பிம்பங்களின் கடை வீதியில்…
***********************************
பிம்பங்களின் அரசியல்தான் இலக்கியமாகிறது. எழுத்து வாசகன் மீது பிரயோகிக்கப்படும் ஆயுதம். ஓர் இலக்கியப் பிரதி என்பது எண்ணற்ற கொடி வழிகளைக் கொண்டிருக்கும் அடர்ந்த காடு. வாசகன் ஒரு தேர்ந்த வழிப்போக்கனாக மாறுவதே அவன் காட்டு வழிப் பாதையில் விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரே வழி. நான் பொத்தாம் பொதுவாக கண்ணை மூடிக்கொண்டு ஒரு வழியில் போவேன் என்று அடம்பிடித்தால் அப்படியான வாசக வழிப்போக்கன் காட்டைக் கடக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
“மௌனி சிறுகதையின் திருமூலர்” என்கிற ஒற்றை வரி போதுமானதாக இருந்தது. தில்லையை நோக்கி நந்தனைப் போல மௌனியை நோக்கி ஓட ஆரம்பித்தேன். முதலில் அவரது மொழியின் திருகலே என்னைத் திணறடித்தது. அவர் முயலைக் கழுத்தைப் பிடித்துத் தூக்குவார். ஏன் இந்த மொழி பிடிபட மாட்டேன் என்கிறது என்று கைகளையும் கால்களையும் உதைத்துக் கிடந்தேன். இலக்கணம் என்ற ஒன்று தமிழுக்கு உண்டுமா? அது வேண்டுமா? என்கிற அளவிற்கான மனக்குழப்பத்தில் சிதைந்து போனேன். தான் நினைத்ததைப் பிறருக்குச் சிந்தாமல் சிதையாமல் கடத்த முடியுமா என்பது ஐயம்தான். என்றாலும் ஓரளவிற்கேனும் கருத்துக் கடத்தியாக இலக்கணம்தான் செயல்படுகிறது. அப்படியான இலக்கணத்தைச் சிதைப்பதின் மூலம் தான் நினைப்பது ஒன்றாகவும் சென்று சேர்வது வேறொன்றாக மாறிவிடும் அபாயம் நிகழ்கிறது. இது பற்றி ஆய்வாளர் ஜமாலன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்… “மௌனியின் தமிழ் மேலோட்டமாக பார்க்கும்போது தமிழ் வாக்கிய அமைப்பிலிருந்து திமிறி, அதன் மரபுகளை மீறிய ஒன்றால், அதர்க்கத்தைக் கொண்டதாகத் தோன்றும், அவரது மொழி, உயர் கணிதத்தைப் போல அதீத தர்க்க ஒழுங்கைக் கொண்டது.
தரிசன வாசிப்புகள் அல்லது ரசனை வாசிப்புகள் நம்மை வழி நடத்துகிறபோது என்ன நிகழ்ந்தது? ‘அதீத பிம்பமாக்கல்’ என்கிறார் ஆய்வாளர் எஸ்.சண்முகம். இப்படியான வாசிப்பு மௌனியை ஒரு எட்டாத உயரத்தில் இருத்தி வைக்கிற ஏற்பாட்டைச் செய்துவிடுகிறது. தரிசன வாசிப்பு உன்னதத்தின் வடிவமாக மௌனியின் எழுத்துகளை முன்மொழிந்திருக்கிறது. கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ கச்சிதத்தையும் விதந்தோதி பல்லக்கு தூக்குவதற்கு நம்மையறியாமலேயே நாம் தோள் கொடுக்க ஆரம்பிக்கிறோம்.
மௌனியின் சிறுகதைகள் என்ன செய்கின்றன? வாசித்து முடித்தபின் ஒரு வித பிரமையை ஏற்படுத்த வல்லவை. கதை சொல்பவனே ‘நான் அவனில்லை’ என்பது மாதிரியான ஸ்டேட்மென்டைச் சொல்ல ஆரம்பித்துவிடுவான். சில இடங்களில் மொழி அமைப்புகள் நம்மை ‘முழி பிதுங்க’ வைக்கும். ஒரே கதாபாத்திரம் வேறு வேறு உணர்வு நிலைகளை வெவ்வேறு வார்த்தைகளில் பித்தேறிய நிலையில் குரல் காட்டும். நம் மனம் நிஜ யதார்த்தங்களை மீறி நிழலாட்டங்களில் நிலை கொள்ளும்.
வாசகன் பிம்பங்களால் ஆளப்படுகிறான். அவனது இயக்கம் பிம்பங்களால் கட்டுப்படுத்தப் படுகிறது. பிம்பங்களின் அதிகாரங்களால் வாசகன் தன்னிலை பிறழும் சூழ்நிலை உருவாகிறது.
இமயமலையின் பல சிகரங்களை அடைவதற்கு வழிகாட்டிகள் இருக்கிறார்கள். அவர்கள் மலைப் பயணங்களின் பல இரகசியங்களை தங்கள் உள்ளே புதைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் துணையினால் பெரும் பனிப் புயல்களை மீறிப் பயணங்கள் சாத்தியமாகி இருக்கின்றன. மலைப் பயண வழிகாட்டிகள் பயணங்களின் அகராதிகள். அவர்களைப் பயன்படுத்தி சாகசப் பயணங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அப்படியே பொருந்தாது எனினும் இலக்கியத் திறனாய்வாளர்கள் பல விதமான மொழித் திறப்புகளையும் பிரதிகளின் சாத்தியப் பாடுகளையும் அடையாளம் காட்ட வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வரைபடம் நிச்சயமாக ஒரு புதிய பிரதேசத்தை அறிமுகப் படுத்தும். அந்த வரைபடமே முடிவானது என்று சொல்ல முடியாவிடினும், அது பல புதிய பிரதேசத்தை அடைவதற்கு வாசகர்களுக்குப் பேருதவியாக இருக்கும். பிரதியின் மூடுண்ட பிரதேசத்தை நோக்கி நம்மை நகர்த்தினாலும் கூட பரிமேலழகர் உரை வழியாக திருக்குறள் என்கிற பிரதியின் தெரியாத வாசற் கதவுகள் தெரிய ஆரம்பித்தன அல்லவா? அப்படித்தான்.
தமிழ் இலக்கிய உலகில் இந்திரன் முன்வைத்திருக்கும் வாசக மைய விமர்சனம் என்பது முக்கியமானது. அது ஓர் விமர்சகன் அதிகார மையமாக மாறுவதிலிருந்து தனது விடுதலையை வாசகன் மூலம் அடைந்துவிடுகிற இலக்கிய விடுதலை எனலாம். படைப்பாளி தனது எழுத்தின் மீது வன்முறைச் செலுத்தி வாசகர்களைத் தன் அதிகாரத்திற்கு அடிபணிய வைக்கிற ஆபத்தை நிகழ்த்துகிறபோது ஆய்வு மைய விமர்சனம் படைப்பாளியின் அதிகாரத்தை அடையாளம் காட்டுகிறது.
தரிசன விமர்சன முறை அல்லது ரசனை விமர்சன முறை மூலம் படைப்பாளியின் அதிகாரத்தைக் கட்டமைக்கிற போது வாசகன் வாசக மைய விமர்சனத்தின் மூலம் எதிர்கொள்ள முடியாமல் திணறுகிற வாய்ப்புண்டு. அப்போதுதான் ஆய்வு மைய விமர்சனத்தின் மூலம் ஒரு தேர்ந்த திறனாய்வாளன் வாசகனுக்கு ஆயுத உதவி செய்கிறான். பாசிக்கு அடியில் ஒளிந்திருக்கும் மீன்களைப் போல வெவ்வேறு அர்த்த அடுக்குகள் பிரதியின் அடியில் சஞ்சரிக்கின்றன. பளிங்கு நீரோட்டமான மேல் மட்டத்திலிருந்து உள் பாய்ந்து பாசிகளுக்கு அடியிலிருக்கும் மீன்களை விரல்களின் மூலம் வெளிக் கொண்டு வருகிறான் ஆய்வு மையத் திறனாய்வாளன்.
ஆய்வு மைய விமர்சனத்தின் மூலம் ஒரு திறனாய்வாளன் மொழியின் ஒரு பண்பாக இயங்குகிற சொல்லாடல்களின் வலைப் பின்னலை அடையாளம் காண்கிறான். சிறுகதை என்பதே ஒரு இலக்கியப் பிம்பம்தான். அது மேற்புறத்தில் ஒரு தோற்றத்தையும் உள்புறம் வேறொரு தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. வாசக மைய விமர்சனம் என்கிற வழக்கமான தரிசனக் கண்களால் இப்படியான விமர்சனச் சிலையைக் கண்ணுறுவது கடினம். அதே வாசகன் ஆய்வு மைய விமர்சன விழிகளின் மூலம் சிலை வடிவமைந்த இடுபொருள்களைக் கண்டுபிடிக்க முடியும். இந்த நிழலாட்டத்தைக் கண்டுபிடிக்க வாசகன் ஆய்வு நதியில் முங்க வேண்டும். கரையில் நின்று கவிதை எழுதிவிடுவது ஒரு நிலை. மூழ்கிக் கூழாங்கல்லைக் கொண்டு வருவது இன்னொரு நிலை. வாசக மைய விமர்சனமும் ஆய்வு மைய விமர்சனமும் இலக்கியத்தின் இரண்டு கண்கள்.
ஜமாலனின் “மௌனியின் இலக்கியாண்மை” ஆய்வு மைய விமர்சனத்தை நிகழ்த்துகிறது. மௌனியின் நிழலாட்டத்தின் பின் இருக்கும் நிஜ பிம்பங்களைத் தெரியப் படுத்துகிறார். கலையின் பின்னால் அவர் ஒளித்துவைத்த பிரச்சாரத்தைக் கட்டவிழ்க்கிறார்.
புற உலகு அறிவாலும் அக உலகு உணர்வாலும் கட்டப் பட்டிருப்பதாக அறிகிறோம். இதற்கு எதிரிடையாக அக உலகை அறிவால் கட்டுப்படுத்தலைச் செய்ய நடத்திய ஒரு திருவிளையாடல் திருவிழாவாகவே கொண்டாடப் பட்டிருக்கிறது.
“மௌனியின் இலக்கிய மேலாண்மை” என்கிற நூலின் மூலம் ஜமாலன் மௌனியின் நிழற்படத்தை நம் முன் காட்டுகிறார். அந்த வரைபடத்தின் அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் எவற்றின் நடமாடும் நிழல்கள் என்கிற ஷேக்ஸ்பியரின் வாக்கியத்திற்கான பதில்களை வழங்கியிருக்கிறார் ஜமாலன். நூலுக்குச் சிறப்பான முன்னுரையை எஸ்.சண்முகம் அளித்திருக்கிறார்.
அறிவால் கட்டப்பட்ட மௌனியின் அக உலகின் மூன்று பிரதேசங்களை அடையாளம் காட்டுகிறார்…
1 மௌனியின் ‘சித்தாந்த’ வடிவ கணிதம்.
2 மௌனி கதைகள் – ஒரு எதிர் வாசிப்பு
3 மௌனியின் இலக்கியாண்மை.
அந்தப் பிரச்சார நெருப்பின் வெம்மை எத்தகைய தகிப்பைக் கொண்டிருந்தது என்று அறிய இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடு.
-நா.வே.அருள்
நூல் மௌனியின் இலக்கியாண்மை
ஆசிரியர் ஜமாலன்
வெளியீடு காலக்குறி
விலை ரூ.140./–
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments