மருத்துவம்: எதற்கு எது மாற்று? – அ.குமரேசன்

 

உலகளாவிய கவலையைக் கொண்டுவந்துள்ள கொரோனாவால் ஓர் ஆக்கப்பூர்வமான விளைவும் ஏற்பட்டிருக்கிறது! மாற்று மருத்துவ முறைகளில் கவனம் ஈர்கப்பட்டிருக்கிறது, ஒருங்கிணைந்த மருத்துவம் பற்றிய உரையாடலகள் நடக்கின்றன.

“மாற்று மருத்துவம்” என்று அடையாளப்படுத்துவதை அப்படியே ஏற்பதற்கில்லை. அந்தச் சொல்லாடல் நவீன மருத்துவம் என்றும் ஆங்கில மருத்துவம் என்றும் குறிப்பிடப்படுகிற அலோபதி சிகிச்சை மட்டுமே முறையான மருத்துவம், மற்றவை அதற்கு மாற்று என்ற பொருளைத் தருகிறது. பரம்பரையாக இருந்துவரும் மருத்துவ முறைகளிலிருந்து விலகி அவற்றுக்கு மாற்றாக வந்த ஒரு மருத்துவம், அவற்றையெல்லாம் மாற்று மருத்துவம் என்று சொல்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னணியில் அலோபதியில் உள்ள அறிவியல்பூர்வ செயல்பாடுகள் மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரம், சந்தை உள்ளிட்ட காரணிகளும் இருக்கின்றன.

அது மட்டுமே அறிவியலா?

அறிவியல்பூர்வ செயல்பாடுகள் என்கிறபோது, சோதனைச் சாலைகளில் மருந்துப் பொருள்களின் மூலக்கூறுகளில் உள்ள வேதித்தன்மை, அது நோய்காரணிகளின் மூலக்கூறுகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்று ஆராய்ந்து, அந்த முடிவுகளை அடிப்படையாகக் கொள்வது என்ற வழிமுறை அலோபதியில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், இது மட்டும்தான் இறுதியான அறிவியல் முறையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தக் கேள்வியின் நியாயத்தை மறுப்பதற்கில்லை. நிச்சயமாகப் பல மாறுபட்ட வழிமுறைகளும் அறிவியலில் இருக்க முடியும். அவற்றையும் அறிவதே அறிவியல் மனப்பான்மையாக இருக்க முடியும்.

அலோபதி அல்லாத பிற மருத்துவ முறைகளின் சார்பில், தங்களது மருந்துகள் அல்லது சிசிச்சைகள் உடலில் இன்னின்ன வகையில் செயல்படுகின்றன, நோய்க் காரணிகளை இன்னின்ன வகையில் சரிப்படுத்துகின்றன என்று நிறுவுகிற ஆராய்ச்சி முறைகள் நிச்சயமாகத் தேவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகின்றன, பல்லாயிரக் கணக்கானோர் குணமடைந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை அடிப்படையில் மட்டும் முன்வைப்பது சரியாகுமா?

அப்படிப்பட்ட, தங்களுக்கான அறிவியல்பூர்வ ஆராய்ச்சி முறைகள் என ஏற்கெனவே இந்த மருத்துவ முறைகளில் இருக்கின்றனவா? இருக்கின்றன என்றால், இன்றைய பெருந்தொற்று போன்ற சவால்களை எதிர்கொள்வதிலும், புதிய நிலைமைகளுக்கு ஏற்பத் தற்காலப்படுத்திக்கொள்வதிலும் அந்த ஆராய்ச்சிகள் எந்த அளவில் இருக்கின்றன? எவ்வாறு ஆவணப்படுத்தப்படுகின்றன?

ALLOPATHY Vs ALTERNATE எது எனக்கான மருத்துவம்?! | ALLOPATHY Vs ALTERNATE  What is medicine ?! - Dinakaran

வெளிச்சம் தேவை

கார்ல் மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன்னுடைய விற்பனைச் சரக்குக்கான வாடிக்கையாளர்களையும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கும். அதேவேளையில் அதை மீறி மனிதகுலத்திற்கு மெய்யன்போடு தொண்டாற்றும் பாதைகளில் வெளிச்சம் ஏற்றப்பட்டாக வேண்டும் – மருத்துவத்திலும்.

சந்தையில் விலைபோகும், லாபம் வரும் என்று தெரிந்தால் எதையும் விற்பனைச் சரக்காக எடுத்துக்கொள்ளவும் முதலாளித்துவம் தயங்காது. அதைப் புரிந்துகொண்டு மருத்துவ ஆராய்ச்சிகளை வளர்க்கிற, வெற்றியை நிறுவுகிற பொறுப்பு எல்லா மருத்துவ முறைகளுக்கும் இருக்கிறது.

மக்களுக்கே அறிவியல் என்ற லட்சியத்தாடு இது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அறிகுறி. ஒருங்கிணைந்த மருத்துவம் என்பதை விட, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்ற குரல் ஒலிக்கிறது. ஒருங்கிணைந்த முறை என்றால் எல்லா வகை மருந்துகளையும் ஒரு ‘டோஸ்’ கொடுப்பதல்ல. ஒரு மருத்துவமனையில் எல்லா வகையான சிகிச்சைகளும் கிடைக்க வேண்டும். அனைத்து முறைகளும் சார்ந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நோயுடன வருகிறவருக்கு எந்த முறையிலான சிகிச்சை அளிப்பது என்பதை, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அந்தக் குழு முடிவு செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகளுக்கான ஆலோசனை அறைகளும், மருந்து வழங்கல்களும், சிகிச்சைக் கூடங்களும் அமைக்கப்பட்டிருப்பது நல்ல வளர்ச்சிதான். ஆனால், எந்த சிகிச்சையை எடுத்துக்கொள்வது என்பதை முடிவு செய்வது நோயாளியின் பொறுப்பில் விடப்படுகிறது. அதற்கு மாறாக, மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகள் என்ற பிரிக்கப்பட்டிருக்கும் நிலை மாறி, ஒருங்கிணைந்த அணுகுறைக்கு வழி செய்யப்பட வேண்டும்.

என்ன பெயர் சூட்டினாலும்…

மரபுவழி, நவீனம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளுங்கள், தேவைப்படுவது ஆதார அடிப்படையிலான மருத்துவம்தான் என்ற தெளிவுறுத்தலும் ஒலிக்கிறது. நவீனம் என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்ல, கருவிகள் அல்ல. காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்பச் சிந்தனையிலும் வழிமுறையிலும் ஏற்படுத்திக்கொள்ளும் வளர்ச்சிதான் நவீனம். அது அனைவருக்குமானதாக இருப்பதுதான் மேன்மேலும் நவீனம். அரசியல், பொருளாதாரம், கல்வி என அனைத்துக்கும் இது பொருந்தும். மருத்துவத்திற்கும் பொருந்தும். ஆராய்ச்சிகள் பலவகையாக இருக்கலாம், மருந்துகள் மாறுபடலாம், அறிவியலும் அதன் நோக்கமும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

மருத்துவத்துக்காக மக்கள் இல்லை, மக்களுக்காகத்தான் மருத்துவம் என்ற கொள்கை இருந்தால் உண்மையான, முழுமையான, ஆதார‘ அடிப்படையிலான, அனைவருக்குமான அறிவியல்பூர்வ நவீனம் ஒருங்கிணைந்து நிலைநாட்டப்படுவதை வருங்கால வரலாறு பதிவு செய்யும்.