தோழர் தே. இலட்சமணனும் நானும் – இரா. இரத்தினகிரி, (முன்னாள் தலைவர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்)

தோழர் தே. இலட்சமணனும் நானும் – இரா. இரத்தினகிரி, (முன்னாள் தலைவர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்)

[நம்மை விட்டு மறைந்த தோழர் தே. இலட்சுமணனும், தோழர் இரா. இரத்தினகிரியும், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்திற்கு, ஒவ்வோராண்டும் நடைபெறும் தேர்தலிலும் எவ்விதமான போட்டியுமின்றி பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தோழர் தே. இலட்சுமணன் அரசு ஊழியர் பணியிலிருந்து வெளியேறும் வரை இருந்து வந்தார்கள். அந்த சமயத்தில் அரசு ஊழியர் இயக்க வரலாற்றில், தடம்பதித்த சில முக்கிய வரலாற்றுப் பதிவுகளை தோழர் இரா. இரத்தினகிரி இதில் பதிவு செய்திருக்கிறார்.]

தோழர் தே. இலட்சுமணனும், நானும் 1969ஆம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் பேரவையில் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் முறையே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டோம். நான் திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அவர், பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் எங்கள் இருவருக்குள்ளும் எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லாமல் இருவருமே ஒருவராய் மாறி, அதிலிருந்து 12 ஆண்டுகள் வெகு சிறப்பாக பணியாற்றி வந்தோம். கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் செய்திகள் பத்திரிகைகளில் நாள்தோறும் வந்து கொண்டிருக்கும்.

 

வெள்ளைச் சீருடையுடன் பேரணி 

1970ஆம் ஆண்டு அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆண்டாகும். நீண்ட காலத்திற்குப் பின் சென்னை, அண்ணா சாலையில், ஈராயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை ஆய்வாளர்கள், அவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள், வெள்ளை சீருடை அணிந்து கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்றோம். அது அரசு ஊழியர் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். அதன்பிறகுதான் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி செல்வது என்பதும், போராட்டங்கள் நடத்துவது என்பதும் தொடங்கின.

அந்த சமயத்தில் அரசாங்கத்தின் சார்பில் தலைமைச் செயலகத்திலிருந்து மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேச அதிகாரிகள் முன்வந்தார்கள். தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக இருந்த திரவியம் அவர்கள் எங்களுடன் சுமார் நாலரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கால்நடை ஆய்வாளர் பயிற்சி பெற்று, பணிநியமனம் வழங்கப்படாது இருந்த சுமார் 400 கால்நடை ஆய்வாளர்களுக்குப் பணி நியமனம் கிடைத்தது. மீண்டும் கால்நடை ஆய்வாளர் பயிற்சி அளிப்பதற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

அப்போது கால்நடை ஆய்வாளர்கள் ஆண்டின் 365 நாட்களும் கால்நடை மருந்தகங்களுக்குச் சென்று பணிபுரிந்து வந்தார்கள். அவர்களுக்கு அரசாங்கம் அளித்திடும் பொங்கல், தீபாவளி, சனி, ஞாயிறு விடுமுறை எதுவும் பொருந்தாது. இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையின்போது பேசி, அரசாங்கத்தின் விடுமுறை நாட்களில் பணிபுரிவதற்கான நாட்களுக்காக, ஈடுசெய் விடுப்பு அளிப்பதற்கான அரசாணையைப் பெற்றோம்.

இந்தப்பேச்சுவார்த்தையின்போது பல கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டோம்.

அஞ்சலி: என்றென்றும் எங்களை இயக்கிக்கொண்டிருப்பீர்கள் தோழர் டி.எல் -  ச.வீரமணி - Bookday

குடும்ப நல நிதி

அடுத்து, 1972 ஜனவரி 2ஆம் நாளன்று, தஞ்சை, அரண்மனை, சங்கீத மகாலில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்குத் தந்தை பெரியார் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அந்த மாநாட்டில், பணியிலிருக்கும்போது உயிர்நீத்த கால்நடை ஆய்வாளர் ஒருவருக்கு, கால்நடை ஆய்வாளர்கள் மத்தியில் ‘குடும்பநல நிதி’ வசூல் செய்து, தந்தை பெரியார் மூலமாக  இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தோம்.

பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்தபின் தந்தை பெரியார் அவர்களை அவர் தங்கியிருக்கும் இருப்பிடத்தில் கொண்டுவந்து சேர்த்தபோது, தந்தை பெரியார் அவர்கள், எங்களிடம், “அந்த நிதியை எவ்வாறு வசூல் செய்தீர்கள்? இந்தத் தொகை நீங்கள் கொடுப்பதா, அல்லது சர்க்கார் கொடுப்பதா?” என்று கேட்டார். அதற்கு நாங்கள், “இல்லை அய்யா, இம்மாவட்டத்தில் பணியாற்றும் கால்நடை ஆய்வாளர்கள் ஒவ்வொருவரிடமும் 5 ரூபாய், 10 ரூபாய் என்று வசூல் செய்து, திரட்டித்தான் இவ்வாறு குடும்பநல நிதியாகக் கொடுத்தோம், சர்க்கார் கொடுப்பதற்கு எவ்விதமான அரசு விதிகளும் இல்லை” என்றோம். அதற்குத் தந்தை பெரியார் அவர்கள், “தொழிலாளி இறந்துபோனால் முதலாளிதானே பணம் கொடுக்க வேண்டும். அதேபோன்று அரசு சிப்பந்தி ஒருவர் இறந்துபோனால் அரசாங்கம்தானே பணம் கொடுக்க வேண்டும். அப்படி இருக்கும்போது நீங்கள் கொடுப்பது என்ன நியாயம்? சர்க்கார் கொடுக்க வேண்டாமா? நான் கலைஞரிடம் இதுகுறித்து கேட்கிறேன்,” என்றார். அப்போது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்.

அடுத்து இதேபோன்று ஒரு நிகழ்ச்சி அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் தந்தை பெரியார் அவர்கள் வந்திருந்தார்கள். கலைஞர் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அப்போது அவரிடம் நாங்கள் சொன்னோம், “தஞ்சையில் நடந்ததுபோல்தான் இந்த நிகழ்ச்சியும். இப்போது மாநிலம் முழுதும் இவ்வாறு வசூல் செய்து அளித்திருக்கிறோம், அரசாங்கத்தின் தரப்பில் வழங்கப்படுவதற்கு அரசு விதி எதுவும் இல்லை,” என்றோம். தந்தை பெரியார் அவர்கள், உடனே கலைஞர் அவர்களிடம் இதைச் சொன்னார். கலைஞர் அவர்கள், “அப்படியா?” என்று கேட்டுவிட்டு, அங்கே வந்திருந்த நிதித்துறை செயலாளரைக் கூப்பிட்டு, “நான் இன்னும் ஒரு மணிநேரம் வரை இந்த நிகழ்ச்சியில் பேச இருக்கிறேன். நான் பேசி முடிப்பதற்குள்,  இது தொடர்பாக ஒரு முன்மொழிவினைத் தயார் செய்து, அதனை இந்தக் கூட்டத்திலேயே அறிவிக்கும் விதத்தில் வாருங்கள்,” என்று கேட்டுக்கொண்டார். நிதித்துறை செயலாளரும் அதேபோன்று ஒரு முன்மொழிவினைத் தயார்செய்துகொண்டுவந்து கலைஞரிடம் ஒப்படைத்தார். அவரும் நிகழ்ச்சியில் அதனை வாசித்தார்.

அப்போதுதான் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரிடம் மாதம் ஒரு ரூபாய் வீதம் வசூல் செய்து, அவ்வாறு வசூலாகும் தொகையிலிருந்து, பணியிலிருக்கும் அரசு ஊழியர் இறந்துபோனால் அவர் குடும்பத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பத்தாயிரம் ரூபாய், இருபதாயிரம் ரூபாயாகி, இருபதாயிரம் 50 ஆயிரம் ரூபாயாகி இப்போது 3 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு, கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் சார்பில் நாங்கள் ஆரம்பித்து வைத்த ‘குடும்பநல நிதி‘ இப்போது தமிழ்நாடு அரசின் குடும்பநல நிதித் திட்டமாக மாறி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பணியிலிருக்கும்போது இறந்துபோனால் 3 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியாகப் பெறுகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே. இலட்சுமணன் மறைவு!  – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஊதியக்குழு எரிப்புப் போராட்டம்

அடுத்து, 1973இல் வெளிவந்த ஊதியக்குழு அறிக்கையானது, கால்நடை ஆய்வாளர்களின் தகுதியைக் குறைத்து வெளியானதால், அந்தக் குழுவின் அறிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு முன் எரிக்கிற ஒரு போராட்டம் நடைபெற்றது. அவ்வாறு எரிப்பதற்கு முன்பாகவே, கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திட்டார்.

நாங்கள் அவரைச் சென்று பார்த்தபோது அவர், “தந்தை பெரியார், அரசியலமைப்புச் சட்டத்தை எரித்ததைப்போன்று, நீங்கள் ஊதியக்குழு அறிக்கையை எரிக்கிறீர்களா?” என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு நாங்கள், ஊதியக்குழு அறிக்கையில் எங்கள் தகுதியைக் குறைத்திருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அவர் அதை ஏற்றுக்கொண்டு, எங்களுக்கென்று ஒரு சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியமாக வழங்க நடவடிக்கை எடுத்தார். அந்த ஊதியத்தொகை அன்றையதினம் 15 ரூபாய். இன்று அது 100 ரூபாயாக மாறி இருக்கிறது. இது ஓய்வூதியத்திற்கும் சேர்த்துக்கொள்ளப்படும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும்.

சட்டை செய்யாத அரசைக் கண்டித்து மேல் சட்டை இல்லாப் பேரணி

அடுத்து ஒரு போராட்டம். எங்கள் கோரிக்கைகளை, அரசு சட்டை செய்யவில்லை என்பதற்காக, நாங்கள் ‘மேல்சட்டை இல்லா பேரணி’ என்று ஒரு பேரணியை நடத்தினோம். அப்போது டி.என். சேஷன் அவர்கள் கால்நடைப் பராமரிப்புத்துறைக்கு செயலாளராக இருந்தார். அவர் எங்களை அழைத்து, பேச்சுவார்த்தைகள் நடத்தி, பதவி உயர்வுக்கான எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்து, அவரிடமே கால்நடைப் பராமரிப்புத்துறை இயக்குநராக ஐஏஎஸ் படித்தவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று கோரினோம். அதற்கு எதிராக அவர் எங்களிடம் கடுமையாக விவாதித்தார். இலாகால தலைமையை மாற்ற வேண்டும் என்று ஊழியர்கள் கேட்பது, எந்தவகையிலும் நியாயம் இல்லை என்று எங்களிடம் வாதாடினார். ஆயினும், அடுத்த ஆண்டு, 1975இல், கால்நடைப் பராமரித்துத் துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அது இன்றளவும் தொடர்கிறது. இது ஒரு பெரிய சாதனையாகும்.

அடுத்து, நாங்கள் எங்களுக்கென்று நிலையான பயணப்படிக் கேட்டு ஒரு கோரிக்கை வைத்துப் போராடினோம்.   அப்போதும் பேராசிரியர்தான் எங்கள் அமைச்சராக இருந்தார். எங்கள் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்டு 15 ரூபாய் என்று அளித்தார்கள். அது இப்போது 300 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

அடுத்து நான்காவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டபோது அதற்கு அளிப்பதற்காக, நாங்கள் ஓர் அறிக்கை தயாரித்தோம். அந்த அறிக்கையில் நாங்கள் நாள்தோறும் செய்யும் பணிகள் அனைத்தையும் நன்கு குறிப்பிட்டு, அவற்றுக்கு ஆதாரமாக நல்ல புகைப்படங்களையும் இணைத்து சுமார் 400 பக்க அளவில் தயாரித்து, ஊதியக்குழுவிற்கு அளித்தோம். ஊதியக்குழுவின்  உறுப்பினர்-செயலாளராக இருந்த சீனிவாசன், ஐஏஎஸ் அவர்கள், “ஊதியக்குகுழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களிலேயே நீங்கள்தான் வெகுசிறப்பாகத் தயாரித்து அளித்திருக்கிறீர்கள்,” என்று கூறி எங்களை வெகுவாகப் பாராட்டினார். அதற்குப்பிறகு அதன் அடிப்படையில் தகுந்த  ஊதிய உயர்வு எங்களுக்கு வழங்கப்பட்டது.

இரா. இரத்தினகிரி

‘கால்நடை ஆய்வாளர்’ மாத இதழ்

அடுத்து, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்திற்கு என்று ‘கால்நடை ஆய்வாளர்‘ என்று பெயரில் ஒரு மாதப்பத்திரிகை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி நாங்கள் விண்ணப்பித்தோம். கடும் முயற்சிகள் மேற்கொண்ட பிறகு அரசு அதற்கு அங்கீகாரம் அளித்தது. அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுதும் இருக்கும் மூவாயிரம் கால்நடை ஆய்வாளர்களுக்கும் மாதந்தோறும் அஞ்சலில் அதை அனுப்பி வைத்தோம்.

கால்நடை ஆய்வாளர் இதழை அடிப்படையாக வைத்துத்தான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவான சமயத்தில் தோழர் லட்சுமணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழுக்கு ‘அரசு ஊழியர்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

அடுத்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்திட கால்நடை ஆய்வாளர்களுக்கு ‘தனி சிகிச்சை உரிமை’ வேண்டும் என்று கேட்டு, எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் ஆடு, மாடு, நாய் முதலானவற்றுடன் பேரணி சென்றோம். பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் அரசுக்கு விண்ணப்பம் அனுப்பினோம். ஒரு மாவட்டத்தில் குரங்கு எங்கள் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும். அவரும் அதனை புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். இவ்வாறு விநோதமான முறையில் அரசு ஊழியர்கள் ஊர்வலம் வந்தது அடுத்த நாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரமாதமாக வெளிவந்தன.

ஒரு முறை, 1980ஆம் ஆண்டு எங்கள் போராட்டங்கள் காரணமாக எங்கள் மீது கடும் கோபம் கொண்ட எங்கள் துறை கால்நடை மருத்துவர்கள் கால்நடை மருந்தகங்களையெல்லாம் பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டார்கள். அப்போது எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அவரிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றபோது, அவர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்துக் கால்நடை மருந்தகங்களின் பூட்டுகளையும் உடைத்து, எங்களிடம் ஒப்படைக்குமாறு, அரசாணை வெளியிட்டார்கள். அதுபோன்று எந்தத்துறையிலும் நடந்ததில்லை.

இவ்வாறாக நானும் தோழர் இலட்சுமணனும் சற்றேறக்குறைய 12 ஆண்டுகள், ஒவ்வோராண்டும் ஒவ்வொரு விதமாக, பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி, வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் போராட்டங்கள் எதுவும் தோற்றதில்லை. அனைத்துக்கும் அரசாணைகள் பெற்றோம்.

இவ்வாறு தோழர் தே. லட்சுமணனுடன் இணைந்து நாங்கள் ஆற்றிய பணியை, பணியின் பயனை  இன்றையதினம் மாநிலத்தில் உள்ள கால்நடை ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்,  சிறப்பான ஊதியத்துடனும், ஓய்வூதியத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அதுபோல் தோழர் லட்சுமணனும், நானும் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்திற்கு ஆற்றிய பணி, கால்நடை ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, தமிழக அரசு ஊழியர்கள் 11 லட்சம் பேரும் அனுபவிக்கும் பல நன்மைகளுக்கு, அவை ஆதாரமாக அமைந்திருக்கின்றன என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவருமே தோழர் லட்சுமணன் தொண்டுக்குக் கடமைப்பட்டவராவார்கள்.

(தொகுப்பு: ச. வீரமணி)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *