எந்தெந்த நிறுவனங்களெல்லாம் லாபத்தை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டதோ அவையெல்லாம் இந்த கொரோனா தொற்றுக்காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.இதில் வெகுமக்கள் ஊடகங்களும் விதிவிலக்கல்ல.
ஊரடங்கு காலத்தில், இங்கே வெளிவரும் செய்திப்பத்திரிக்கைகளின் பக்கங்கள் குறைந்துவிட்டன.இலவச இணைப்புகளை பெரும்பாலும் காணமுடியவில்லை. தொலைக்காட்சிகளில் தொடர்கள் தொடரவில்லை.மறு ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் கைகொடுக்கின்றன. வார-மாத இதழ்கள் வெளிவந்தாலும் விற்பனை மந்தமே. இதனால், ஊடக நிறுவனங்கள் பலவும் வருவாய் இழப்பை சந்தித்து வருவது மட்டுமின்றி அங்கு பணியாற்றிவந்த சிலர் வேலை இழக்கவும் மற்றும் பலர் ஊதிய வெட்டையும் சந்தித்துவருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.இக்காலத்தில் ஊடகங்கள் – மக்கள் – அரசு யாவுமே ஒன்றுக்கொன்று கூட்டுப்பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய தருணமிது.
வருவாயை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டுவரும் ஊடகங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளவோ,ஜனநாயகக்கூறுகளை காப்பாற்றும் என்பதோ அரிது. இருப்பினும்,வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர போருக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்சூழலில், ஊடகங்களுக்கு ஒரே நேரத்தில் மக்களுக்கு அறிவுறுத்தவும், மக்களினது குறைகளை அரசின் பார்வைக்கு முன்வைப்பதும் கடமையாகிறது. ஆனால் நடைமுறையில், மக்களுக்கு அறிவுறுத்துவதற்குப்பதில்,பரபரப்பையும் அச்சத்தையும் நேரலையில் விதைக்கும்போது அது வேறு வடிவம் எடுத்துவிடுகிறது.
சில நாட்களுக்கு முன்பு,சென்னையில்,கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் ஒருவர் அதேதொற்றால் பாதிப்படைந்து இறந்தவுடன் கல்லறையில் அடக்கம் செய்யவிடக்கூடாது என மக்களிடம் வதந்தி பரப்பி கலவரம் செய்ய தூண்டிவிடும் கூட்டமொன்று உருவாகியிருப்பதிலிருந்து ஊடகங்கள் எச்சரிக்கையுடன் பதிவுசெய்வது அவசியமாகிறது. இதே போன்று கடந்த வாரத்தில் ஆந்திர மருத்துவர் ஒருவரும் இதே தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் இறந்த பொழுதும் அடக்கம் செய்யக்கூடாது என மயான ஊழியர்கள் மறுத்ததையும் நினைவில் கொள்வது அவசியம்.
கொரோனா வைரஸ் தொற்றானது,தேசம்-மொழி-மதம்-சாதி கடந்தது. அது பரவும் விதமும் பல்வகையாக இருக்கிறது. இது ஊடகங்களுக்கும் தெரியும்.நிலைமை இப்படியிருக்க மதப்பிரிவினையை தூண்டக்கூடிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது பல்வகை அடையாளங்களைக்கொண்ட தேசத்திற்கு எந்தவகையிலும் ஏற்றதாக இருக்காது.அது பிளவு வாத அரசியலுக்கே வழிவகுக்கும்.
கொரோனா தொற்றுக்காலத்தில் ,மக்களுக்கு முறையான மருத்துவச்சிகிச்சை அளிப்பது : சட்டம்- ஒழுங்கு எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் மனித உரிமைமீறல்கள் : மக்களுக்கு நியாய விலையில் மளிகை மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடுவது :,வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அரசின் நிவாரணம் பெறுவது : பசியால் வாடுவோர்க்கு பாரபட்சமின்றி இலவச உணவு வழங்கிடுவது : பள்ளி முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் தடையின்றி கல்வி கற்க உறுதிசெய்திடுவது ஆகியன ஊடகங்களின் கடமையாகும். ஊடகங்கள் தங்களுடைய பணியை சரிவரச்செய்கிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஊரடங்கு காலத்தில் –
- ஊடகங்கள் யாவும் இந்த வைரஸ் நோய்த்தொற்று எங்கிருந்து உருவாகியது, அதன் பாதிப்பு – இறப்பு, பற்றியும் இதற்கு உடனடி நிவாரணியான மருந்து கண்டுபிடிப்பு,தடுப்பூசி பற்றியே அவசர அவசரமாக அதிகம் உரையாடுகின்றன.இதற்கான ஆணி வேர் எது என்பதாக உரையாடல் அமைவதில்லை.
- ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை புரட்டிப்பார்த்தால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. : பெட்ரோல்-டீசல் விலை மளமளவென சரிகிறது : பங்குச்சந்தை எழுகிறது : தங்கம் விலை உயருகிறது : சுங்கச்சாவடிக்கட்டணம் உயருகிறது. இதனால் மக்களுக்கு சுமைதான் கூடுகிறது.
- மக்கள் யாவரும் கூட்டுப்பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலத்தில்தான் சாதிவன்கொடுமைகள் :ஆணவப்படுகொலைகள் : மத வெறுப்புபிரச்சாரங்கள் வஞ்சகமின்றி நடந்தேறுகிறது.
- மக்கள் யாவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் இருக்க வேண்டிய நேரத்தில் தான்,இஸ்லாமிய கர்ப்பிணி ப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க மறுக்கப்படுகிறது.கொரோனா தொற்று பாதித்த இஸ்லாமியர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.தப்லிக் மாநாட்டில் பங்கேற்றதினால் நோய் தொற்று ஏற்பட்ட ஒரே காரணத்திற்காக கொரோனா ஜிகாத் எனவும், கொரோனாவுக்கு குல்லா போட்டும் இஸ்லாமிய சமூகத்தையே புண்படுத்துகின்றபோக்கு.
- ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைகளை மூடிவிட்டது.இதன் காரணமாக தனது சொந்த மாநிலம் திரும்ப வழியின்றி,வேலை வாய்ப்பற்ற மக்கள் நாடு முழுக்க உணவுக்காகக்சிரமப்படுவதுதான் வேதனையளிப்பதாக இருக்கிறது.
- கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தாலும் அமெரிக்காவிற்கும் சீனா-ஈரான் க்யூபா-வெனிசுலாவிற்கும் இடையே : பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான மறைமுகப்போர் இம்மியளவுகூட குறைந்தபாடில்லை.
- ஊரடங்கு விதிகளை முன்மாதிரியாக இருந்து பின்பற்றவேண்டிய ஆட்சியாளர்-அரசியல் வாதிகளில் சிலர் திருமணவிழா மற்றும் வழிபாட்டுத்தல நிகழ்வுகளில் படை சூழ பங்கேற்கும் போது அதே ஊரடங்கு விதிகளை மீறுபவர்களாகவும் இருக்கின்றனர்.
- நாடே வைரஸ் தொற்று பற்றிய அச்சத்தில் மூழ்கியிருந்த வேளையில்தான் ஊரடங்கு காலம் அமலுக்குவர சற்று முன்பு கூட சத்தமின்றி ஆட்சிமாற்றம் நடக்கிறது.
- காற்றின் மாசு குறைகிறது.குப்பையின் அளவு குறைகிறது.ஊடகங்களின் வருவாயும் குறைகிறது.ஏரிகளில் நீர் இருப்பு போதுமானதாக இருக்கிறது. இருந்தபோதிலும் மத வெறி அரசியலை கிளரி எரிய விடுவது மட்டும் குறைந்தபாடில்லை.
- மக்கள் யாவரும் தங்களது வாழ்வாதாரத்தினை உறுதி செய்ய ஊரடங்கு எப்போது முடியும் எனக்காத்திருக்கின்றனர்.ஆனால்,ஊடகங்களோ மக்களை கேளிக்கைகளில் மூழ்கடிப்பதில் குறியாக இருக்கிறது.
பங்குச்சந்தை வழக்கம் போல இயங்குகிறது..பிற நாடுகள் மீதான வன்மம் அப்படியே நீடிக்கிறது.பிற மதத்தினர் மீது பாகுபாடு தொடர்கிறது.இப்படியான சிந்தனை கொண்டுள்ள எந்த நாடுகளானாலும் சரி,மதமானாலும் சரி கண்ணுக்குத்தெரியாமல் நிரந்தர விருந்தாளியாக தங்கப்போகிற இந்த கொரோனா வைரஸ் தொற்றை எப்படி அகற்றப்போகிறது எனத்தெரியவில்லை.
மருத்துவ ரீதியிலான தீர்வுதான் இப்போதைக்கு தேவையாகும்., இதனை அரசியலாக்க முயலுவது பிரச்சனைக்கு தீர்வாகாது.அது எதிர்மறைப்போக்குக்கு வழிவகுத்துவிடும். மக்களின் நலமான வாழ்வுக்கு நோய்தொற்றுக்கு எதிராகத்தான் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை இருக்க வேண்டும்.
இனிமேல்,கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டிடவும், அரசு நிர்வாகம் நாட்டு நலனில் அக்கறை செலுத்திடவுமாக இருப்பதற்கு,உடனடியாக, மக்கள் நலனை முன்னிறுத்துகிற மருத்துவச்சேவைக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிப்பது கட்டாயம். அப்படியில்லையெனில் இது போன்ற தருணங்களில் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடக்கூடும்.ஊடகங்களும் இதனை கவனத்தில் கொள்வது அவசியம்.நன்றி !