மாலை நேரம் காட்டு வழியே
மனிதன் ஒருவன் வந்தான்
பசியைத் தீர்க்கப் பழங்கள் தேடி
அங்கும் இங்கும் அலைந்தான்
உச்சிக் கிளையில் பழுத்த பழங்கள்
வாவா என்று அழைக்கும்
பற்றிக் கிளையில் தாவும் குரங்குகள்
பார்த்துப் பார்த்துச் சிரிக்கும்
கனிந்த பழங்கள் உச்சி மரத்தில்
கைகள் எப்படிப் பறிச்சிடும்?
மனிதன் அந்த புத்திசாலி
மனதில் ஒன்று பளிச்சிடும்!
கற்கள் தேடி எடுத்து வந்து
குரங்கு நோக்கி எறிந்ததும்
கோபம் கொண்ட குரங்கு பழத்தைப்
பறித்துப் பறித்து அடித்தது
எறிந்த பழத்தை எடுத்த மனிதன்
பசி முழுக்க தீர்ந்தது
இருந்த களைப்பு நீங்கி அவனின்
பயணம் மீண்டும் தொடர்ந்தது…