நூல் அறிமுகம்: மயில் மார்க் குடைகள் – சகுவரதன்

Era. Murugan's Mayil Mark Kudaikal Novel Book Review By Sagu varadhan. நூல் அறிமுகம்: மயில் மார்க் குடைகள்நூலின் பெயர் : மயில் மார்க் குடைகள்.
ஆசிரியர் : இரா.முருகன்
பதிப்பு : எழுத்து பதிப்பகம்.
விலை : 270/

எழுத்தாளர் இரா. முருகன், கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதை எழுத்தாளராக நாவலாசிரியராக பரிமளிப்பவர்.

இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.

மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

அற்புதமான முன்னுரையுடன் இருபது கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

நூலாசிரியர் கூறுவது போல் சில கதைகள் மாந்திரீக யதார்த்தவாதம் கதையாடல்களை கொண்டுள்ளது . அதில் முக்கியமானது பாதுஷா கதை. பாதுஷா என்பது ஒரு வகை இனிப்பு .அருவ உருவம் கொண்டிருப்பவர் சித்தர். ராகவனின் பக்கத்து இருக்கையிலேயே பயணிக்கிறார். அதுவும் விமானத்தில். இருவருக்கும் அறிமுகம் நடந்தேறி பேசத் தொடங்கும் போதுதான் ராகவனின் கடந்தகால அதாவது கடந்த சில நாளின் நிகழ்வுகளை செல்போனில் காட்டுகிறார். குழந்தையிலிருந்து வளர்ந்து பெரியவனாகி திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பாதுஷா மீதான ராகவனின் ஈர்ப்பை எள்ளல்களோடு சொல்லி நகர்த்துகிறார் ஆசிரியர். சித்தர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக முடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

அடுத்தது திமித்ரிகளின் உலகம். இதுவும் மாந்திரீக யதார்த்தம் பூசிய கதைதான் . அமெரிக்காவில் இயங்கும் பன்னாட்டு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் பணியாளர்களின் மனநிலையை பற்றியது.

எவ்வளவு படித்திருந்தாலும் இல்லாத ஒன்றுக்கு இறக்கை கட்டிய கற்பனைகளோடு இயங்குகிறார்கள். மலேசிய மந்திரவாதி தான் சேனா. கதை முழுக்க பேசப்படுகிறார் . நல்லது நடந்தாலும் அவரே. கெட்டது நடந்தாலும் அவரேதான். ஆனால் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை

திட்டு வாங்குவதும் திட்டித் தீர்ப்பதும் ஏழை கம்பெனியில் மட்டுமல்ல பணக்கார கம்பெனியிலும் நடக்கிறது என்பதுதான் நாம் உணரவேண்டிய யதார்த்தம்.

இசக்கி சிறுகதை அருமை .இருபத்தைந்து வயதான பெண் ஒருத்தியின் கதை தான் இசக்கி. இசக்கி அவள் பெயர். கேன்டீன் நடத்துபவள். சமையல்காரி மட்டுமல்ல. சமையல் செய்ய பயன்படும் எலெக்ட்ரானிக் உபகரணங்களை கூட பழுதுபார்க்க தெரிந்தவள்.

அக்கம்பக்கம் கம்பெனி பணியாளர்கள் இவளுடைய காபிக்காக கியூவில் நின்று தவம் கிடக்க கிரண் அப்படியல்ல. தன் காதலி ரோஷினிக்காக காத்துக் கிடப்பவன் . ரோஷினி ஏற்கனவே திருமணமானவள் . இவளுடன் பணி புரிபவள். ஆனால் வெளிநாட்டில் இருப்பவள்.

இசக்கி மின் தாக்குதலுக்கு உள்ளாகி கிரண் காப்பாற்றப் போகும் போதுதான் ரோஷ்ணியுடனான காதல் முறிவும் ஏற்படுகிறது. பிறகென்ன இசக்கியும் கிரணும் இணைகிறார்கள் .

இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் பறக்கும் யானைகள், காண்டாமிருகங்கள், பசுக்கள் தான்.

இசக்கி யாருடைய உதவியும் இன்றி இயங்கும் போது யானை முதலான விலங்குகள் பறப்பதாக காட்டும் ஆசிரியர்
கிரணுக்கு மனைவியாகி அவனுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை நடத்தும்போது கடல் நாரை மட்டுமே பறக்கிறது. யானைகள் பறந்து எத்தனையோ காலம் ஆகிறது என கதையை முடிக்கிறார்.

மயில் மார்க் குடை சிறுகதை இசைப்பாடகி பார்கவி பற்றியது. இதை வாசிக்க 1980களில் மிக பிரபலமான “வாஷிங் பவுடர் நிர்மா” பாடல் வரிதான் நினைவுக்கு வந்தது. இந்த மூன்று வார்த்தை மக்கள் மனங்களை சூறையாடி விட்டிருந்தது .யாவர் மனதிலும் இந்த மூன்று வார்த்தை பாடலாக பாடிக் கொண்டிருந்த காலம் அது. நான் கூட பல மாதங்கள் முணுமுணுத்து இருக்கிறேன். இக் கதையின் நாயகி பார்கவியும் மயில் மார்க் குடைகள் என்ற மூன்று வார்த்தையை பாடலாக பாட ரெக்கார்டிங் ரூமிற்கு செல்வதில் இருந்து தொடங்குகிறது கதை.

புத்தி பேதலித்த கணவன் மருத்துவமனையில் இருக்கிறார். யாரோ ஒரு பெண்ணோடு ஓடிப் போய் திரும்பி வந்தவர் . பார்கவி ரிடையராகி பென்ஷன் வாங்கி கொண்டிருப்பவர். இந்த களத்தில் தனக்கே உரிய பாணியில் தேர்ந்த சொற்பிரயோகங்களோடு கதையாடியிருக்கிறார் இரா. முருகன் அவர்கள்.

ஆஸ்பத்திரியிலும் வெளியில் இருப்பவர்களும் மான் மார்க் குடைகள் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். பாடிய பார்கவி யாரென்றும் அவள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்றும் தெரியாமல் .
மனம் கனக்கும் கதை.

புலி அம்சம் அழவைக்கும் கதை. மெடிகல் ரெப்ரசெண்டேடிவ் இரண்டு உதவி டைரக்டர்கள் தங்கியிருக்கும் அறையில் மூன்றாவது நபராக தங்கியிருக்கிறார் .சினிமா மீது விருப்பம் இல்லை எனினும் அந்த சூழல் அவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதுதான் கதை .

கதை முழுக்க நேசன் தான் பேசுகிறார். புனிதாவை பற்றி அடிக்கடி பேசுகிறார் .கட்டிப்பிடிக்க வேண்டும் .சண்டையிட வேண்டும் என்று.

புனிதா யாரென்றால் அது ஒரு புலி. நாயகன் மகி , நேசன் இழுத்துச் செல்லுகிற இடங்களிலெல்லாம் செல்கிறார். செலவும் செய்கிறார். அவரே அறியாமல் படத்தின் கதாநாயகன் ஆகிறார்.

வெறும் கேமராவை பார்த்து ஷூட்டிங் இருக்கும் என நினைக்கிறார் .மழை காரணமாக ஷூட்டிங்கை கேன்சல் செய்து மகியிடம் இருக்கிற மிச்சம் மீதி பணத்தையும் வாங்கி சென்று விடுகின்றனர் .

ஷூட்டிங்கில் நடிக்கிற புலிதான் பசியும் பட்டினியுமாக பூனை மாதிரி தெரிகிறது என கதையை முடிக்கிறார் இரா.முருகன் அவர்கள்.

20 கதைகளையும் சொல்ல ஆசைதான். கட்டுரையின் நீளம் கருதி 5 கதைகளின் வாசிப்பு பகிர்வை அளித்துள்ளேன்.

முருகன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளர் . எள்ளலும் துள்ளலும் நிறைந்த வார்த்தைகளோடு விளையாடுபவர் .சில பத்திகளை விடுபட்டு வாசித்தால் வாசகர்களுக்கு புரியாது. அத்தனையும் வாசிக்கவேண்டும். தொடக்கத்தில் வாசக மனங்களில் எழும் கதையின் முடிவு இறுதியில் நிச்சயம் இருக்காது .சற்று ஏமாற்ற கூடியது . இதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட வாசகர்கள்.

மயில் மார்க் குடைகள் இரா.முருகன் அவர்களுக்கு மற்றுமொரு மணிமகுடம்

அன்புடன்
சகுவரதன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.