மே 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அசோக் குலாட்டி (Economist Ashok Gulati Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அசோக் குலாட்டி – முனைவர் பு. அன்பழகன்

அசோக் குலாட்டி (Ashok Gulati) மே 11, 1954இல் இந்தியாவில் பிறந்த நடப்பு காலத்திய புகழ்பெற்ற வேளாண் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் Indian Council for Research on International Economic Relationsஇல் தற்போது பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்திய அரசினால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களிலும், பிற அமைப்புகளிலும் முதன்மை பதவிகளில் அசோக் குலாட்டி பணியாற்றியுள்ளார். அவர் 2011 முதல் 2014 வரை வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (CACP) தலைவராகவும், பிரதமரின் (வாஜ்பாய் ஆட்சியின் போது) பொருளாதார ஆலோசகராகவும் செயல்பட்டார்.

அசோக் குலாட்டியின் கருத்துப்படி, இந்தியப் பொருளாதாரத்தில், சராசரி குடும்பச் செலவினங்களில் சுமார் பாதி உணவுக்காக செலவிடுகின்றனர் என்றும், மொத்தத் தொழிலாளர்களில் சுமார் பாதி அளவுத் தொழிலாளர்கள் வேளாண்மையிலும் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்களிப்பானது ஒப்பீட்டளவில் குறைவாக (14%ஆக) இருப்பதால், வேளாண்மையின் மையத்தன்மையை வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது ஏனென்றால் இந்தியாவின் வேளாண்மையானது 1.25 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கும் பொறுப்பினை உடையது குறிப்பிடத்தக்கது என்கிறார்.

வறுமையைப் போக்கவும், மக்களுக்கான சரியான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியா பொதுச் செலவினங்களில் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்று அசோக் குலாட்டி குறிப்பிடுகின்றார். இந்தியாவில் உணவுப் பாதுகாப்பிற்காக, தானியங்களின் விலைகளை நிர்ணயம் செய்துள்ளது ஆனால் இது உணவுப் பொருட்களின் விலையினை அதிகரித்துள்ளது என்றும், மேலும் இது ஊட்டச்சத்தான உணவுப் பொருட்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். வளர்ச்சியைத் துரிதப்படுத்த, கொள்கை வகுப்பாளர்கள் தேவைசார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் மற்றும் பொது விநியோக முறையினை வலுப்படுத்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.

வேளாண் சந்தைகள், மதிப்புச் சங்கிலிகளின் வளர்ச்சி, வேளாண் வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) பேச்சுவார்த்தைகள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் கொள்கை ஆலோசனைகள் அவரது ஆராய்ச்சியில் முக்கிய பகுதியாகும். CACPயின் தலைவராகச் செயல்பட்டபோது பல உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையினை (MSP) உயர்த்துவதில் அசோக் குலாட்டி முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், MSP சந்தைகளைச் சீர்குலைப்பதால், விலை உயர்ந்தது என்பதால், அதன் சட்டப்பூர்வ நிலைக்கு எதிராக குலாட்டி வாதிடுகிறார், மேலும் குறைந்த சந்தை விலைகளின் காலங்களில் விவசாயிகளுக்கு உதவ விலை நிலைப்படுத்தல் நிதியை ஆதரிக்கிறார். வேளாண் விளைபொருட்களில் 72% MSPக்குக் கீழே விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். வேளாண் உற்பத்தியில் 28% ஐக் கொண்ட MSPக்கு 23 பொருட்கள் மட்டுமே தகுதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் குலாட்டி ஒரு அறிஞராக, உணவுப் பாதுகாப்பு, வேளாண் வர்த்தகம் மற்றும் வேளாண் மதிப்புச் சங்கிலிகள், பயிர் காப்பீடு, மானியங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய தீர்வுகளை அவர் விரிவாக பரிந்துரைத்துள்ளார். வேளாண்மையில் தேவை சார்ந்த அணுகுமுறையை ஆதரிப்பவரான குலாட்டி, உணவு பதப்படுத்தும் துறையை முன்னுரிமைத் துறையாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அரசு நிறுவனங்கள் தானியங்களை நேரடியாக விநியோகிப்பதற்குப் பதிலாக, இந்தியா நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண்மை மிகவும் முக்கியமானது, ஏனெனில் உழைக்கும் மக்கள்தொகையில் 45.8%வரை ஈடுபடுத்துகிறது (2022-23, PLFS தரவு). நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் (1991-96) 2.4% ஆக இருந்த வேளாண் வளர்ச்சியானது (AAGR) வாஜ்பாய், தேவ கவுடா, குஜ்ரால் காலத்தில் (1997-2004) 3.1% ஆகவும், மன்மோகன் சிங் காலத்தில் (2005-14) 3.5% ஆகவும், மோடி காலத்தில் (2015-24) 3.6% ஆகவும் ஓரளவு அதிகரித்தது, இது அந்தந்த காலகட்டங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் (அசோக் குலாட்டி, பைனான்சியல் எக்ஸ்பிரஸ், 1.4.2024). பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடும்போது வேளாண்மையில் அதிக மதிப்பு உருவாக்கத்திற்காகத் தமிழ்நாட்டை குலாட்டி பாராட்டினார்.

உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும், நீர் நுகர்வு குறைக்கப்பட வேண்டும், நிலத்தடி நீர் மீண்டும் நிரப்பப்பட வேண்டும், மண் சரிவை நிறுத்த வேண்டும், வேளாண்மையிலிருந்து பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். இந்திய வேளாண்மை புத்துயிர் பெறுவதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தாண்டிச் செல்வது அவசியம் என்று குலாட்டி கூறினார்.

CACPயில் அவர் பணியாற்றிய காலத்தில், வேளாண்மை குறித்த நடப்பு கால ஆராய்ச்சி மற்றும் கொள்கை வழிகாட்டுதல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அவரால் இணைந்து தொகுகக்பட்ட The Dragon and the Elephant என்ற புத்தகம் கல்வி மற்றும் அறிவுசார் துறையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பைனான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட Form Plate to Plough என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றதாகும்.

ஆதாரம்: www.mamopanel.org; www.zef.de; www.bayer.com ; www.casi.sas.upenn.edu

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *