உலகம் முழுமைக்கும் இன்று சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் சிறிதாக மேலெழுந்து வருகிறது. கால நிலை மாற்றம், அதையொட்டிய இயற்கை பேரிடர்கள் எல்லோரையும் இதை பற்றி விவாதிக்க வைத்து விட்டது. தண்ணீர் பற்றாக்குறை ஒரு பக்கம், எதிர்பாராத பெருவெள்ளம் என பல செய்திகள் நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. இவை அனைத்திற்கும் நமது சுற்று சூழலை மனித இனம் தன்னுடைய தேவைக்காக முறை தவறி பயன்படுத்தியதின் விளைவே என்பது புரிய வருகிறது. நுகர்வு கலாச்சாரம் இதற்கு ஒரு மிக முக்கிய காரணம்.
அதிலும் சமீப காலமாக மருத்துவம் என்பது பெரும் வணிகமாகி விட்ட சூழலில் ,பெரும் நோய் தொற்று, கார்ப்பரேட் மயமாகும் மருத்துவம், உலகமெங்கும் அச்சுறுத்தலை உருவாக்கும் ஆண்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் ( ANTI MICROBIAL RESISTANCE ) எனும் பெரும் பிரச்சனைகள் மனித இனத்திற்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. இந்த சவாலோடு இணைந்து மருத்துவ திட கழிவு மேலாண்மை ஆகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மாறிய மருத்துவம் – எழும் பிரச்சனைகள்;
மனித இனத்தின் பெருக்கத்தோடு நோய்களும் சேர்ந்து பெருகி வருகிறது என்பது உண்மையே. பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவம் பெரும்பாலும் ( இந்திய அளவில்) அரசின் பராமரிப்பு மற்றும் செல்வாக்கிலேயே இருந்தது .1990களில் இந்தியாவில் தாராளமய கொள்கை அமலுக்கு வந்த பிறகு மருத்துவம் சேவை துறையிலிருந்து வணிகமாக மாற்றப்பட்டது. பெரும் தனியார் நிறுவனங்கள் இத்துறையின் வளர்ச்சியை கணித்து முதலீட்டை செய்து மருத்துவமனைகளை நிறுவினர். தனியார் குழுமங்களின் முதலீட்டினால் மருத்துவத்தின் முகமே மாறியது.

சுத்தம் , சுகாதாரம், என்பவை பேசு பொருளானது. தொடர்ந்து அரசுகளும் தங்களின் நிதி ஒதுக்கீட்டில் மருத்துவத்துக்கான செலவை குறைத்து வந்ததின் விளைவாக அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு கேள்வி குறியானது. மக்கள் தொகைக்கேற்ப தேவையான மாற்றங்களை செய்யாததின் விளைவாக தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை பல்கி பெருகியது…நிற்க ..இந்த பின்னணியில் தான் மருத்துவ கழிவுகள் மேலாண்மை பற்றியும் அது தற்சமயம் சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் போனால் நிலம் மேலும் நஞ்சாகி விடும்.
தற்கால நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருட்கள். ஊசி துவங்கி அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் சிறு உபகரணங்கள் வரை. அனைத்துமே அப்படித்தான் என்னும் போது அதை அழிப்பது பெரும் வேலை.
தற்போதைய நிலை;
மருத்துவ கழிவுகள் மட்டுமல்ல, கால்நடை மற்றும் மிருகங்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் ,உபகரணங்கள் தற்போது நாட்டில் சில முக்கிய நகர பகுதிகளுக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலோடு இயங்கும் சில திட கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் மசிக்கப்பட்டு , உடைத்து அதன் நச்சு தன்மையை ஓரளவு நீக்குகின்றனர். இந்த அணுகுமுறை பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நகர்புற அருகமை ஊர்களிலிருந்து செயல்படும் சிறு கிளினிக் வைத்திருப்போரிடம் இருக்கிறது.
ஆனால் சிறு கிராமங்களில் கூட இன்று ஒரு முறை பயன்படுத்தும் ஊசி ஊடுறுவிட்ட நிலையில் நாம் என்ன செய்ய போகிறோம்? நூறு கோடியை தாண்டி விட்ட நம் மக்கள் தொகைக்கேற்பவும், அதே போல் பன்மடங்காக பல்கி பெருகி வரும் ஆங்கில வழி மருத்துவத்தை முன் வைத்து நடக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல் கழிவுகளை சுத்திகரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. இது ஒரு மிக முக்கியமான அவசரமான பிரச்சனை.

அதே போல நிலத்தை நஞ்சாக்கும் மற்றொரு வேலையும் நடக்கிறது , அது நம் சிந்தனைக்கே வருவதில்லை. உதாரணமாக கழிவு சுத்திகரிப்பு மையங்களில் வகை வாரியாக பிரித்து சிலவற்றை உடைத்து ,சிலவற்றை எரித்து( பேண்டேஜ், கையுறை, )விடுகிறார்கள்…என்னவாகினும் காற்று மாசுபடுகிறது. அதோடு காலாவதியான மருந்துகள் தரம் பிரிக்கப்பட்டு பெரும்பாலும் குழியாக தோண்டி கொட்டுவதும், மருத்துவமனைகளில் ஊசிகளில் இருக்கும் மிச்சமுள்ள மருந்துகளும் மண்ணிலேயே கொட்டப்படுகிறது. இது யாருக்கும் தெரியாமல் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இது அங்குள்ள மண்ணை மட்டுமல்ல, அந்த பகுதியை நச்சாக்கி விடும்.
மனிதர்களுக்கு பயன்படும் மருந்துகள் மட்டுமல்ல, மற்றைய உயிரினங்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மண்ணில் கலப்பதால் வேறு உயிரினங்களுக்கு ஆபத்தாக மாறுகிறது. இப்படி இது ஒரு தொடர் பிரச்சனையாக உருவெடுக்கிறது.
மேலண்மையும் – கண்காணிப்பும்:
மருத்துவ கழிவுகளின் மேலாண்மையில் இருக்கும் சில பிரச்சனைகளை மட்டுமே நான் முன் வைத்துள்ளேன். இதில் இன்னமும் கூட பிரச்சனைகள் இருக்கிறது என்றாலும் இந்தியாவில் மருத்துவ கழிவு மேலாண்மை பற்றிய முழுமையான புரிதலும், அதனை கையாளும் விதம் , சுற்று சூழலை பாதிக்காத வண்ணம் இருப்பதற்கான நடவடிக்கை என திட்டமிட்ட வரையறையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதிகாரிகளும் அவ்வப்போது எழும் பிரச்சனைகளுக்கேற்ப தற்காலிக தீர்வுகளை முன்மொழிந்து, அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று நிறைவேற்றிவிட்டு செல்கின்றனர். நிரந்தர தீர்வுக்கான யோசனைகளை சுற்று சூழல் ஆர்வலர்கள், துறை சார் வல்லுநர்கள், கள செயற்பாட்டாளர்களிடமிருந்து பெறுவதில் கூட தயங்குகின்றனர். அதனால் முழுமையான பார்வை இல்லாமல் செயல்படுவதால் சவால்கள் மலை போல் குவிந்து நிற்கிறது.
மருத்துவ கழிவுகள் மட்டுமல்ல காலாவதி மருந்துகள் அதையொட்டி நடக்க வேண்டிய பாதுகாப்பான அழிக்கும் வழிகளும் கூட மீறப்படுகிறது. நாளிதழ்களில் சாலைக்கு அருகில் கொட்டப்படும் கழிவுகள், காலாவதி மருந்துகள் பற்றிய செய்தி வந்தால் சில நடவடிக்கைகள் இருக்கும்….நாளாகி விட்டால் மீண்டும் பழைய நிலையே தான்.

மருந்து நிறுவனங்கள் காலாவதி மருந்துகளை பெற்று கொள்வதற்கு ஒரு வழிமுறையை வைத்துள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் அதை முறையாக செய்கின்றன என்றாலும், அதை கவனிக்க, முறைப்படுத்த, கட்டுப்பாட்டில் வைக்க வரையறுக்கப்பட்ட விதிகள் உள்ளதா என்றால் கேள்விக்குறி தான். இந்தியா முழுமைக்கும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் துவங்கி சிறு குறு நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறி சட்டங்கள் இல்லை என்பதே பெருந்துயர்.
இயற்கை சூழலை கட்டாயம் பாதுகாக்க வேண்டும் என்பது இன்றைய கட்டாய தேவை. அதை கொள்கையாக ஏற்று கொண்டே, மண்ணையும்,சுற்று சூழலையும் பாதுகாப்பது எப்படி என்பதற்கான திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.
இது ஒரு மாநில அரசு மட்டும் செய்திட முடியாது. இது ஒரு ஒருங்கிணந்த நாடு தழுவிய திட்டமாக உருவாக்க வேண்டும்.
அடிப்படையில் மருந்துகள் ரசாயன கலவைகளே. அதனின் கழிவுகள் மண்ணின் அடிப்படை குணங்களையே மாற்றிவிடும். ஆகவே அக்கறையோடு சட்டங்கள் உருவாக்க வேண்டும்.
மீறப்படும் விதிகள்; தேவை முறையான நடவடிக்கை
நாம் முன்னரே பார்தது போல மருத்துவ கழிவுகள் குறித்த சட்டங்கள், விதிமுறைகள் இருந்தாலும், அந்த சட்டங்கள் அனைத்தையும் மீறுவது ,பின்பற்றாமல் இருப்பது கார்ப்பரேட்டுகளும் , பெரும் தனியார் குழுமங்களும் தான். சாமானியர்கள் அல்ல. மருத்துவ கழிவுகளிலேயே மிக ஆபத்தான ,உயிரினங்களுக்கு, சுற்று சூழலை கேடாக்கும் ரசாயன கழிவுகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மனித உறுப்புகள் என ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான வழிமுறைகள் கொண்டு தான் அதை மாசில்லாத கழிவாக்க முடியும். அதை கூட பல இடங்களில் விதிகளை மீறுகிறார்கள். குறிப்பாக பெரு நகரங்களுக்கு அருகில் உள்ள சிறு கிராமங்கள், புறநகர் பகுதிகள், காட்டு பகுதிகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. இப்படி விதி மீறுவோருக்கும், அதற்கு துணை நிற்கும் சக்திகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
மாறி வரும் சூழலுக்கேற்ப விதிமுறைகளை மேலும் கெட்டிப்படுத்தி, தனி நிர்வாக ஏற்பாட்டின் மூலம் கண்காணிப்பும், சோதனைகளும்நடத்திட வேண்டும். கழிவு மேலாண்மை அட்டவணை (LEDGER) முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மொத்தமாக சேகரிக்கப்படும் கழிவுகள் கண்காணிப்பு காமிரா மூலம் பதிவு செய்து தவறுகள் நேரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம்.
மாநில மற்றும் மாவட்ட அளவிலும் அரசு ஒரு கண்காணிப்பு குழுவை அமைப்பது அதில் குறிப்பாக சூழலியல் வல்லுநர்களை இணைப்பது, பொது மக்கள் என பலதரப்பட்டவர்களை கொண்டு முறைப்படுத்தலாம்.
நம் நாட்டில் ஒரு நாளில் மட்டுமே பல லட்சம் டன் எடையுள்ள மருத்துவ கழிவுகள் உருவாகின்றது என இது தொடர்பாக கள ஆய்வு செய்தவர்கள் அறிக்கையாக கொடுத்துள்ளார்கள். இதில் மனித உறுப்புக்களும் அடங்கும்.குழந்தை சிசுக்களின் உடல்கள் மனித காட்டு பகுதிகளில் வீசப்படும் போது சுற்று சூழல் சம நிலையில் சில சிக்கல்கள் உருவாகின்றது. இது போல பல விசயங்கள் நம்மால் சொல்ல முடியும். ஆனால் நாம் இணைந்து செயல்பட்டால் இது போன்ற பிரச்சனைகளை நிறுத்திட முடியும்.

தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய ஒன்றிய அரசு இந்திய அளவில் மருத்துவ கழிவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதற்கான ஆய்வு வரைவு அறிக்கை கொடுத்து, அதன் மீதான கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ,கருத்துக்களை கேட்டறிந்து, தொலைநோக்கு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இதையே மாநில அளவில் மாநில அரசு செய்திடல் அவசியம். காலத்தின் தேவை. தற்போதைய மாநில அரசு மண் வளம் காக்க புது வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதுவே ஒரு நல்ல முயற்சி. அதில் இந்த மருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய கூடுதல் தகவல்களையும் இணைத்து அரசின் கொள்கை மாற்றப்பட்டால் பல சிக்கல்கள் தீரும். அதோடு சிறு மற்றும் குறு தொழில் முனைவோரிடம் கழிவு மேலாண்மை மையங்கள் அமைப்பதற்கு உதவி செய்து தமிழ்நாட்டில் மேலும் பல மையங்களை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.
மேலும் அரசு மருத்துவமனை கழிவுகளை சுத்திகரித்திட தமிழ்நாடு அரசே முதலீடு செய்து மையம் அமைத்தால் மற்ற அரசுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் விதிகளை மீறாத வண்ணம் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும். அண்டை மாநிலங்களின் எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பும், அத்து மீறி செயல்படுவோர் மீது குற்றப்பிரிவுகளில் தண்டனை வழங்கிட வேண்டும். அண்டை மாநில அரசுகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்துதலும் அவசியமாகிறது.
மாநில அளவில் இயங்கும் மருந்து உற்பத்தியாளர்கள், மொத்த ,சில்லறை வணிகர்கள் எல்லோரையும் இணைத்து விழிப்புணர்வு மற்றும் சட்ட முடிவுகள், சுற்று சூழல் பாதிப்புக்களை பற்றி புரிதலை உருவாக்குதல் அவசியம்.
அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நிர்வாகத்தினரை வருடத்திற்கு இரண்டு முறை அரசே அழைத்து பேசி ஒருமித்த கருத்தை உருவாக்கி எல்லோரையும் உள்ளடக்கிய ஆலோசனை குழுவும், கண்காணிப்பு நடவடிக்கைக்கான செயல் திட்டத்தையும் உருவாக்குதல் அவசியம்.
இவை அனைத்தையும் காலத்தோடு செய்வது ஒரு பெரும் அபாயத்திலிருந்து மண்ணையும் , சுற்று சூழல் மாசு படுதலையும் காத்திட உதவும் . நாமும் அத்தகைய பணிகளுக்கு துணையாக நிற்போம்.
கட்டுரையாளர்:

என்.சிவகுரு,
தஞ்சை
மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளாக சிறு தொழில் முனைவோராக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பல இடதுசாரி முற்போக்கு அமைப்புக்களில் பணியாற்றி வருகிறார். நூல் வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். மருத்துவ துறை சார்ந்த ஏராளமான கட்டுரைகளை கடந்த 15 ஆண்டுகளாக எழுதி உள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மருத்துவ கழிவுகள் (Medical waste): துரத்தும் நெருக்கடி
கட்டுரை ஆசிரியர் குறிப்பிடும் மருத்துவ கழிவு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே நாம் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. மருத்துவம் கார்பரேட் மயமாகி விட்ட நிலையில், ஒவ்வொரு மருத்துவ கார்ப்பரேட்டும் தங்களுடைய CSR நிதியை கழிவுகளை பராமரிக்க ஒதுக்குவதை கட்டாயமாக்க வேண்டும். கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடுவதைப் போல தமிழக அரசு மருத்துவ கழிவுகளை பராமரிப்பது / நிலம், நீர் நிலைகளில் மருத்துவ கழிவுகள் கலக்காமலிருக்க அரசு
மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை நிர்வகிக்க சிறந்த மேலாண்மையை உருவாக்க வேண்டும். மருத்துவ மனைகளில் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறபடுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!