குழந்தை இலக்கியத்திற்கும் சிறார் இலக்கியத்திற்குமான வித்தியாசங்களை தெளிவுற விவரித்திருப்பதோடு(நீண்ட நாட்களாக எனக்கும் இருந்த குழப்பமும் கூட) தொடரும் புத்தகத்தின் முன்னுரை அடுத்ததாக 11கதைகளைக்கொண்ட தொகுப்பாக விரிவடைகிறது.
புத்தகத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளும் அதற்கான ஓவியங்களும் மெல்லமெல்ல என் சிறுவயது நியாபகங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துவிட்டது.அப்படியெனில் சிறுவயதில் நான் இதைப்போன்ற கதைகளை படித்திருக்கிறேன் என்று அர்த்தமில்லை.காரணம் அதற்கான சூழலும் அதுதொடர்பான எதுவொன்றும் எட்டாதவொரு குடும்பச் சூழலின் பின்புலத்தில் உருவாகி வந்தவன் என்பதால் அத்தகைய அனுபவங்கள் எதுவும் எனக்கில்லை என்பதைத்தான் சொல்ல வந்தேன்.மாறாக கதை என்பது என்னை பொருத்தவரை மாட்டுச்சாணி தெளித்து தினமும் கூட்டிவாரி பெருக்கப்படும் தெருவாசலில் அம்மாவும் அவர்களது வயதுக்காரர்களும் ஒரு ஓரமாக ஊர்கதை பேசிக்கொண்டிருக்க(அப்போது பொதிகை கூட கிடையாது டிடி மட்டும் தான்)எனது அக்காக்கள் இன்னொரு பக்கமாக அவர்களோடு அமர வைத்துக்கொண்டு அவர்களது கற்பனைக்கேற்ப சொல்லிய கதைகள் தான் எனக்கான சிறார் இலக்கியம்.
அதுவெல்லாம் இதுவரை எந்த ஏட்டிலும் ஏறாத கதைகள்.ஏடறிந்த காலத்தில் ஏடேறா கதைகள்.இன்னும் கூட அக்காலத்தை தனக்குள்ளாகவே அடைகாத்துக்கொண்டு அருகில் இருக்கும் ரயில் தண்டவாள தடதடப்பு சத்தத்தைப்போல முழுஇரவு நிலவு வெளிச்சத்தில் யாருடனேவும் யாருடைய வீட்டிலேனும் ஏதோவொரு மூலையில் பெயர்தெரியாத சிறுவர்களுடன் அந்த கதைகள் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டுதானிருக்கும். பலர் தாங்கள் காமிக்ஸ் உள்ளிட்ட பல சிறுவர் நூல்களை தன் சிறுவயதிலேயே படித்ததாக கூறும் போது ஆச்சரியமாகவே இருக்கும்.அப்படியான சூழல்கள் நமக்கு வாய்க்கவில்லையே என ஒரு ஏக்கம் சன்னமாகவேனும் வந்து போவதை தவிர்க்க முடியாது.அதுவும் சிறுவயதில் முத்து காமிக்சையும் மார்க்ஸ் லெனினையும் ஒன்றாக படித்து முடிப்பதெல்லாம் வேற லெவல் எக்ஸ்பிரிமெண்ட்.
அதற்காகவே அவருக்கு ஒரு வாழ்த்தை நேரடியாகச் சொல்லனும்.அம்பேத்கரேனும் பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றபோது தான் புத்தரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பரிசாக பெற்றார்.அதன்மூலமே அம்பேத்கருக்கு புத்தர் அறிமுகமுமானார்.ஆனால் எங்கள் அண்ணன் எம்.பி கொள்ளிடத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து மார்க்சையும் லெனினையும் முத்துகாமிக்சையும் ஒருசேர வாசித்ததெல்லாம் வரலாற்றில் எப்போதேனும் ஒருமுறை நடக்கும் கால அதிசயங்கள் தான்.அப்படியாக நமக்கு வாய்க்காதது நம்பிக்கையில்லை யென்றாலும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் பலனாகக்கூட இருக்கலாம்.அந்தவகையில் அண்ணன் புண்ணியவான் தான்.இல்லையென்றால் கோசாம்பியையும் தேவிபிரசாத் சட்டோபாத்தியாவையும் போகிற போக்கில் கடந்து போக முடியுமா!
பொதுவாக கதைகள் எனப்படுவது காலச்சூழலின் வெப்பத்தை தணலாக அல்லாமல் பெருக்கெடுத்து பாயும் நீரோடையாய் மானுடப் பரப்பை வாரியனைத்துக்கொள்ள மனித மனங்களை பண்படுத்துவதற்கான ஒரு மனவியல் பயிற்ச்சி என்பது தான் இதுவரையிலான எனது புரிதல். அந்தவகையில் தான் இதுவரையிலான எனது வாசிப்பு பரப்புகள் தி.க பிரசுரங்களில் தொடங்கி(இங்கு தான் நான் மார்க்ஸ்சையும் அம்பேத்கரையும் பள்ளி இறுதிக் காலத்தில் அறியத் துவங்கினேன்) எம்.எஸ்.உதயமூர்த்தி,வைரமுத்து என கல்லூரிக் காலங்களில் முகிழ்ந்து கட்சி பிரவேசத்திற்கு பிறகாக சோவியத் இலக்கியத்திற்குள்ளாக கிளைப்பரப்பி தமுஎகச-வில் சேர்ந்த பின்பாக நவீன தமிழ் இலக்கிய தளமென,ஒரு சிறு பயணத்திற்கு பிறகாக அங்காங்கே திக்கித்திணறி,தட்டுத்தடுமாறி இறுதியாக தமிழிலக்கிய பொது நீரோட்டத்திற்குள்ளாக வந்துசேர்ந்தது.
இதற்கிடையில் தோழர் வேல்முருகன் வழியாக மண்ட்டோ கடிதங்களும் மாமன் சிராஜின் உயிரோட்டத்துடன் மொத்த மண்ட்டோ தொகுப்புமாக ஏற்படுத்திய பாதிப்பு இன்றுவரையில் கொஞ்சம் கூட குறையாமல் தடதடத்துக்கொண்டேதான் இருக்கிறது.இது ஒருவகையின் அரசியல்சார் தத்துவார்த்த சமூகநீதி வாசிப்புகள் இன்னொரு அனுபவம். கிட்டத்தட்ட இரண்டுமே பேர்லெல்லாக பயணித்து வந்துசேர்ந்த இடம்தான் இது என்பது கூடுதல் தகவல்.
சரி புத்தகத்திற்கு வருவோம்.மொத்தமாக 11கதைகள் கொண்ட இப்புத்தகத்தில் கதைகள் ஒவ்வொன்றும் வளரிளம் மனதை பண்படுத்தும் வகையிலாக ஒரு தந்தைக்குறிய நேசத்தோடும்,தாயிக்குறிய பரிவோடும்,அதேநேரத்தில் ஒரு ஆசிரியனுக்குரிய அறிவியல் பூர்வ மாற்றுச் சிந்தனையோடும் குறிப்பாக அரசியல் நோக்கோடும் பரிமான மடைந்திருக்கிறது. மிகச்சிறந்த ஆசிரியன் தானே நமக்கான அரசியலை தேர்வுசெய்ய கற்றுக்கொடுப்பவன்.நீண்ட காலம் நம்மோடு தொடர்ந்து வருபவன் இல்லையென்றாலும் அவனே எதிர்காலத்திற்கான சகபயணியாகவும் இருப்பவன்.
ஆக வெறுமனே கதைகள் என்பது கேளிக்கைக்கும் கொண்டாட்டத்திற்குமான ஒரு கருப்பொருளாகக் கொள்ளாமல் அக்காலத்திய புறச்சூழல் ஏற்படுத்தும் அகமனத் தாக்கங்களை ஊடாடுவதாகவும் அதன்வழியாய் தனிமனித மனத்தில் கட்டமைக்கப்படும் சிந்தனைப் போக்கையும் பரிசீலிப்பதாகவும் இருப்பது அவசியம்.சீறார் கதைகளில் இத்தனைக் கூறுகளை உள்ளடக்கி எழுதுதல் அவசியமா என்றுகூட சிலருக்கு கேள்விகள் எழலாம்.இதற்கான மிகச்சிறந்த பதில் ஒன்றிருக்கிறது.அது ஈசாப் கதைகள்.அதில் சொல்லாத அரசியலை நாம் பேசிவிடப்போவதில்லை என்பதை நாம் கவணத்தில் கொண்டால் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை.
புறச்சூழல் சார்ந்த அசைவுகளே நம்மையும் நமக்கான எதிர்காலத்தையும் கட்டமைக்கிறது என்கிறபோது,நம்மைத் தீர்மாணிக்கக்கூடிய ஒன்றை அவ்வளவு எளிதில் நாம் கடந்துவிடமுடியுமா.முடியாது என்பதால் தான் நமக்கான உலகை நமக்கான சிந்தனைப்போக்கை உருவமைத்துக் கொள்வதில் நாம் கவணம் செலுத்துவது அவசியமாகிறது.யாரோ தீர்மானிக்கும் ஒற்றையதிகார சிந்தனையை நாமும் நமது தலைக்குள்ளாக போட்டு அவதிபடுவதற்கு பதிலாக பன்முகத்தன்மையோடு நமைச்சுற்றி பிரவாகித்திருக்கும் சூழலையும் அது சார்ந்த வெளிகளையும் நமக்கான சிந்தனைக் கதிர்களாக கூர்தீட்டிக்கொள்வதில் நமக்கு மிக அதிகமான பொறுப்பிருக்கிறது.
தேர்ந்தெடுக்கபட்ட அல்லது பெரும்பாண்மை பலம் கொண்ட ஒரு சர்வாதிகார அரசு ஒன்றை செய் என்று சொல்கிற போது,கண்ணில்லாத உடலாய் சிந்திக்க மறந்த ஜடமாய் ஏனெதற்கு என்று எந்தவித கேட்டுகேள்வியும் கேட்காமல் செய்வதற்கு பதிலாக,நான் ஏன் இதை செய்யவேண்டும் என்பதில் இருக்கிறது சிந்தனைக்கான திறப்பு,பகுத்தறிவிற்கான இயங்கியல்,எதிர்ப்பிற்கான அரசியல் அதற்காகவேனும் நாம் வாசித்தாக வேண்டும்.வாசிப்பு அத்தகைய அறிவு வெளிச்சத்தை நமக்குள்ளாக ஊடுறுவி புதுவெளிச்சத்தை பாய்ச்சக்கூடியது.அத்தகைய பண்படுத்துதல் வாசிப்பதால் மட்டுமே வசப்படும்.
முன்பு வாய்வழியாய் கடத்தப்பட்ட நீதிக்கதைகள்,அறம் சார்ந்த நெறிகள் வழுவாமல் மானுடத்திற்கான பரப்பை ஒருவருக்கு ஒருவர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கான சூழலை அவதானித்துக்கொள்வது அவசியமாகிறது. அதற்கு சுயசிந்தனை தேவையாகிறது.அத்தகைய சுயசிந்தனைக்கு சுற்றுப்புறத்தை உட்கிரகிக்கும் நோக்கு பிரதானமாகிறது.இதற்கெல்லாம் யாரோ ஒருவர் அதை கதைகள் வழியாக அல்லது கலை வடிவங்களின் வழியாக நமக்கு அதை கடத்தவேண்டி இருக்கிறது. முன்பு பாட்டிகள் சொன்ன கதைகள் தான் நவீன உலகில் சிறார் இலக்கியங்களாக பரினாம மடைந்திருக்கிறது.
எது ஒன்று வளரிளம் பருவத்தில் நம்மை தகவமைக்கிறதோ அதுவே தான் இறுதிவரை நம்மை வழிநடத்துவதாகவும் நமக்கான குணநலன்களை வடிவமைப்பதற்கும் காரணமாகிறது என்பதால் அப்பருவத்தை சிந்தனைத்திறன் வாய்ந்த பன்முகச்செயல்பாடுகள் கூடிய மனமாக கட்டமைக்கவேண்டியது காலத்தின் அவசியம்.அதை நிச்சயம் கதைகள் தான் செய்யமுடியும்.கதைகள் தான் போலச்செய்தலை ஊக்குவிக்கும்,இந்த வகையான போலச்செய்தலே புதிய சிந்தனைக்கும் மேம்பட்ட உயிரியக்க மானுடமாய் மனிதத்தை ஆற்றல்படுத்தும்.
அத்தகைய ஆற்றல்களே எதிர்காலத்தை எல்லாவகையிலும் மனிதம் சார்ந்து மேம்படுத்தவும் நேசிக்கவும் அரவணைக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொடுக்கும்.தற்போதைய உலகு தழுவிய கொரோனா தொற்று நோய் பேரிடரில் அமெரிக்கா தினறுவதற்கும் சீனா,கியூபா,வியட்நாம் ஆகிய சோசலிச முகாம்கள் மனிதம் மீட்கும் பணியில் முன்னணி படையாக இருப்பதற்கும் இத்தகைய அடிப்படை பிரச்சனைப் பாடுகளே பிரதான காரணம்.
சுற்றுச்சூழல்,பல்லுயிர் பெருக்கம்,உணவு,உடற்பயிற்சி,பகுத்தறிவு, கேள்வி கேட்கும் திறன் என விதம்விதமான வகைகளில் அரசதிகாரத்தை எதிர்த்தியம்பும் முற்போக்கு நன்னெறியை பயிற்றுவிக்கும் வகைகளிலான கதைக் களத்தோடு வளரிளம் பருவத்து மெய்நிலத்தை அறம்சார்ந்த விதைகளை ஊன்றுவதன் வழி மிகச்செழிப்பான அறுவடைக்கு வித்திட்டிருக்கும் நல்லதொரு படைப்பிது.தோழர் உதயசங்கரின் மொழிபெயர்ப்புகளும்,கலை இலக்கிய அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்த அனுபவமிருக்கும் எனக்கு அவரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதை தொகுப்பு பலநாளாக வாசிப்பிற்கான வரிசையில் காத்திருக்கிறபோதும் அவரின் சிறார் இலக்கியம் மெச்சத் தகுந்த அபிமானத்தை எனக்குள் ஊன்றி இருப்பதில் மகிழ்ச்சியே.
காப்ரியேல் கார்ஷியா மார்க்வெஸ்சின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நூலின் சிரமமான மொழிபெயர்ப்புக்குள்ளாக தற்போதைய வாசிப்பு சில தினங்களாக மெல்ல ஊர்ந்து நகர்ந்துகொண்டிருந்தபோது அதிலிருந்து கொஞ்சம் அசுவாசமடையவும் புத்துணர்ச்சி பெறவும் புது அனுபவமாக மாயக்கண்ணாடி கதைத்தொகுப்பு அமைந்தது கிட்டத்தட்ட ஒரு உற்சாக டானிக்.இனி புதுத்தெம்போடு நூறு ஆண்டுக்குள்ளாக நுழையலாம்.
புத்தகம் : மாயக்கண்ணாடி
எழுத்தாளர் : உதயசங்கர்
வகை : சிறார்இலக்கியம்
– மதுசுதன்