45 ஆவது சென்னை புத்தகக் காட்சி புதிய வரவுகள்
மரியா மாண்டிசோரி எனும் கல்விப் புரட்சி
கல்வி பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சான பாடங்களை ஒரு குழந்தையின் முன் திணித்து ஏறிவிட்டதா என தேர்வு மூலம் பரிசீலிப்பதும் கல்வி அல்ல. ஏனெனில் குழந்தைகளுக்கு நீங்கள் எதையுமே கற்றுக் கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிய நீங்கள் அதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்.
குழந்தையின் உள்ளேதான் மானுடத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. குழந்தையை கையாள்பவர்கள் நம் எதிர்காலத்தை கையாள்கிறார்கள்.
தன் சுயமான ஆர்வத்தைக் கொண்டு தானாகவே கற்கும் வேட்கையோடு செயலில் இறங்கும் ஒரு குழந்தையை நீ இந்த மொழியைபடி…. நீ இந்த இடத்தில்தான் உட்காரவேண்டும். நீ நான் (பாடமாக) உரைப்பதை மட்டுமே கேள்… என்று உங்கள் வகுப்பு சொல்லுமேயானால் …. நீங்கள் அக்குழந்தையின் கற்றல் நடவடிக்கைக்கு பெரிய குழி வெட்டி புதைத்து விட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.
– மரியா மாண்டிசோரி
மரியா மாண்டிசோரி தனது கல்விமுறைக்கு அறிவியல் பூர்வ கல்விமுறை (Scientific Pedagogy) என்று பெயரிட்டார். இந்திய மண்ணில் இன்று அவரை குறித்து பல அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மூன்று வயதில் ஒரு குழந்தை மூன்று மொழிகளை எளிதாக கற்றுவிடும் என்று அவர் கூறினார் என்பதில் தொடங்கி, சமஸ்கிருதம் உலகின் சிறந்த கல்விமொழி என சான்றளித்தார் என்பது வரை பலவிதமாக அவரை பயன்படுத்தப் பார்க்கிறார்கள். மாண்டிசோரி கல்விமுறை என்று சொல்லி தனியார் பள்ளிகளும் மழலையர் கல்வி என்று வீடுகளில் நடத்தப்படும் – கட்டண கற்றல் நடவடிக்கையும் அவரது பெயரை வைத்து நடக்கும் வணிகமாகிப்போனது இன்னொரு கொடுமை.
மூன்று வயதில் எல்கேஜி என்று நர்சரி ஆங்கிலக் கல்வித்தொடங்கலாம் என்பது 1984இல் மத்திய ராஜீவ்காந்தி அரசு புகுத்திய கல்விக்கொள்கை மூலம் அமலானது. மகாத்மா காந்தி, தாகூர் என்று யாவருமே பள்ளிக்கல்வி என்பது ஐந்து அல்லது ஆறுவயதில்தான் தொடங்கவேண்டும் என்றே தமது கொள்கையாக வைத்திருந்தனர். கோத்தாரிக் கல்விக்குழு(1966) ஒன்றாம் வகுப்பிற்கான வயது என்று ஐந்து வயதைதான் முன்மொழிந்தது. வி.பி.சிங் அமைச்சரவை பதவி ஏற்றபோது தனக்கு முந்திய ராஜீவ் அரசின் கல்விக்கொள்கையில் ஏற்கமுடியாத பகுதிகளை முன்மொழியுமாறு ஐனார்த்தன் ரெட்டி தலைமையில் ஒரு கல்வி ஆலோசனைக் குழுவை நியமித்தபோது அந்தக் குழு பல மாற்றங்களை முன்வைத்தாலும் மூன்று வயதில் பள்ளிசெல்லும் நர்சரி விஷயத்தில் கைவைக்கவில்லை. அதற்கு அக்குழு கூறிய காரணம் விசித்திரமாய் இருந்தது.
இந்தியாவின் குழந்தைகளை கல்விக்கு மீட்டு எடுக்க அது உதவும் என்று அறிவித்தது அக்குழு. வீட்டு வேலைகளில் ஒரு பத்துபாத்திரம் தேய்க்கும் வேலையில் ஈடுபடும் வயது வந்தால்கூட பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். பெற்றோர்களோடு கூலிவேலைகளில் உதவிட ஒரு ஆண்பிள்ளை உடன்செல்லும் அந்த நான்கு-ஐந்து வயது ஆவதற்குள் நாம் அவர்களை பள்ளிக்கு வரவழைத்துவிட்டால்போதும்…. கல்வி அவர்களை சென்றடைந்துவிடும் என்பது அக்குழுவின் பரிந்துரையாக இருந்தது. கல்வியை அனைத்துவகை குழந்தைகளுக்கும் சென்று சேர்ப்பதையே நம் நாடு இதுவரை பரிசீலித்து வந்துள்ளதற்கு இதுவே சாட்சி.
மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி என்பது எப்படி இருக்கலாம். ஆசிரியர்கள் அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதைத்தான் இந்த ‘மழலையர் கல்வி’ (Pre-Schooling) நூலில் மரியா மாண்டிசோரி விரிவாக அலசுகிறார். எல்.கே.ஜி, யு.கே.ஜி.யை (மழலையர்கல்வி) முறைப்படியான கல்விதொடங்கும் இடமாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை (டாக்டர் கஸ்தூரி ரங்கன் கமிட்டி) சூழலில் அந்த சிறுகுழந்தைகளை முதிர்நிலை பள்ளிக்குள் வரவைத்து என்னசெய்யப்போகிறார்களோ என மனம் பதறும் நிலையில் என்ன செய்வது சரியாக இருக்கும் என்பதை நம் கையில் இருக்கும் இந்த நூல் மிகச்சிறப்பாக முன்வைக்கிறது.
மரியா மாண்டிசோரி இந்த நூலை (உள்வாங்கும் உள்ளம் எனும் தலைப்பில்) இந்தியாவில் இருந்த காலத்தில்தான் எழுதினார். நம் நவீன கல்வியில் குழந்தைகளது நியாயங்களை உரக்கப்பேசிய அவரது வாழ்வே நமக்கு ஒரு பாடம்தான். அவரது இந்திய நாட்களை நாம் அறிந்து ஆய்வதற்குமுன் அவரது வாழ்க்கை சரித்திரத்தை அறிவோம். அது நாம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நூலை வாசிக்க உதவும். அவ்வகையில் நமக்கு இப்போது இரண்டு பணிகள் உள்ளன. முதலில் அவரது வாழ்வை அறிவது. பிறகு இந்த நூலின் முக்கியத்துவம், அது எழுதப்பட்ட பின்னணி இவற்றை அறிவது.
மரியா மாண்டிசோரி இத்தாலி நாட்டை சேர்ந்தவர். உலகக் கல்வியாளர்களில் முதன்மையானவராக, கல்விப் புரட்சியின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய அந்த அறிவுச்சுடர் 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இத்தாலியின் செராவல் பிராந்தியத்தில் பிறந்தார். தந்தை கணக்காளர். அலெக்ஸாந்திரோ மாண்டிசோரி. மரியா பிறந்தபோது அவரது வயது 33. மரியாவின் தாயார் ரெனில்டே ஸ்டோப்பானி. அக்காலத்தில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை எனும் கூற்றோடு ஒப்பிட்டால் ரெனில்டே – கற்றறிந்தவராக இருந்தது மட்டுமல்ல, வீட்டில் தன் உறவுக்கார பெண் குழந்தைகளுக்கு எழுத்தறிவு அளிப்பதில் தன் ஓய்வுநேரங்களை செலவிட்டவர். ரெனில்டே ஸ்டோப்பானியின் சகோதரர் உலகறிந்த இத்தாலிய நிலவியல் உயிர்படிம இயல் விஞ்ஞானி. அவரது பெயர் ஆண்டனியோ ஸ்டோப்பானி. சிறுவயதில் இருந்தே மரியா அந்த அறிவியல் அறிஞரின் நிழலில் செல்லமாக வளர்ந்தவர்.
மாண்டிசோரி குடும்பம் 1873இல் புளாரன்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்தது. பிறகு 1875இல் ரோம் நகருக்கு சென்றது. எல்லாம் அவரது தந்தையின் வேலை நிமித்தமாகத்தான்.
- 1876 மரியா ரோம் நகர நிர்வாகம் நடத்திய ஒரு பொதுப்பள்ளியில் – பப்ளிக் எலிமண்டரி பள்ளி – தன் ஆறாம் வயதில் சேர்க்கப்பட்டார். எதிலுமே ஆர்வம் செலுத்தாத மாணவி என்று பெயர்பெற்றார். பள்ளியை சுத்தம் செய்வது முதல் ஆசிரியர்களுக்கு தேநீர் குவளைகள் கொண்டு சேர்ப்பது என ‘பெண் வேலைகளில்’ சிறந்து விளங்கினார் என்று சான்று அளித்தனர். எவ்வளவு அபத்தம்?
- 1883இல் தனது தந்தையின் கடும் எதிர்ப்பிற்கு நடுவே ஆண்கள் மட்டுமே கல்விகற்ற ரெஜியா ஸ்குவோலரி டெக்னிக்கா மைக்கேலாஞ்சலோ- பொறியியல் கல்விச்சாலையில் போய் போராடி இடம் பிடித்து அந்த 13 வயதில் இத்தாலிய மொழிப்பாடம், கணக்கீடு, அல்ஜீப்ரா, வரைபட இயல், வணிக கணிதம், வரலாறு, புவியியல் மற்றும் அடிப்படை அறிவியல் ஆகிய பாடங்களை படிக்க தேர்வு செய்தார். அந்த காலத்தில் எந்தெந்த பாடங்களை படிக்கலாம் என்று நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம், இதற்குமேல் அங்கே பாடங்கள் இல்லை. 1886இல் அனைத்துப் பாடங்களிலும் முதலிடம்.
- 16வயதில் அவரது வெறித்தனமான நோக்கம் லியோனார்டோ டாவின்சி போல கலீலியோ போல (இருவருமே இத்தாலிக்காரர்கள்) அறிவியலாளர் ஆகவேண்டும் என்பதே. டாவின்சியின் படைப்புகள் மீது தன் முழு ஆர்வத்தையும் குவித்த நாட்களில் அவர் பொறியியல் துறையிலேயே ஆர்னேட் டிராயிங், இயற்பியல், வேதியியல் மற்றும் இரண்டு அயல்மொழிகள் (பிரெஞ்சு – ஆங்கிலம்) கற்பித்த மாகாண தொழில் நுட்ப கல்வியகத்தில் மாணவர் (மீண்டும் அங்கே கற்ற ஒரே பெண் – அதாவது மாணவி) ஆனார்.
- டாவின்சியின் மனித உடலியல் உறுப்பு செயல்பாடுகள் குறித்த துல்லியமான ஓவியங்களால் கவரப்பட்டு மருத்துவம் படிப்பது என்று முடிவுசெய்கிறார் மரியா மாண்டிசோரி. அக்காலத்தில் (அதாவது அந்த 1890இல்) இத்தாலியில் பெண்கள் மருத்துவக்கல்வி கற்க முடியாது. ரோம் பல்கலைக் கழக மருத்துவ பேராசிரியராக இருந்த குயிடோ பாசிலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாண்டிசோரி நீதிமன்றம் செல்வேன் என பதிலெழுதிட கடைசியில் அவருக்கு அடிப்படை கல்வி (படித்தது பொறியியல் அல்லவா) போதாது என்று புறக்கணித்தார்கள்.
- விடாமுயற்சி, பிடிவாதம் இவற்றுக்கு மறுபெயர் மரியா அல்லவா? அவர் அதே 1890இல் ரோம் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானம் எனும் பட்டப்படிப்பில் சேர்ந்தார். பொது மற்றும் கரிம வேதியியல் ஆகிய பாடங்களும் சிறப்பு பாடமாக திசுக்களியல் (Histology) என்று அன்று புதிதாக அறிமுகம் ஆகியிருந்த துறையையும் அவர் தேர்வு செய்தார். அத்தோடு அடுத்த புதிய மொழி ஒன்றை கற்றார். உலக அறிவாயுத மொழியாக அன்று இருந்த லத்தீன் மொழியே அது. 1892இல் அந்த பட்டப்படிப்பில் பெரும்பாலான பாடங்களில் முதலிடம். எனவே ரோம் பல்கலைக்கழக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள அவருக்கு முழு தகுதி இப்போது இருந்தது.
- 1890களில் இத்தாலியிலேயே முதலில் மருத்துவம் படிக்கும் பெண்மணியாக ரோம் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வியகத்திற்குள் நுழைந்தார் மரியா. எத்தனையோ விதமாக அவமானப்படுத்திப் பார்த்தார்கள். எல்லாருமே ஆண்கள். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும். பேராசிரியர் முதல் கடைக்கோடி வரிசை மாணவர் வரை அவரை புறக்கணித்து வெளியேறிவிடுவார்கள். ஒரு பெண். அவரை நேரில் வைத்துக்கொண்டு நிர்வாணப் பிணங்களை எப்படி ஆய்வுசெய்வது எனவும் பகிரங்கமாக அவரை இழுத்து வெளியே எறிந்து ஆய்வகத்தை பூட்டினார்கள்.
- உடற்கூறியல் – அறுவை சோதனைகளை தனியே செய்து பார்க்க அனுமதி பெற்றார் அவர். பார்மால்டிஹைடு நாற்றத்தை தவிர்க்க புகைப்பதும் அவரது ‘பாணியானது. என்ன ஒரு பெண் புகைபிடிப்பதா?’ என்று அதற்கும் பொங்கினார்கள். 1895இல் முதலாண்டு தேர்வுகளில் முதல் மாணவராக-பரிசுபெற்று தன்னை நிரூபித்த பிறகு எல்லாம் அடங்கி போனது மருத்துவமனை அறுவை சிகிச்சை உதவியாளராக உலக அளவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மருத்துவர் அவரே, என்ற புகழும் கிடைத்தது.
- பாலி கிளினிக்கோ (Journal Policlinico) என்ற ஆய்விதழில் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருகின்றன. பல்கலைக்கழக – மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டே சுயமாகவும் நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை தருகிறார்.. 1897இல் அவரது கவனம் உடல்நலம் குன்றிய சிறப்பு குழந்தைகளின் பக்கம் திரும்புகிறது. அதற்காகவே குழந்தை நல மருத்துவக்கல்விக்குள் நுழைந்து இரண்டு வருடங்கள் மிகக்கடுமையாக உழைத்தார் டாக்டர் மரியா மாண்டிசோரி. ஒரே ஆண்டில் 1898இல் இத்தாலி முழுதும் பயணம் செய்து மூளை வளர்ச்சி குன்றிய உடல் நலத்தில் பின்தங்கிய குழந்தைகளை ஊர்ஊராக சந்தித்து அவர்களுக்கு சிறப்புப் பள்ளிகள் அமைக்கவேண்டும் என்று வாதாடுகிறார். அந்த ஒரு வருடத்தில் மனநலம் குன்றியதாக பைத்தியம் என்று புகலிடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை விடுவித்து அவர்களுக்கு அடிப்படை கல்வி அளிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டு வெற்றி அடைகிறார். அந்தக் குழந்தைகளுக்கான மிகச்சரியான கல்விபுகட்டல் முறையை கண்டெடுக்க இரண்டாயிரம் ஆண்டுகால உலகக் கல்விக்கோட்பாடுகள் கற்றல் கற்பித்தல் முறைகள் யாவற்றையும் ஆய்வு செய்தவர் அவர்.
- அந்த காலகட்டத்தில் அவர் 19ஆம் நூற்றாண்டின் சமூக மருத்துவ மற்றும் கல்வி அறிஞர்களாக இருந்த ழின்.கஸ்பார்டு இட்டார்டு, எட்வர்ட் செய்குவின் போன்றவர்களின் சிகிச்சை முறை கல்வி ஆய்வுகளால் கவரப்பட்டார். குறிப்பாக இட்டார்டு வழங்கிய ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி சிறப்பு சிகிச்சை முறை எனும் சித்தாந்தத்தை ஒவ்வொரு குழந்தையும் வேறுவேறு. அவரவருக்கும் பொருந்தும் கல்வி- நடைமுறை என மாற்றி – மனவளர்ச்சி அற்றவர்கள் என முத்திரை குத்தப்பட்ட குழந்தைகளின் மேல் பரிசோதித்து சுய கற்றலில் ஈடுபடுகிறார்.
- 1898 டுரின் நகரில் நடந்த தேசிய மருத்துவர் மாநாட்டில் –மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கு தனிக்கல்வி நிலையங்கள் அமைக்க அறைகூவல் விடுத்தார். தொடர்ந்து சிறப்புப் பள்ளிகளை ஏற்படுத்தவும் –அவர்களுக்கான ஆசிரியர்களுக்கு தனிவகை பயிற்சி அளிக்கவும் பேசியும் எழுதியும் வரலானார். 117 வகை கற்றல் உபகரணங்களை அந்த சிறப்பு குழந்தைகளுக்காக முழு ஈடுபாட்டோடு புதிதாக உருவாக்கி பல குழந்தைகளிடம் கொடுத்து சோதனை செய்யத்துவங்கினார். அவரது அறிவியல் பூர்வ கற்றல்முறை (Scientific Pedagogy) உருவானது இப்படித்தான்.
- 1899இல் அதே டுரின் நகரில் முதல் கல்விமுறை மாநாடு (First Pedagogical conference) நடந்தபோது தன் கல்வி சார்ந்த சிந்தனைகளின் முதல் –தொகு- உரையை நிகழ்த்தினார். மரியா மாண்டிசோரி. தேசியலீக் எனும் மருத்துவ அமைப்பு மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கியபோது அதன் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இத்தாலியின் பல நகரங்களில் பிரதான அறிவு ஜீவிகள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என பலவகை கூட்டங்களில் தன் கல்வி சிந்தனைகளை விளக்கி உரையாற்றத்தொடங்கினார்.
- 1900 முதல் 1906 வரையிலான ஆண்டுகளில் மரியா மாண்டிசோரி தன் கல்விமுறையை முழுமையாக திட்டமிட்டு ஒரு கல்விக்கொள்கையாக மாற்றினார். சிகிச்சையுடன் கல்வியும் (Medico – Pedagogical institute) தரும் கல்வியகம் என்கிற ஒன்று மருத்துவ தேசிய லீக் அமைப்பால் ஏற்படுத்தப்பட்டபோது அதன் இணை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அங்கே முதல் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக தன் கற்றல் உபகரணங்களை செய்து முடிக்க அவரால் முடிந்தது. ‘கல்வி கற்பிக்கவே முடியாதவை’ என்று சான்றளிக்கப்பட்ட (uneducable) பல நூறு குழந்தைகளை அங்கே சேர்த்து அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக்கி – மாதிரிப் பள்ளியாக அதை அவர் மாற்றிக்காட்டினார். ஆனால், அது முழுமையான முதல் மாண்டிசோரி பள்ளி அல்ல.
- 1902இல் இரண்டாம் தேசிய கல்வி முறை கருத்து மாநாடு நேப்பல்ஸ் நகரில் நடந்தது (Second National Pedagogical Congress) அதில் அவர் தனது கல்விகுறித்த இரு அறிக்கைகளை வெளியிட்டார். இத்தாலிய பள்ளிக்குழந்தைகள் ஒரு லட்சம் பேரை தேர்வுசெய்து மானுடவியல் – ஆய்வுகளை நடத்த அவருக்கு இத்தாலிய மருத்துவ கழகமும் ஆதரவு அளித்தது. ரோம் பல்கலைக்கழகம் அவரை தனது கல்வியியல் கல்லூரியின் மானுடவியல் விரிவுரையாளராகவும் நியமித்தது. அங்கே அவர் நிகழ்த்திய சிறப்பு உரைகள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன.
- மரியா மாண்டிசோரியின் கல்விமுறைப்படி இயங்கிய முதல்பள்ளி 1907இல் ரோம் மாகாணத்தின் சான் லொரன்சோ எனும் ஊரில் முதலில் உருவாக்கப்பட்டது. அங்கே அதிகம் கூலித்தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு ஒன்றில் தாயும் தந்தையும் கூலி வேலைக்கு போன பிறகு குழந்தைகளை பராமரிக்க தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். தன் கல்விமுறைப்படி இயங்கும் பள்ளிகளுக்கு அவர் காஸா டி பாம்பினி (Casa dei Bambini) அதாவது குழந்தைகள் இல்லம் என்று பெயரிட்டார். 1907ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் 61 குழந்தைகளுடன் அவரது முதல் பொதுப்பள்ளி அங்கே துவங்கியது. பலவகை புரட்சிகள்.
- ஒவ்வொரு குழந்தையும் – தனிச் சிறப்பு வாய்ந்தது என அவரது கல்வி அறிவித்தது. எனவே தனியே அக்குழந்தையின் அளவுக்கு குட்டி நாற்காலி, உயரம் குறைந்த மேசை என அங்கே எல்லாமே அக்குழந்தைகளின் அளவுக்கு செய்யப்பட்டவையாக இருந்தன. உடை மாற்றுவது முதல், பல்துலக்கவும், தன் உணவுத்தட்டை தானே கழுவிடவும் என அனைத்து வாழ்க்கை அம்சங்களுமே பாடமாக இருந்தன. அலமாரியை அடுக்கிவைத்தல், கை கழுவுதல், ஏன் சிறு அளவில் சமையலும் கூட பாடமாக இருந்தது. பள்ளி ஒன்பது மணி முதல் நான்கு மணிவரை நடக்கும்.
- அந்தப் பள்ளியில் இரண்டு மிகச்சிறப்பான அம்சங்களை அவர் இணைத்திருந்தார். ஒன்று அதில் பயில வருவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இரண்டாவது அந்த கட்டட உரிமையாளரின் மகள் உட்பட அப்பகுதியில் சில இளம் பெண்களை பயிற்றுநர்களாக்கி பயிற்சி அளித்தார் மாண்டிசோரி. கட்டட உரிமையாளரின் மகளும் அதே கட்டட காவலாளியின் மகளுமாக முதல் மாண்டிசோரி பயிற்சிபெற்ற ஆசிரியைகள் ஆனார்கள். அங்கே விஜயம் செய்த அவரது கல்வி மற்றும் மருத்துவ சகாக்கள், இனிப்புகள், விளையாட்டு பொம்மைகளுக்கு மேலாக அக்குழந்தைகள் மாண்டிசோரியின் கற்றல் உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்ததை கண்டு வியந்தனர். சுயகற்றல் சுயமாக உருவாக்கப்பட்ட ஒழுக்கம் இரண்டுமே மாண்டிசோரி கல்வியின் இரு சிறப்பியல்புகள் எனலாம். கற்றல் சுதந்திரம் என்பதே அதன் அடிப்படை.
- அதே 1907இல் ஏப்ரல் ஏழு அன்று அடுத்த காஸா-டி- பாம்பினி (குழந்தைகள் இல்லம்) தொடங்கப்பட்டது. சாதாரண மரப்பட்டை, அட்டை, பயன்படுத்தி வீசப்பட்ட வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டு மாண்டிசோரி கற்றல் உபகரணங்களை செய்ய சிறு தொழிற்பட்டறை ஒன்றை தன் வீட்டிலேயே தொடங்கினார். 1908ஆம் வருடம் ஆகஸ்டில் இத்தாலியில் மட்டும் ஏழு குழந்தைகள் இல்லங்கள் இருந்தன. 1909இல் சுவிட்சர்லாந்தில் அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தை காப்பகங்களில் பழைய கல்விமுறையை கைவிட்டு அங்கே மாண்டிசோரி முறை அமலாக்கம் ஆனது. இத்தாலியில் இத்தாலிய மொழியிலும், சுவிட்சர்லாந்தில் சுவிஸ்மொழியிலும் கற்றல் நடந்தது. ஏனெனில் மாண்டிசோரி கல்வியின் அடிப்படை தாய்மொழி வழி கற்றலாகும்.
- 1910இல் தனது கற்றல் – முறைகளை முழுமையாக விவரித்து மரியா மாண்டிசோரி – அறிவியல் பூர்வ கற்றல் முறை (Scientific Pedagogy ) நூலை எழுதினார். ரோம்நகரில் அந்த 1910இல் இரண்டு முறை மாண்டிசோரி நேரடியாக ஆசிரியர் பயிற்சி அளித்தார். மறு ஆண்டு 1911இல் மிலானில் அத்தகைய பயிற்சி 47 நாட்கள் தரப்பட்டது. இந்த சமயம் அவர் தனது மருத்துவம் பார்க்கும் தொழிலை விடுத்து கல்விக்கே தன்னை முழுதும் ஒப்படைக்க முடிவுசெய்தார்.
- 1909 லேயே அவர் நடத்திய குழந்தைகள் இல்லங்கள் பல அயல்நாட்டினரை கவர்ந்திழுக்கத் தொடங்கின. உலகெங்கும் இதழ்கள் பரபரப்பாக அவற்றைப்பற்றி எழுதத்தொடங்கின. 1911இல் அப்போதைய இத்தாலிய அரசு மாண்டிசோரி கல்விமுறையை அங்கீகரித்தது. இங்கிலாந்தில் மகாராணி நடத்திய பள்ளிகளில் அதை அறிமுகம் செய்தார்கள் பாரிஸில் 1912லும், விரைவில் நியூசிலாந்து (1912) மெக்ஸிகோ (1913) அர்ஜென்டினா (1913) ஜெர்மனி (1915) என அது பரவத்தொடங்கியது.
- 1913இல் மரியா மாண்டிசோரியின் அறிவியல் பூர்வ கல்விமுறை (Scientific Pedagogy) புத்தகம் ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் போலிஷ் (போலந்து) மொழியிலும் ஒரே சமயத்தில் வெளிவந்தது. அந்த நூல் ரொமேனிய மொழி (1914) ஸ்பானிஷ்(1915) டச்சு (1916) ஆகிய மொழிகளில் வெளிவர வெளிவர அந்த நாடுகளில் எல்லாம் அக்கல்விமுறை அறிமுகம் ஆனது. 1913இல் அமெரிக்காவில் மட்டுமே 100 மாண்டிசோரி குழந்தைகள் இல்லங்கள் இருந்தன. 1915ல் மரியா மாண்டிசோரி அமெரிக்காவுக்கு தேசிய கல்விக் கூட்டமைப்பின் சார்பாக கல்விப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டார்.
- விரைவில் இத்தாலியில் முசோலினியின் தேசிய பாசிச கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முசோலினி முந்தைய ரோம சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டமைப்போம் என முழங்கி தேசிய மதவாத வெறியை தூண்டிவிட்டு அதற்கு தக்க கல்வி முறையை திணித்தார். பாசிசக்கல்வி என்பது ஒற்றை கட்சி ஆட்சி தலைமை குறித்த அச்சத்தை ஆதரவை வெறியை குழந்தை மனங்களில் விதைக்கும் கல்வி. ஒவ்வொரு பள்ளிக் கல்லூரி ஆசிரியரும் தேசிய பாசிச கட்சி ஆட்சியை உயிரை கொடுத்தாவது காப்பாற்றிட தினமும் உறுதிமொழி எடுக்கவைத்த கல்வி அது. அதன் அடிப்படைகளில் எதுவுமே மாண்டிசோரியின் கல்விமுறையோடு ஒத்துப்போகவில்லை.
- ‘ஒன்னரை வயதில் பள்ளி; எட்டுவயதில் ராணுவ சேவை’ என்பது முசோலினியின் முழக்கமாக மாறியபோது அதை கடுமையாக எதிர்ப்பதைத் தவிர மாண்டிசோரிக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பேரா நேஷோனேல் பாலைல் என்று 8 வயது குழந்தைகளுக்கு கறுப்புச் சட்டை ராணுவப்படை ஒன்றை ஆயுத பயிற்சியோடு முசோலினி களம் இறக்கிய போது பதறிப்போனார் மரியா. அந்த அமைப்பை எதிர்த்து போராடிய 15 வயது ஆண்டியோ லோம்போனி எனும் சிறுவன் பாசிச வெறியர்களால் கல்லால் அடித்தே (Lynching) கொலை செய்யப்பட்டான். முசோலினியின் கல்விக்கொள்கையை எதிர்த்த சோஷலிசத் தலைவர் கியாகோமோ மட்டியோட்டி என்பவரை சுட்டுக் கொல்கிறார்கள். முசோலினியின் ரகசிய போலீஸான ஓவ்ரா(OVRA) மரியா மாண்டிசோரி மீது கைவைக்க தயங்கியதற்கு அவரது அயல்நாட்டு அங்கீகாரங்களே காரணம். ஆனால், நாட்டைவிட்டு உடனே வெளியேறுமாறு மரியாவுக்கு 24 மணிநேரம் தரப்பட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
- இத்தனைக்கும் ஆரம்பத்தில் மாண்டிசோரி கல்வியை முசோலினி ஆதரித்தார். முசோலினி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த கியோவான்னி ஜென்டைல் மாண்டிசோரியை சந்தித்து தேசிய கல்வி திட்டத்தில் மாண்டிசோரி கல்விமுறையை ஒரு அங்கமாக ஏற்பதாக அறிவிக்கிறார். முசோலினி – மாண்டிசோரி சந்திப்புகூட நடந்தது. மாண்டிசோரி சொசைட்டி (ஓப்பெரா மாண்டிசோரி) எனும் அமைப்பையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் முசோலினியின் பாசிசவெறிக் கல்வியை தன் குழந்தை இல்லங்களில் அமல்படுத்திட மாண்டிசோரி மறுத்துவிட்டதோடு தன் கல்வி மதம் இனம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது என்று பகிரங்கமாக அறிவித்தபோது அவரையும் அவரது மகனையும் (மாரியோ மாண்டிசோரி) நாடு கடத்திட அவர்கள் முடிவு செய்தார்கள்.
- எது எப்படியோ ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியாவில் சென்று மரியா மாண்டிசோரி குடியேறினார். பின் ஒருபோதும் தன் தாய் மண்ணிற்கு அவர் திரும்பவில்லை. உலகம் முழுவதும் சுற்றி – தன் கல்விமுறையை பரப்பியதோடு நவீன கல்வியில் குழந்தைகள் பக்கத்து நியாயங்களை உரக்கப்பேசி ஒரு போராளியாய் வாழ்ந்து, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்சு, வியன்னா, ஆஸ்திரேலியா, டென்மார்க் என எங்கும் அலைந்து இறுதியாக நெதர்லாந்தில் 1952இல் காலமானார்.
இந்தியாவிற்கு மரியா மாண்டிசோரி, சென்னை அடையாறு, இறையியல் கழகத்தின் (Theosophical Society) ஜார்ஜ் அருண்டேல் மற்றும் ருக்மணி தேவி ஆகியோரின் அழைப்பின் பேரில் 1939ஆம் ஆண்டு வந்தார். ஆனால், 1918லேயே மாண்டிசோரி முறை கல்வியை ரவீந்திரநாத் தாகூர் தன் சாந்திநிகேதனில் அறிமுகம் செய்துவிட்டார். அவை தாகூர் மாண்டிசோரி பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன, அழைக்கப்படுகின்றன. சென்னை அடையாறில் தன் மகனோடு மரியா மாண்டிசோரி (அப்போது 69 வயது) தங்கினார்.
1939 இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த ஆண்டு. மரியா இந்திய விடுதலைப் போராளிகளின் பக்கம் நிற்பதாக பகிரங்கமாக அறிவித்தார். பிரிட்டிஷ் அரசு இதனால் அவரை நட்புமுறையில் அணுகவில்லை. அடையாறில் அவர் தனது (இந்தியாவின்) முதல் மாண்டிசோரி – ஆசிரியர் பயிற்சி முகாமை நடத்தியபோது அதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றெல்லாம் கூறி நெருக்கடியும் கொடுத்தது. சரோஜினி நாயுடு, மகாத்மா காந்தி ஆகியோர் நேரடியாக அவரை ஆதரித்து பிரிட்டிஷாரின் அணுகுமுறையை சாடினர். 100 மாண்டிசோரி – ஆசிரியர்கள் அந்த முதல் பயிற்சிமூலம் நம் மண்ணில் உருவாக்கப்பட்டனர்.
இரண்டாம் உலக யுத்தம் மூண்டது (1939) இதனால் மாண்டிசோரி இந்தியாவிலேயே தங்கிவிட நேர்ந்தது. சர்வதேச மாண்டிசோரி கல்வியாளர் கூட்டமைப்பு எனும் அமைப்பை உருவாக்கிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. யுத்தத்தில் எதிரிகளின் பாசறையை சேர்ந்தவர்கள் என்று அவர் மீதும் அவரது மகன் மீதும் பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியது. அரசு அனுமதி பெறாமல் எங்கும் போவதற்கு தடைவிதிக்கப்பட்டது. கொடைக்கானலிலேயே அவர்கள் தங்கி இருக்கவேண்டும் என உத்திரவிட்டு வீட்டுக்காவலில் வைத்தார்கள். 1946 வரை அவர் அங்கேயே தங்கினார்.
ஆனால், தொடர்ந்து கல்வி செயல்பாடுகளுக்கு அரசை நிர்ப்பந்தித்து அனுமதி பெறப்பட்டது. கொடைக்கானலில் 146 குழந்தைகள் கல்விபயின்ற குழந்தைகள் இல்லம் (Casa Dei Bambini) ஒன்றை அந்த ஐந்தாண்டுகள் அவர் நடத்தினார் அவரது கல்வி தற்கால முறையிலிருந்து மூன்று பிரதான விதங்களில் வேறுபட்டது:
- மாண்டிசோரி கல்வி என்பது வருட அடிப்படையில் வகுப்புவிட்டு வகுப்பு (இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என) தாவும் கல்வி அல்ல, பல வயதுக்குழந்தைகள் கூட்டாக குழு கற்றலில் – வெற்றி அடையும் வகைக் கல்வி ஆகும்.
- வகுப்பு (Class) என்று முப்பது முப்பத்தைந்து குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துவைப்பதும் இல்லை. அங்கே ஒவ்வொரு குழந்தையும் தனிக்காட்டு ராஜா. உதாரணமாக கூட்டல் கணக்கை கற்கும் நீங்கள், இன்றே கற்று நாளை ‘கழித்தல்’ கணக்கு அத்தியாயத்திற்கு ஓடவேண்டியதில்லை. ஒரு குழந்தைக்கு அது இன்றே புரியலாம். இன்னொரு குழந்தை அதை கற்றுத் தேறிட ஒருவாரம் ஆகலாம். அவரவரது வேகத்தின்படி கற்கலாம். கற்றலின் வேகம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் எனும் அறிவியல் முறை கல்வி அது.
- ஆசிரியரின் பணி அதிகார பீடமல்ல. பாடத்தை நடத்துபவரே ஆசிரியர்… எனும் நிலை இல்லை. ஆசிரியர் இருப்பதையே உணராமல் – கற்றலில் குழந்தைகள் சுயமாக ஈடுபடுவதே மாண்டிசோரி கல்வி. அங்கே ஆசிரியர் என்பவர் கற்றலில் உதவும் உடன் கற்கும் – சகாவாக உணரப்படுவார். அதற்கேற்ற பயிற்சி பெற்றவரே ஆசிரியர்.
மாண்டிசோரியின் கல்வி குழந்தைகள் மையக்கல்வி
‘பேசாதே…. கவனி’ என்று கட்டளை இடாத சுதந்திர கற்றல் நடக்கும் கல்வி. அவரவரது சுதந்திரம் அவரவரது கற்றல் என்பதே அவரது தாரக மந்திரம். அதன் அடிப்படைகளை உணர குழந்தைகளையே பாடமாக ஆசிரியர்கள் கற்றுத்தேறவேண்டும். உங்களுக்கு மொழிப்பாடம் நடத்தத்தெரியுமா, கணக்குத் தெரியுமா வரலாறு பாடத்தில் நீங்கள் வித்தகரா என்பதெல்லாம் இங்கே எடுபடாது. உங்களுக்கு குழந்தைகளை தெரியுமா? என்பது மட்டுமே உங்களை உண்மையான மழலையர் ஆசிரியராக்கும்.
அதனை விரிவாக பேசுவதே இந்தப் புத்தகம். மரியா மாண்டிசோரியின் நூல்களிலேயே மழலையர்கல்வி (Pre – Schooling) குறித்த இந்த நூல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அவரது கல்வி முறையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவும் – குழந்தைகளின் கற்றல் மனதை அறிந்து தெளியவும் ஒரு பாடபுத்தகமாக எழுதப்பட்டது. ஒரு ஆசிரியரிடமிருந்து குழந்தை கற்பதைவிட ஒரு குழந்தையிடமிருந்து ஆசிரியர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அவர் பட்டியலிடும்போது நம்மால் வியக்காமல் இருக்கவே முடியாது. மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளின் கல்வி எப்படி இருக்கவேண்டும். அதற்கான பள்ளி எப்படி வடிவமைக்கப்படவேண்டும். அந்த கல்வியின் ஆசிரியர் என்பவர் எவ்வகையில் செயல்படவேண்டும். இதற்கு முன் அந்த வயது குழந்தைகள் கல்வி என்பது எவ்வளவு பிற்போக்காக அறிவியலற்ற முறையில் இருந்தது. முற்றிலும் அதற்கு முரணாக வேறான ஒன்றாக அது ஏன் இருக்கவேண்டும் என்பது உட்பட மரியா மாண்டிசோரி அற்புதமாக இந்த நூலில் விவரிக்கிறார்.
இன்று மழலையர் கல்வி என்பது நம் நாட்டில் ஏறக்குறைய ஒரு சர்ச்சையாக மாறி இருக்கிறது. மூன்று வயதில் மும்மொழிக் கல்வி என்கிறார்களே… அது சாத்தியமா பள்ளிக்கு முந்திய பருவம் – அதன் உளவியல் கூறுகள் என்ன ஒன்னறை வயதில் கல்வி எட்டுவயதில் ராணுவ சேவை எனும் முசோலினியின் திட்டத்தை மாண்டிசோரி ஆதரித்ததுபோல சித்தரிக்கிறார்களே அது உண்மையா… மழலையர் பள்ளி (Pre – School) எப்படி இருக்கவேண்டும். எப்படி இருக்கக்கூடாது என பரந்து விரிந்து இந்த நூல் அலசுகிறது. பிறந்த குழந்தையின் சுயமான கற்றல் நடவடிக்கைகளை அவரது வழிநின்று வாசிக்க வேண்டிய அவசியம் ஆசிரியர்க்கு மட்டுமல்ல பெற்றோர்கள்… கல்வி சார்ந்த அனைத்துவகை செயற்பாட்டாளர்களுக்கும் உள்ளது. அது உங்கள் மனதையே உருக்கிவிடும்.
இந்த நூலை இந்தியாவில் இருந்தபோது நம் மண்ணில் தான் நடத்திய கல்வி – நிலையத்தின் ஆதாரங்களோடு அவர் எழுதினார். அதற்காக இந்த நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நூல் குறித்த என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் ஆழமானவை. கற்றல் – கற்பித்தல் குறித்த என் பார்வையை விசாலமாக்கிய அதே சமயம் நூலின் பலபகுதிகள் நமக்கு விளங்கும் எளிய பதங்களோடு மொழிபெயர்க்க சவாலாகவும் இருந்தது. கல்வி குறித்த நூல் வரிசையில் மழலையர்கல்வி (Pre – Schooling) எனும் மரியா மாண்டிசோரியின் இந்த நூல் அதி முக்கியத்துவம் வாய்ந்த நூல்களில் ஒன்று. மாண்டிசோரி கல்வி நிலையத்தின் அவர் காலத்திய நிஜபடங்கள் பலவற்றை இணைத்திருக்கிறோம்.
1949இல் ‘உள் வாங்கும் உள்ளம்’ எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்காக வெளிவந்த நூல் இது. சென்னை கொடைக்கானல், பூனா, அகமதாபாத் மற்றும் கராச்சி ஆகிய ஊர்களில் தான் நேரடிப் மேற்பார்வையில் நடத்திய மாண்டிசோரி மழலையர் பள்ளிகளை முன்வைத்து ‘பிறந்ததில் இருந்தே கற்றல்’ எனும் இயற்கை கல்விக் கோட்பாட்டை அவர் அடைந்தார்; அதை மிகச்சிறப்பாக உரைகளாக அவர் இந்தியாவில் நிகழ்த்தினார்.
1948இல் இவ்வுரைகள் அகமதாபாத்தில் நிகழ்த்தப்பட்டன. அவரது பிரதான பிரகடனம் ‘கற்றலுக்கான சூழலை உருவாக்குதல்’ என்பதாகும். இந்த நூலை அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்த்து தலைப்பை மட்டும் மழலையர்கல்வி என்று அதன் முக்கியத்துவத்தின் தேவை கருதி மாற்றி இருக்கிறேன்.
இந்த நூலை வாசித்து முடிப்பவர்கள்:
- இதுவரை அறியப்படாத ‘குழந்தைமனம்’ என்பது எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து வியந்து தன் அன்றாட வாழ்வில் இனி அதை பயன்படுத்த துடிப்பார்கள்.
- கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள்.
- இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் உண்மையான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்.
மரியா- மாண்டிசோரியை வாசிப்பது என்பது புத்தகம் படிப்பது அல்ல. அது ஒருவகை பூரண சிகிச்சை. பலவகை மனோவியல் நோய்களிடமிருந்து ஆசிரியர்களை, கல்வியாளர்களைமீட்கும் சக்திவாய்ந்த சிகிச்சை இந்த புத்தகம் எனப் பதறியபடி இதை வாசிப்பவர்கள் மற்றவர்களை வாசிக்கச் சொல்வார்கள்.
இதை இத்தனை சிறப்பாக வெளியிடும் பாரதி புத்தகாலயத்திற்கு மனமார்ந்த நன்றி!
“மழலையர் கல்வி” புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பாளர் உரையிலிருந்து..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.