மீனாசுந்தர் எழுதிய "வெப்புள்" நாவல் புத்தகம் | Meena Sundar's Veppul Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: மீனாசுந்தர் எழுதிய “வெப்புள்” நாவல்  – நூல் அறிமுகம்

மானுடப் பறவையொன்றின் வாழ்வளக்கும் தேடல்..“வெப்புள்” நாவல்

இளையவன் சிவா

எளிய மனிதர்களின் வாழ்வைக் கலைநேர்த்திடன் தொடர்ந்து படைப்புகளின்வழி பதிவு செய்து வருபவர் மீனாசுந்தர். தேர்ந்து கொண்ட களத்தின் உயிர்ப்பை வாசகருக்கும் கடத்தும் வண்ணம் மண்ணின் மொழியில் அவரது அண்மைப் படைப்பாக “வெப்புள்” நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமெனப் போற்றப்பெறும் தஞ்சையின் அடித்தட்டு வாழ்வுநிலையைக் கொண்ட விவசாயக்கூலியின் பாடுகளைச் சேறும்சகதியுமாய் கதை நெடுகிலும் விவரித்துச் செல்லும் இந்நாவல், தெய்வானை என்ற ஒற்றை மனுஷியின் மனத்திண்மையை நதியொன்று கடலை அடைவதைப் போன்று ஆர்ப்பாட்டமின்றி அசலாகக் காட்சிப் படுத்துகிறது.

தெய்வானையின் கணவன் நாச்சிமுத்து. அவர்களுக்கு இடையே ஊடாடிய காதலை நனவோடை உத்தியில் வெளிப்படுத்திய முற்பகுதி வயலுக்கும் வாழ்வுக்குமான அவர்களின் நெருக்கத்தை எடுத்து வைக்கிறது. இவர்கள் நெடுங்காலம் வாழ்ந்து களிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் மண்விழும் வண்ணமாகக் காலத்தின் தீர்ப்பு அமைந்து விடுகிறது. தெய்வானை, மிகக் குறுகிய காலத்திலேயே நாச்சிமுத்துவை இழந்து தவிக்கிறாள். ஆணொன்று பெண்ணொன்றெனத் தன்னை நம்பியிருக்கும் பிள்ளைகளுடன் ஒற்றை மனுஷியாய் அவள் போராடத் தொடங்குகிறாள். உறவுகளும் முழுமையாய் அவளைக் கைவிட்டு விலகுகிறார்கள் என்பது வாசிப்பவர் மனத்தில் பாரத்தை ஏற்றுகிறது. வாழ்வை வெற்றி கொள்ள மனஉறுதி கொண்டவளாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறாள் தெய்வானை. அவளின் மனஉறுதி நம்மையும் பற்றிக் கொள்கிறது.

கதையோட்டத்தில் தொன்மச் சான்று ஒன்று அறிமுகமாகிறது. நாச்சிமுத்து வேலைக்குச் சென்றவிடத்தில் கிடைத்த கற்பலகையில் பெண்ணொருத்தி ஆணொருவனைத் தலைக்கும் மேலாகத் தூக்கி நிற்கும் புடைப்புச் சிற்பமொன்று இடம் பெற்றுள்ளது. பணியாட்கள் அதை அலட்சியமாய் ஓரத்தில் தூக்கிப் போட, உடைந்த கல்லின் ஒரு பகுதியை வீட்டிற்கு எடுத்து வந்து தெய்வானையிடம் காட்டி அதிலுள்ள பெண் அவளெனவும் ஆண் தானெனவும் குறிப்பிட்டு மகிழ்கிறான். நாச்சிமுத்துவை இழந்த பிறகு உடைந்த அந்தக் கல்லையே நாச்சிமுத்துவாக பாவித்து அதன்மீது உயிரையே வைக்கிறாள் தெய்வானை. கற்பலகையைத் தொட்டு வணங்கிய பிறகே அவளது அன்றாட பணிகளைக் கூடத் தொடங்கும் தெய்வானை, பிஞ்சுகளை வளர்த்து ஆளாக்குவதில் எடுத்துக்கொள்ளும் சிரத்தையை, உழைப்பை, பக்தியை தனது பிள்ளைகளுக்கும் கடத்துகிறாள். அந்தக் கல், பிள்ளைகளுக்கு இல்லாத தந்தையை இருப்பதாக எண்ண வைக்குமளவிற்கு தெய்வானை உருமாற்றம் செய்கிறாள்.

சில தூரத்து உறவினர்களின் உதவியுடன் கடைத்தெருவில் கருவாடு விற்பனையைத் தொடங்குகிறாள் தெய்வானை. அவளது நேர்மையும் கடின உழைப்பும் வாக்குமாறாத கைச்சுத்தமும் அவளை அதில் நிலைகொள்ள வைக்கிறது. ஆனாலும் அண்டை வீட்டாரின் பொறாமை அடிக்கடி நச்சுப்பாம்பின் நாவைப்போலத் தீண்டிப் பார்க்கிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாய் நடைபோடும் தெய்வானையின் வாழ்வில் அவளது கனவுகள், இலட்சியங்கள் என்னவாயின என்பதை அலங்காரங்கமின்றி நடைமுறை வாழ்நிலையுடன இணைத்துப் படைத்தளித்த நாவலாசிரியருக்கு தஞ்சையின் வண்டல்மொழி முழுதாய் மனதுக்குள் இறங்கி வரமளித்திருக்கிறது..

திரைப்படக் காட்சிக்குள் ரசனையைத் துறந்துவிட்டு திரையில் ஓடிக்கொண்டிருக்கும் எந்தக் காட்சியையும் ஏற்றுக்கொள்ளாமல் வேறொன்று நம்மைக் கட்டிப்போடும் மனத்தின் இயல்போட்டத்தைப் போல, ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை நெடுகிலும் நிறைய மனிதர்கள் வலம் வருகிறார்கள். அவர்கள் நமது சொந்த வாழ்வின் கடந்தகால நிகழ்வுகள் பலவற்றையும் நினைவிற்குக் கொண்டு வருகிறார்கள். மனம் நம்மையறியாமல் அவற்றில் லயித்து நிற்கிறது. மலைப்பாதையின் திடீர் வளைவுகளைப்போலத் திருப்பங்களும் துயரங்களும் எங்கேயும் நிகழ்வதற்கு சாத்தியமாக உள்ள பின்புலத்தில், வாழ்வை ரசித்து வாழப் பழகும் மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிப்படுத்துகிறார். எழுத்தின் வழியே வெளிப்படும் நூலாசிரியரின் உயரிய சிந்தனைகளை உணரமுடிகிறது.

தஞ்சை மண்ணிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் வாழும் மக்கள் விழாக்களைச் சிரத்தையுடன் கொண்டாடும் விதத்தையும், அவை தங்கள் வீடுகளில் ஏற்படுத்தும் இரசாயண மாற்றத்தையும் சில அத்தியாயத்தில் பதிவு செய்துள்ள ஆசிரியர், கிராமப்புறச் சடங்குகளுக்குப் பாடப்படும் பாடல்களைக் கதையின் ஊடாகக் கலந்து அதன் போக்கிலேயே செல்வதைப்போல ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பு. மரபுகளைத் தொலைத்து நிற்கும் இன்றைய போலி நகர்மய வாழ்வில் எதிர்காலச் சந்ததிகளுக்கு இப்பாடல்கள் நமது ஆணிவேர்களை அறிமுகம் செய்யும் என்பது உறுதி.

அண்டை வீட்டுக்காரர் தன்னை எட்டி உதைத்து ஏக வசனத்தில் திட்டியபோதும் அதை மனத்திற்குள்ளாகப் புதைத்துக் கொள்ளும் தெய்வானை, மறுநாளே அவ்வீட்டில் நிகழ்ந்த சாவுக்கு முதல் ஆளாக ஒப்பாரி வைக்க ஓடுவது கண்களில் நீரை வரவழைக்கிறது. பிறப்பு ஒருமுறை என்பார்கள். அதுவும் மனிதப் பிறப்பு மகத்தானது. இதில் கோபங்களையும் அதன் வழியேயான விளைவுகளையும் மனதிற்குள் அடக்கி வைத்துக்கொண்டிருந்தால் சக மனிதர்களின் மீதான பேரன்பும் கருணையும் தொலைந்து மிருகங்களாக மாறிவிடும் அபாயமுண்டு என்பதைத் தெய்வானை உணர்த்துகிறாள்.

வெறும் உரைநடைப் பாங்கில் எழுதப்பட்டிருந்தால் இந்தக் கதையின் தாக்கம் நமக்குள் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கப் போவதில்லை.‌ சூழலை விவரிப்பதில் ஆசிரியர் காட்டியுள்ள தனித்த உழைப்பு நம்மை அந்த நிலத்திற்கே அழைத்துச் செல்கிறது. கூலிகளின் வலியையும் வேதனையையும் மகிழ்ச்சியையுமெனக் குடும்பத்தின் சகல பரிணாமங்களையும் களம் நமக்குள் கடத்துகிறது. ஒரேயொரு காட்சியில் வரும் சம்மனசம்மாள் உட்பட நாட்டாண்மை போத்தையன், அல்லிராணி, பொன்னுராசு, தேவிகாவென ஒவ்வொருவரும் தெய்வானையின் வாழ்வுச் சுமையைச் சுமந்து நிற்கிறார்கள். போத்தையன் மனைவி புனிதவதியின் படைப்பு வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சியுற்ற மனுசியின் வெளிப்பாடு. அவளைக் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது.

உடைந்த கற்பலகையும் அதிலுள்ள புடைப்புச் சிற்பமும் நாவலின் இறுதிப் பகுதியில் பிரதானப் பங்கை வகிப்பது புதுமையாகப் படுகிறது. வழமையான கதைப் போக்கிலிருந்து மாற்றம் கொண்டு இக்கதை வேறொரு பரிணாமம் பெறுவதற்கு கற்பலகை துணை நிற்கிறது. எந்த இடத்திலும் தொய்வோ நடுக்கமோ இடையூறுகளோ நேர்ந்திடாமல் கதாபாத்திரங்கள் அவரவர் போக்கில் செம்மையாகப் பயணித்து நேர்மறைச் சிந்தனையை விதைக்குமழகை ரசிக்கத் தோன்றுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் அருகிவரும் வேளாண் வாழ்வை, மக்களின் நம்பிக்கைகளை, தொடர்ந்துவரும் மரபை மீள் உருவாக்கம் செய்து ஆவணப்படுத்தியதில் இந்நாவல் சிறந்த கருப்பொருளை நிலைநிறுத்தி விடுகிறது.. எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சிரத்தையுடன் சேகரித்துத் தந்துள்ள மீனாசுந்தர் பாராட்டுக்குரியவர். “வெப்புள்“ சேற்றுக் கவுச்சியுடன் ஓர் அசலான வாழ்க்கையை அதன் வெக்கை குறையாமல் முன் வைத்துள்ளது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “வெப்புள்” நாவல் (2025)
ஆசிரியர்: மீனாசுந்தர்
வெளியீடு:
நாற்கரம் வெளியீடு
விலை: ₹.280
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 இளையவன் சிவா

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *