மே 14 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிளாடியா டேல் கோல்டின் (Economist Glaudia Dale Goldin Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிளாடியா டேல் கோல்டின் – முனைவர் பு. அன்பழகன்

கிளாடியா டேல் கோல்டின் (Glaudia Dale Goldin) மே 14, 1946இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் தொழிலாளர் பொருளாதார நிபுணர் ஆவார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். 2023ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய அவரது ஆய்விற்காக பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற மூன்றாவது பெண்மணி மற்றும் இப் பரிசினைத் தனித்து வென்ற ஒரே பெண்மணி கோல்டின் ஆவார்.

கோல்டினின் பாலின ஊதிய இடைவெளி, பெண் தொழிலாளர் பங்கேற்பு, வருமான சமத்துவமின்மை, கல்வி, குடியேற்றம் மற்றும் தொழில்நுட்ப மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவருடைய ஆய்வுத் தளம் பரவியுள்ளது. கோல்டினின், பெண் – ஆண் தொழிலாளர்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் குறித்த வரலாற்றுக் கண்ணோட்டத்தை வழங்கியுள்ளார், அந்த வேறுபாடுகள் காலப்போக்கில் எவ்வாறு, ஏன் மாறியது என்று இன்றுவரை நீடிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கியது.

பல நூற்றாண்டுகளாகப் பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தை பங்கேற்பு குறித்த முதல் விரிவான புள்ளிவிவரக் கணக்கை கிளாடியா கோல்டின் வழங்கினார். பாலின இடைவெளியின் முதன்மை ஆதாரங்களையும் அவரது ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. உலகளாவிய தொழிலாளர் சந்தையில் பெண்கள் மிகவும் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் வேலை செய்யும் போது, அவர்களின் கூலி அல்லது உதியமானது ஆண்களை விடக் குறைவாகவே உள்ளது என்கிறார். கிளாடியா கோல்டின் ஆய்வானது, அமெரிக்காவில் 200 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளைச் சேகரித்து, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எவ்வாறு, ஏன் காலப்போக்கில் மாறிவிட்டன என்பதை விளக்கினார். இந்தக் காலகட்டம் முழுவதும் தொழிலாளர் சந்தையில் பெண் பங்கேற்பு மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருக்கவில்லை, மாறாக U – வடிவ வளைவை உருவாக்குகிறது என்று கோல்டின் காட்டினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேளாண் சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகத்திற்கு மாறியதால் திருமணமான பெண்களின் பங்கேற்பு குறைந்திருந்தது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேவைத் துறையின் வளர்ச்சியுடன் இது அதிகரிக்கத் தொடங்கியது. வீடு மற்றும் குடும்பத்திற்கான பெண்களின் பொறுப்புகள் தொடர்பான கட்டமைப்பு மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் சமூக விதிமுறைகளின் விளைவுகளை கோல்டின் விளக்கினார்.

இருபதாம் நூற்றாண்டில், பெண்களின் கல்வி நிலைகள் தொடர்ந்து அதிகரித்தன, மேலும் பெரும்பாலான உயர் வருமான நாடுகளில், அவை இப்போது ஆண்களை விடக் கணிசமாக உயர்ந்துள்ளன. தொழில் திட்டமிடலுக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கருத்தடை மாத்திரையை அணுகுவது இந்த புரட்சிகர மாற்றத்தை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது என்பதை கோல்டின் நிரூபித்தார். இருபதாம் நூற்றாண்டில் நவீனமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை செய்யும் பெண்களின் விகிதாச்சாரத்தில் அதிகரிப்பு இருந்தபோதிலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி நீண்ட காலத்திற்கு பெரும்பாலும் மாறாமல் இருந்தது.

கோல்டினின் கூற்றுப்படி, வாழ்நாள் முழுவதும் தொழில் வாய்ப்புகளைப் பாதிக்கும் கல்வி முடிவுகள் ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே எடுக்கப்படுகின்றன என்பது விளக்கத்தின் ஒரு பகுதியாகும். முந்தைய தலைமுறையினரின் அனுபவங்கள் இளம் பெண்களின் எதிர்பார்ப்புகளை வடிவமைத்தால் – உதாரணமாக, குழந்தைகள் வளரும் வரை வேலைக்குத் திரும்பாத அவர்களின் தாய்மார்கள் – வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்றார்.

வரலாற்று ரீதியாக, வருமானத்தில் பாலின இடைவெளியின் பெரும்பகுதி கல்வி மற்றும் தொழில் தேர்வுகளில் உள்ள வேறுபாடுகளால் ஏற்படக்கூடும். இருப்பினும், இந்த வருவாய் வேறுபாட்டின் பெரும்பகுதி இப்போது ஒரே தொழிலில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ளது என்றும், இது முதன்மையாக முதல் குழந்தையின் பிறப்புடன் எழுகிறது என்றும் கோல்டின் காட்டியுள்ளார்.

கோல்டினின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

Goldin C Kerr SP., Olivetti C (2022): When the Kids Grow Up: Women’s Employment and Earnings across the Familhy Lifecycle, VOX Eu CEPR.

Goldin C,(2021): Career & Family: Women’s Century-Long Journey toward Equity, Princeton, NJ: Princeton University Press.

ஆதாரம்: www.investopedia.com; www.britannica.com; www.nobelprize.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *