“மருத்துவம் ஓர் சமூக விஞ்ஞானம். அரசியல் என்பது பரந்த அளவிலான மருத்துவம்” என்றார் ருடால்ப் விர்கோவ். 1821 ஆம் ஆண்டு அன்றைய பிஷ்யாவில் பிறந்த இவர், ஒரு மருத்துவர். 1902 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் மரணமடைந்தார். இவர், விஞ்ஞானி, மருத்துவர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கிய மருத்துவர்களில் இவரும் ஒருவர். நவீன மருத்துவ முறைமையின் முன்னோடிகளில் ஒருவர். நோய்கள் உடல் உறுப்புகளில் இருந்தோ, திசுக்களில் இருந்தோ உருவாவதில்லை. செல்களில் இருந்து உற்பத்தியாகிறது என்ற கருத்தை வலியுறுத்தினார். அவர் சமூக சீர்திருத்தங்களுக்காக தீவிரமாக போராடியவர். உடல் ஆரோக்கியமும் நோய் தாக்குதலிலும் உடல் செல்களின் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் உணர முதல் முதலில் உழைத்தவர்.
மருத்துவம் ஓர் சமூக அறிவியல் என்பதோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. “ஆபத்தான நேரத்தில் அறிவியல் அணுகுமுறையை கைவிடுவதும், தனியுடமை பயன்பாட்டிற்கு அறிவியலை திரித்து பயன்படுத்துவதும் கூடாது” என்று உரைத்தவர். தாம் வாழ்ந்த காலத்தில் ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்ட ஒரு வகை பாக்டீரியா தொற்று பரவலின் காரண காரியங்களை கண்டறிய முனைந்த போது தான் இக்கருத்தை தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டார். ஒரு வர்க்க சார்பான அரசில், ஒடுக்குமுறை, வறுமை, கல்வியறிவின்மை ஆகியவையெல்லாம் ஒரு தொற்று நோய் பரவலின் போது பெரும் பாதிப்புகளை உருவாக்கும் என்றார். இதனை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.
கொரானா வைரஸ் சாதி மத இன பேதம் பார்ப்பதில்லை என்று பொதுவாக கூறிக் கொண்டாலும் எல்லா வகையிலும் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களே என்பதை உணர்த்துகிறது. ருடால்ப் விர்கோவ், மருத்துவத்தை ஒரு சமூக அறிவியலாக பார்க்கும் பார்வை, அரசியலை சமூக நோய்களின் மருந்து என பார்க்கும் பார்வை அரசுகளுக்கு வேண்டும் என்று கூறி சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் கூட அப்பார்வை வேண்டும் என்று இலக்கை நோக்கிய பயணம் தொடங்கவில்லை. இந்தப் பார்வையின்மையின் விளைவாகவே கோவிட்- 19 நோய்த்தொற்று பேயாட்டம் போட அடிப்படை காரணமாக இருக்கிறது.
அதோடு வசதி படைத்தவர்கள் அறிவியலின் உண்மையான தேவையை நிராகரிப்பதும் சுயலாபத்திற்காக அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகமாக பயன்படுத்தும் போது தொற்று நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், வர்க்க ஒடுக்குமுறை மிக இயல்பாக நோய் தொற்று தாக்குதலை தீவிரப்படுத்தியது. அமெரிக்கா ஒரு பணக்கார தேசம் என்ற தோற்றப்பிழை மட்டுமல்ல, அது அதிகபட்ச ஜனநாயகத் தன்மை கொண்ட நாடு என்ற தோற்றப் பிழையும் இணைந்து காணப்பட்டது. இந்த தொற்று நோய் காலத்தில் அந்த தோற்ற பிழைகள் திரிந்து போய்கொண்டு இருந்தாலும் அதன் அடிப்படை அணுகுமுறையில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.
நோய் எதிர்ப்பு மற்றும் நச்சு உயிரியல் நிபுணர் ரிக் ரைட், அமெரிக்க நாட்டின் சுகாதார மற்றும் மனித தேவை துறையின் உயர் பொறுப்பில் இருந்தார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று அப்பதவியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். உயிரி மருந்தியல் உயர் ஆய்வுத்துறையின் பொறுப்பில் அவர் இருந்தார். கோவிட் -19க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இத்துறையில் இதுவரை 63 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார் என்பது இவரது திறமைக்கு சான்று. ஆனாலும் திடீரென்று பிரைட் ஏப்ரல் 21ஆம் தேதி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். “நான் அரசியல் பேசவில்லை. குரோனி கேபிடலிசம் குறித்து பேசவில்லை. உயிர்கொல்லி வைரஸின் அறிவியல் குறித்துப் பேசினேன்.
பல நூறு கோடி டாலர்களை 19 நோய் தொற்றுக்கு அறிவியல்பூர்வமான மிகச் சிறந்த தீர்வுகளை எட்ட முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். பன்னாட்டு மருந்து கம்பனிகளின் லாபத்திற்கு உகந்த மருந்து கண்டுபிடிக்கிறோம் அதற்கான தொழில்நுட்பத்தை தயாரிக்கிறோம் என்று முயல வேண்டாம் எனவும் வலியுறுத்தினேன். அதுவே என் மாறுதலுக்கு காரணமாக இருக்கும்” என்றார்.
மேலும் அவர், “அரசுக்கு தவறாக வழி காட்டியோருக்கு எதிராகவும், குளோரோக்குயின் போன்ற மாத்திரைகள் சர்வரோக நிவாரணியாக பரிந்துரை செய்வதையும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவேண்டும் என்று கூறினேன் இதுவும் எனது பணி மாறுதலுக்கு காரணமாக இருக்கலாம்” என்றார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை இன்னும் பல நடவடிக்கைகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இதில், உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்காவின் நிதி வெட்டு உட்பட அடக்கம். இவையெல்லாம் அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறையை குறிப்பால் உணர்த்துகிறது.
தொற்றுநோயை தொடக்கத்தில் கண்டறிந்து வெற்றி காண்பதில் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கை கொள்ளாமல் டிரம்ப் அரசு படுதோல்வி அடைந்தது. கோவிட்-19 பரவலைத்தடுக்க, அமெரிக்காவுக்கான புதிய திட்டத்தை தயாரிக்கவும் திறன் அற்று நிற்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆறாம் தேதியன்று நிகழ்ந்த முதல் கோவிட் மரணம் தொட்டே, தடுப்பு அரண்களை உருவாக்க நிறைய கால அவகாசம் அமெரிக்க அரசுக்கு இருந்தது.
ஆனால் எந்த அறிவியல் பூர்வமான முயற்சியையும் டிரம்ப் மேற்கொள்ளவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டு விஞ்ஞானிகள் கோவிட்- 19ன் பரிணாமம் பற்றி ஆய்வு செய்து, 2019 டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கி 2020 மார்ச் மாதம் 14ஆம் தேதி வரை கொரானா வைரசின் மூன்று வகையான பரிணாமத்தை கண்டறிந்தனர். அதனை மூன்று வகையாகப் பிரித்து அதன் பாதைகளையும் கண்டறிந்து எடுத்துக்கூறினர். ஆனால் டிரம்ப் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவின் மீது பழிசுமத்துவது ஒன்றே குறியாக கொண்டு இருந்தது.
நியூயார்க்கை தலைநகராக கொண்டு செயல்படும் ‘சூழல் சுகாதார கூட்டணி ‘என்ற அமைப்பின் தலைவர் விலங்கியல் வல்லுநர் பீட்டர் டசாக். இவர் சார்ஸ் வைரஸ் தொற்று குறித்து 2013 ஆம் ஆண்டு ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் முடிவில் கொரானா வெகுவேகமாக பரிணமித்து ஓர் இனத்தில் இருந்து இன்னொரு இனத்துக்கு வேகமாக பரவித் தாக்கும் திறன் பெறும் என்று எச்சரித்தார். கோவிட்- 19 போன்றதொரு தொற்றுநோய் உருவாவதை முன்கூட்டியே கணித்துக் கூறினார்.
இதனைத் தடுக்க, 1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்தால், அனைத்து வகையான பாலூட்டிகளிலும் உள்ள வைரஸ்களை பற்றி ஆய்வு செய்து அதன் கொடிய தொற்று நோய்கள் உருவாவதை தடுத்திருக்க முடியும்” என்றார். அப்படி செய்திருந்தால் இது போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டு பிடித்திருக்க முடியும். துவக்க நிலையில் நோயைக் கண்டறியப் பல அவசரகால பரிசோதனைகளை கண்டறியவும் வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசு அதனை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
அமெரிக்க அரசின் இந்த போக்கு எதைக் காட்டுகிறது? அறிவியல் தொழில்நுட்பத்தை மக்களுக்கானதாக பயன்படுத்தத் தவறியதையும், அறிவியல் தொழில்நுட்பத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்தியதையும் புரியவைக்கிறது. இதிலிருந்து அமெரிக்காவும் அமெரிக்கா போன்ற அரசுகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
1) அறிவியல் தொழில்நுட்பம் என்பது அனைத்து மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். பணக்காரர்கள் மற்றும் ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாக அறிவியல் தொழில்நுட்பம் மாறிவிடக்கூடாது. அவர்களது கருணையால் மக்களுக்கு ஏதேனும் சென்று சேரும் நிலை என்பது இருக்கக் கூடாது
2) மருத்துவர் ரிக் பிரைட் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோரை அவமதிப்பது, அவர்களது திறன்களை உதாசீனப்படுத்துவது, மக்களுக்கு பயன்படாமல் தூக்கி எறிவதுமான அரசின் போக்கு மாறவேண்டும்.
3) அரசின் திட்டமிடல் என்பது அனைத்து மக்களின் பாதுகாப்பு உடல் நலம், உயர்வு பற்றியதாக இருக்க வேண்டும். இது மருத்துவத்தை சமூக விஞ்ஞானமாகவும் அரசியலை சமூக மருத்துவமாகவும் கருதும் அரசுகளாலேயே சாத்தியம் என்பதை கோவிட்- 19 தொற்று நோய் மேலாண்மை உணர்த்துகிறது.
நா.மணி
மேனாள் தலைவர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மிகச் சிறப்பான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை . அறிவியல் என்பது ஒரு சமூக நடவடிக்கை . அந்தப் பாதையிலிருந்து விலகிய அமெரிக்கா இன்று அம்பலப்பட்டுப் போயிருப்பதை கட்டுரை அருமையாக எளிய நடையில் விளக்குகிறது.