க்கையை நீங்கள் நடத்த வேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. உங்களைச் சுற்றிலும் நீங்கள் காண்கின்ற இந்த பிரகாசமான செதுக்கல்கள் உங்களுடைய முன்னோர்களின் நினைவுச்சின்னங்கள் என்பதை உங்களிடம் நினைவூட்ட விரும்புகிறேன். உங்கள் முன்னோர்களை மறந்து விடாதீர்கள். அவர்களைக் கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் அவர்களின் உண்மையான வாரிசுகளாக வாழுங்கள். மேலும், இந்த நிலைமையில் இருந்து தப்பி ஓடுவதற்கு விரும்பவில்லை என்றால், உங்களை இங்கிருந்து யாராலும் தப்பி ஓட வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருங்கள். வாருங்கள், இன்று இந்த நாடு எங்களுடையது என்ற உறுதிமொழியை ஏற்போம். நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், நம்முடைய அனுமதியில்லாமல் இந்த நாட்டின் விதியை நிர்ணயிக்கின்ற எந்தவொரு அடிப்படை முடிவுகளும் முழுமையடையாது.

C:\Users\Chandraguru\Pictures\Abul Kalam azad\thequint_2019-05_0a831eda-a3b7-4bdf-8c1a-b0140f21cf70_ag_02.jpg

இன்று பூமியின் நடுக்கம் குறித்து நீங்கள் அஞ்சுகிறீர்கள்; முன்பு நீங்களே கிட்டத்தட்ட பூகம்பமாக இருந்தீர்கள். இன்று நீங்கள் இருளைக் கண்டு அஞ்சுகிறீர்கள்; முன்பு உங்கள் இருப்பே பிரகாசத்தின் மையமாக இருந்தது. மேகங்கள் அழுக்கு நீரை ஊற்றின, நீங்கள் உங்கள் கால்சட்டையை மேலிழுத்துக் கொண்டீர்கள். கடலில் தலைகுப்புற விழுந்தது மட்டுமல்லாமல், மலைகளை மோதி, மின்னலின் கீற்றைக் கண்டு சிரித்து, சூறைப் புயலை நிறுத்தி, சூறாவளிக்கு எதிராகச் சவால் விடுத்து அதன் போக்கை மாற்றியமைத்தவர்கள் உங்கள் முன்னோர்கள். ஒரு காலத்தில் சக்கரவர்த்திகளின் கழுத்தைப்  பிடித்தவர்கள், இன்று தங்களுடைய தொண்டையிலேயே கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பிக்கையின் அழிந்து போவதற்கான  உறுதியான அறிகுறியாகவே இருக்கின்றது. எப்போதுமே கடவுள் மீதான நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை என்பதைப் போல, கடவுளின் இருப்பு குறித்து அவர்கள் மறந்து போய் விட்டார்கள். சகோதரர்களே, உங்களுக்கான புதிய மருந்து என்னிடம் இல்லை. ‘பயப்படாதீர்கள், துயரமடைய வேண்டாம். உண்மையான விசுவாசத்தை நீங்கள் கொண்டிருந்தால், வலுவான நிலையை உங்களால் அடைய முடியும்’ என்று மனிதகுலத்தின் மிகப் பெரிய கொடையாளருக்கு புனித குர்ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அதே பழைய மருந்துதான் என்னிடம் உள்ளது.

இந்த கூட்டம் இப்போது முடிவிற்கு வருகிறது. நான் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், எப்போதும் உங்கள் உணர்வுகளின் மீது ஒரு பிடியை வைத்திருங்கள். உங்களுக்கான சூழலை, உங்கள் சொந்த உலகத்தை உருவாக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது ஒன்றும் சந்தையிலிருந்து நான் உங்களுக்காக வாங்கித் தரக்கூடிய பொருள் அல்ல. இதயம் என்ற சந்தையிலிருந்து மட்டுமே, நற்செயல்கள் என்ற நாணயம் கொண்டு பணத்தைச் செலுத்தி மட்டுமே அதை உங்களால் வாங்க முடியும்.

கடவுளின் அருள் உங்களிடம் இருக்கட்டும்!

https://ummid.com/news/2019/december/21.12.2019/maulana-azad-jama-masjid-speech-full.html

தமிழில்: தா.சந்திரகுரு