மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் – நூல் அறிமுகம்
– ச.சுப்பாராவ்
வரலாற்று நாவல் என்றாலே மன்னர்கள், இறுக்கமான கச்சை கட்டிய இளவரசிகள், ஒற்றர்கள், சதியாலோசனைகள், புரவிகள், என்று நம் வாசக மனதில் பதிந்து விட்டது. இதைக் கிண்டல் செய்து அக்காலத்தில் கணையாழியில் நகுபோலியன் எழுதிய மழநாட்டு மகுடம் என்ற சிறுகதை மிகவும் புகழ்பெற்றது. ஆனால், ஆங்கிலத்தில் ஹிஸ்டாரிகல் ஃபிக் ஷன் என்ற வகைமையில் 1960, 70 களில் நடக்கும் கதைகள் கூட எழுதப்படுகின்றன. ஏனோ நாம் போன நூற்றாண்டின் ஆரம்பகாலம், சுதந்திரப் போர் காலம், நெருக்கடி நிலைக் காலம் போன்ற காலகட்டத்தில் நிகழும் கதைகளை வரலாற்றுக் கதைகளாக ஏற்பதில்லை. அவற்றை சமகாலக் கதைகளாகவே கருதுகிறோம். சமகாலம், நூறாண்டுகளுக்கு முன் என்ற இரு காலக் கோடுகளை இணைத்து நண்பர் முஹம்மது யூசுப் மாயச் சதுகரம் என்ற அழகான படைப்பைத் தந்துள்ளார். என் சிறுவயதில் உலகத்திற்கு இது சீக்கோ, ஆனால் நமக்கு இது ஆல்வின் என்று ஒரு கைக்கடிகார விளம்பரம் வரும். அது போல, உலகத்திற்கு சமகால நாவலாகவும், எனக்கு இது வரலாற்று நாவலாகவும் இருக்கிறது !
டாக்குஃபிக் ஷன் என்று தனக்கேயுரித்தான ஒரு பாணியில் தொடர்ந்து எழுதி வரும் யூசுப் 1906ல் மதராஸில் அர்பத்நாட் வங்கி திவாலான போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதையை ஏராளமான ஆய்வுகளின் அடிப்படையில் கூறியுள்ளார். 118 ஆண்டுகளில் முன் பின்னாகப் பயணிக்கும் இந்த நாவலில் சென்னை, தூத்துக்குடி ஆகிய இரு நகரங்களின் இதுவரை நாம் அறியாத பகுதிகள் காட்டப்படுகின்றன. நாவலில் வ.உ.சி வருகிறார். காங்கிரஸின் மிதவாத, தீவிரவாத கோஷ்டி மோதல் வருகிறது. அன்னி பெசண்ட், பாரதியார், ஹார்வி மில் எல்லாம் பேசப்படுகின்றன. சிலை கடத்தல், போதைப் பொருள் கடத்தல், போலீஸ் இன்ஃபார்மர்கள் பற்றிய ஏராளமான தகவல்கள். எல்லாவற்றையும் தனது கதை சொல்லும் பாணியில், வசீகர மொழியில் இணைத்து விடுகிறார் யூசுப். யூசுப்பின் வசீகர மொழி மீது எனக்கு எப்போதும் ஒரு மயக்கம் உண்டு. தண்ணீர் மேல் மிதக்கும் சருகுகள் போல வானத்தில் மிதந்து கொண்டிருந்த தயிர் வெள்ளை நிற மேகங்கள் என்றொரு வரி. தயிர் நிற மேகம் என் மனதில் கட்டித் தயிராக இதை எழுதும் போதும் நிற்கிறது. பதிலுக்குக் கிடைக்கும் காதல்தான் காதலுக்காக கிடைக்கும் பரிசுகளில் மிகப் பெரியது என்றொரு வரி. எந்த தீபத்திற்கும் தன் இடமென்று ஏதுமில்லை. எங்கு உள்ளதோ அங்கு ஒளியுமிழும் என்றொரு வரி. கதையின் கனத்தை மனதில் சுமந்தபடி வாசிக்கும் வாசகனை ஆசுவாசப்படுத்துவதாய் இப்படிப்பட்ட வரிகள் ஆங்காங்கே ஏராளமாக உண்டு. இந்த வரிகள்
இல்லாவிட்டாலும் கதைக்கு பாதகமேதுமில்லை. ஆனால் அவை இருப்பது கூடுதல் அழகு.
தன் படைப்பிற்காய் ஏராளமான ஆய்வுகளைச் செய்யும் படைப்பாளிக்கு தான் அறிந்த அனைத்தையும் தன் படைப்பில் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் இயற்கையாக இருக்கும். இந்த நாவலிலும் அதுதான் நடந்துள்ளது. நாவலில் பேசப்படும் பல விஷயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித் தனி நாவலுக்கான கருப்பொருட்கள். ஆனால், எல்லாம் ஒரே நாவலில் வந்து விட்டன. முஹம்மது யூசுப் போன்ற படைப்பாளிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடம் இது என்று என் மனதுக்குப் படுகிறது.
எனினும், பெரும் உழைப்பில் உருவான நாவல் இது. மஞ்சள் நோட்டீஸ், பவளக்காரத் தெரு, முதல் மாலைக்காட்சி, பலிகடா, மெட்ராஸ் வளவு, சபாபதி அண்ட் கம்பெனி, சிறுவாட்டுக் காசு, அவர்கள் அங்கு இல்லை, பொக்கணி, காதலர் கண்கள். ஏழாயிரம் பேர், பிரவாள நகரி, தொடர் கொலை, கிரேட் காட்டன், மெட்ராஸ் செக்ட், அஞ்சு மேனி (வட்டி), எக்மோர், பேசாத கதை. சுத்தி இயக்கம், கருப்பு கவுன், அரசியல் பயங்கரவாரம், அற்புதநாத் வங்கி, 1906, புதிதாய் எழுது, வணிகர் மரம், அலர், சதுக்கம், சதுரம், சதுக்கை, மாயச் சதுக்கை என்று பல காலம் யோசித்து, யோசித்து இறுதியாக மாயச் சதுகரம் என்று நாவலுக்குப் பெயர் வைத்ததாய்ச் சொல்கிறார் யூசுப். தலைப்பு வைப்பதில் உள்ள அந்த மெனக்கெடல் நாவல் முழுவதும் தெரிகிறது.
மொத்தத்தில், மிகவும் கவனமாகப் படிக்க வேண்டிய நாவல்.
நூலின் தகவல்கள் :
நூல் : மாயச் சதுகரம்
ஆசிரியர் : முஹம்மது யூசுப்
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கம் : 310
விலை : ரூ.399
நூல் அறிமுகம் எழுதியவர் :
– ச.சுப்பாராவ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

