கவிதை : மருந்தே | Poem - Medicine

என்னைப் பெற்றவளை விட
பெருமையுடைவள்
நானென்று சொன்னவள் அல்லவா…..
நீ!

பத்துமாத
என் தாயின் கருவறையைவிட….

காலமெலாம் என்னை
இதயத்தில் சுமப்பதாகச்
சொன்னவள் அல்லவா….
நீ!

நான்
உன்னைப் பார்க்க முடியாத
நாட்களெல்லாம்
உன் வீட்டுத் தோட்டத்துப்
பூக்களை…….
செடிகளே சூடிக்கொள்ளுமென
சூட்சுமத்தை உள்ளே வைத்து…
என் தலைக்குள்
மயக்கத்தை உண்டுபண்ணவளல்லவா
நீ!

வேண்டி வேண்டி
கேட்ட போது…..
மண்டு மண்டு என்று
மலர்ச் சொற்களால்
அர்ச்சனை செய்து விட்டு….

நீ பார்க்காத காலங்களில்
யாருக்காக
நான் பூச் சூடிக் கொள்வேன் என
அப்படியே…… என்னை
ஆகாயம் பறக்க வைத்தவள்
அல்லவா…. நீ!

நான் உன்னைக் காணுகின்ற காலங்களில்
ஒற்றைப் பூவை மட்டுமே
சூடிக்கொண்டிருப்பாயே?!
ஏனென வினவிய எனக்கு
ஒற்றைப் பூவல்ல….
அது நீ என்று விடை பகிர்ந்து
விக்கித்துப் போக வைத்தவளல்லவா
நீ?

அறுசுவைக்குள்
அடங்கா…. தனிச்சுவையல்லவா
நீ!

ஒன்பான் சுவை தாண்டும்
ஒப்பற்ற ஒரு சுவையல்லவா
நீ!

இப்படித்தானே உணர்ந்தேன்;
உன் நெருக்கத்தை நான்!

நெருப்புச் சுவையொன்று
உன்னுள்
கனன்று கொண்டிருந்ததை

உணர முடியாததினால்…
நான் மட்டுமா
கருகிப் போனேன்?
என் காதலும் எறிந்துப் போனதடி!

கண்ணீரா
இப்பெருந்தீயை
அணைத்து விடப்போகிறது?

கண்ணீரா
வெந்து போனக் காயத்திற்கு
மருந்தாகி விடப்போகிறது?

உனையன்றி
வேறு மருந்தேதடி?
எனக்கு!

 

எழுதியவர் 

கவிஞர் பாங்கைத் தமிழன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *