கவிதைகள் வாசிப்பது என்பது மனதிற்கு ஒரு இதமான அனுபவத்தை எப்போதுமே தரும். குறுங்கவிதைகளானாலும் சரி, நெடுங்கவிதைகளானாலும் சரி, அதனுள் பொதிந்த அர்த்தம் நம்மை தொடர்ந்து அந்த கவிதையினை அசைபோட வைத்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு தொகுப்பு “மீகாமம்”. வெளிவந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளை நெருங்கியும் இன்னும் உயிர்த்திருகின்ற கவிதைகளைக் கண்ட தொகுப்பு இந்த மீகாமம்.

க.மோகனரங்கனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. அப்போதிருந்த அதீத உற்சாகமும் அசட்டுத்தனமான கிளர்ச்சியும் இப்போதில்லை. எனினும் சொற்களின் மீதான காமம் இப்போதும் அடர்வாக தொடரவே செய்கிறது. தோன்றினால் எழுதுவது என்னும் விட்டேற்றியான மனநிலையுடன் கூடிய நிதானமான எழுத்து முறை எனது என்று தன்னடக்கத்துடன் ‘சொல்லின் நிழலில்’ என்று தன்னுரை தந்திருக்கின்றார்.

ருசி…

“ஒவ்வொரு
முறையும்
ஒரு
முத்தத்தின்
மூலம்
நீங்கள் பருகுவது
ஒரே
கடலின்
வெவ்வேறு
உப்புகளை.”

முத்தத்தை கன்னத்தில் இடுவதால் உப்புச்சுவை இருக்குமோ? ஆனந்த கண்ணீர் வடிக்கும் பொழுது வழிந்தோடும் கண்களில் கூட உப்பு சுவை இருக்குமோ? அடடா! இவர் ருசி பற்றி அல்லவா சொல்லி இருக்கின்றார். எந்த ருசியும், எந்த முத்தங்களும் ஒரே கடலில் இருந்து பெறப்படுகின்ற வெவ்வேறு உப்புகளின் உவப்பேயாகும்.

தீர்ந்தமுத்தம்…

“என்
பிணைமான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய்ச்சிறு நீர்
இம் முத்தம்”

‘இன் நிழல் இன்மயான் வருந்திய மட பிணைக்கு’ என்கிறது கலித்தொகை. கோடை காலத்தின் வெப்பத்தின் சாயல் தன் இணைமானைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக தான்தாங்கி, தன் நிழலை பிணைமானுக்கு ஈயும் என்கிறது மேற்சொன்ன கலித்தொகைப் பாடல். இந்தப் பாடலின் சாராம்சம் ‘தீர்ந்த முத்தம்’ எனும் ஏக்கமாக இக்கவிதை வரிகளில் தென்படுகிறது.

துளியும் கடலும்…

“எவ்வளவுதான் நீவினாலும்
சரி செய்ய முடியாத
பழந்துணியின்
சுருக்கங்களைப் போல, வருத்தங்களால்
சோர்ந்துவிட்ட வுன்
மனதை மாற்ற
வழி அறியாது
குழம்பி நின்றவன்.
உரையாடலின் நடுவே
அபத்தமாக எதுவோ
சொல்லி வைத்தேன்.
நிழல்கள் கலைய
சட்டென்று ஒளிரும்
முகத்துடன்.
கண்களைத் தழைத்தபடி
சிரிக்கத் தொடங்கினாய் நிமிடத்திற்கும் மேலாக
நீடித்து சிரிப்பில்
புரையேற உன்
விழியோரத்தில் திரண்டது ஒருதுளி நீர்.
தொட்டு அதைத்
துடைக்க முடியாத தவிப்பில். எனக்குள் அப்போது
வெட்டுண்டு தவித்தது
ஒரு கை.
உதிர்ந்தும் உலராத
அந்த வொரு
துளியால்
தளும்பிக் கொண்டிருக்கிறது இப்போதுமென் கடல்.”

இது ஒரு தேற்றுதல் சம்பவத்தை எடுத்து இயம்புகிறது. நாள்பட்ட பழந்துணியின் சுருக்கங்களை எத்தனை முறை நீவி சரி செய்தாலும் அது சுருண்டு கொண்டே இருக்கும். அதே போன்று மிகுந்த வருத்தங்களால் சோர்ந்து விட்ட அவளுடைய மனதை மாற்ற அபத்தமாக ஏதோ ஒன்றை சொல்கிறான் அவன். இதனுடைய தாக்கத்தில் அவளது முகம் பிரகாசிக்கிறது. பொய்யென்று தெரிந்தும் இப்படியாவது சொல்லுகின்ற மனத்தினை கொண்டிருக்கிறானே என்று தாகமாகவே கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்கிறது. அந்த கண்ணீரைத் துடைக்க வராது தவித்து நிற்கிறது இவனது கை. இப்போது அவளது மனம் கடல் போல் தளும்பி கொண்டிருக்கிறது. இதைவிட வேறப்படி அவளினுடைய வலியினை சொல்லிவிட இயலும்.

தீயிட்டபின்…

“திரும்பி
யாரும்
பார்ப்பதில்லை
சிதை
எரியும்
வெளிச்சத்தில்
தெரியும்
நிழலிட்ட
உலகின்
அழகை”

பொதுவாக சிதைக்கு தீமூட்டிய பின் திரும்பிப் பார்க்காது செல்லச் செல்வர். மீண்டும் திரும்பிப் பார்த்தால் ஒருவேளை எரியூட்டப்படும் அந்த உடலைக் கண்டு மீண்டுமொருமுறை வெடித்து அழக்கூடுமே என்று கூட இருந்திருக்கலாம். ஆனால், இங்கே அந்த எரிகின்ற வெளிச்சத்தில் நிழலிட்ட உலகின் அழகு தெரிவதாதாகக் காட்சிமைப்படுத்தியிருக்கின்றார். ஆம். இந்த எரியூட்டப்படுகின்ற தாயோ தந்தையோ அவர்களின் நிழல் தானே நாம். அந்த அழகினைக் கூட பார்க்க இயலாது திரும்பி வருவது எத்தனை வேதனை.

கொஞ்சம்போல…

“கூட்டிலிருந்து
விழுந்தெழுந்து
பயத்தோடு
பறக்கக்
கற்றுக்கொள்ளும்
குஞ்சுப் பறவைக்காக
குனிந்து கொடுக்கிறது
வானம்”

எவ்வளவு அழகியல் சார்ந்த வரிகளைத் தாங்கிய கவிதை இது. குஞ்சுன்று பயத்தோடு பறக்க கற்றுக் கொள்கிறது. அந்த பறவைக் குஞ்சு விழுந்து விடக்கூடாது என்று குனிந்து கொடுக்கிறதாம் வானம். வானத்தினுடைய எண்ணம் போல் நமக்கும் எண்ணம் வர வேண்டும்.

அந்தி…

“இன்னும்
ஏற்றவில்லை
என் விளக்கை ;
உலகத்தை இருட்டு,
உள்ளத்தை இருட்டை
விழங்கட்டுமெனக் காத்திருக்கிறேன்”

அகத்து இருட்டை வெளியில் அந்தி சாய்கின்ற போது இயற்கையாக வரும் இருட்டு விழுங்கட்டும் என்று தாம் விளக்கு ஏற்றாமல் காத்திருப்பதாகப் பாடுகிறார். அந்தியின் சாயலை விளக்கின் ஒளியோடு ஒப்பிட்டு பாடி இருப்பது சிறப்பு.

அம்மாஅறியான்….

“வீரம் காட்டி
வென்று முடித்த மதர்ப்பில்
கவசம் களைந்து
கைவாள் துறந்து
விறைத்த
புத்தியும் உடலும்
சற்றே தளர
படுக்கையின்
புறத்தை சாய்கிறான்
ஆடை தேடி
மூடிக்கொண்ட பிறகு
அவிழ்த்து கூந்தலை
அள்ளி முடித்தவள்
அவனது
வியர்த்த நெற்றியில்
சிகையை ஒதுக்கி ஈந்தாள்
சிறு முத்தம்.
காமம் சற்றும்
கலவா அவ்விதழ் ஒற்றலில்
கட்டிலொடுங்கி
தொட்டிலாகி
அசைய
அதில்
கவிழ்ந்துறங்கும்
கைகால் வளர்ந்த குழந்தையை, உதட்டில் நகையுடன்
உற்று நோக்கும்
அணங்கவளை
அவன்
அறிந்ததில்லை.”

போரில் வீரம் காட்டி வென்று முடித்த அந்த வெற்றிக் களிப்பில் வந்த உறங்குகின்ற அந்த வீரத்திருமகனாம் தன் கணவனுக்கு ஈந்து தருகின்ற முத்தம் மழலைச் செல்வத்திற்கு கொடுக்கின்ற முத்தத்தை போல் இருப்பதாக பாடுகிறார். அவன் அறிந்ததில்லை என்று முடித்திருப்பது உண்மைதானோ என்று தோன்றுகிறது. ‘கைகால் வளர்ந்த குழந்தை’ எத்தனை அழகான சொல்லாடல்.

அன்பின்வழியது….

“ஒரு தீப்பெட்டி. மண்ணெண்ணெய்ப் பொட்டி நான்கு முழக்கயிறு
எலி மருந்துப் பொட்டலம்
இவையெல்லாம்
எளிதாகக் கிடைக்கிற உலகில், அடுத்த மனிதன் மீதான
அக்கறைதான் கிடைத்தற்கு
அரிய பொருளாகிவிட்டது. புதைந்து கொள்ளவொரு மடியெற்று போன துரதிஷ்டத்திற்காக
ஒருவன்
தன் தலையைக் கொண்டு போய் தண்டவாளத்தில் வைக்க வேண்டுமா?
கூவென்று
கூவியபடி கடந்துபோகும் ரயிலை விதியென்று கூறி
வேடிக்கை பார்த்து நகரும்
நமக்கு வாய்த்திருக்கும்
சமாதான சகவாழ்வின் மீது பூத்திருக்கும்
பூஞ்சை காளானின் பெயர்தான் அன்பு”

தற்கொலை செய்து கொள்ள எத்தனை எத்தனையோ வழிகள் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. கவலைகளைப் புரிந்து கொண்டு தேற்றும் ஒரு மடி இல்லாதது ஒரு துரதிஷ்டமே. அந்த துரதிர்ஷ்டத்திற்காக அவன் தலையை கொண்டு போய் தண்டவாளத்தில் வைக்கத்தான் வேண்டுமா? அந்த ரயிலை விதி என்று நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? அன்பைச் செலுத்தி ஆட்கொள்வது எந்தச் சூழ்நிலையிலிருந்தும், எவரையும் மீட்டெடுக்கும். அன்பின் வலியது என்று இடுவதற்கு பதிலாக அன்பின் வழியது என்று கூறியிருப்பது அன்பின் வழியினை காண்பிக்கின்றதாகவே தோன்றுகிறது. பூஞ்சை காளானின் பெயர் தான் அன்பு என்று முடித்திருப்பதில் பூஞ்சை காளான் என்பது நன்மை செய்யக்கூடிய ஒன்று. இந்த அறிவியல் பூர்வமான உண்மையை பொருத்தமா இட்டிருப்பது சிறப்பு.

மோகனரங்கனின் தேர்ந்த சங்க இலக்கிய வாசிப்பை ஆங்காங்கே நிறைய கவிதைகளில் காண இயலுகிறது. கூடவே தேவார திருவாசகபாடல்களின் தாக்கத்தையு. அந்த தாக்கத்தின் பிரதிபலிப்பை நிறைய கவிதை வரிகளில் காண இயலுகிறது. ‘தொழுகை’ எனும் தலைப்பில் வரும் ‘தோடுடைய செவி’ , ‘தீர்ந்த முத்தம்’ தலைப்பில் ‘சுனைவாய்ச்சிறு நீர்’ , ‘பெருந்துணை’ கவிதையில் வரும் ‘சிறுகோட்டுப் பெரும்பழம்’, ‘துணை மயக்கம்’ கவிதையில் வரும் ‘செம்புலப் பெயல் நீர்’, ‘வியத்தலும் உளமே’ எனும் கவிதையில் வரும் ‘நீர்வழிப்படூ உம்’ இப்படிச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அனைத்து கவிதைகளையும் எடுத்து இயம்பி, அதன் அழகைச் சொல்லி இருக்கலாம். ஆனால் வாசிக்க தூண்டுவதற்கு, ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப் போல் சில கவிதைகளை இங்கே சான்றுகளாக்கி வாசிக்க தூண்டி இருக்கிறோம்.

எவ்வளவு வெளிச்சத்தில் எழுதினாலும், எழுதிய கணமே ஒவ்வொரு வரியிலும் அதன் நிழல் விழுவதை என்னால் உணர முடிந்த போதிலும் தடுக்க முடியவதில்லை. எழுதி முடித்த பின் அது தருகிற நிழலையும், ஆறுதலையும் வேறு எதிலும் பெறவியலாது என்று மோகனரங்கன் தன்னுரையில் சொல்லி இருப்பதை நாம் உணர இயலுகிறது. அந்த நிழலில் நாமும் இளைப்பாற முடிகிறது. அந்த வெளிச்சத்தை நாம் கண்ணுற முடிகிறது. நிழலோடு நிழலாக நாம் இருந்து உணரவும் இயலுகிறது.

                       நூலின் தகவல்

நூல் : “மீகாமம்”

ஆசிரியர் : க.மோகனரங்கன்

வெளியீடு : தமிழினிவெளியீடு

பக்கங்கள் : பக்கங்கள் 48.

விலை : ரூ.50

                          எழுதியவர் 

                   தானப்பன் கதிர் 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *