‘மழைத்துளி’ சிறுகதை – சக்திராணி
அம்மா… அம்மா… என்று அழைத்தவாறே வந்தாள் அகல்யா.

என்னம்மா எதுக்கு இப்படி ஏலம் போட்டுட்டு வார

மேகம் கருத்து இருக்குமா… மழை வரப்போதுனு நினைக்கிறேன்.

மழையா… வெளில கோதுமை காய வச்சேன். எடுத்துடு மா.

சரி மா… இதோ என்றே வேகவேகமாக ஓடி எடுப்பதற்குள் அவள் வேகத்திற்கு மழையும் பின்தொடர்ந்தது.

பாதி நனைந்தும் நனையாமலும் தன் பாவாடைக்குள் கோதுமைப்பையை மறைத்து மறைத்து உள்ளே எடுத்து வந்தாள்.

எடுத்துட்டியா என் செல்லம் மகளே… என்று கொஞ்சல் மொழியில் கொஞ்சினாள்.

அம்மா இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது தெரியுமா?

என்னமா… என்னாச்சு.

இன்னிக்கு அறிவியல் டீச்சர் மழைநீர் சேகரிப்பு பத்தி பாடம் எடுத்தாங்க மா.

நல்லா புரிஞ்சுதா டா. இல்ல ஏதும் சந்தேகம் வந்துச்சா

எனக்கான சந்தேகம் ரொம்ப பெரிசு மா.

இரு இரு அகல்யா. அந்த பாத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு வா. மழைநீர் வார இடத்துல பாத்திரத்தை அடுக்குடா.

சரிமானு. ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து அடுக்கிக்கொண்டே இருந்தாள்.

நீர் வடியும் இடங்களில் துணியை வைத்து துடைத்தாள் அம்மா.

அகல்யா ஸ்கூல் ல இருந்து வந்ததும் எதும் சாப்பிடல. அம்மா பிஸ்கட் வாங்கியிருந்தேன். எடுத்துக்கோ என்றாள் துடைத்துக் கொண்டே.

ஐ… பிஸ்கட் என்றே தேடித்தேடி பார்த்தவளுக்கு கலர் கலரான பேப்பர் கண்ணில் பட்டது.

பல்லால் கடித்து வேகமாக பேப்பரை பிரித்தாள்.

பிஸ்கட் மழைநீரில் நனைந்து நமத்துப்போய் இருந்தது.

என்னம்மா இப்படி இருக்கு என்று கைகளை வேகமாக உதறினாள்.

தண்ணீல நனைஞ்சுருக்கும் மா. அதனால என்ன. சாப்பிடு.

வேணாம்…வேணாம்.
சரி கொஞ்ச நேரம் காத்துல காய வைக்கிறேன் அப்புறம் மொறு மொறுனு வந்துடும்.

என்னம்மா… நீ காத்துல வைச்சா எப்படி மொறுமொறுனு வரும்.

எங்க அறிவியல் டீச்சர் இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க என்றே புன்னகையுடன் பதில் சொல்ல…

நல்ல அம்மா நீ… என்றே இருவரும் புன்னகைத்தனர்.

ம்மா… எனக்கு பெரிய சந்தேகம் சொன்னேனே.

ஆமா ஆமாடா… அதுக்குள்ள இவ்வளவு வேலை வந்துருச்சு பார்த்தில.

இப்போ சொல்லு என்ன சந்தேகம் உனக்கு…

வானத்துல இருந்து வார மழைநீர் பூமிக்குள் சேகரித்து கொண்டு போக பைப்லாம் வீட்ல வைக்கனுமாம் மா.

இதுல என்னடா சந்தேகம். அதான் நம்ம ராமு மாமா வீட்ல… நரேஷ் சித்தப்பா வீட்லலாம் வைச்சுருக்காங்களே

ம்ம்… அதெல்லாம் சரி தான். நானும் பார்த்துருக்கேன். ஆனா நம்ம வீடு முழுக்க தண்ணீர் சேகரிக்குறோமே. அதைப்பத்தி ஏன் மா யாருமே சொல்லல.

என் அறிவு… செல்லமே. உன் யோசனைலாம் பலமாகத் தான் இருக்கு. ஆனா உன்னோட கேள்விக்கு பதில் சொல்ல உங்க அம்மாளுக்கு அறிவு கம்மி தான்.

ஆனா… என் அறிவுக்கு எட்டுன பதில் சொல்லனும்னா.
இதோ மேல தெரியுது பார் ஓடு. இந்த ஓட்ட விழுந்த ஓடு மாதிரி தான் உங்க அம்மா வாழ்க்கை. சரியா படிக்காம… வாழ்க்கை சரியா வாழத்தெரியாம… ஒரு முன்னேற்றமும் இல்லாம போகுது.

உன்னோட வாழ்க்கை இப்போ சேமிக்கிற மழைத்துளி போல முத்தாக மாறனும் என்றே அணைத்து முத்தமிட்டாள்.

சந்தேகம் தீர்ந்தது மா. மழைநீர் எப்படி சேமிக்கனு இப்போ நல்லா புரிஞ்சது.

என் தங்கத்துக்கு எல்லாமே நல்லா புரியும். சரி வா என்றே மழைநீரில் நனைந்தே மகிழ்ந்தார்கள்.

– சக்திராணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.