ஒரு சின்னஞ்சிறிய கிராமம் தந்த கதாசிரியர் கு. காந்தி. இவர் இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மூன்று சிறுகதை தொகுப்புகளும் சாதாரண மக்களின வாழ்க்கையை நமக்கு பாடமாகத் தரும் கதைகளே. இதில் மூன்றாவது கதை தொகுப்புத்தான் மழைச் சோறு. இதில் பத்து கதைகள் உள்ளன.

மனைவி இறந்துபோகிறாள். வாடகைக்கு காசு கொடுத்துமனைவியின் இறுதிச்சடங்கில் அழவைக்கிற கொடுமை உயிரோடு இருந்தபோது பெத்து வளர்த்து ஆளாக்கிய மக்கள் ஒருவர்கூட வந்து பார்க்காத துயரம். இறந்துபோய்க் கிடக்கிறாள் வள்ளியம்மை வாய் விட்டு கதறுகிறார் வேதநாயகம் ஆத்தா..ஆத்தா என்கிற தாய்மை உணர்வில் ஒரு பெண்பிள்ளையை பெற்றிருந்தாள் வாய் விட்டு கதறுமே என்கிற ஏக்கமும் பெண்பிள்ளையின் உயர்வும் பேசப்படுகிறது “வாடகை கண்ணீரில்”

காளியம்மை உடல்நிலை சரி இல்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.எந்த முன்னேற்றமும் இல்லை. கணவனை அழைக்கிறாள்.நான் இறந்துபோனாள் என்னை ஊர் மண்ணில் புதைந்துவிடுங்கள் ஊர் மண்ணாவது என்னை திங்கட்டும். பதறிப்போகிறான் மாரியப்பன். மனைவி இறந்துபோகிறாள் அரசு மருத்துவமனையில் ஆம்பலன்ஸ் கிடைக்காமல் அவதிப்படுகிறான். ஓர் ஓலைப்பாயில் தன் மனைவியின் சடலத்தை கிடத்தி தூக்கி கொண்டு போகிறான் அழுதுகொண்டு பின்சென்ற மகள் வானத்தைப் பார்க்கிறாள். விமான ஆம்புலன்ஸ் சேவையை துவக்கிவைத்துவிட்டு நாட்டின் பிரதமர் சென்றுகொண்டிருக்கிறார். யாருக்கு இந்த வளர்ச்சி. ஏழைகளுக்கு எந்த வளர்ச்சியும் எட்டவில்லை. பொருளாதரம் இருப்பவனையே உயரத்தி செல்கிறது வளர்ச்சி” எது வளர்ச்சி என்கிற கேள்வியை நம் மனதிற்குள் பதியவிட்டுச் செல்கிறது இந்த கதை.

தாலி” இது கலாச்சாரத்தின் ஆணிவேறாக பார்க்கப்படுகிற சூழலில் நீட் தேர்வில் தாலியை வலுக்கட்டாயமாக கழற்றினார்களே உங்கள் மதம் என்ன செய்தது. உங்கள் பண்பாடு என்னானது? என்கிற கேள்வியை அழுத்தமாக பதியவைக்கிறது “கலாச்சாரம்” எனும் கதை.

ஒவ்வொரு கிராமத்தின் ஊர் எல்லையில் அய்யனார் கோவில் இருக்கும். அய்யனார் ஊரை காப்பாற்றுகிற குலசாமி. மழை வராமல் பூமிகாய்ஞ்சு போச்சு. எல்லோரும் கிடாவெட்டி பொங்கல் வைத்து அய்யனாரை வழிபட்டார்கள். எப்போதும் சொன்ன கட்டுகதைகளுக்கு என்ன பஞ்சம் வெளியூர்காரன் சாப்பிடக்கூடாது என ஐதீகம் இருந்தது என்ன காரணம் என்பதை தன்னுடைய தாத்தாவிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு துறைக்கிறான் பேரன். புதிய தலைமுறைக்கும் பழைய தலைமுறைக்கும் விவாதப்பொருளாக கதை செல்கிறது. கட்டுகதைகளுக்கு முட்டுகொடுக்கும் பழைய தலைமுறையின் கருத்துக்களை உடைத்தெறிகிறது. மழைச் சோறு அருமையான கதை நிறைய விசயங்களை எதார்த்தமாக எடுத்துச் செல்கிறது.

இந்திய சமூகத்தில் சாதியக் கொடுமைகள் கொளுந்துவிட்டு எரிந்த காலங்களில் மதம் மாறியவர்கள் நிறையபேர்.மதம் மாறினாலும் ஜாதிய அழுக்குகள் அப்பிக்கொண்ட ஜனங்களிடமிருந்து விலகிய போக முடியாத நிலையை விவரிக்கிறது “டீ கடை”.
பல மைல்கள் கடந்து கேதம் சொல்லப் புறப்பட்டான் மகன் கேசவன் சென்ற இடங்களில் கொட்டானில் சோறு சாப்பிட்டதும், இரு கைகளை ஒன்றாக வைத்துக்கொண்டு தண்ணீர் குடிப்பதும் அவன் மனதை பிசைகிறது. ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். பல ஆண்டுகளுக்கு பின் பத்து இலட்சம் ரூபாய் கோவில் கட்ட நன்கொடையாகத் தருகிறான்.முகம் தெரியாத அவனுக்கு மாலையோடு காத்திருக்கிறார்கள். மக்கள். பணம் எவ்வளவு பெரிய மாற்றத்தை தருகிறது என்பதை சொல்கிறது “ஊர் சொல்லி”

எந்தக் குற்றமும் செய்யாத அருண் பாலியல் குற்றத்திற்கு ஆளாகி பரிதாபமாக நிற்கிறான். கோர்ட் அவனை விடுதலை செய்கிறது. புனிதா பொய் சொல்கிறாள் என்பது அம்பலமாகிறது. இருந்தும் அருண் அவனை ஏற்றுக்கொள்கிறான். இது எப்படி சாத்தியம்? உயர்  சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே இது சாத்தியம் யோசிக்க வைக்கிறது.“திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பு”

வெவ்வேறு சாதிகளுக்கு குலதெய்வம் ஒன்றாக இருப்பதை கிராமங்களில் பார்க்க முடியும். குலதெய்வம் ஒன்றாக இருப்பதை கிராமங்களில் பார்க்க முடியும். குலதெய்வம் ஒன்றாக இருக்கும்போது சாதி மட்டும் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும் என்கிற கேள்வியை குழந்தையின் மூலம் கேட்கிறது ‘குலதெய்வம்” கதை. அக்காவின் திருமணத்திற்காக மகனின் கல்வியை காவு கொடுக்கிறது சூழலை மிக உருக்கமாகச் சொல்கிறது. ”ரொக்கத்தில் கல்யாணம்”

காந்தியின் பத்துக் கதைகளும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களை நெகிழ்ச்சியோடு சொல்கின்றன. அனைத்து கதைகளும் கற்பனை கலக்காத நிஜமானவை.காந்தியின் எழுத்து ஏழைகளைப் போலவே எளிமையானவை சாதாரண வாசகனின் மனதை நிச்சயமாக தைக்கும் என்றாலும் உளவியல் தன்மையோடு கதைகளில் ஊடுருவி இருக்கலாம். யார் இந்தக் காந்தி எனும் கேள்வியை படைப்புலகம் நிச்சயம் எதிர்நோக்கும்.

புத்தகம்: மழைச் சோறு

ஆசிரியர்: எழுத்தாளர் காந்தி

வெளியீடு:பாரதி புத்தகாலயம் 

விலை: ரூ.90

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mazhai-soru-short-stories-collection/

மதிப்புரை: கவிஞர் முகவை அழகுடையான்

மாவட்டத் தலைவர்
த.மு.எ.க.ச
இராமநாதபுரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *