“என் கதை” – நூல் அறிமுகம்
“நீண்ட தூரம் பறந்து சென்று
நினைத்த இலக்கை அடைய ஆசைதான்
எனக்கும் என் சிறகுகளில்
போதுமான இறகுகள் இல்லையே”
இப்படி ஒரு கவித்துவமான வாக்கியத்தோடு தனது சுயசரிதையின் முதலாம் பாகத்தை நிறைவு செய்திருக்கும் 95 வயதான கவிஞரும் எழுத்தாளருமான மே.சு. சண்முகம் அவர்கள் .
ஆறு தலைமுறைகளை கண்டு விட்டேன். இனி குறையொன்றும் இல்லை என்பதோடு “என் கதையை” துவக்குகிறார். அவரின் நிறை வாழ்வை 95 ஆம் பிறந்த நாளில் அவர் வெளியிட்ட இரண்டு புத்தகங்களும் புன்னகையோடு ஆமோதிக்கின்றன.
இந்த நவீன வாழ்வில் மிகச்சிறிய வயதினர் கூட நினைவாற்றலுக்கு அல்லாடுகின்றனர். எடுத்த பொருள், வைத்த பொருள், பேசிய பேச்சு, பணம் எண்கள் ரகசிய குறியீடுகள் என யாவற்றிடமும் தோற்று கை பிசைந்து நிற்கையில், தனது காலத்தை மூன்றாக பிரித்து பள்ளிப் பருவம், பணிப் பருவம், பணி ஓய்வுப் பருவம் என்று பள்ளிப் பருவத்தின் நினைவுகளை அசராத ஞாபகச் சுரங்கத்தில் இருந்து எதிர் கால சந்ததியினருக்கு கை நிறைய அள்ளித் தருகிறார்.
உலகின் மதிப்பு மிக்க செல்வங்களுக்கும் மேலான தனது அனுபவத்தை, மேட்டுப் பட்டியில் பிறந்து இன்று நென்மேனிப்பட்டி என்று அழைக்கப்படும், அன்றைய நெல் மேனிப் பட்டியில் இருந்து துவங்குகிறார். தலையாரி வேலை பார்க்கும் எளிய தகப்பனார்க்கு மகனாக பிறந்து, வளர்ந்து, படித்து ஆளான கதை.
ஊரைப் பற்றிச் சொல்கிறார், அதன் மக்கள் கலாச்சாரம், மண் ஆடு மாடு வீடு, தொழில்துறை, நிலம் கல்வி இலக்கியம், பெண்கள் யாவற்றையும் அலுக்காத ஒரு மொழியில் சொல்லிச் செல்கிறார்.
ஐந்து வரை மேட்டுப் பட்டியில் படிப்பு, எட்டு வரை நென்மேனியில் படிப்பு, பத்து வரை பாஞ்சாலங்குறிச்சியில் படிப்பு, என்று மூன்று ஊர்களில் கல்வியை தொடர்ந்திருக்கிறார். 1930 களில் பிறந்தவர். 1945 களில் கவிஞராக நாடகம் எழுதுபவராக எழுத்தாளராக பரிணாமம் கொள்கிறார்.
மாணவப் பருவத்தில் அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு எழுத்தில் பிரகாசிக்கிறார். கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துகிறார். பின் அச்சுப் பத்திரிகைக்கையாகவும் அது மாற்றம் கொள்கிறது. அன்றைய காலத்தில் வெளிவந்த பத்திரிக்கைகளில் எழுதியதோடு மட்டும் அல்லாமல், இலங்கையில் உள்ள இதழுக்கும் எழுதி பரிசுகள் வெல்கிறார். இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக நாடகம் போட்டு மொழி உணர்வை வெளிப்படுத்துகிறார்.
ஒன்பது, பத்து ஆகிய இரண்டு வகுப்புகளில் இவ்வளவும் நடக்கிறது. 10ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் தோல்வியுற்று சர்வேயராக அரசுப் பணியில் சேர்ந்து திருமணம் முடிந்ததோடு முதல் பாகம் நிறைவு பெறுகிறது.
இவ்வளவு சொல்கிறீர்களே யார் இந்த மே. சு.சண்முகம் என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறீர்களா? ஒரு கணம் பொறுங்கள் யாரெனப் பார்த்து விடலாம். நாடக உலகில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்த் திரைப்படங்களில் முதல் பாடல் எழுதியவருமான மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்களின் மகளை திருமணம் செய்தவர்தான், இந்தப் புத்தகத்தின் நாயகர் மே. சு. சண்முகம் அவர்கள் .
இந்தக் காலத் தலைமுறைக்கு இன்னும் எளிமையாக சொல்வதென்றால் எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், கோணங்கி, நாடகவியலாளர் முருகபூபதி ஆகியோரின் தகப்பனார் தான் இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் திரு மே.சு.சண்முகம் அவர்கள்.
தன்னம்பிக்கைக்கும் தளராத உறுதிக்கும், தொலைதூரத்திலிருந்து தான் எடுத்துக் காட்டுகளைப் படிப்போம். நம் கண்ணெதிரே வாழ்ந்து கொண்டிருக்கும் உதாரண மனிதரை வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்வோம்.இம்மாமனிதரை உந்து சக்தியாக கொண்டு, நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.
இனிமேல் இந்தப் புத்தகத்தை அவசியம் வாங்கிப் படிப்பீர்கள் தானே? இரண்டாம் பாகத்திற்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் பிரிய வாசகன்.
நூலின் விவரங்கள்:
நூல் : என் கதை
ஆசிரியர் : மே.சு.சண்முகம்
வெளியீடு : ஸ்ரீ செண்பகா அச்சகம்
விலை: ரூ.200
பக்கம் 116
ஆண்டு 2024
எழுதியவர் :

✍🏻 – செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
ctamilraj@gmail.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
