மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர் | May Day Special Story Neelum Velai Neram | www.bookday.com

மே தின சிறப்புக் கதை:- “நீளும் வேலை நேரம்” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

மே தின சிறப்புக் கதை:- “நீளும் வேலை நேரம்”

கைப் பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த யாழினிக்குப் பிடித்த திரை இசைப் பாடல்கள் நின்று நினைவூட்டல் இசை ஒலித்தது. காலை மணி ஐந்து. யாழினி அதனை நிறுத்தியதும் திரையிசை தொடர்ந்தது.

அவள் துயிலெழுந்து, ஓய்வறை அவசியங்கள் முடித்து சமயலறையில் வேலைகளை தொடங்கிவிட்டாள். அடுப்பில் தேநீர் கொதித்துக் கொண்டிருந்தது. வடிகட்டி அருந்தி விட்டு அத்தைக்கும் தந்துவிட்டு காலை உணவு சமைக்க தொடங்க வேண்டும். மகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்யணும்.

நேரத்தே வேலைகளை முடிப்பது அவளுக்கு கை வந்த கலை. எதையும் அலுப்பாக கருதாமல், விருப்பத்துடன் செய்வது அவளின் நேர மேலாண்மையை எளிதாக்குகிறது. கணவனின் கனிவான புரிதலும் மகளின் இயல்பான கூர் மதியும் மூவருக்குமிடையேயான இணக்கத்தை மேம்படுத்துகிறது. அத்தையின் வார்த்தைகளில் தலை முறை இடைவெளி தோன்றி மறையும். இவள் மனதிலும் தங்காது. கணவனுக்கு ரயில்வேயில் இன்ஜின் ஓட்டுனர் பணி.

பல நூறு பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் பணியாற்றுபவர். அதற்கு அனுசரணையாக இருக்க வேண்டியதன் அவசியம் அவளுக்கு தெரியும். கணவன், மகள், அத்தை மூவரின் தேவைகளோடு தன் தேவைகளையும் கவனித்துக் கொண்டு வேலைக்கு போக வேண்டும். அலுவலகத்திலும் நேர்த்தியாக வேலை செய்வாள்.

இவையனைத்தையும் அமைதியாக செய்தாலும் அவளுக்கு பரபரப்பான நேரம் கணவன் பணியிலிருந்து திரும்பும் நேரம்தான். குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல் அது மாறிக் கொண்டே இருக்கும். எல்லாவற்றிற்கும் பழகிப் போனாள்.

மணி எட்டு ஆகிவிட்டது. மகளை குளிக்க வைத்து உடை அணிவித்து உணவு தந்து மதியவுணவுடன் பள்ளிக்கு அனுப்பியாகி விட்டது. அத்தைக்கும் காலை உணவு தந்தாகிவிட்டது. மதிய உணவு, மருந்து, குடுவையில் வெந்நீர் தனியாக மேஜையில் வைத்துவிட்டாள். தானும் குளித்து முடித்து காலை உணவும் சாப்பிட்டு விட்டாள்.

கணவனுக்கு காலை மற்றும் மதிய உணவு தனித்தனியே வைத்தாகிவிட்டது. குளியலறையில் வெப்பம் வெளியேற்றி, உடல் துவட்ட துண்டு எடுத்து வைத்துவிட்டாள். படுக்கை விரிப்பை சரி செய்து தலையணை போர்வைகளை வைத்து விட்டாள். வீட்டு உடுப்பை களைந்து அலுவலக உடையணிந்து கைப்பையில் மதிய உணவு, சாவி, கைப்பேசி எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட தயாரானாள்.

வாசலில் ஸ்கூட்டர் வந்து நின்ற ஒலி கேட்டது. கணவன் வேலை முடிந்து வந்துவிட்டான். யாழினி சற்று பரபரப்பானாள். அவன் உள்ளே வர காத்திருந்தாள். கவனமாக அவன் கண்களைப் பார்த்தாள். களைப்புற்றிருந்த பார்வையினூடே அவன் தேவையை படிக்க முயன்றாள். தனியாக சந்தித்துக் கொண்டே சில நாட்களாகி விட்டன.

இன்னும் சந்திக்காமல் செல்வது இயலுமா என்று தடுமாறினாள். இன்றாவது நிறைவாக தூங்க முடியுமா என்று அவன் கண்கள் ஏங்கியதை கவனித்து விட்டாள். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. விவஸ்தை கெட்டவள் என்று வார்த்தைகளை உதிர்க்க தயாராகிக் கொண்டிருந்த அத்தையின் பக்கம் திரும்பாமல் அறைக்குள் சென்று அலுவலக உடையை களைந்து வீட்டு உடைக்கு மாறினாள்.

(ரயில்வே ஊழியர் குடும்ப சந்திப்பில் நடந்த வேதனை பகிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது.)

📚 எழுதியவர்:

– சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *