மே 25 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லான்ஸ் ஜெரோம் டெய்லர் (Economist Lance Jerome Taylor Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லான்ஸ் ஜெரோம் டெய்லர் – முனைவர் பு. அன்பழகன்

லான்ஸ் ஜெரோம் டெய்லர் (Lance Jerome Taylor) மே 25, 1940இல் பிறந்து ஆகஸ்ட் 15, 2022இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் கட்டமைப்பு பேரியல் பொருளாதாரத்தின் (structural macroeconomics) நிறுவனராகக் கருதப்படுகிறார். தோல்வியைத் தழுவிய முதன்மையான பேரியல் பொருளாதாரத்தை மறுகட்டமைத்து, நடப்பு நிலையிலான நோக்கின் நடைமுறையினை அடிப்படையாகக் கொண்டு பரந்த அடிப்படையிலான ஒரு நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயனளிக்கும் ஒரு பொருத்தமான, கட்டமைப்புவாத மாற்றீட்டை உருவாக்குவதற்கான பணியில் டெய்லர் ஈடுபட்டார். டெய்லர் தொடக்கத்தில் ஒரு தீவிரமான கீன்ஸியப் பேரியல் பொருளாதார அறிஞர் ஆவார். 1980க்குப் பிறகு, பேரியல் பொருளாதாரம் பொருத்தமற்றதாகிவிட்டது என்று அவர் நம்பினார். பிரதான பேரியல் பொருளாதாரம் பெரும்பாலும் குறைந்தபட்ச சமூக உள்ளடக்கத்துடன் சிக்கல்களை இலக்காகக் கொண்ட இரண்டாந்தர பயன்பாட்டுக் கணிதமாக மாறியது என்று குறிப்பிட்டார்

டெய்லரின் கூற்றுப்படி, கட்டமைப்புவாத பொருளாதாரம் அதன் முக்கிய நிறுவனங்கள், உற்பத்தித் துறைகள் மற்றும் சமூகக் குழுக்கள் முழுவதும் பரவலாக்கப்பட்ட தொடர்புகள் வழியாகப் பேரியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள இயலும் என்றார். டெய்லர் பேரியல் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரம் ஆகிய துறைகளைப் பற்றி விரிவாக எழுதினார். வெவ்வேறு சமூக உறவுகளின் கீழ் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் வருமான பகிர்வின் தொடர்புகளில் கவனம் செலுத்தினார். நவீன கணக்கிடக்கூடிய பொது சமநிலை மாதிரிகளின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்தார். தேசிய பொருளாதாரங்களின் சமூக கணக்கியல் அணிகளை (social accounting matrices) பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளை விளைவிக்கும் நிலைமைகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான பொருளாதாரங்களை ஆதரிக்கும் நிலைமைகளை அடையாளம் காண அவர் பணியாற்றினார். அன்மைக் காலங்களில் பொருளாதார நெருக்கடி தொடர்பான, நிதி கட்டுப்பாடு நீக்கம் மற்றும் வருமான சமத்துவமின்மையின் நிலைமைகளை டெய்லர் எடுத்துரைத்தார்.

டெய்லர் சுற்றுச்சூழல் தொடர்பான பேரியல் பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டு, நிலையான மற்றும் தேவை சார்ந்த வளர்ச்சி மாதிரிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால சமூக செலவுகள், உமிழ்வு கட்டுப்பாட்டுச் சட்டம், பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்தன்மையில் பசுமை நிறுவனங்களின் பங்கு, அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் சேவை சார்ந்த பொருளாதாரங்களில் ஏற்படும் தாக்கத்தை அவர் பகுப்பாய்வு செய்தார்.

டெய்லரின் கூற்றுப்படி, குறைந்த வருமான பெறும் நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு உதவப் பொருளாதாரம் பயன்படுத்தப்பட வேண்டும், இதற்குத் திறந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றார். 1968-69இல் சிலியில் தொடங்கி பிரேசில் முடிய, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், போர்ச்சுகல், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய உலகளாவிய அரசாங்கங்களுக்கு லான்ஸ் டெய்லர் பொருளாதார ஆலோசனை வழங்கினார். டெய்லர் வளரும் பொருளாதாரத்தின் புதிய இரு-துறை மாதிரிகளை உருவாக்கினார், இது விலை, தேவையைத் தீர்மானிக்கும் வேளாண்மைத் துறையையும், அளவினைத் தீர்மானிக்கும் தொழில்துறைத் துறையையும் வேறுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியின் தொடர் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்ய ஏங்கல் வளைகோடுகளைப் (நுகர்வு தேவைக்கு) பயன்படுத்தினார். அவரது மரபு என்பது கலெக்கி, கால்டோர், குட்வின், மார்க்ஸ் மற்றும் கெய்ன்ஸ் ஆகியோரின் தத்துவார்த்த நுண்ணறிவுகளின் தொகுப்பாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

(1979): “Macro Model for Developing Countires”.
(1974): “Multi-sectoral Study of Economic Growth”.
(1991): “Income Distribution, Inflation and Growth”.

ஆதாரம்: www.academic.oup.com; www.onlinelibrary.wiley.com; www.ineteconomics.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *