மே 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆன் ராபர்ட் ஜாக்ஸ் டர்கோட் (Economist Anne Robert Jacques Turgot Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆன் ராபர்ட் ஜாக்ஸ் டர்கோட் – முனைவர் பு. அன்பழகன்

ஆன் ராபர்ட் ஜாக்ஸ் டர்கோட் (Anne Robert Jacques Turgot) மே 10, 1727இல் பிறந்து மார்ச் 18, 1781இல் மறைந்த பிரெஞ்சு நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் இயற்கைவாதி (physiocrat) என்று கருதப்படுகிறார். அவர் தொடக்க காலத்தில் பொருளாதார தாராளமயத்திற்கான முன்னெடுப்பின் முன்னோடியாகவும், முதல் அரசியல் பொருளாதார நிபுணராகவும், வேளாண்மையில் குறைந்து வரும் விளிம்பு வருமானத்தின் சட்டத்தின் ஆதரவாளராகவும் நினைவுகூரப்படுகிறார்.

டர்கோட், பிரெஞ்சு நாட்டில், 1774 முதல் 1776 வரை நிதி, வர்த்தகம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அவர் பொருளாக வரிகளைப் பெற்ற முறையினை மாற்றம் செய்து பணமாக வரிகளைப் பெறும் முறைக்கு மாற்றினார். அவர் கில்ட் (ஒரே மாதிரியான தொழில் செய்யும் கைவினைஞர்கள், வணிகர்கள் தங்கள் நலனைப் பாதுகாக்கவும், தரத்தை நிலைநிறுத்தவும், விலை நிர்ணயம் செய்யவும், வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும் உருவாக்கிய தொழில்முறை சங்கமாகும்) முறையையும் விற்பனை மீதான கட்டுப்பாடுகளையும் ஒழித்தார், மேலும் வட்டி விகிதங்களை ஒழுங்குபடுத்துவதை எதிர்த்தார். சொத்து மீது ஒற்றை வரியை அறிமுகப்படுத்துவது உட்படப் பல சீர்திருத்தங்களுக்கு அவர் முன்னோடியாக இருந்தார். ‘திவால்நிலை இல்லை, புதிய வரிகள் இல்லை, புதிய கடன்கள் இல்லை’ என்பது அவரது முழக்கமாகும். அவரது சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, அவர் 1776இல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

பொருளாதாரத்தின் செழிப்புக்கு உழைப்புப் பிரிவின் முக்கியத்துவத்தை ஸ்மித்துக்கு முன்பே டர்கோட் அங்கீகரித்தார். பொருளாதாரத் துறையில் அரசாங்கத்தின் தலையீட்டை அவர் எதிர்த்தார். பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனம் அவசியம் என்றும், மூலதனத்தைக் குவிப்பதற்கான ஒரே வழி மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்தையும் நுகராமல் இருப்பதுதான் என்று டர்கோட்டின் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான மூலதனம், பொருட்கள் மற்றும் உழைப்பின் விலையைச் செலுத்திய பிறகு உபரி உற்பத்தியை நில உரிமையாளர்களால் சேகரிக்கப்பட்டது என்று அவர் நம்பினார்.

மூலதனத்திற்கான வழங்கல் மற்றும் தேவை வட்டியைத் தீர்மானிக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, பிற முதலீடுகளுக்கு இடையே வெவ்வேறு வருவாய் மற்றும் வட்டி விகிதங்களின் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை டர்கோட் பகுப்பாய்வு செய்தார். ஒவ்வொரு முதலீட்டின் மீதான வருவாய் விகிதங்களும் மாறுபடலாம் என்றாலும், மூலதன இயக்கம் கொண்ட போட்டி நிறைந்த தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில், அனைத்து முதலீடுகளின் மீதான வருவாய் விகிதங்களும் சமத்துவத்தை நோக்கிச் செல்லும் என்று அவர் வாதிட்டார். உழைப்பு, நிலம் போலவே, உற்பத்தித் திறன் கொண்டது என்பதை டர்கோட் ஒப்புக்கொண்டார், மேலும் சில சமயங்களில் அவர் உழைப்பு மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படைகளை வழங்கினார்.

வேட்டையாடுபவர், கால்நடை வளர்ப்பு, விவசாயம், இறுதியாக வணிக அல்லது சந்தை சமூகத்தின் அமைதி மற்றும் செழிப்பு வரை பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் நான்கு கட்டக் கோட்பாட்டை டர்கோட் உருவாக்கினார். வேளாண் வளர்ச்சி நிலையின் வருகை ஒரு சமூக உபரியை உருவாக்குகிறது, இது வர்த்தகம், சுற்றுலா, உழைப்புப் பிரிவு, பயனுள்ள கலைகள், கல்வி முன்னேற்றங்கள் மற்றும் பிற சாதனைகளைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்க்கை நிலைமைகளில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

ஆதாரம்: www.econlib.org ; www.britannica.com ; www.hetwebsite.net

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *