மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்

நாங்கள்

கோடிக்கால் தீபம்

பகலிலும் பிரகாசிக்கும்

நட்சத்திரங்களின் அணிவகுப்பு

மார்க்ஸின் மின்சாரம்

எங்கெல்ஸின் விஞ்ஞானம்

நாங்கள் நிரந்தரமானவர்கள்

அழிவதில்லை

நாங்கள் ஆதி கடவுள்கள்

நாங்கள் வியர்த்தோம்

நதிகளாயின

நாங்கள் தடுத்தோம்

அணைகளாயின

எங்கள்

காலசைவில்

காடுகள்

கண்ணசைவில்

நாடுகள்

உடலின் வியர்வை

விவசாயி

தொழிலாளி

அறிவின் வியர்வை

அறிவியல் அறிஞர்கள்

தொழில் நுட்ப வல்லுநர்கள்

மனதின் வியர்வை

படைப்பாளர்கள்

பண்பாட்டாளர்கள்

உழைப்பின் மலராய்

உலகம்

தேனெடுக்கும் வண்டுகளாய்த்

திரிந்தோம் மகிழ்ந்தோம்

எல்லாம் உழைப்பு

எங்கும் உழைப்பு

உபரி உழைப்பே

உலகமயம்

சுகப்பட விடாத சூழ்ச்சிகள்

சுரண்டும் கூட்டத்தின்

ஆட்சிகள்

கடவுளைப் படைத்தக்

கட்டற்ற மானுடன்

காயம் பட்டக் காட்சிகள்

வரலாறு முழுவதும் வர்க்கப் போர்கள்

வழிப்பறி செய்யும் சொர்க்கப் போர்கள்

அயலான் வந்து அக்கப்போராய்

மூளையைச் சுரண்டும் முற்றுகைப் போர்கள்

இழந்தோம் பெற்றோம்

மீண்டும் இழந்தோம்

இன்றோ….

வசிப்பதற்கு லாயக்கற்ற

மனிதனுக்கான குதிரை லாயங்கள்

முதலாளியின் உண்டியலுக்குள்

சறுக்கிவிழுகிற

பந்தயக் குதிரைகளின்

பரிதாப சவாரிகள்

எல்லாம் மீறி எழுந்து நிற்போம்

வியர்வைகளின் பிள்ளைகள்

தோழர்களானோம்

மார்க்சும் லெனினும்

மனதின் வரைபடம்

காஸ்ட்ரோ, சேயின்

கவிதை வார்ப்படம்

நிறங்களின் கலவையாய்ப் பறப்பது அல்ல

கூக்குரல் இட்டுச் சிறகை அசைப்பது

கொடிக்கம்ப உச்சியில்

குருதிப் பறவை

மே ஒன்று….

சுதந்திர மழலைகள்

அசையும்

கர்ப்பிணியின் கருப்பை

ஹே மார்க்கட் சந்தையில்

உயிர்களைக் கொடுத்து வாங்கிய

விடுதலையின் குழந்தை

வாலிபம் எய்தி வரலாறு படைக்கும்.

                   

   நா.வே.அருள்