May Day
May Day

1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான ஆல்பர்ட் பார்சனும், மெத்தாடிஸ்ட் சர்ச் போதகரான சாமுவேல் ஃபெல்டனும் பேசினார்கள். ஒவ்வொருவரும் அமெரிக்க சமூகத்தில் என்ன தவறு நேர்ந்தது என்று கோடிட்டுக் காட்டினார்கள். பத்தரை மணிக்கு ஃபெல்டன் உரையை முடிக்கும் தருவாயில் கூட்டம் 200 பேர்களாக சுருங்கிவிட்டது. அப்போது ஆயதம் தாங்கிய 176 போலீஸ்காரர்கள் கூட்டத்தைத் தாக்கத் துவங்கினார்கள்.

திடீரென, அடையாளம் தெரியாத ஒருவரால் ஒரு டைனமைட் குண்டு வீசப்பட்டது. இப்படிப்பட்ட குண்டு வீசப்படுவது, அமெரிக்காவில் இதுதான் முதல் முறை. குண்டு போலீசாருக்கு நடுவே விழுந்து, ஒருவர் இறக்க, பலர் பலத்த காயமடைந்தனர். போலீஸ் கூட்டத்தை நோக்கி சுட, குறைந்தபட்சம் நான்கு தொழிலாளர்கள் உயிரிழக்க, பலர் காயமடைந்தார்கள். பதட்டத்தில் போலீஸ் தனது ஆட்களின் மேலேயே சுட்டது. இதனால், பின்னர் மேலும் ஆறு போலீசார் உயிரிழந்தனர்.

அடுத்த பல வாரங்களுக்கு, சிகாகோவிலும், நாட்டின் பல நகரங்களிலும் பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியன தடை செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், பல்வேறு இன மக்களின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கு நைட்ஸ் ஆஃப் லேபர் என்ற அமைப்புதான் காரணம் என்று பழி சுமத்தப்பட்டது. செய்தித்தாள்களும், வர்த்தகர்களும், பின்னர் பொதுமக்களும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் திரும்பினர். அனைவரும் ‘சட்டம், ஒழுங்கு’ வேண்டும் என்று கூச்சலிட்டனர். இதன் தொடர்ச்சியாக, எட்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, இதில் நால்வர் 1887 நவம்பர் 11 அன்று தூக்கிலிடப்பட்டனர். அதற்கு முந்தின நாள், இவர்களில் ஒருவரான லூயி லிங்க், டைனமைட் குண்டால் முகம் சிதறி, தன் அறையில் கிடந்தார். சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூற, சிலர் அவர் போலீசால் கொலை செய்யப்பட்டதாகக் கூறினர்.

1893 ஜூனில், இலினாய்ஸ் மாகாண கவர்னரான ஜான் பீட்டர் அல்ட்ஜெல்ட் மற்ற மூவருக்கு மன்னிப்பு அளித்தார். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் அஸ்தமித்தது.
ஹேமார்க்கெட் கூட்டம், குண்டு வீச்சு ஆகிய சம்பவங்கள், (ஹே மார்க்கெட் கலவரம்) இந்த வழக்கு விசாரணை, தூக்குத்தண்டனை, அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ‘ஹே மார்க்கெட் விவகாரம்’ என்று அழைக்கப்படுகின்றன.
1886ல் நடந்த இந்த ஹேமார்க்கெட் விவகாரம் நீண்ட காலம் முன்பு நடந்தது, அது வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய வெறும் சம்பவம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இந்த விவகாரம் நடக்கக் காரணமான பிரச்சனைகள்…. வேலையின்மை, சிறுபான்மைக் குழுக்களின் உரிமை, செல்வத்தின் சமமான பங்கீடு, கூட்டம் கூடவும், பேசவும் சுதந்திரம், அரசியல் ஊழல், போலீஸ் கண்காணிப்பு, அடக்குமுறை அமெரிக்கத் தொழிலாளர் தம் விருப்பம் போல் சங்கம் அமைக்கும் உரிமை போன்றவை இன்றும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன.
1886க்குப் பிறகு சிகாகோ எவ்வளவோ மாறிவிட்டாலும், எத்தனையோ பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டாலும், ஹேமார்க்கெட் தொடர்பாக நாம் பார்க்கக்கூடிய இடங்கள் இன்றும் பல உள்ளன.

ஹேமார்க்கெட் சதுக்கம் இன்றும் கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. பழைய குக் கவுண்டி நீதிமன்றமும், சிறை இருந்த பகுதியும் 1880களின் உணர்வை அப்படியே கொண்டுள்ளன. விக்கர் பார்க் – மில்வாக்கி சாலைப் பகுதி அற்புதமான கட்டடங்களோடு, பல்வேறு இன மக்களும் வாழும் பகுதியாக உள்ளது. பழைய ஜெர்மன் வால்ட்ஹைம் கல்லறைக்குச் சென்று பார்த்தால், ஹேமார்க்கெட் விவகாரத்தின் துயரத்தால் மனம் கனக்கும். ஹேமார்க்கெட் எண்மான் பரபரப்பான வாழ்க்கை மட்டுமல்ல. அந்தக் கூட்டம், விசாரணை, தண்டனை ஆகியவற்றால் வாழ்வின் போக்கே திசை திரும்பிய வேறு இருபத்தி நான்கு பேரது வாழ்க்கையும் உங்கள் மனதைக் கவரும்.

ஹேமார்க்கெட் விவகாரம் போன்றதொரு முக்கிய நிகழ்வு வேறு எதுவும் இல்லை. எனினும் அமெரிக்கர்கள் அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. அமெரிக்க தொழிலாளர் வரலாற்றின் இந்தத் திருப்புமுனையைப் பற்றி அமெரிக்காவின் உழைப்பாளி ஆண்களும், பெண்களும் உணர வேண்டும் என்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஏன் இது சிகாகோவில் நடந்தது?

1950களில் சிகாகோ எழுத்தாளர் நெல்சன் அல்கிரன் சிகாகோவை ‘உருவாகி வரும் நகரம்’, ‘ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாழ ஏற்ற இடம்’ என்று குறிப்பிட்டார். சிகாகோ ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் இருந்துள்ளதாகத் தெரிகிறது. சிகாகோ ஒரு கூட்டுறவான சமூகம் உள்ள இடமல்ல. அதிகமான போட்டி உள்ள இடம். 1880களில் சிகாகோ வந்த வெளிநாட்டினர், ‘சிகாகோதார்கள் வர்த்தக முயற்சிகளிலும், செல்வத்தைக் குவிப்பதிலும் தம் நேரத்தை முழுமையாக செலவிட்டதாகவும், மற்ற விஷயங்கள் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரமே இல்லை என்றும் குறிப்பிட்டார்கள். ‘டாலர் தான் சிகாகோவின் அரசன்’ என்பதுதான் வெளிநாட்டவரின் பொதுவான கருத்து.

1880களில் உலகில் வேகமாக வளர்ந்து வந்த நகரமாக சிகாகோ இருந்தது. தங்களுக்காக மட்டுமே வாழக்கூடிய வகையினரை அது ஈர்த்தது. 1887ல் லண்டன் டைம்ஸ், ‘நியூயார்க்கை விட சிகாகோவில் துணிச்சலான, ஊதாரித்தனமான, கூர்மதி வாய்ந்த, இரக்கமற்ற அமெரிக்க சுபாவம் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறியது.
அங்கு நிலம் மலிவாக இருந்ததாலும், அனைத்தும் புதிதாக உருவாக்க வேண்டியதாக இருந்ததாலும், இயல்பாகவே ஆரம்பகாலத்தில் சிகாகோ வந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. நியு இங்கிலாந்திலிருந்தும், கிழக்கிலிருந்தும் வந்த ஆரம்பகால ஆங்கிலோ – சாக்ஸன் புரோட்டஸ்டெண்டுகளான ஜார்ஜ் புல்மன், மார்ஷல் ஃபீல்ட், பாட்டர் பாமர், சைரஸ் மெக்கார்மிக் போன்றோர் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதும் இந்நகர வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். 1930கள் வரை இவர்களது வாரிசுகள் அரசியல் ரீதியாக இங்கு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்கள்.
இங்கு ஆரம்பகாலத்தில் குடியேறியவர்கள் 1830, 40களில் குடியேறிய ஐரிஷ்காரர்களையும், 1848ற்குப் பிறகு வந்த ஜெர்மானியர்களையும் மட்டமானவர்களாகக் கருதினார்கள். இவர்களைக் குறைந்த கூலிக்குச் சுரண்டலாம் என்று நினைத்தார்கள். இந்த ஐரிஷ் மற்றும் ஜெர்மானியர்கள் தம்முள் அணிதிரண்டு, அமெரிக்கர் குடிமக்களாகத் தம் உரிமைகளை நிலைநாட்டப்போராடத் துவங்கியபோது, இவர்களுக்கு எதிராக செக், பொஹிமியன், போலிஷ் மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினார்கள். இதன் விளைவாக, இன முரண்பாடு சிகாகோவின் ஆரம்பகால குணாதிசயமாக உருவானது.

நகரத்தின் செல்வமிக்க முதலாளிகளுக்கு தமது தொழிலாளர்களுக்குத் தாம் ஏற்படுத்திய பிரச்சனைகள் பற்றி புரியவில்லை. தாங்கள் செல்வந்தர்களாக ஆனதுபோல் தங்களது தொழிலாளர்களும் செல்வந்தர்களாக ஆகிவிடுவார்கள் என்று நம்ப அவர்கள் விரும்பினார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வேலையின்றி இருந்தபோது, ஏழைகள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள். ஹேமார்க்கெட் சம்பவத்திற்கு ஓராண்டிற்கு முன், பெயர் குறிப்பிடாத ஒரு சிகாகோ முதலாளி. ‘கடுமையான காலமும், அதை சரி செய்யும் விதமும்’ என்ற கட்டுரையை எழுதினார். அதில் பல்வேறு இனங்களைச் சார்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினார்:

‘ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளமும், முறையாகக் கையாளப்பட்டால், விரைவில் உங்களை சுதந்திரமானவர்களாக ஆக்கிவிடும். இந்த சுதந்திரம் அடைய குறிப்பான சாகசமோ, உயர்ந்த அறிவோ, அல்லது அசாத்தியமான சக்தியோ தேவையில்லை. ஊக்கம், தன்னடக்கம், நல்ல நிர்வாகம் ஆகியவைதான் தாரகமந்திரம்.
ஆனால் சுமார் ஒரு டாலர் சம்பாதிக்கும் ஒருவன் எப்படி சேமிப்பது? ஒரு மணி நேரத்திற்கு 5சென்ட் சம்பாதிக்கும் ஒரு பெண்ணோ, குழந்தையோ இந்த அறிவுரையை ஏற்று நடக்க முடியுமா? 1880கள் வாக்கில் புதிய இயந்திரங்கள், திறமையான தொழிலாளிகளின் வேலைகளைக் கூட காலி செய்தன. சிகாகோவில் உபரித் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால், நீங்கள் சம்பள வெட்டை அல்லது அதிக வேலை நேரத்தை ஒப்புக்கொள்ள மறுத்தால், உங்கள் வேலையைப் பார்க்க எப்போதும் யாரோ ஒருவன் தயாராக இருந்தான்.
சிகாகோவில் சிறுபான்மை குழுக்களின் மீது அரசியல் ரீதியான அடக்குமுறை
1855 வாக்கில், சிகாகோவில் உள்ளூர்காரர்களைவிட வெளிநாட்டில் பிறந்த வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். நகரின் பணக்கார முதலாளிகள் தங்கள் அரசியல் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று பயந்தார்கள். எனவே ‘நோ-நத்திங்ஸ்’ எனப்படும் வெளிநாட்டவர், தொழிலாளர் விரோத இனவாத அரசியல் கட்சியைத் துவங்கினார்கள்.

டாக்டர். லெவி.டி.பூன் என்ற அதிதீவிர பழமைவாதியான மருத்துவர் மேயர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்து அரசு வேலைகளில், போலீசில், தீயணைப்புத் துறையிலும் வெளிநாட்டவரை வேலையிலிருந்து விரட்டி, நகரைச் சுத்தப்படுத்துவதாக உறுதியளித்தார். பொது உணவகங்கள், மதுபானக் கூடங்களை ஞாயிறன்று மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். மதுபான உரிமக் கட்டணத்தை ஆண்டுக்கு 30 டாலரிலிருந்து 300 டாலராக உயர்த்தினார். இதுபோன்ற உணவகங்கள், மதுபானக் கூடங்களில்தான் ஓய்வுநாளான ஞாயிறன்று ஐரிஷ், ஜெர்மானியத் தொழிலாளர்கள் கூடுவது வழக்கம். கூட்டம் கூடுவதையும், பேச்சுரிமையையும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தடை செய்ய முடியாது என்பதால், அதற்கு அடுத்த சிறந்த வழிமுறையாக மதுபானக் கூடங்களை மூடும் முடிவை எடுத்தார்கள்.

1855 ஏப்ரல் 21 காலையும், மீண்டும் காலை 3 மணிக்கும், மில்வாக்கி சாலை ஜெர்மானியப் பகுதிகளிலிருந்து நகரின் மையத்திற்கு வந்து நகர்மன்றம் (சிவீtஹ் லீணீறீறீ) அருகே ஆர்ப்பாட்டம் செய்ய ஜெர்மானியத் தொழிலாளர்கள் முயன்றார்கள். மேயர் பூன் நகர் மன்றத்திற்குவரும் பெரும்பாலான சாலைகளில் பெரும் துப்பாக்கிகளை ஏந்திய போலீசை நிறுத்தினார். மேலும் போலீசுக்கு உதவ, முதலாளிகளின் அமைதிக் காப்புக் குழுவிலிருந்து 250 பேரையும் நிறுத்தினார். மதியம் கூட்டம் கிளார்க் சாலை பாலத்தைக் கடந்த போது, மேயர் பாலத்தை மூட உத்தரவிட, ஜெர்மானியர்கள் பாலத்தின் நடுவே சிக்கிக் கொண்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த பல ஜெர்மானியர்கள் காயமடைந்தார்கள். ஸ்டீவ் மார்டின் என்ற 26 வயது தொழிலாளி கொல்லப்பட்டார். ஹண்ட் என்ற ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டும் காயமடைந்தார். புரையேறிப் போய் அவரது இடது கை துண்டிக்கப்பட்ட போது, சிகாகோவை ஜெர்மானியரிடமிருந்து காத்ததற்காக, முதலாளிகள் நன்கொடை வசூலித்து அவருக்கு 3000 டாலர் அளித்தார்கள். ‘கலவரம்’ பற்றி விசாரணை நடந்தது. பின்னர் மேயரே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். நகரத்தில் ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும் மேம்படும் வகையில் பல்வேறு இனங்களும் வாழும் பகுதிகளில் அதிக அளவில் ஜெர்மனி, ஸ்காண்டி நேவியன், ஐரிஷ் மற்றும் பிற அந்நிய மொழி பேசும் போலீசார் பயன்படுத்தப்பட வேண்டும் என விசாரணைக் குழு பரிந்துரைத்தது.
தீவிபத்து, வேலையின்மை, பட்டினி சிகாகோ, தீவிபத்தில் 250 பேர் பலியாக, ஒரு லட்சத்திற்கும் மேல் மக்களின் வீடிழந்தார்கள். வீடிழந்த பலரும் சிகாகோ நதியருகே, சிகாகோ சாலையருகே வசித்த ஜெர்மானியரும், ஸ்காண்டி நேவியர்களும் தான். அதிக உயிரிழப்பும் இவர்களுக்குத் தான். ஏனெனில் இவர்கள் பகுதி இரு பக்கத்திலும் தீக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

இந்த விபத்திற்குப் பிறகு, அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு மக்களும், சிகாகோவில் பட்டினியால் வாழும் மக்களுக்காக ஐந்து மில்லியன் டாலர் வசூலித்துத் தந்தார்கள். (இதன் இன்றைய மதிப்பு அரை பில்லியன்) இப்பணத்தை அரசு நிறுவனங்கள் மூலம் நிர்வகிப்பதை விட்டுவிட்டு, அந்தப் பொறுப்பை தனது வர்த்தக நண்பர்களால் உருவாக்கப்பட்ட ரிலீஃப் அண்ட் எய்ட் சொஸைட்டியிடம் அளித்தார் மேயர் மெடில்.
ஆரம்பத்தில் ஏழைகளுக்கு உதவிகள் தரப்பட்டன. ஆனால் போகப் போக, பசியில் வாடுபவர்கள், உதவி பெறுவது மேலும் மேலும் கடினமாகியது. சிகாகோ ரிலீஃப் அண்ட் எய்ட் சொஸைட்டியின் இயக்குனர் கூறியதாவது:
‘தங்கள் நலனை சரிவரப் பார்த்துக் கொள்ளாமல், மக்கள் இன்று வேலையும், பணமும் இல்லாமல் இருப்பதற்கு எங்களைக் குறை கூறக்கூடாது. எங்களிடம் பணம் கேட்க இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை’

உள்நாட்டுப் போருக்குப் பிறகான காலம் நாடு முழுவதும் இருந்த தொழிலாளர்களுக்கு கஷ்ட காலமாக இருந்தாலும், தீவிபத்து, நேர்மையற்ற முதலாளிகள் போன்ற காரணங்களால் சிகாகோ தொழிலாளர்களுக்கு கஷ்டம் மேலும் அதிகமாக இருந்தது. கட்டுமானத் தொழிலாளர்கள் பலருக்கு வேலை முடிந்தபின்னும் கூலி தரப்படவில்லை. ஒப்பந்தக்காரர்கள் பணம் தர மறுத்தார்கள். தொழிலாளர்களுக்கு கூலி தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய ஒரு சட்டம் கூட இல்லை. இது போன்ற ஒப்பந்தக்காரர்கள் பற்றி உள்ளூர் தொழிலாளர்களுக்குத் தெரிந்த போதிலும், பசியோடு வெளியிலிருந்து வந்த குடியேற்றத் தொழிலாளர்கள் ஏமாந்தார்கள்.
1872ன் குளிர்காலத்தில் பட்டினியால் வாடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரிலீஃப் அண்ட் எய்ட் சொஸைட்டி நோக்கி, உணவு வாங்கப் பணம் கேட்டுப் பேரணி நடத்தினார்கள். அவர்கள் சிகாகோ நதியின் கீழே செல்லும் சுரங்கப்பாதைக்கு விரட்டியடிக்கப்பட்டார்கள். அங்கு தடியடி நடத்தப்பட்டது. இது சிகாகோ வரலாற்றில் ‘ரொட்டிக் கலவரம்’  என்று அழைக்கப்படுகிறது. (விபரங்களுக்கு எண் 29ஐப் பார்க்கவும்) சிகாகோவிற்குப் புதிதாய் வந்த ஆல்பர்ட் பார்சன்ஸ் இந்த நிலையை ஆராய்ந்தார். பின்னர் இலினாய்ஸ் மாகாணமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. நிதியின் நிர்வாகத்தினர் நிதியிலிருந்து வட்டியில்லாமல் கடன் பெற்றுக் கொண்டது தெரியவந்தது. பணத்தை ஏழைகளுக்குத் தராமல் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக சட்டம் எதுவும் இல்லை என்பதால், யார் மேலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

உள்நாட்டுப் போரிலிருந்து 1886 வரை, குறைந்தபட்சம் பத்தாண்டுகள் நிதி நெருக்கடி இருந்ததால், அக்காலகட்டம் மிகக் கடுமையாக இருந்தது. நகரமே மறுபடியும் கட்டப்பட்டபோதும், கட்டுமானத் தொழிலும் வீழ்ந்தது. 1880ல் தொழிலாளர் புள்ளிவிபரத் துறையின் ஓர் ஆய்வு ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் பாதி உணவிற்கே சரியாகிவிடுவதாகக் கூறியது.

வேலையின்மை அதிகரித்ததால், உபரித் தொழிலாளர்களை சிகாகோவிற்கு வெளியே உள்ள பண்ணைகளில் வேலைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்தன. ரிலீஃப் சொஸைட்டியின் நிர்வாகி ஒருவர், வேலையற்ற தொழிலாளர்களிடம் பேசும்போது, ‘உங்கள் நிலை ஏற்றுக் கொள்ள முடியாதது. இது போன்ற காலங்களில், இரண்டு ஆண்டுகள் சமாளிக்கப் போதுமான அளவு நீங்கள் வங்கியில் பணம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்றாராம்.

பொருளாதாரத்தின் சுழற்சி, பலவேலைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கிடைக்கும் நிலை, வெளிநாட்டிலிருந்து குறைந்த கூலிக்கு வரும் தொழிலாளர்கள் எல்லாம் சேர்ந்து, சிகாகோவில் வேலையின்மையும், ஆதரவற்ற நிலையும் வாழ்க்கையாகி விட்டது. இதற்கு நேர்மாறாக, இதே காலகட்டத்தில் ஜார்ஜ் புல்மன், ஆர்மர், ஸ்விங்ட், மார்ஷல், ஃபீல்ட், பாட்டர் பாமர் போன்ற முதலாளிகள் ஏராளமான செல்வம் சேர்த்தார்கள்.

1877 ரயில்பாதை போராட்டமும், தீவிர இயக்கமும் 1872ன் குளிர்காலத்தில் நடந்த ‘ரொட்டிக் கலவரம்’ தொழிலாளர்களுக்கு சிகாகோவின் முதலாளிகளின் உண்மையான முகத்தைக் காட்டினாலும், 1877 ஜூலை வரை தொழிலாளர்கள் எவ்வித தீவிர நடவடிக்கையும் முயற்சிக்கவில்லை.  பல ஆண்டுகளாக அவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு முயன்றார்கள். அரசியல் பதவிகளுக்கு ஆல்பர்ட் பார்சன்ஸ் போன்றோர் போட்டியிட்டார்கள். ஆனால், இலினாய்சில் ரகசிய வாக்கெடுப்பு முறை இல்லாதது, தேர்தல் நேரத்தில் முதலாளிகளின் நெருக்கடி, கள்ள நோட்டு போன்ற காரணங்களால் பலரும் ஜனநாயக வழிமுறைகளின் மேல் வெறுப்புற்றார்கள். 1877 வாக்கில் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்க, முதலாளிகள் அஞ்சி நடுங்கினார்கள். பத்திரிகைகள், குறிப்பாக, நியூ டெய்ரி நியூஸ், தி டிரிபியூஸ் போன்றவை, நடப்பவற்றை மிகைப்படுத்தி எழுதி இந்த அச்சத்தை அதிகரித்தன.

1877 வேலை நிறுத்தம் கிழக்கே மேற்கு விர்ஜினியா மற்றும் பென்சில்வேனியாவில் ஆரம்பித்தது. சிகாகோவில் ஜூலை 23 திங்கட்கிழமையன்று, ராண்டால்ஃப் மற்றும் மிச்சிகன் சாலையில் இருந்த மிச்சிகன் சென்ட்ரல் ரயில் ரோடின் அலுவலகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது துவங்கியது. மறுநாள் சிகாகோவில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். தென்பகுதியில் டிராம்கள் ஓடவில்லை. மாலுமிகள் வேலை நிறுத்தத்தால் கப்பல்கள் நதிக்கரையோரம் நின்றன. தென்மேற்குப் பகுதியில் சிகாகோ, பர்லிங்டன் மறறும் குவின்சி ரவுண்ட் ஹவுஸ் பகுதிகளில் 8000 தொழிலாளிகள் கூடினர். போலீஸ் மூவரைக் கொன்று, ஏழு பேரைக் காயப்படுத்தி, இந்த 8000 பேரைக் கலைத்தது.

அன்று மாலை தொழிலாளர்கள் தீவட்டி ஊர்வலத்திற்காக மார்க்கெட் சதுக்கத்தில் (இடம் 15ஐப் பார்க்கவும்) கூடினர். உள்ளூர் தொழிலாளர்களையும், வேற்று மொழித் தொழிலாளர்களையும் இதுநாள் வரை இல்லாதவகையில் ஒற்றுமைப்படுத்தும் விதமாக ஆல்பர்ட் பார்சன்ஸ் நிதானமான ஆனால் உணர்ச்சி பொங்கும் உரையாற்றினார். அவர் தொழிலாளர்களை தொழிலாளர் கட்சியில் சேருமாறு அழைத்தார். வாக்குச் சீட்டின் மூலம் போக்குவரத்து, தகவல் தொடர்பு, சிலவகை உற்பத்தித் தொழில்களை, தனியார் ஏகபோகத்திடமிருந்து தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்றார். 6000 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டம் மிக அமைதியாக நடந்தது. அவரது உரையை தொழிலாளர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள்.

மறுநாள் ஜூலை 24, செவ்வாய்க்கிழமையன்று பார்சன்ஸ் சிகாகோ டைம்சிலிருந்து, முதலாளிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டார். மார்க்கெட் சதுக்கக் கூட்டத்தில் பேசியதற்காக இந்தத் தண்டனை, சிகாகோ டிரிபியூனில் அச்சுக்கலை நிபுணராக வேலை கேட்க பார்சன் சென்றபோது, அதன் ஆசிரியரும், முன்பு 1874 ரொட்டிக் கலவரத்தின் போது, பார்சன்ஸ் அம்பலப்படுத்திய முன்னாள் மேயருமான ஜோசப் மெடிலின் உத்தரவின்படி, பார்சன்ஸ் இரண்டாவது மாடியிலிருந்து குண்டர்களால் தூக்கி எறியப்பட்டார்.

ஜூலை 24 மதியம் மார்க்கெட் சதுக்கத்திலிருந்த ஒரு ஜெர்மானிய இனக் குழுவின் பத்திரிகையில் அச்சுக் கோர்க்கும் பணி கேட்க அவர் சென்றபோது, சீருடை அணியாத பல போலீஸ்காரர்கள் அவரை தற்காலிக நகர் மன்றத்திற்கு (அது ஆடம்ஸ் மற்றும் லாகாலேயில் பழைய ரூகர் கட்டிடத்தில் இருந்தது) வருமாறு அழைத்துச் சென்றார்கள். அங்கு போலீசாரும் வர்த்தக போர்டின் ஐம்பது உறுப்பினர்களும் அவரை சிகாகோவை விட்டுச் சென்று விடுமாறும் இல்லையெனில் அருகிலுள்ள விளக்குக் கம்பத்தில் அவரை தூக்கிலிட்டு விடப் போவதாகவும் மிரட்டினார்கள். அவனை ‘தூக்கிப் போடு’, ‘தோலை உறி’, ‘சிறையில் போடு’ என்று பலரும் கூச்சலிட்டார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூலை 26 அன்று சிகாகோவிற்கு மேலும் கூடுதலாக ராணுவத் துருப்புகள் வந்தன. ஏற்கனவே பல நாட்களாக இலினாய்ஸ் தேசியப்படையின் முதல் ரெஜிமெண்ட் அங்குதான் இருந்தது. இப்போது துணைக்கு டகோடாசிலிருந்து மத்தியப்படைகள் வந்தன. அவை அதற்கு முதல்நாள் தான் ஜெனரல் கஸ்டரைக் கொன்ற இந்தியர்களுக்கு (அமெரிக்க பூர்வகுடிகள்) எதிரான நடவடிக்கையை முடித்திருந்தன. இவை இப்போது 16வது தெருவிலும் ஹால்ஸ்டெட்டிலும் இருந்த தொழிலாளர்கள் மேல் பாயந்தன. வரலாற்று நூல்கள் இதை ‘வயாடக்ட் போர்’ என்று குறிப்பிடுகின்றன.

போலீஸ் நகர் முழுவதும் சங்க அலுவலகங்களை சோதனையிட்டது. பேச்சுரிமை, கூட்டம் நடத்தும் உரிமை மறுக்கப்பட்டது. வயாடக்ட் போர் நடந்த ஜூலை 26 அன்று, தனிமனித உரிமையைத் தாங்கள் மதிப்பதில்லை என்பதைக் காட்டும் விதமாக போலீஸ் ரூஸ்வெல்ட் மற்றும் ஹால்ஸ்டெட்டில் டர்னர் ஹாலின் கதவுகளை உடைத்தது. பதினாறு ஆண்டுகள் கழித்து எஞ்சிய ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மன்னிப்பு அளித்த போது, போலீஸ் அத்துமீறல் பற்றிக் குறிப்பிட்ட கவர்னர் அல்ட்ஜெல்ட் இச்சம்பத்தைக் கூறுகிறார். பர்னிச்சர் தொழிலாளர் சங்கம் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை பற்றி முதலாளிகளுடன் பேச ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்திற்கு நகர் மன்றத்திடம் உத்தரவும் வாங்கியிருந்தது. இருந்தபோதிலும் போலீசார் கூட்டத்திற்குள் புகுந்து, தடியடி நடத்தினர். தப்ப முயன்ற தொழிலாளிகளைச் சுட்ட போது டெஸ்மன் என்ற தொழிலாளி இறந்தார். பலர் காயமடைந்தனர்.

இப்பிரச்சனையை தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். தொழிலாளர்கள் அனுமதி வாங்கியிருந்ததால் சிகாகோ போலீஸ் செய்தது தவறுதான் என்று சொல்வதைத் தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. போலீசுக்கு ஒரு டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மேல்முறையீடு செய்வதும் தடுக்கப்பட்டது.
பத்திரிகைகள் விற்பனைக்காக, மக்களைத் தூண்டும் விதமாக பல கதைகள் எழுதப்பட்டன. கலவரங்கள் பற்றிய செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன. செய்திகளில் இறப்புகள் ஏழு மடங்கு அதிகமாகக் கூட காட்டப்பட்டன. முதலாளிகளின் பயமும், மனிதாபிமானமற்ற தன்மையும் இப்பத்திரிகை தலையங்கங்களில் பிரதிபலித்தன.
சிகாகோ டைம்ஸ் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மேல் டைனமைட் குண்டுகள் பயன்படுத்த வேண்டும் என்றது. ஜார்ஜ் புல்மன் தலைமையில் ‘சட்டம் – ஒழுங்கு லீக்’ ஒன்று துவங்கப்பட்டது. மார்ஷல் ஃபீல்ட் தனது குமாஸ்தாக்களுக்கு ஆயுதம் வழங்கினார். நகரில் போலீசும், ராணுவமும் விரைவாகச் செல்ல, தனது சரக்கு வாகனங்களை அளித்தார். ஆல்பர்ட் பார்சன்ஸ்சை கைது செய்ய எவ்வித காரணமும் இல்லாதபோதும், செய்தித்தாள்கள் அவர் ‘தேடப்பட்ட மனிதர்’ என்று அறிவித்தன. மக்களை அச்சுறுத்தி, விக்டர் லாசனும், அவரது புதிய பத்திரிகையான டெய்லி நியூசும் பெரும்பணம் சம்பாதித்தன.

சிகாகோவின் செல்வந்தர்கள் உலகம் அழியப் போகிறது தமது சொசுகு வாழ்க்கை முடியப் போகிறது என்று அஞ்சினார்கள். எக்ஸ்போசிஷன் கட்டடத்தில் (இப்போது ஆர்ட் இன்ஸ்டிடியூட் இருக்கும் இடம்) செல்வந்தர்கள் ராணுவப் பாதுகாப்போடு தியோடோர் தாமசின் கக்சேரியைக் கேட்டனர். மிச்சிகன் சாலையில் ராணுவம் நடமாடும் பெரும் ஓசையை மறைக்கும் வகையில் தாமஸ் குழுவினர் வாக்னரின் இசைக் கோர்வையை உரக்க வாசித்தனர். இசைக் கூடம் கட்டுவதற்குபெருமளவு நன்கொடை தந்த சிகாகோ முதலாளி ஒருவர் பல ஆண்டுகள் கழித்து, இது பற்றிக் கூறும்போது, குறைந்தபட்சம் அந்த மாலை வேளையிலாவது தனது சமூகம் பாதுகாப்பாக இருப்பதாகவும், வாழ்க்கை பழையபடி திரும்பிவிடும் என்றும் தான் உணர்ந்ததாகக் கூறினார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டபின், சிகாகோ வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பவே செய்தது. எனினும் 1877 ரயில் வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்கு மூன்று விஷயங்களைத் தெரியப்படுத்தியது. நகரத்தின் ‘நிறுவனங்களை’ எதிர்த்துப் போராட அவர்களுக்கு இன்னும் அதிகமான அரசியல் செயல்பாடுகள் தேவை. நகரின் பெரிய செய்தித்தாள்களை நம்ப முடியாது என்பதால், தம் தரப்பு நியாயங்களைச் சொல்ல, அவர்களுக்கு பத்திரிகைகள் வேண்டும். தொழிலாளர்கள் பலரும், போலீஸ் தாக்குதலைச் சமாளிக்க தங்களிடம் ஆயுதமேந்திய குழு இருக்க வேண்டும் என்று கருதினார்கள். 1877 முதல் 1886 வரையிலான காலகட்டத்தில் இந்த மூன்று முயற்சிகளிலும் வெற்றியும், தோல்வியும் கலந்து கிடைத்தன.

அரசியல் செயல்பாடு, தொழிலாளர் பத்திரிகை மற்றும் ஆயுதமேந்திய குழு அமைத்தல் 1878, 1879, 1880 தேர்தல்களில் கட்சி மீண்டும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஜெர்மானியத் தொழிலாளர்கள் நிறைந்த 14வது வார்டில் பிராங்க் ஸ்டாபர் போட்டியிட்டார். கள்ளவோட்டால் அவர் தோற்கடிக்கப்பட்டார். 15வது வார்டில் பார்சன்ஸ் போட்டியிட்ட போதும் இதே நிலைதான். தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாக ஒரு நீதிபதி குறிப்பிட்டாலும், மறு தேர்தலுக்கு உத்தரவிடவில்லை. பின்னர் இதுபற்றி பார்சன்ஸ் இவ்வாறு கூறினார்:

‘இதன் பிறகு நான் அரசியல் சீர்திருத்தம் உதவாது என்பதை உணர்ந்தேன். ஏழைகளைக் காப்பதில் வாக்குச்சீட்டிற்கு உள்ள சக்தி மீது தொழிலாளர்கள் பலரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.’

தொழிலாளர்களுக்கான செய்தித்தாள்களை ஆரம்பிப்பதில் தொழிலாளர்களுக்கு அதிக வெற்றி கிடைத்தது. 1879 மார்ச் 22 அன்று மிச்சிகன் சாலையில் உள்ள எக்ஸ்போசிஷன் ஹாலில் பெரிய பேரணி நடந்தது. ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ் ஆகியோரது உரையைக் கேட்க 40,000ற்கும் அதிகமானோர் கூடினர். அர்பெய்டர்-ஸ்யூடங் என்ற பத்திரிகையை வாங்கி, தொழிலாளர்களுக்கான ஜெர்மன் பத்திரிகையாக நடந்த போதுமான பணம் திரட்டப்பட்டது. இதே போல தி அலாரம் என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவ பார்சன்ஸ் உதவினார். இந்த தினசரிகளைத் தவிர வொர்போட், டைஃபாகல் போன்ற பல வாராந்தரிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இப்பத்திரிகைகளின் விற்பனை அதிகமாக இல்லாதபோதும், ஹேமார்க்கெட் சம்பவத்திற்குப் பின் போலீஸ் இவற்றைத் தடை செய்யும் வரை சிகாகோ தொழிலாளிகளின் நிலைபாட்டை அழுத்தமாக வெளியே கூற இவை உதவின.

1871 ரயில் வேலை நிறுத்தத்திற்குப் பின், பல தொழிலாளர்களும் இனியும் நாம் போலீஸ் அல்லது ராணுவத்தால் சுடப்படக் கூடாது. குடும்பத்தினர் தாக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் ‘ஆயுதம் வைத்துக் கொள்ளும்’ உரிமையை வழங்கியிருப்பதை அறிந்த ஒவ்வொரு மொழிவாரியான இனக்குழுவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ‘துப்பாக்கிக் கழகங்களைத் துவக்கின. இத்துப்பாக்கிக் கழகங்களில் உள்ளூரில் பிறந்த தொழிலாளர்களின் இங்கிலீஷ் கழகம், ஜெர்மன் கழகம் (லெர் மற்றும் வெஹர் வெரின்) பொஹிமியன் ஷார்ப்ஷீட்டர்ஸ் போன்றவையும், ஒரு பிரஞ்சுக் கழகமும் கூட இருந்தன.

1879 மார்ச்சில் இந்தக் குழுக்கள் ஸ்டேட் சாலையில் அணிவகுத்துச் சென்று, தங்கள் ராணுவத் திறமையைக் காட்டும் வண்ணம் கிரீன் பூங்காவில் பயிற்சியில் ஈடுபட்டன. சிகாகோவின் ‘நிறுவனங்களுக்கு’ இத்தகைய செயல்கள் சற்று அதிதீமாகப் பட்டன. 1879 ஏப்ரலில் மாநில சட்டசபையில் தொழிலாளர்கள் ஆயுதம் வைத்திருப்பதை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா ஒன்று புகுத்தப்பட்டது. இதன்படி போலீஸ் மற்றும் இலினாய்ஸ் தேசியப்படை மட்டும்தான் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ளலாம். நகரின் பெரும்பாலான முதலாளிகள் தேசியப்படையில் அதிகாரிகளாக இருந்ததால், இப்போதும் அவர்களால் ஆயுதம் வைத்துக்கொள்ள முடிந்தது.

உடனடியாக இச்சட்டத்தை தொழிலாளர்கள் எதிர்த்தனர். வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அங்கு தொழிலாளர்களின் ஆயுதங்களைப் பறிக்க அமெரிக்க சட்டசபைகளுக்கு அரசியலமைப்புச் சட்டரீதியாக அதிகாரம் உண்டு என்று அங்கு முடிவானது. பல ‘துப்பாக்கிக்கழகங்கள்’ கலைக்கப்பட்டன. மற்றவை ரகசியமாகச் செயல்படத் துவங்கின. போலீசும், ராணுவமும் சட்டவிரோதமாக தம்மீது ஆயுதங்களைப் பிரயோகித்தால் என்ன செய்வது என்ற விவாதம் தொழிலாளர் மத்தியில் பெரியதாக எழுந்தது.

1884 ஏழை மக்களின் பேரணியும், 1885 வர்த்தக சபைக்கு எதிரான பேரணியும்
அமெரிக்க அதிபரும், இலினாய்ஸ் கவர்னர் ஓக்லஸ்பியும் 1885 நவம்பர் 25ம் தேதியை நன்றி கூறும் தினமாக அறிவித்தனர். ஆனால் சிகாகோவின் தொழிலாளர்கள் பலரும் நாம் நன்றி பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை என்று கருதினர். எனவே அதற்கு பதிலாக பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழை மக்களின் பேரணி ஒன்றை நடத்தி வேலை கேட்டு அவர்கள் வீட்டு அழைப்பு மணிகளை ஒலிக்க முடிவு செய்தார்கள்.

சிகாகோவின் மையப் பகுதியில் மார்க்கெட் சதுக்கத்தில் ஆரம்பித்த பேரணி தெற்குப் பக்கமாக ஜார்ஜ் புல்மன், மார்ஷல் ஃபீல்ட்மன், ஸ்விஃப்ட், ஆர்மர் ஆகியோர் வீடுகள் வழியாக சென்றது. பிறகு வடக்குப் பக்கம் ரஷ் சாலை வழியே சைரஸ் மெக்கார்மிக், பிரான்சுக்கான முன்னாள் தூதர் ஈ.பி. வாஷ்பர்ன் (இவர் தூதராக இருந்த காலத்தல் பிரான்சில் தொழிலாளர் போராட்டங்களைக் கண்டித்தார்) ஆகியோர் வீடுகள் வழியாகச் சென்றது.

ஆல்பர்ட் பார்சன்ஸ் மற்றும் அவரது கறுப்பின மனைவி லூசி தலைமையில் நூற்றுக்கணக்கான ஏழைகள்தன் வீட்டு வழியே ஊர்வலம் போனதில் ஜார்ஜ் புல்மன் மிகவும் வெறுத்துப் போயிருக்க வேண்டும். மறுநாள் அவர் தனது வழக்கறிஞர் விர்ட் டெக்ஸ்டரைச் சந்தித்தார். ஜார்ஜ் புல்மன் ஆல்பர்ட் பார்சன்சை சிறையில் தள்ள உறுதி பூண்டிருப்பதாக ஊரெங்கும் பேச்சாக இருந்தது.

1885 வாக்கில் சிகாகோவில் வேலையின்மை இன்னும் அதிகமாக இருந்தது. நேர்மையான தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதே சமயத்தில் வர்த்தக சபை  லாசாலே தெருவின் தென்கோடியில் இரண்டு மில்லியன் டாலர் செலவில் புதிய கட்டிடம் கட்ட, நன்கொடைக்காக இருபது டாலர் செலுத்திக் கலந்து கொள்ளும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டது.

1885 ஏப்ரல் 28 அன்று பார்சன்ஸ் சாமுவேல் ஃபெல்டன் மற்றும் பல ஹேமார்க்கெட் தியாகிகள் வர்த்தக சபைக்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தினார்கள். அர்பெய்டர் ஜியூடங் அலுவலகத்தின் வாசலில் உரையாற்றிய பார்சன்ஸ் (எண் 87ஐப் பார்க்கவும்) ‘இந்த உரையைப் கேட்பவர்கள் எத்தனை பேரால் ஒரு நாள் இரவு உணவிற்கு 20 டாலர் செலவழிக்க முடியும்?… இந்த மனிதர்கள் அறுசுவை உணவை ருசித்துக் கொண்டிருக்கும் போது, உழைப்பாளிகள் பட்டினி கிடக்கிறார்கள்’ என்றார்.

‘இருப்புப்பாதை, சுரங்கம், தந்தி, எண்ணெய் மற்றும் இதர பங்குச் சந்தையில் அவர்கள் தந்திரமாகச் செயல்பட்டு லட்சக்கணக்கான டாலர்களை சேர்க்கிறார்கள். தாம் செல்வம் சேர்ப்பதற்காக பதட்டத்தை உருவாக்குகிறார்கள். தொழில், வர்த்தகத்தில் தேக்கநிலையை உருவாக்குகிறார்கள். கடந்த கோடையில் சிகாகோ வர்த்தக சபையின் பிலிப் ஆர்மர் பன்றி இறைச்சிச் சந்தையில் தந்திரமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்தில் ஒன்றறை மில்லியன் டாலர் சம்பாதிப்பதை நினைத்துப் பார்த்தால் இவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியும்’ என்றார் அவர்.

பார்சன்ஸ் பேசிய பின் சிவப்பு, கறுப்பு கொடிகள், சங்கக்கொடிகளை ஏந்தி புதிய வர்த்தக சபையைச் சுற்றி தொழிலாளர்கள் பேரணி நடத்தினார்கள். பேரணிக்கு ஆஸ்கர் நீ.பி. லூசி பார்சன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தார்கள். புதிய கட்டடத்திற்கு விருந்துண்ண வாகனங்களில் வந்து இறங்கியோரைப் பாதுகாக்க, கட்டடத்தைச் சுற்றி போலீஸ் நின்றது. ஒரே ஒரு கல்வீச்சைத் தவிர, மற்றபடி பேரணி அமைதியாக நடந்தது. இப்பேரணி குறித்து இன்ஸ்பெக்டர் வெல்டர் தலைமையிலான போலீஸ் சரியான கணிப்போடு நடந்து கொண்டது.

1885 டிராம் வேலை நிறுத்தம் போலீஸ் அடக்குமுறை 1885 ஜூன் இறுதியிலிருந்து ஜூலை ஆரம்பம் வரை நடந்த டிராம் வேலை நிறுத்தத்தின் போது, பல சமயங்களில் போலீஸ் அடக்குமுறை இருந்தது. சகோதாரர் கிளெச்னர் தலைமையிலான நடத்துனர், ஓட்டுனர் சங்கம் குறைந்த வேலை நேரம், ஊதிய சமன்பாடு, சங்க உறுப்பினர்களைப் பழிவாங்கும் போக்கை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளுக்காகப் போராடினர்.

மேற்குக் கோட்ட டிராம் கம்பெனி தலைவரான திரு. லேக், பிரச்சனையை தொழிலாளர்களோடு பேசித் தீர்க்காமல், 16 முக்கியமான சங்கப் பொறுப்பாளர்களை பணி நீக்கம் செய்தார். மேலும், பிங்கர்ட்டன் துப்பறியும் நிறுவனத்துடனும், டெஸ்பிளைனஸ் தெரு போலீஸ் நிலையத்தின் கேப்டன் போன் ஃபீல்டுடனும் ரகசிய ஆலோசனையும் செய்தார். சிகாகோ மேயர் கார்ட்டர் ஹாரிசன் சிகாகோ போலீஸ் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த போதும், கேப்டன் போன்ஃபீல்ட் மேயரை பகிரங்கமாக எதிர்த்து, வேலைநிறுத்தத்தை உடைக்க தனது போலீஸ்காரர்களை அனுப்பினார்.

ஜூலை 1 புதன்கிழமையன்று, பிங்கர்ட்டன்காரர்களும், போலீஸ்காரர்களும் மாடிசன் சாலை வழியாக நகரின் மையப் பகுதிக்கு டிராம்களை ஓட்ட முயற்சித்தார்கள். ஹால்ஸ்டெட், மாடிசன் தெருக்களின் முனையில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாக பெருங்கூட்டம் இவர்களை எதிர்கொண்டது. இக்கூட்டம் டிராம்களை தடம்புரட்டி, கவிழ்த்தது. அவர்கள் போலீஸ் வேலைநிறுத்தத்தை முறியடிக்க முயல்வதை மட்டும் எதிர்க்கவில்லை. ஊழியர்களைக் கசக்கிப் பிழிந்த பணி இட மாறுதல் அளிக்க மறுத்த, குறைந்த ஊதியம் கொடுத்த ‘டிராம் அரசன்’ சார்லஸ் யெர்சிசால் நடத்தப்பட்ட டிராம் முறையையே எதிர்த்தார்கள்.

கேப்டன் போன்ஃபீல்ட் கொடூரமாக பதிலடி கொடுத்தார். போலீஸ் கண்ணில்பட்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கியது. மாடிசன் தெருக்காரர்கள் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தவர்கள், புதிய கேஸ் இணைப்பிற்காக தெருவைத் தோண்டி வேலை பார்த்துக் கொண்டிருந்த கேஸ் கம்பெனி ஊழியர்கள் என்று எல்லோரும் தாக்கப்பட்டார்கள்.

ஜூலை 6ம் தேதி, சிகாகோவின் மேயர் மூலமாக பேச்சுவார்த்தைக்கு வர கம்பெனி ஒருவழியாக ஒத்துக் கொண்டது. ஆனால் ஜூலை 7ம் தேதி போன்ஃபீல்ட் ‘கண்டதும் சுட’ உத்தரவிட்டு தொடர்ந்து தொழிலாளர்களைத் துன்புறுத்தி வந்தார். மேற்குப் பகுதியில் 400 போலீசாருடன் வந்தார். கருங்காலி ஒருவனால் ஓட்டப்பட்ட டிராம் மீது கல்வீசிய பீட்டர் ஸ்டிஃப்லிங் என்ற தொழிலாளியைத் தானே சுட்டுக் கொல்ல முயன்றார். ஆனால் குறி தவறிவிட்டது. ஸ்டிஃபிலிங் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார். 1885ன் இறுதியில், போன்ஃபீல்டை சிகாகோ நகரின் போலீஸ் சூப்ரரென்டெண்ட்டாக நியமிக்க சிகாகோ முதலாளிகள் முயன்றார்கள். சிகாகோ நகரின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் அவரது நியமனத்தை கடுமையாக எதிர்த்தன. அவர் சூப்ரென்டெண்ட்டாக நியமிக்கப்படவில்லை என்றாலும், இன்ஸ்பெக்டராக்கப்பட்டு, நகர் மன்றத்தில் இருந்த மத்திய போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார்.

இன்ஸ்பெக்டராக, போன்ஃபீல்ட், கலவரங்களை அடக்க புதிய வழிமுறைகளில் தனது போலீசாரைப் பயிற்றுவித்தார். இதுபற்றி 1885 டிச. 21ல் அலாரம் இதழில் லூசி பார்சன்ஸ் கீழ்கண்டவாறு எழுதினார். ‘இவ்விஷயத்தை ஆராய்ந்து, முடிந்தால், இந்த கலவரக் கட்டுப்பாடு பயிற்சி எதற்காக என்று பார்ப்போம். நிச்சயமாக இது வெளியிலிருந்து வரும் எதிரியோடு போரிட அல்ல; வெளிநாட்டு விரோதிகளுக்காகவும் அல்ல. அவ்வாறாயின் கடற்கரையோரம் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும். எனவே இந்தப் பயிற்சி உள்ளே இருக்கும் எதிரிகளுக்காகத்தான்…. அப்படி என்றால் அது யாருக்காக? யாரைக் குறிவைத்து? யார் சுடப்படப் போகிறார்கள்? (மிஸீ மிtணீறீவீநீs)

கேப்டன் போன்ஃபீல்டும், மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை வேலைநிறுத்தமும்:
உள்நாட்டுப் போருக்குப் பிறகான ஆண்டுகளில் சிகாகோவின் பல தொழில் நிறுவனங்களும் வளர்ச்சியடைந்தாலும், மெக்கார்மிக் அறுவடை இயந்திரக் கம்பெனி போல் வேறு எதுவும் மிக வேகமாக வளரவில்லை. (இப்போதுஇது இண்டர்நேஷனல் ஹார்வெஸ்டர் கம்பெனி என்று அழைக்கப்படுகிறது) மூத்தவரான சைரஸ் மெக்கார்மிக்கும் அவரது சகோதரர் லியாண்டர் மெக்கார்மிக்கும் கம்பெனியை ஆரம்பித்த காலத்தில் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. ஆனால் கம்பெனி வளரவும், உறவு நெருக்கம் குறைந்தது. 1862ல் வார்படக் களத்தில் வேலை நிறுத்தம் வந்தபோது, முதல் முதலாக சங்கம் தோன்றியது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23ம் எண் வார்படத் தொழிலாளர் சங்கத்தின் மூலம் (சங்கத்தின் கிளைகளை எண் கொடுத்து குறிப்பிடுவது அமெரிக்க வழக்கம். நமது நாட்டில் அந்தந்த ஊரின் பெயரில் கிளைகள் அமைக்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்பாளர்) தொழிலாளிகளுக்கு ஓரளவு ஜனநாயக உரிமைகள் கிடைத்தன.
லியாண்டர் மெக்கார்மிக் நிறுவனத்தை விட்டு வெளியேறியதும், மாற்றங்கள் நிறைய நடந்தன. பின்னர் 1884ல் சைரஸ் மெக்கார்மிக் திடீரென மரணமடைந்தார். நிர்வாகம், அனுபவமற்ற 25 வயதான இரண்டாம் சைரஸ் மெக்கார்மிக்கிடம் வந்தது. இளைய மெக்கார்மிக் சங்கத்தை உடைப்பதில் உறுதி கொண்டிருந்தார். 10-15% சதம் வரை ஊதியக் குறைப்பு கொண்டு வந்து, நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க நினைத்தார். 1884-85ல் சிகாகோவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதும், மெக்கார்மிக் கம்பெனி தனது மூலதனமாக 2லு மில்லியன் டாலரில் ஆண்டு தோறும் 71 சத லாபம் ஈட்டியது.
இந்த ஊதிய வெட்டு வந்த நேரத்தில்தான் மெக்கார்மிக் குடும்பம் சிகாகோ பிரஸ்பைடேரியன் தியாலாஜிகல் செமினரிக்கு மேலும் 100000 டாலர் நன்கொடை தரப்போவதாக செய்தித்தாள்களில் அறிவிப்பு வந்தது. (மொத்த நன்கொடை 450000 டாலருக்கு மேல்). இந்நிறுவனம் இன்று மெக்கார்மிக் தியாலாஜிகல் செமினரி என்றழைக்கப்படுகிறது. இன்றும் இது ஹால்ஸ்டெட் மற்றும் ஃபுல்லர்டனின் தென்மேற்கு மூலையில் பிரம்மாண்டமான இடத்தில் இயங்குகிறது.

மெக்கார்மிக் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்கள். இவர்கள் பிரஸ்பைட்டேரியன் பள்ளி நன்கொடைக்காக தங்கள் சம்பளம் வெட்டப்படுவதைப் புரிந்து கொண்டார்கள். 1884ல் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களும், கதவடைப்புகளும் நடந்தன. இது 1886 மே வரை தொடர்ந்தது. 1886 மே 3ந் தேதி மெக்கார்மிக் தொழிற்சாலையில் தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தை உடைத்த கருங்காலிகள், கேப்டன் போன்ஃபீல்ட் தலைமையிலான போலீசார் ஆகியோரிடையே நடந்த மோதல்தான் மே 4ந் தேதி ஹேமார்க்கெட் கண்டனக் கூட்டத்திற்கு வழிவகுத்தது.

நாடெங்கிலும் 8 மணி நேர வேலைக்காகப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, 1886 மே 3 அன்று மெக்கார்மிக் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்குமான உறவு மோசமடைந்தது எதனால்? கேப்டன் போன்ஃபீல்ட் எப்படி இன்ஸ்பெக்டரானார்?

1885ல் செமினரிக்கு நன்கொடை கொடுத்ததற்குப்பிறகு, சிகாகோவின் பில்சன் பகுதியிலிருந்த பிரதான தொழிற்சாலையில் ஒரு வேலைநிறுத்தம் நடந்தது. வேலைநிறுத்தத்தை உடைக்க, பிங்கர்ட்டன் துப்பறியும் நிபுணர்களையும், கருங்காலிகளையும் பயன்படுத்த இளைய மெக்கார்மிக் முடிவு செய்தார். மெக்கார்மிக் போலீசையும் பயன்படுத்தலாம் என்று நம்பியிருந்தார். ஆனால் பில்சன் பகுதி போலீஸ் கேப்டனான ஐரிஷ்காரர் ஓ டோனெல், ஐரிஷ் மற்றும் இதர இனத் தொழிலாளர்களுக்கு எதிராக தனது போலீசைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

பொதுமக்களும் இளைய மெக்கார்மிக்கின் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். மூத்தவரும், புத்திசாலியுமான பிலிப் ஆர்மர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்குமாறு மெக்கார்மிக்கிற்கு அறிவுறுத்தினார். கடைசியில் மெக்கார்மிக் பழைய ஊதிய விகிதத்திலேயே தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும், சங்கத்தை உடைப்பதில் முன்பைவிட இப்போது அதிக தீவிரமானார்.

1885 வேலை நிறுத்தத்தில் தான் தோல்வியை சந்திக்க சிகாகோ போலீஸ் துறையின் ஆதரவு இல்லாதது ஒரு காரணம் என்று மெக்கார்மிக் கருதினார். எனவே நடுநிலையாளரான ஐரிஷ்காரரான கேப்டன் ஓ’டோனெலுக்கு பதிலாக தொழிலாளர், வெளிநாட்டவர் மேல் வெறுப்புணர்வு கொண்ட கேப்டன் போன்ஃபீல்டைக் கொண்டு வர தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடிவு செய்தார்.

1885 டிராம் வேலை நிறுத்தத்தின் போது ‘கண்டதும் சுட’ உத்தரவிட்டதால் மெக்கார்மிக் போன்ற முதலாளிகளை கேப்டன் போன்ஃபீல்ட் ஈர்த்திருந்தார். பிங்கர்ட்டன் நிறுவனத்தோடு இணைந்து பணி செய்ய அவருக்கு இருந்த ஆர்வமும் முதலாளிகளைக் கவர்ந்தது. மெக்கார்மிக்கைத் தவிர வேறு பல முதலாளிகளும் தங்கள் தொழில்களில் இயங்கும் சங்கங்களை உடைக்க போலீசையும், பிங்கர்ட்டனையும் பயன்படுத்துவதில் உள்ள சாதகங்களை உணரத் துவங்கினார்கள்.
1885 அக்டோபரில் பிங்கர்ட்டன் நாடு முழுவதுமுள்ள முதலாளிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அது கீழ்வருமாறு:

‘இக்காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கத்திடம் பெரும் அதிருப்தி நிலவுகிறது. நாடு முழுவதும் பல ரகசிய தொழிலாளர் அமைப்புகள் தொடங்கியுள்ளன. இவ்வேளையில், இருப்புப்பாதைகள் கம்பெனிகளுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் எங்கள் ஆலோசனை என்னவென்றால் தொழிலாளர்களுக்கிடையே சங்கத்தில் சேருமாறும், வேலை நிறுத்தம் செய்யுமாறும் தூண்டிவிடும் நபர்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இப்படிச் செய்து, முக்கியத் தலைவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சரியான வகையில் கவனித்தால், எதிர்காலத்தில் வரக்கூடிய பெரும் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்பது எங்கள் அனுபவம்’. போன்ஃபீல்ட் இன்ஸ்பெக்டரானதும், தான் இளம் சைரஸ் மெக்கார்மிக்கிற்கு மிகவும் பயனுள்ளவர் என்று நிரூபித்தார். 1886 பிப் 16 அன்று மெக்கார்மிக் சுமார் 1482 தொழிலாளர்களை கதவடைப்பின் மூலம் வெளியேற்றினார். இவர்களில் பலரும் 23ம் எண் வார்படத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள். இம்முறை போன்ஃபீல்ட் தலைமையிலான சிகாகோ போலீஸ் கம்பெனிக்கு உதவியது. 300 போலீசுக்கு மேல் கம்பெனியைச் சுற்றி நின்றார்கள். மார்ச் 1ம் தேதி போலீஸ் உதவியோடு கருங்காலிகள் கம்பெனியில் வேலை பார்க்க உள்ளே செல்லும்வரை எல்லாம் அமைதியாகத்தான் இருந்தது.

மார்ச் 2ம் தேதி, பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அமைதியாக நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் போலீஸ் புகுந்தது. எச்சரிக்கை எதுவும் செய்யாது, தடியடி நடத்தி, கைது செய்தது. சிலர் தப்பி ஓட முயன்றபோது, போலீஸ் சுட ஆரம்பித்தது. ஓடும் தொழிலாளர்கள் சுடக்கூடிய தூரத்தில் இருக்கும் வரை வேகமாகச் சுட்டார்கள். குறைந்தபட்சம் நால்வர் இறந்தார்கள்.

1886 மார்ச் 2 நிகழ்வுகள் பற்றிக் கூறும்போது ஜான் பீட்டர் அல்ட்ஜெல்ட் ‘இது வேண்டுமென்றே எவ்விதக் காரணமும் இன்றி செய்யப்பட்ட கொலை. இதுபற்றி ஒரு விசாரணை கூட நடக்கவில்லை’ என்றார். தொழிலாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே அதிகரித்து வந்த வெறுப்பிற்கு மெக்கார்மிக் தொழிற்சாலை நிகழ்ச்சிதான் அடிப்படைக் காரணம் என்று அல்ட்ஜெல்ட் கருதினார்.
அவர் கூறியதாவது:

….சட்டத்தின் சீருடை அணிந்தவர்கள் அதை மீறும்போது அவர்களைத் தண்டிக்க பல முயற்சிகள் நடந்தாலும், அவை அனைத்தும் வீண் என்று தெரிகிறது… உழைப்பாளி மக்களுக்கு சிறை எப்போதும் திறந்தே இருந்தது’. (மிஸீ மிtணீறீவீநீs)
1886 மே 1 அன்று 8 மணி நேர வேலை இயக்கம் துவங்கியபோது, மெக்கார்மிக்கில் கதவடைப்பு ஆரம்பித்து இரண்டரை மாதம் ஆகிவிட்டது. மே 2ம் தேதி, ஞாயிறன்று, கிரீஃப் ஹாலில், அர்பெய்ட்டர் ஜியுடங்கின் ஆசிரியர் ஆகஸ்ட் ஸ்பைஸை சந்தித்த இரு கட்டுமானத் தொழிலாளர்கள் மெக்கார்மிக் தொழிற்சாலை அருகே போராடிவரும் கட்டுமானத் தொழிலாளர்களின் கூட்டத்தில் மறுநாள் மதியம் (மே 3 திங்கட்கிழமை) அவர் பேச முடியுமா என்று கேட்டார்கள். ஸ்பைஸ் ஒப்புக் கொண்டார்.

6000 தொழிலாளர்களுக்கு நடுவே, ஒரு டிராம் வண்டியின் மீது நின்றபடி ஸ்பைஸ் பேசினார். கூட்டத்தினர் பலரும் போலந்து, பொஷிமியன்காரர்கள் என்பதால் அவர்களுக்கு இவர் பேசியது ஒரு வார்த்தை கூட புரியவில்லை. பக்கத்திலிருந்த மெக்கார்மிக் தொழிற்சாலையில் 3.30 மணிக்கு மணி ஒலித்தது. வேலை முடித்து வரும் கருங்காலிகளோடு தகராறு செய்யச் சென்ற மெக்கார்மிக் தொழிலாளர்களுக்கு உதவ கூட்டத்தின் ஒரு பகுதி (சுமார் 200) அங்கு சென்றது. உடனடியாக 200 போலீசாருடன் போன்ஃபீல்ட் வந்ததும், தகராறாகி விட்டது. இதனால் ஸ்பைஸ் கூட்டத்திலிருந்து மேலும் பலர் அங்கு சென்றனர். உண்மையில், ஸ்பைஸ் தானும் அங்கு சென்று என்ன நடக்கிறது என்று அறிய எண்ணினார். அவரையும் கூட்டத்தினரையும், தடிகளும், குண்டு மழையும் வரவேற்றன.

போலீஸ் தாக்குதலால் ஸ்பைஸ் அதிர்ச்சியடைந்தார். போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து ஒரு துண்டுப்பிரசுரம் எழுத டிராம் பிடித்து வெல்ஸ் தெருவில் இருந்த அர்பெய்ட்டர்-ஜியுடங் அலுவலகம் வந்தார். இருவர் இறந்ததாக அவர் கேள்விப்பட்டிருந்தார். அதுதான் உண்மை. ஆனால் சிகாகோ டெய்லிநியூஸ் பேப்பரைப் பார்த்தபோது அதில் ஆறு பேர் மரணம் என்று போட்டிருந்ததும், அந்த விபரத்தைத் தன் துண்டுப் பிரசுரத்தில் பயன்படுத்தினார். பின்னாளில், வழக்குவிசாரணையில் இறப்பு எண்ணிக்கையைத் தவறாகத் தந்து தொழிலாளர்களைத் தூண்டிவிட்டதாக அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது பெரிய கொடுமை. டெய்லி நியூஸ் இதழை சாட்சியமாக சமர்ப்பிப்பதை நீதிபதி அனுமதிக்க மறுத்துவிட்டார்.

மே 3 மாலை, ‘திங்கள் இரவு சதிக்கூட்டம்’ என்று பின்னர் போலீஸ் கூறிய ஒரு கூட்டத்தில் காட்ஃபிரைட் வாலர், ஜார்ஜ் எங்கேல் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை நிகழ்வுகள், குறிப்பாக மே 3 போலீஸ் தாக்குதலை கண்டித்து மே 4 செவ்வாயன்று ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு கூட்டம் போடுவது என்று முடிவானது. பின்னர் ஹேமார்க்கெட் கூட்டத்தில் பேச ஆகஸ்ட் ஸ்பைஸ் அழைக்கப்பட்டாலும், அதற்கான திட்டமிடலில் அவருக்கு பங்கில்லை.
அமெரிக்கா முழுவதுமுள்ள தொழிலாளர்கள் ‘எட்டுமணி நேர வேலை நாளுக்கான’ நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கிய அதே வேளையில், மெக்கார்மிக் தொழிற்சாலை சம்பவங்கள், சங்கங்களை உடைக்க சிகாகோ முதலாளிகளின் பிரச்சாரம், சிகாகோ போலீஸ், போன்ஃபீல்ட் ஆகியோரின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் யாவும் உச்சத்தில் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *