மே.சு.சண்முகம் எழுதிய “கதாச்சுருள் - இரண்டு” புத்தகம் | Me.Su.Shanmgam's Kathaachsurul Irandu Tamil Book Review | www.bookday.in

மே.சு.சண்முகம் எழுதிய “கதாச்சுருள் – இரண்டு” – நூல் அறிமுகம்

“கதாச்சுருள் – இரண்டு” – நூல் அறிமுகம்

முன்பொரு காலத்திலே நிலங்கலெல்லாம் ஜமின் நிலங்களாக இருந்தது. 1948 இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. 1951 52 இல் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டது. சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன் ஜமீன் நிர்வாகமே வரி வசூலித்தது. அந்த ஜமின் இடைத்தரகர்களை அகற்றி விட்டு அரசு நேரடியாக வரி வசூல் செய்யத் தொடங்கியது. அப்போது நிலங்களை எல்லாம் அளந்து வகைப்படுத்த வேண்டியது இருந்தது.

நஞ்சை எது, புஞ்சை எது, மலை எது, கிணறு எது, குளம் எது,ஏரி எது, வாய்க்கால் எது என்று ரயத்துவாரி முறையாக செயல்பட நிலத்தில் சரியான பரப்பளவும், எல்லை நிர்ணயமும் உரிமையாளர் விபரமும், நிலத்தின் தரமும் அதற்கேற்ப தீர்வை நிர்ணயமும் செய்ய வேண்டியது இருந்தது. நில அளவை குழுக்களும் நிலவரித் திட்ட குழுக்களும் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி தோற்றுவிக்கப்பட்ட போது 1951 இல் இந்நூலாசிரியர் நில அளவை குழுவில் பணியில் சேர்ந்து 37 ஆண்டுகள் பணி செய்து இருக்கிறார். அந்த 37 ஆண்டுகால அனுபவங்களைத் தான் நூலாக எழுதியிருக்கிறார்.

அந்த அனுபவத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சரித்திரங்கள் ஏராளமாய் உள்ளது. வாகன வண்டிகள் போக்குவரத்து என எதுவும் இல்லாத காலத்தில் இந்நூலாசிரியர் உழைத்த உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இன்றைய மனிதர்கள் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்வதாய் இருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் இருந்தாக வேண்டும். ஆனால் அந்தக் காலத்தில், நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டியதிருந்தது. மழை, வெயில், காடு, மேடு என அனைத்தையும் அளக்க வேண்டும். அதனை படமாக வரைய வேண்டும். ஒரு முழு கிராமத்தை அப்படியே ஓவியமாக, கழுகுப் பார்வையில், குன்று, குளம், குடிசை என எதுவும் விடுபடாமல் வரைய வேண்டும். வரைந்த பின் நிலங்களை வகைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ரெவென்யு கிராமமும் 2000 முதல் 4000 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

முதல் நில அளவைப் பணி என்பது ஒரு நிலத்தின் வடிவத்தை புகைப்படம் எடுப்பது ஓவியமாய் வரைவது போல் ஒரு கோட்டில் நூறு நூறு புள்ளிகள் சேரும் காரியம் என்கிறார் எழுத்தாளர் மே. சு. சண்முகம்.

எது எதை எப்படி எல்லாம் அளப்பது. சமவெளி பகுதியாக இருந்தால் அளப்பது சுலபம். ஆனால், ஒரு கிராமத்தில் எல்லாமே சமநிலப் பகுதியாக இருப்பது இல்லை. அதுபோல் நிலங்கள் எல்லாம் சதுரமாக இருந்து விடுவதும் இல்லை, முக்கோணம் அரக்கோணம் என அது பல கோணங்களில் இருக்கும். இதுபோல் இன்னொரு பிரச்சனையும் உண்டு. தோட்டங்கள் வெறும் தரையாக இருப்பதில்லை அதில் கரும்போ, வெற்றிலையோ, கொடிக்கால், கம்பு, சோளம் ஏதோ ஒன்று விளைந்து நிற்கும். விளைந்த வயலில் உள்ளே இறங்கி எப்படி அளப்பது மிகக் கடினம். சுற்றிலும் உள்ள வரப்புகளை அளந்து விடலாம். குறுக்களவு தேவை, விளைந்து நிற்கும் பயிர்களை மிதித்து நாசம் செய்து கொண்டு போக முடியாது. அறுவடை முடிந்து அடுத்த மாதம் வந்து அளக்கலாம். ஆனால்,

ஒரு கண்டம் முழுவதும் அளந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே மறு வேலை வழங்கப்படும். ஒரு கண்டம் அளந்து முடித்த பிறகு ஏழு வகையான ஆவணங்கள் தயாரித்து சர்வேயர் அல்லது அடுத்த அதிகாரியான சரக துணை அளவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு கண்டம் என்பது நஞ்சை பகுதியாக இருந்தால் 100 ஏக்கரும், புஞ்சைப் பகுதி என்றால் 200 ஏக்கர் கொண்ட நிலமாகும். ஒவ்வொரு உரிமையாளரின் நிலங்களை அளந்து எல்லை நிர்ணயம் செய்து பரப்பளவு கணிப்பதோடு நின்று விடுவதில்லை நில அளவர்களின் பணி. புலத்தில் உள்ள ஏரி குளம் வாய்க்கால் ஆறு கிணறு கட்டிடம் வண்டிப் பாதை ஒத்தையடி பாதை மயானம் குன்று கோவில் குளம் போன்ற இருபதுக்கும் மேற்பட்டவைகளை குறிக்க படத்தில் உரிய அளவுகளோடு, வட்டக்கிணறு, சதுரக் கிணறு என்று ஒவ்வொன்றையும் குறிப்பதற்கு ஒரு சின்னம் இருக்கிறது அதனை கையாலேயே அச்சடித்தது போல வரைந்திருக்க வேண்டும்.

இப்படி வெயில் மழை என பல இன்னல்களுக்கு இடையில் அளவர்கள் பணி செய்து செய்திருப்பார்கள். அப்படி உழைத்து உருவாக்கிய பணியில் தவறு நேர்ந்து விட்டால் சம்பளப் பிடித்தமும் உண்டு. என்பது மிகக் கொடுமையானது.

200 ஏக்கர் அளப்பதற்கு 20 நாள் சம்பளமும், வரைபடம் வரைவதற்கு பத்து நாள் சம்பளம். ஆக 30 நாள் சம்பளம். மேலதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதில் பிழை என்று வந்தால், திருத்துவார்கள். திருத்தவே முடியாத அளவு மோசமான பணி என்றால், கண்டம் முழுவதையும் மீண்டும் அளக்க வேண்டும். அப்படியான சூழலில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை பணப் பிடித்தம் செய்யப்படும். அந்த அளவர் தொடர்ந்து மூன்று முறை இதுபோல் மோசமான பணியைச் செய்தால் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்படுவார்.

புதிதாக பணியில் சேருபவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி அளிக்கப்படுமாம். அப்படி பயிற்சி பெற்று வருபவர்களில் பல பேர் பாதியிலேயே வேலை வேண்டாம் என்று ஓடி விடுவார்களாம். பயிற்சி காலத்தில் கிடைத்த 60 ரூபாய் உதவிப் பணத்தையும் திரும்ப கொடுத்துவிட்டு.

ஆனால், இந் நூலாசிரியர் மே.சு.சண்முகம் அவர்கள் பிடிவாதமாக 35 ஆண்டுகள் அளவர் வேலை மட்டுமே பார்த்து இருக்கிறார். மேற்கொண்டு கிடைத்த எந்த பதவி உயர்வையும் மறுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் செய்யும் தொழிலை எவ்வளவு நேசித்திருக்கிறார்கள். செய்யும் தொழிலையே தெய்வம் என்று கருதியிருக்கிறார்கள். செய்யும் தொழிலுக்கு அவ்வளவு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் மே. சு. சண்முகம் அவர்கள் நிலைவாற்றலோடு 96 வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். நேர்மையையும் அறத்தையும் காலம் ஒரு நாளும் கைவிடுவதில்லை!

கொடும் வெயிலையும் வெக்கையையும் வேர்வையும் தாங்கி பணி செய்த கரிசல் காட்டு மனிதரை, கொட்டும் பனியிலும் கொடூர அட்டைக்கடியிலும் பணி செய்யும் சூழலும் ஏற்பட்டது. மேகமலை, பச்சமலை, வருசநாடு போன்ற மலைப்பகுதிகளிலும் பணி செய்ய வேண்டிய இருந்தது. அந்தக் கொடுமையான பணிச் சூழலையும் தாங்கி பணி செய்த போதிலும், செய்யும் அந்தப் பணியும் நிரந்தரம் இல்லாமல், வேலை வாய்ப்பு பறி போய் விடுமோ என்கிற அச்சமும் வேலோங்கி வந்தது. அதற்கு காரணம்,

ஜமீன் நிலப் பரப்புகளெல்லாம் அளந்து முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம் நிலங்கள் மட்டுமே அளக்க வேண்டியதுள்ளது. அதையும் அளந்து முடித்து விட்டால்! ஜமீன் ஒழிப்பு சர்வேவிற்காக நியமிக்கப்பட்டவர்கள், அந்தப் பணி முடிந்தால் அந்தத் துறையை எழுத்து மூடத்தானே வேண்டும். அவர்களை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்புவது தவிர வேறு வழி இல்லை. ஏனெனில் அன்றைய காலத்தில் அதுவே தற்காலிக இலாகா தான். வேலை பறிபோகி, இலாக மூடப்படும் என்ற கருத்து பரப்பப் பட்டது. சர்க்கார் வேலை என்று எண்ணி திருமணம் முடித்து பலர் குடும்பம் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தனர். அனைவரும் மனதிலும் அதிர்ச்சியும் எதிர்காலம் பற்றிய கவலையும் வளரத் தொடங்கியது.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், கரடு முரடான மலைப்பகுதியை மழையிலும் கொட்டும் பனியிலும் கொதிக்கும் வெயிலிலும் அட்டைக் கடியிலும் ஓலைக் குடிசைகளில் கூழும் கஞ்சியும் குடித்து பாடுபட்டு சீர்திருத்தம் செய்து தேயிலை காப்பி போன்ற பயிர்க விளையும் தோட்டங்களாய் ஆக்கிக் கொடுத்த தமிழர்களை, திடீரென நாடற்றவர்களாக தமிழகம் விரட்டியடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வாழ்வு பறிபோன காலகட்டம் அது. அந்த நிலை தான் தங்களுக்கும் ஏற்பட்டு விட்டதோ என சர்வேயர்கள் அச்சம் கொண்டனர் அந்த அச்சத்தின் காரணமாக,

அதுவரை இல்லாமல் இருந்த ஒற்றுமை ஓங்குகிறது. புதிதாக சங்கம் துவக்கப்படுகிறது. உதவி, துணை இயக்குனர்கள். அலுவலக அதிகாரிகள் என அனைவரும் சங்கத்தில் ஒருங்கே இணைந்தனர். மாநாடு கூட்டினர். கோக்கைகள் வலியுறுத்தப்பட்டன, மாநாட்டு மலர் வெளியிட்டனர். அந்த மாநாட்டு மலரில் மே. சு. சண்முகம் அவர்களின் கவிதைகளும் கட்டுரைகளும் இடம்பெறுகிறது. அப்போது எழுதிய அந்த கவிதைகளை ஞாபகமாக இந்நூலில் இடம் பெறச் செய்கிறார்.

அவருக்குத்தான் வயதாகி இருக்கிறது. ஆனால் கவிதை இப்போதும் இளமையாகவே இருக்கிறது. இப்போது இந்தச் சூழலில் ஒரு சர்வேயர் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இதில் எனக்கு என்ன வியப்பு என்றால்! இத்தனை ஆண்டு காலமும் அந்தக் கவிதைகளையும், அது வெளியான ஆண்டு மலரையும் எப்படி அவரால் பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்தது. என்பதுதான் எனக்கு பெரும் வியப்பாக உள்ளது. என் வியப்புக்கு காரணம், இப்போது அவருக்கு வயது 96. 56 லேயே எதை எங்கு வைத்தோம் என்று தேடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்! அனைத்தையும் தன் ஞாபக அடுக்குகளில் பத்திரமாக தேக்கி வைத்திருக்கிறார்! அவர் எதையும் மறக்கவில்லை. தான் சென்று பணியாற்றிய ஊர்களின் பெயர்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 300 ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். எப்படி இந்த அதிசயம்! எங்கிருந்து கிடைக்கிறது அவருக்கான இந்த ஆற்றல்? என்று கேட்டபோது, அவருடைய மூத்த மகன் ச. தமிழ்ச்செல்வன்( ஆம் நீங்கள் யோசிக்கும் அந்த தமிழ்ச்செல்வன் தான். தமிழின் எழுத்தாளமைகளில் முக்கியமானவர், கதை, கட்டுரை வரலாறு என 77 நூல்களின் ஆசிரியர், எழுத்தாளர் தோழர் தமிழ்ச்செல்வனின் தந்தை தான், மேட்டுப்பட்டி சுப்பையா மகன் சண்முகம். அவர்தான் தனது 96 ஆவது பிறந்த நாளில் இரண்டு நூல்களை வெளியிட்டார் அதில் ஒரு நூல் தான் ‘கதாச் சுருள்’ இரண்டு, இரண்டு என்றால் ஒன்று என்று இருக்க வேண்டும் அல்லவா, அந்த ஒன்றுதான் சென்ற ஆண்டு 95வது பிறந்தநாளில் வெளியான ‘என் கதை’ ‘என் கவிதைகள்’ என இரண்டு நூல்கள்.

இரண்டு நூல்களா! அதிலும் 96 வயதில் கவிதைகளா! என நீங்கள் வியப்பது எனக்குத் தெரிகிறது. அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டும் தான் இருக்கிறார். “தினமும் 100 பக்கம் வாசித்து விடுகிறார். அந்த வாசிப்பு தான் அவரின் ஆயுளை நீட்டிக்கிறது, ஞாபக சக்தியை தக்க வைத்திருக்கிறது என்று. தோழர் தமிழ்ச்செல்வன் கூறுகிறார். வாசிப்பு அறிவை மட்டுமல்ல உயிரையும் வளர்க்கிறது!

96 வயதில் கவிதையா! அது எப்படி இருக்கும், வாசிக்க நீங்கள் ஆவலாக இருப்பது தெரிகிறது. எல்லாம் நீண்ட நீண்ட கவிதைகள் உதாரணத்திற்கு சிலவற்றைக் கூறுகிறேன். வாழ்வு எங்கே என்ற தலைப்பிலான ஒரு கவிதை. அந்தக் கவிதை அளவர்கள் (சர்வேயர்) பட்ட துயரினைப் பாடுகிறது,

நிலத்தினை அளக்கச்சொல்லி
நீட்டினார் கருவி தன்னை
அளப்பதற்-களவு ஒன்றை
ஆக்கினார் ஆணை மூலம்
சகதி சேர் கழனி நத்தம்
பலாப்பல அளந்த நீயும்
பரவசம் கண்டதுண்டா
…………………..
போடியில் மலையின் மீது
புலிவாழ் குகையின் பக்கம்
ஆடியில் அடிக்கும் காற்றில்
யானையின் கூட்டத்தூடே
தேடினும் கிடைக்க தந்த
சித்திரை வெயிலில் கூட
தேடினோம் ஓய்வை என்று
செப்பிட ஆளும் உண்டோ?

இந்தப் பாடல்களுக்கெல்லாம் என்ன சிறப்பு என்றால் இந்தப் பாடல்கள் எல்லாம் 1950, 55, 60களில் எழுதியது. இந்தப் பாடலை அவர் மேடையில் வாசிக்க கேட்டு அப்போது உள்ள அவருடைய தோழர்களும் அதிகாரிகளும் எவ்வளவு பாராட்டி இருப்பார்கள்! யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி. எந்த நேரமும் யானைகள் வந்துவிடலாம். அந்த அச்சத்தோடு, ஆடிக் காற்று வேறு! பட்ட துன்பத்தினை எவ்வளவு பாடி விட முடியும். அத்தனையும் சொல்லிவிட முடியுமா? ஆனாலும் ஆண மட்டும் கூறுகிறார்.

அளவன் என்றொரு தலைப்பில்

அளவன் என்றோர் இனமுண்டு
அவர்தம் குறைகள் மிக உண்டு
அளவன் ஆதல் என்றாமே
வறுமை ஒழித்தால் நன்றாமே

முத்தாய் வியர்வை சிந்திடுவான்
முற்றும் அளந்து தந்திடுவான்
எத்தாய்பெற்ற பிள்ளைகளோ
என்றும் வாழ்வில் தொல்லைகளே

நித்தம் செத்து பிழைப்பவனாம்
நிம்மதி ஒன்றையே அழைப்பவனாம்
சித்தம் சுத்தம் கொண்டவனாம்
சிற்றூர் பட்டிகள் கண்டவனாம்
………………….

அவ்வளவு ரணகளத்திலும் குதூகலமா என்பதைப் போல, சர்வேயர் களை வேந்தராக்கி அளவர்தன் தலையில் பாடலால் முடி சூட்டி மகிழ்கிறார். சந்தங்கள் நெஞ்சில் பதியமிடுகிறது.

எத்தனை பட்டங்கள் என்ற தலைப்பில்

அவனொரு வேந்தன்
அவன் தலையில் பிடிப்பதற்கு குடையுண்டு
அவன் ஒரு நடுவன்
ஆங்கிருவர் நிலத்தாவா தீர்ப்பதினால்
அவனொரு கலைஞன்
அளந்தவற்றை படமாக வரைவதினால்
அவனொரு பாட்டாளி
அல்லும் பகலும் அயராத உழைப்பதினால்
அவனொரு நாடோடி
அகிலமெல்லாம் நாள்தோறும் சுற்றுவதால்
அவனெரு வீரன்
அரிமாக்கள் இருப்பிடமும் அளப்பதினால்
………….

300 லிருந்து 400 ஊர்களை அளந்திருக்கிறார். காடுகளையும் பல மலைகளையும் கால்களால் கடந்திருக்கிறார். அத்தனை அனுபவங்களையும் ஒளிவு மறைவின்றி கைவிரித்துக் காட்டியிருக்கிறார். 12 ஊர்களில் குடும்பமாகச் சென்று வாழ்ந்திருக்கிறார். அதையும் வாழ்க்கைப் பயணம் என்ற தலைப்பில் வரைந்திருக்கிறார்.

….. செவல்பட்டி, சாத்துர் போன்ற ஜமீன் கிராமங்களை அளக்கும் போது சாத்தூரிலே குடியிருக்கிறார். அங்கே தான் அவருடைய முதல் மகன் தமிழ்ச்செல்வன் பிறக்கிறார்.

மதுரை மாவட்டம் சிறுவாளை ஜமீன் அளக்கும் போது கடையநல்லூரில் இருந்திருக்கிறார். கண்டம நாயக்கனூர் ஜமீன் அளக்கும் போது அங்கேதான் இரண்டாவது மகன் இளங்கோவன் என்ற கோணங்கி பிறக்கிறார். கோணங்கி பிறந்த அந்த நாள் மிகவும் சிறப்பான நாள். 1956 அன்று தான் கோணங்கியோடு சேர்ந்து மொழி வழி மாநிலமும் பிறந்திருக்கிறது. அதோடு அன்று தீபாவளித் திருநாளும் கூட.

இப்படி பல ஊர்களிலும் பலவித மக்களோடு அன்பாக பழகி இருக்கிறார். அந்த மக்களின் அன்பை இப்போதும் நினைவு கூறுகிறார். இன்னும் பல ஊர்களில் உறவினர்கள் அருகில் இருந்தால் என்ன உதவி கிடைக்குமோ,அப்படி உறவினர்களாக மாறி அந்த ஊர் மக்கள் அன்பைப் பொழிந்ததையும் ஞாபகம் கூறுகிறார். சர்வேயர் இடங்களை மட்டுமல்ல மனித மனங்களையும் அளந்திருக்கிறார்.

பலக்கனூத்து கிராமத்தில் வாழும் போது அவரது மூன்றாவது மகன் பாலசுப்பிரமணியன் பிறக்கிறார். அருகிலுள்ள ஒட்டன்சத்திரத்தில் கிறித்துவ மருத்துவமனையில் 1959 இல். அந்த மகப்பேறு நேரத்தில் யார் அவருக்கு வில்வண்டி கொடுத்து உதவியது, கூட இருந்து உதவியவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு மறக்காமல் நன்றி கூறுகிறார்.

அதன் பிறகு போடிநாயக்கனூரில் நீண்ட நாள் வாழ்ந்திருக்கிறார். அங்கேதான் அவருடைய மகள் வளர்மதி 1960 இல் பிறக்கிறார். அதே ஊரில் 1963 இல் ஐந்தாவது பிள்ளையாக பாண்டியன் நெடுஞ்செழியன் பிறக்கிறார்.

இப்படி ஊர் ஊராக அலைந்து திரிந்த மனிதருக்கு 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சொந்த தாலுகாவில் பணி செய்வதற்கு. சகோதரர்களோடும் உறவினர்களோடும் பெற்றோர்களோடும் கூடி வாழ்கின்ற பாக்கியத்தை அப்போதுதான் பெற்றேன் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார்.

அரசியலில் வாரிசுகள் இருப்பதைப் போல இலக்கியத்திலும் வாரிசுகள் புகுந்து விட்டனர் என்கிறார். உதாரணத்திற்கு பல எழுத்தாளர்களைக் கூறுகிறார்.

அதுபோல தான் மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வழிப் பேரர்களான தமிழ்ச்செல்வன், 75 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

அவருடைய இன்னொரு மகன் கோணங்கி எழுத்தாளராக உலகையே வலம் வருகிறார். அவர்தன் படைப்புகளுக்காக பரிசுகள் பல பெற்றுள்ளார்.’கல் குதிரை’ என்கிற பருவ கால இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அவருடைய கடைசி மகன் முருக பூபதி நாடகத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். மணல் மகுடி என்கிற நாடகக் குழுவை இயக்கி வருகின்றார்.

தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் மட்டுமல்ல திருவனந்தபுரம் பெங்களூர் டெல்லி கல்கத்தா அஸ்ஸாம் மற்றும் அமெரிக்கா போன்ற அயல் தேசங்களிலும் நாடக அரங்கேற்றம் செய்து பரிசுகள், பட்டங்கள் பல பெற்றிருக்கிறார்.

தன் பிள்ளைகளை தன் வாரிசு என்று சொல்லி பெருமைப்படாமல். தன் மாமனாரான மதுரகவி பாஸ்கர தாஸ் அவருடைய வாரிசுகள் என்று பெருமையாகச் சொல்கிறார்.

பாஸ்கரதாஸ் யார்? அவரின் புகழ் என்ன? மதுரையில் அவருடைய பெயரில் ஒரு தெருவே இருக்கிறது. இன்னும் ஏராளமான செய்திகளை உள்ளடக்கி உள்ள கதாச் சுருள் இரண்டு சிறப்பான படைப்பு. எழுத்தாளர் மே. சு. சண்முகம் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

நூலின் விவரங்கள்:

நூல்: கதாச்சுருள் – இரண்டு
நூலாசிரியர்: மே. சு. சண்முகம்
வெளியீடு: ஸ்ரீ சண்முகா பிரிண்டர்ஸ்
தொடர்புக்கு : 94435 62545

எழுதியவர் : 

✍️ – எழுத்தாளர் பொன் விக்ரம்
ponvickram1967@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *