நூல்: குறத்தியம்மன்
ஆசிரியர்: மீனா கந்தசாமி, தமிழில் பிரேம்
வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்
விலை ரூ.200.00
மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் ‘The Gypsy Goddess’ என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நாவல் தமிழில் பிரேமால் ‘குறத்தியம்மன்’ என்ற பெயரில் பெயர்க்கப்பட்டு அணங்கு வெளியீடாக வரப்பெற்றுள்ளது. 1968 டிசம்பர் 25 அன்று நிகழ்த்தப்பட்ட கீழ்வெண்மணி படுகொலைகளை மய்யமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நவீனப் பிரதி. கதை நிகழும் களமும் கதை சொல்லியும் தமிழ் என்பதால் இந்நாவல் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகவன்றி நேரடி தமிழ் நாவலாகவே தன்னைச் சொல்லிச் செல்கிறது. பிரேமின் பெயர்ப்பும் இந்த உணர்வுக்கு பெரிதும் தொழிற்பட்டிருக்கிறது. காலத்தையும் சம்பவத்தையும் கலைத்து முன்பின்னாக மாற்றி நேர்கோட்டு கதைசொல்லும் முறையைத் தவிர்த்து எழுதப்பட்டுள்ளது இந்நாவல். நாவலின் மிகப் பெரிய பலம் உண்மை சம்பவங்களில் இருந்து ஊர்கள், பெயர்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளது – இக்கதையாடல் உத்தியானது கதையில் எது உண்மைச் சம்பவம் எது புனைவாகச் சேர்க்கப்பட்டது என்பதறிய இயலாமல் முயங்கி படைப்பூக்கம் மிக்க செயல்பாடாக நாவலை உயர்த்தியுள்ளது.
நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ண நாயுடு 1968 மே 1 (தேதியைக் கவனியுங்கள்) அன்று அப்போதைய மாநில முதல்வர் அண்ணாதுரைக்கு விவசாயக் கூலிகள் – கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டு செய்யும் அட்டூழியங்கள் (?) குறித்தும், கம்யூனிஸ்ட்டுகளால் தனக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறித்தும் எழுதிய முறையீட்டு விண்ணப்பத்துடன் தொடங்குகிறது நாவல். இந்த விண்ணப்பத்தை கோபாலகிருஷ்ண நாயுடு சொன்ன தகவல்களை வைத்து தயார் செய்ததே கதை சொல்லிதான் என கதைப்போக்கில் பிற்பாடு சொல்லப்படுகிறது. இது போன்ற பல விசயங்களில் இந்நாவல் ஒரு பின்நவீனத்துவப் பிரதியாகத் தோற்றம் தந்தாலும் (கதை சொல்லியால் அது அவ்வப்போது வாசகருக்கு நினைவூட்டப்பட்டாலும்) மிகக் கவனமாக ஒரு நேர்கோட்டுத்தன்மையும் பிரதியில் ஊடாடுகிறது – முகவுரையில் தொடங்கி ஏற்ற வரிசையில் தொடரும் பாகங்கள் – அவற்றில் கதை சொல்லும் முறை குறித்த சொல்லாடல் – தலைப்புத் தேர்வு குறித்த விவரணைகள் – மிராசுதார் அறிமுகம் – தொழிலாளர் நிலை – படுகொலைக்கு முன் அதற்கான தயாரிப்பு நிகழ்வுகள் – படுகளம் – படுகொலைக்குப் பின் நிகழ்களத்தின் நிலை – வழக்கு நிலவரங்கள் – முடிவுரை அதில் கோபாலகிருஷ்ண நாயுடு கொல்லப்பட்ட சேதி என்ற கதைத்தன்மை இடையறாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
மிராசுதார்கள் அறிமுகப் பகுதியிலேயே இப்பிரச்சினையானது வெறும் வர்க்கப் பிரிவினையால் மட்டுமே உண்டானதல்ல என்பதையும் ஆதிக்க சாதி மனப்பான்மை எவ்வாறு இதனடியில் தொழிற்படுகிறது என்பதையும் மிராசுதார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணையார்கள், நிலச்சுவான்தார்களின் பெயர்களின் பின்னொட்டிலிருந்தே சொல்லிவிடுகிறார் கதைசொல்லி – கீழ்வெண்மணி கிராமப் பண்ணையார் கணபதி நாடார், நெல் உற்பத்தியாளர் சங்கக் கூட்டம் நடக்கும் ராமுத்தேவர் வீடு, வெளியூர்களில் இருந்து கூலிக்காரர்களைக் கொண்டு வரும் பக்கிரிசாமி பிள்ளை, தன் தெரு வழியாகச் சேரி மக்கள் நடப்பதைப் பார்த்தால் கல்லால் அடிக்கும் அந்தக்குடிச் சின்னச்சாமி அய்யர், எப்போதும் வம்பு பேசும் சம்பந்தமூர்த்தி முதலியார், நாகப்பட்டினம் வட்டிக்கடை மிராசு காயாரோகணம் செட்டியார், சங்கத்தின் செயலாளரும் சட்ட ஆலோசகருமான வக்கீல் சேஷப்ப அய்யர், திமுக பிரமுகர் விநாயகம் நாயுடு என்ற தமிழ் இடைநிலை ஆதிக்க சாதிகள் எல்லாம் சேர்ந்து, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய போது அதற்கு எதிராக ஆற்றிய கொடும் எதிர்வினையே கீழ்வெண்மணி படுகொலைகள்.
சீரான தன்மையில் சொல்லப்படும் கதையாடல்களை விட இப்பிரதியானது ஏற்படுத்தும் பாதிப்புகள் பாரியமானது. மேலும் பிரதியானது எல்லா அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் அவற்றின் போதாமைகளையும் புறக்கணிப்புகளையும் கோடிட்டுச் செல்வதோடு நிறுவனத்தன்மையையும் பகடி செய்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற சனநாயகத்தில் ஈடுபட்டதும் அதன் வேகமும் புரட்சித்தன்மையும் சமரசம் செய்து கொள்ளப்பட்டு அதன் நடவடிக்கைகள் நீர்த்துப் போனது பற்றிய பதிவுகள் குறிப்பிடத்தக்கது. அதே போல் பாமரர்களுக்கான கட்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக எவ்வாறு இடைநிலை சாதி ஆதிக்கத்திற்கும் நிலச்சுவான்தார்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டது என்பதையும் இயல்பாகவே மிராசுதார்கள் காங்கிரஸ் பிரமுகர்களாக இருப்பதையும் பிரதி தொடர்ந்து பேசிச் செல்கிறது. குறிப்பாக ‘போர்க்களம்’ மற்றும் ‘இடுகாடு’ ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்ட அமைப்புகளுக்கும் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிரான குரல் பிரதியெங்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவும் கீழ்வெண்மணியில் 44 தலித் உதிரி விவசாயக் கூலிகளைக் கொளுத்திய நெருப்பின் அடங்கிய தணலாய் கனன்று கொண்டேயிருக்கிறது – எப்போது வேண்டுமானாலும் வெடித்துப் பற்றிக் கொள்ளுமோ என்ற பதற்றமும் ஏற்படுகிறது.

பெரியார் கீழ்வெண்மணி குறித்து காட்டிய தயக்கத்தையும் பிரதி சுட்டிக்காட்டாமல் விடவில்லை. (பெரியார் கீழ்வெண்மணி படுகொலைக்கு இரு நாட்களுக்குப் பின்னர் ஒரு சாதாரண அறிக்கை விடுகிறார். அவர் இந்நிகழ்வு குறித்து இன்னும் பெரிதான அக்கறை காட்டியிருக்கவும் அரசுக்கும் நிலச்சுவான்தார்களுக்கும் எதிராகக் கடும் நெருக்கடியும் கொடுத்திருக்க வேண்டும் என்பதே என் போன்றோரின் கருத்தாகும்) அதற்குப் பின் நாகப்பட்டினத்தில் வேறொரு கூட்டத்திற்கு பெரியார் வந்தபோது கோபாலகிருஷ்ண நாயுடுவை சந்தித்ததாக நாவலில் குறிப்பிடப்பட்டு அதனையறிந்து கீழ்வெண்மணி மக்கள் வருத்தப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது. (பசு.கவுதமன் உள்ளிட்ட பெரியாரியர்கள் பலர் இது குறித்து பேசும்போது பெரியாரை கோபாலகிருஷ்ண நாயுடு சந்திக்க அனுமதி கேட்டது உண்மைதான் எனவும் ஆனால் பெரியார் அதற்கு கடும் எதிர்வினையாற்றி நாயுடுவை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் அதுவே நடந்த உண்மை நிகழ்வு என்றும் மறுத்துள்ளனர்) இப்படியாக பெரியார் மீதான வருத்தத்தை பிரதி தன்னகத்தே கொண்டுள்ளது போலவே திமுக, கம்யூனிஸ்டுகள், காவல்துறை, நீதிபதிகள் முதற்கொண்டு பிரதியின் கட்டுடைப்புக்கு எவரும் எதுவும் தப்பவில்லை. அதன் வழியே பிரதி சகல அதிகாரத்துக்கு எதிரானதாகவும் தன்னை கட்டமைத்துக் கொள்கிறது. தலித்திய புனைவுகளுக்கு ஆதாரத் தகுதியான இதன் மூலம் தலித்திய பிரதியாகவும் உருமாறுகிறது.
கொலை படு களம் பற்றிய விவரணைகளும் அது தொடர்பான பாதிக்கப்பட்டோர் வாக்குமூலங்களும் மனதைப் பிசையும் இடங்கள். பிரயத்தனங்களூடேதான் பொங்கும் கண்களைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. எள்ளல், பகடி, அ-நேர்கோட்டுத்தன்மை எல்லாவற்றையும் தாண்டி நாவலைப் படித்து முடித்ததும் ஒரு பாழ் வெறுமையும், இயலாமையினால் உண்டான ஆத்திரமும் அமைப்புகளின்பால் ஏற்படும் அவநம்பிக்கையும் – இந்நாவலின் வெற்றியாகும். பல கேள்விகளை எழுப்பிச் செல்லும் பிரதி – அதற்கான விடைகளைத் தேடும் பொறுப்பையும் நம்மிடம் தந்து விட்டே செல்கிறது. தேடுவோம்…!
காலந்தோறும் அதிகார அமைப்புகளால் கீழ்வெண்மணி, திண்ணியம், விழுப்புரம், ஊஞ்சனை, மேலவளவு, தாமிரபரணி, பரமக்குடி, தூத்துக்குடி என்று வரலாறு மீண்டும் மீண்டும் தன்னை அழித்தெழுதிச் செல்கிறது. இப்பிரதி கீழ்வெண்மணியை மீண்டும் எழுதிச் செல்கிறது – அதிகாரத்திற்கெதிரான ஒடுக்கப்பட்ட நவீன மனதின் நோக்கில்…!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அவசியம் படித்தும் வேண்டிய பிரதி குறத்தியம்மன்.மீனா கந்தசாமி, பிரேம் இருவரையும் வாழ்த்துகிறோம்.