https://bookday.in/wp-content/uploads/2024/02/Book-Review.jpg

தலைப்பே கவிதையாக ஜென் தத்துவம் பேசுகிறது. நாடறிந்த நல்ல கவிஞர் ப.கவிதா குமார் அவர்களின் புதிய கவிதை தொகுப்பு மழையில் மீன் பார்க்கிறது பூனை. ஒரே பொருள் குறித்து இதுவரை எவரும் கவிதைப்புத்தகம் வெளியிட்டதில்லை என்று நினைக்கிறேன். முதல் பக்கம் துவங்கி கடைசி பக்கம் வரை முழுக்க முழுக்க மழைக் கவிதைகள். வாசித்து முடிக்கையில் நிச்சயம் நீங்கள் நனைந்திருப்பீர்கள். மழையில் நனைதல் சுகமானதுதானே வாருங்கள் நனைவோம்.

மொத்தம் 252 கவிதைகள் 252 மழைத்துளிகள் நம்மீது விழுந்திருக்கின்றன. கவிஞரின் 8 ஆவது நூலாக மலர்ந்திருக்கிறது. குழந்தைப்பருவத்தில் நனைந்த மழை இன்றுவரை விடாது பின்தொடர்ந்திருக்கிறது. அதில் ஒரிரு மழைத்துளிகள் உங்கள் பார்வைக்கு.

துக்க வீடுகளில் இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் வெண்வேட்டி பிடித்து நீர்மாலை எடுத்து செல்லும் சடங்கில் மழையும் கண்ணீர் சொட்டியபடி கலந்துகொள்வதாய் கற்பனை செய்கிறார் இப்படி

“அப்பாவின் மரணம்
உறவு மொத்தமும்
நீர் மாலையெடுத்தது போதாதென
மழையும் சேர்ந்து கொண்டது”

நெகிழ்வான கவிதை
இப்போதெல்லாம் இப்பழக்கம் இருக்கிறதாவெனத் தெரியவில்லை. பால்ய வயதுகளில் வேடிக்கை பார்த்தது. காலப்போக்கில் அழிந்த பல பழக்கவழக்கங்களில் இதுவும் விடைபெற்றிருக்கக்கூடும். யானையைப் பார்த்தாலே ஒட்டமெடுக்கும் நமக்கு இதுவெல்லாம் வேடிக்கைகாட்சி மட்டுமே.

“யானையிடம்
சொம்பு நீரைக் கொடுத்து
முகத்தில்
அடித்துப் பழகியவர்கள்
கனமழையைக்
குடையின்றி
கடந்து செல்கிறார்கள்”

ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும், அரசு அதிகாரங்கள் ஆதிக்க சக்திகள் திருடி தின்றுவிடஒவ்வொரு மழைக்காலங்களிலும் அப்பாவி பொது மக்களே வெள்ளத்தில் நீந்தி போராட வேண்டியிருக்கிறது நீதி சொல்லவேண்டிய தீர்ப்பு மன்றங்களும் மழைவாழிடங்களை மரணமேடுகளாக்கி மரச்சுத்தியலை கண்ணற்ற குருடனாய் தட்டிக்கொண்டிருக்கின்றன. அதுகுறித்தும் ஒரு கவிதை இதோ

“குளங்களை
தொலைத்த
நகரங்களில்
தவளைகளை
தேடியலைகிறது
மழை”

அழகியலான ஒரு கவிதை தொகுப்பில் தன்னையறியாமல் நுழைத்துக்கொள்கிறது. ஒரு ஹைகூவைப்போல காட்சி இன்பத்தில் நம்மை திளைத்துவிடுகிறது. கண்ணில் முன்னிருத்தி இக்கவிதையை ரசித்தேன்.

“மழையில்
நனைந்த இலை
மீனாகிவிடும் அதிசயத்தை
மரம் கண்கொட்டாமல்
பார்க்கிறது”

இப்படி நூல் முழுவதும் மழையென வார்த்தைச்சாரல்கள் தூறியபடி இருக்கின்றன. இரண்டு வரியிலிருந்து பத்து வரிக்குள் ஆன சின்ன சின்ன மழைக் கவிதைகள்
தொகுப்பு முழுவதும் ஒரே கவிதையை படித்த உணர்வும் ஏற்படுகிறது. ஒவ்வொரு கவிதையிலும் மழையெனும் வார்த்தையை நேரடியாக எழுதுவதை தவிர்த்து வாசகர்களை உணரச்செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் தொடர்மழைக்காலம் வாழ்க்கையில் மட்டுமல்ல கவிதையிலும் சிரமம்தான். பெய்யெனப் பெய்கின்ற கவிதைகள் பலமாகவும் அதே நேரத்தில் பலகீனமாகவும் மாறிவிடுவது இத்தொகுப்பின் குறையெனலாம். ஒரு பொருள் பன்மொழி எனச் சொல்லும்படி கவிதைகள் பெய்த கவிஞர் பா. கவிதா குமார் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

 

                     நூலின் தகவல்கள்

நூல்  : “மழையில் மீன் பார்க்கிறது பூனை”

ஆசிரியர் : கவிஞர் ப.கவிதா குமார்

பக்கம் : 100பக்கம்

விலை : ரூ.100

வெளியீடு : வாமடை பதிப்பகம்

           

                                   எழுதியவர் 

       

                        செ. தமிழ் ராஜ்
                           வண்டியூர்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “கவிஞர் ப.கவிதா குமாரின் “மழையில் மீன் பார்க்கிறது பூனை””
  1. அருமையான விமர்சனம் அருமையான கவிஞர்கள் மழைக்கு இத்தனை கவிதையா என ஏற்க வைக்கிறது பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *