மே 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- நிக்கோலஸ் கால்டோர் (Economist Nicholas Kaldor Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- நிக்கோலஸ் கால்டோர் – முனைவர் பு. அன்பழகன்

நிக்கோலஸ் கால்டோர் (Nicholas Kaldor) மே 12, 1908இல் பிறந்து செப்டம்பர் 30, 1986இல் மறைந்த ஹங்கேரியில் பிறந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் மற்றும் கேம்பிரிட்ஜ் பொருளாதார நிபுணர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் ஆவார். கீன்ஸியக் கோட்பாடுகள் பெருமளவிற்கு அவருடைய பொருளாதாரக் கருத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக நலப் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

பொருளாதாரக் கோட்பாட்டில், செல்வம் மற்றும் வருமான பகிர்வு பற்றி அவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வரிக் கொள்கையில் நேர்மையான நிலைப்பாட்டின் சார்பாக அவர் வாதிட்டார், அதிகமாக வருவாய் ஈட்டுபவர்கள் அதிக வரி விகிதத்தைச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். கால்டோரின் பகிர்வுக் கோட்பாடானது சேமிப்பின் அளவு உண்மையில் முதலீட்டின் அளவால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது, இது வருமானம் மற்றும் வேலைவாய்ப்பின் அளவை தீர்மானிக்கிறது.

கால்டோரின் பொருளாதார வளர்ச்சி கோட்பாட்டின் படி, தேசிய வருமானமானது வளங்களின் குவிப்பு விகிதத்தைப் பொறுத்ததாகும். முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இரண்டு நிலைகள் உள்ளன என்றார், முதல் கட்டத்தில், திரட்டப்பட்ட வளங்களின் பற்றாக்குறை உள்ளது என்றும், இரண்டாவது கட்டத்தில், திரட்டப்பட்ட வளங்களின் அதிகப்படியாக உள்ளது என்றார்.

அவர் Compensation criteria (இழப்பீட்டு அளவுகோல்களை) உருவாக்கினார், அவை இப்போது கால்டோரின் அளவுகோல் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கொள்கையின்படி, சிறந்த நிலையில் இருப்பவர்கள் ஏழை நிலையில் வாழ்பவர்களுக்கு ஈடுசெய்யும்போது வருமான மறு ஒதுக்கீடு மிகவும் திறமையானதாக இருக்கும் என்பதாகும். Circular Cumulative Causation (வட்டக் கூட்டுக் காரணம்) கோட்பாட்டின் முக்கிய கருத்தை உருவாக்க கால்டோர் கன்னர் மிர்டலுடன் இணைந்து பணியாற்றினார். அவரது வாழ்நாள் முழுவதும், கால்டோர் புதிய தொன்மைப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாகவும், குறிப்பாக பணவியல் தொடர்புடையதை கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார்.

இந்தியா, இலங்கை, மெக்சிகோ மற்றும் கானாவில் உள்ள மக்கள் தங்கள் உண்மையான வருமானத்திற்கு வரி செலுத்தும் பழக்கமில்லாதவர்கள் என்று அவர் கருத்து தெரிவித்தார். 1956ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த இந்திய வரி முறையை மறுபரிசீலனை செய்ய நிக்கோலஸ் கால்டோரை இந்தியப் புள்ளியியல் அறிஞரான பி.சி.மஹோலோனோபீஸ் அழைத்தார், மேலும் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட செல்வத்தின் மீதான வருடாந்திர வரி, மூலதன ஆதாயங்களின் மீதான வரி, பரிசு வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றை அறிமுகப்படுத்த கால்டோர் பரிந்துரைத்தார் .

ஆதாரம்: www.hetwebsite.net; www.stephanygj.net; www.thebritishacademy.ac.uk; www.postkeynesian.net

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *