புறத்தொடு நிற்றல்- மீனா சுந்தர் | Purathodu Nindra

மீனா சுந்தர் எழுதிய “புறத்தொடு நிற்றல்” – நூலறிமுகம்

பழனியில் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணிபுரியும் மீனா சுந்தர் அவர்கள் பல்வேறு நாளிதழ்களில் எழுதிய நடுப்பக்க கட்டுரைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இவர் ஆறு கவிதை நூல்கள் மூன்று சிறுகதைகள் 5 கட்டுரை நூல்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார் இவரது படைப்புகள் பள்ளி கல்லூரி பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன ஆய்வு மாணவர்கள் இவரது படைப்புகளை ஆய்விற்கு உட்படுத்தி பட்டம் பெற்றுள்ளனர்.

நின்று நிதானித்து மனிதர்களை கவனித்து மனிதர்களுடன் உறவாடி அவர்களின் வாழ்க்கையுடன் துணை நிற்கும் காலகட்டம் இன்றைக்கு நிறையப் பேருக்கு அமைவதில்லை அப்படியான வேகமான நகர்ந்து வரும் இன்றைய உலகத்தில் அறமும் விழுமியங்களும் மனிதர்களுக்கு எவ்விதம் துணை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் கட்டுரைகள் இவை.

இன்றைய காலகட்டத்தில் தனது வாழ்வை மேம்படுத்துவதற்காக மனிதன் ஓடும் ஓட்டத்தில் அவன் செய்பவை எல்லாம் அவனுக்கு நன்மையாக விளைவதை மட்டுமே கருத்தில் கொள்கிறான் அதே சமயம் அறத்தோடு நின்று சமுதாயத்தின் மேன்மைக்காக பாடுபடும் திறமையை அவன் வளர்த்துக் கொள்வதில்லை அந்த வகையில் தன் கண்முன்னே காணும் சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எழுத்தின் வழியே அரவணைத்து வெளிப்படுத்தியும் இந்நூலில் கட்டுரைகள் அமையப்பட்டுள்ளன.

பாதை எங்கும் நீளும் நெருக்கடிகளுக்குள் மலிந்து கிடக்கிறது மனிதம். இன்றைய சமூக அவலங்களைக் கண்டு அவற்றை பற்றி பேசு பொருளாகி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிந்தனைகள் நிறைய மனங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. மனிதத்தை எல்லோரின் மனதிற்குள்ளும் விதைக்கும்படியான எழுத்தையும் சிந்தனைகளையும் இந்நூலில் உள்ள 15 கட்டுரைகள் திறம்பட செயல்படுத்துகின்றன.

நுட்பமான உணர்வுகளிலும் எழுத்தின் வழியே உண்மையை உள்ளது படி எல்லோருக்கும் உரைத்திட முடியும் என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. நூலில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்ட காலம் எதுவாயிருப்பினும் இன்றைக்கும் அவை பேசுபொருளாக நம்முன்னே அலைந்து கொண்டிருக்கின்றன என்பதை உற்று நோக்குகையில் சமூக மாற்றத்திற்கான விதைகள் இன்னும் நிறைய மனிதர்களிடையே துவப்பட வேண்டிய அவசியம் நேர்கிறது என்பதை உணர்த்துகிறது.

புறந்தூய்மை நம்மால் அமையும் என்ற முதல் கட்டுரை கட்டணக் கழிப்பறைகள் மற்றும் பொது இடங்களில் கழிப்பறைகளில் பயன்பாட்டை பற்றி எச்சரிக்கை செய்கிறது. குறிப்பாக சுற்றுலாத் தளங்கள் மாநகரங்கள் நகரங்கள் ஆகியவற்றில் பேருந்து நிலையங்களின் செயல்படும் கட்டணக் கழிப்பறைகளின் அவலங்களை எடுத்துரைக்கிறது. பேருந்து நிலையம் என்பது ஒரு நகரத்தின் முகம் ஒரு நகரத்தின் தூய்மையை அந்த பேருந்து நிலையத்தின் தூய்மையை வைத்து கணித்து விட முடியும் அது மட்டுமல்ல அதை நிர்வகிக்கக்கூடிய நகரவை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளையும் இதனை வைத்து மதிப்பிட்டு விட முடியும் ஆனால் அதிகார மட்டங்களில் வேண்டப்பட்டவர்களுக்கு தரப்படும் கட்டண கழிப்பறை ஒப்பந்தங்கள் எடுப்பவர்கள் வேண்டுமென்றே இலவசக் கழிப்பிடங்களை சுத்தம் செய்யாமல் தடுக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கையில் நீர் சுத்தம் நில சுத்தம் இன்றைய உலகின் அடிப்படைத் தேவைகளாக மாறியுள்ள நிலையில் மனிதர்களுக்கான இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான இடங்கள் தூய்மையாகவும் சுகாதாரத்துடன் அமைவது அவசியமாகிறது. தனிமனித தூய்மையே பொதுவிடத் தூய்மைக்கு வித்திடும். பொது இடத்தில் சிறப்பான சாலை அமைக்கும். சுத்தம் சோறு போடும் என்று சொல்லிக் கொடுத்த தமிழ் மரபின் பிள்ளைகளான நாம் நம்மைச் சுற்றியுள்ள நகரங்களை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்வது என்பதில் இன்னும் வெகு தூரம் பாடம் கற்க வேண்டிய சூழலில் உள்ளோம்.

தமிழர் மரபின் வேர்களை வெளிச்சப்படுத்தும் தொன்மங்கள் என்ற தலைப்பிலான கட்டுரை கீழடி போன்ற தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் தமிழ்நாட்டின் நிறைய இடங்கள் பற்றிய தொகுப்பாக அமைந்துள்ளது. கீழடி அரிச்சநல்லூர் கொந்தகை அரிக்கமேடு பொருந்தல் பூம்புகார் தொண்டி கொற்கை கொடுமுடி போன்ற பல இடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டாலும் அவற்றின் வழியே நமது தமிழரின் மரபு எவ்வளவு பழமையானது என்பதையும் இந்த உலகின் தோற்றமே தமிழர் மரபில் இருந்து உருவான கிளை என்பதை அறிகையில் மேலும் மேலும் நமக்கான தேடல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. அதேசமயம் இது போன்ற தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான நிகழ்வுகளை தொல்லியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பார்வைக்கு கொண்டு சேர்ப்பதில் நாம் இன்னும் சுணக்கம் காட்டுகிறோம். நம் கண் முன்னே காணப்படும் பல தொல்பொருள் ஆய்வுகளை நாம் இன்னும் முழுமைப்படுத்தாமல் அது பற்றிய முழுமையான அறிவுத்திறனை மேம்படுத்தாமலும் வாழ்வது எதிர்கால மாற்றத்தை பற்றிய நமது தேடலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிய வேண்டும்.

அறநெறிகளை வளர்த்து உலகிற்கு வழிகாட்டிய எண்ணற்ற நூல்களைக் கொடுத்த நமது புண்ணிய பூமியில் இன்று காவிரி நீருக்கும் முல்லைப் பெரியாறு உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும் ரத்தம் பார்க்காத செய்தித்தாள்கள் இல்லை என்று கூறுமளவிற்கு வன்முறை வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது இது போன்ற வன்முறை எண்ணங்கள் மனித மனங்களில் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணங்களையும் அடிப்படைகளையும் ஆராய்ந்து அதற்கு தக்க நிவாரணத்தை வழங்குதல் இன்றைய காலகட்டத்தில் அவசர தேவையாக மாறி உள்ளது.

கனிந்த சேவை காயம் ஏற்படுத்தாத சொற்கள் நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தலத்தை பெரும்பான்மையாக அமைக்கும் பல்வேறு நூலகங்கள் இன்று பெருகிவரும் நிலையில் நூல்களின் வழியே மனித மனத்தில் அறத்தையும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் விதைப்பதில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் சங்கம் மருவிய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை தமிழர் வாழ்வில் அறவுணர்ச்சி வாழ்வோடு ஒன்றிணைந்த ஒன்றாக மாறிப்போனது தமிழில் படைக்கப்படும் இலக்கியங்கள் யாவும் இத்தகு அற உணர்ச்சியையே தலையாய நோக்கமாகக் கொண்டு எழுதப்படுகின்றன இன்றைய காலகட்டங்களில் அறமும் வாழ்வியல் விழுமியங்களும் சீர்குலைந்து வருவது போல தோன்றினாலும் அவற்றை மீட்டு அன்பின் வழியிலும் கருணையின் வழியிலும் மனங்களுக்குள் மனிதத்தை நிறைப்பது ஒவ்வொரு எழுத்தாளர்களின் கடமையாகிறது

மகாகவி பாரதி மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணிய சிவா இடையிலான நட்பை பேசும் பாரதி கண்ட சிவாஜி கட்டுரையின் வழியாக அன்றைய காலகட்டத்தில் விடுதலைக்கு போராடிய மக்களுக்குள் நிலவிய ஒற்றுமையையும் நன்மையும் இன்றைய காலகட்டத்தோடு பொருத்திப் பார்ப்பதற்கு வழிவகை செய்கிறது. “எங்கே சுதந்திரம் நசுக்கப்படுகிறதோ அல்லது நசுக்கப்பட முயற்சிக்கிறதோ அப்போது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன் எனது கண்டனத்தைக் கிளப்புவது மாத்திரமன்று, எப்போதும் போல என்ன சிரமப்பட்டும் சுதந்திரம் பிரகாசிக்கச் செய்வதற்கு என்னால் முடிந்தவரையில் வேலை செய்வது என்பதும் எனது தர்மம் ஆகும்”” என்று சுப்பிரமணிய சிவா எழுதி வைத்துள்ள தீர்க்கதரிசித்தனமான வார்த்தைகள் இன்றைக்கும் சாலப்பொருந்துகிறது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனை பற்றிய கட்டுரையும் காவிரி நீர் தமிழ்நாட்டின் கடை மடைக்கு வருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய காலகட்டம் பற்றிய கட்டுரையும் எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஆயினும் இன்னும் கட்டுரையின் உட்பொருளுக்கான விடை தீர்ந்தபாடில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். அரசியல் கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காக மாநில மக்களை வஞ்சிப்பது பற்றிய இத்தகைய போக்கு கட்டாயம் மாற்றப்பட வேண்டும் இல்லையேல் ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமையின் கொடிய கரங்கள் நீண்டு எல்லோர் வாழ்விலும் பேயாட்டமாடி வயல்வெளிகளை சுடுகாடாக மாற்றி விடும்.

தேர்தல் தொடர்பான இரண்டு கட்டுரைகள் இன்றைய காலகட்டத் தேர்தலுடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இன்னும் அதில் கூறப்பட்டுள்ள பிரச்சினைகளும் நம் முன்னே அப்படியே நிற்கின்றன. மதுவிலக்கு வாக்களிக்க பணம் தருதல் என பல பிரச்சினைகளை அலசி ஆராயும் இந்த கட்டுரைகள் இன்றும் அரசியல்வாதியின் பேராசை மனத்தை மாற்ற முடியாத காலகட்டத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.

தகவல் தொழில்நுட்பக் காலத்தின் உச்சத்தில் வாழ்கிறோம் உலகை உள்ளங்கைக்குள் அடக்கி விட்டது அறிவியல். ஒரு நொடி அசந்தால் நம்மைக் கடந்து பல கோடிப் பேர் முன்னோக்கி ஓடிவிடுவது நிதர்சனம். நாம் அந்தரத்தில் கட்டப்பட்ட ஒரு கண்ணாடிப் பாலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அது காலக்கண்ணாடி. மேலே கற்கள் தொங்குகின்றன அவை எப்போது வேண்டுமானாலும் அறுந்து கொள்ளலாம் விழுந்தால் கண்ணாடி மட்டுமின்றி நாமும் நொறுங்கிப் போய்விடும் அபாயம் உள்ளது காலத்தே செய்யும் செயல் ஆக்கமே சிறப்பு பெறும் அதில் தான் செம்மையும் தனித்தன்மையும் பளிச்சிட்டு நிற்கும் என்று நூலாசிரியர் காலத்தை உருவாக்குவோம் தலைப்பிலான கட்டுரையில் எழுதி இருப்பதை கவனிக்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விலும் அவர்கள் காலத்தை எவ்விதமாக புரிந்து கொண்டு தனது திறமையால் செயல்படுத்திக் கொண்டனர் என்பதை அறிய முடிகிறது.

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனித்தனி சிறு குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதைப் போன்ற ஒரு சூழலை பள்ளிகளால் மட்டுமே ஏற்படுத்த முடியும். அடிப்படையில் மனிதப் பண்புகளை புறம் தள்ளும் கல்வி மனிதனை இயந்திரத்தனமாக மாற்றி விடப் பார்க்கிறது. சக மாணவனை உண்மையான நேசத்தோடும் பரிவோடும் பண்புநலங்களோடும் பழகுகிற வாய்ப்பில் மனங்களுக்குள் சிறப்பானதொரு மாண்புகளை கட்டமைக்க முடியும். அதன் வழியே சமூகத்திற்கு செய்ய வேண்டிய பொறுப்புணர்வையும் மனித நேயத்தையும் குழந்தைகளுக்கு கல்வியின் வழியே நாம் அறிவுறுத்த முடியும். எனவே இன்றைய காலகட்டங்களில் மனிதநேயக் கல்வி எல்லா நிலையிலும் மாணவர்களுக்கு அவசியமாகிறது என்பதை சிறப்பான சொல் கட்டமைப்பில் இறுதிக் கட்டுரையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர்

மொத்தத்தில் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நோக்கி நகர்த்தும் ஒவ்வொரு மனிதனின் மனங்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும் நேசத்தை மனித நேயத்தை நாம் இன்னும் அதிகப்படுத்தி கரம் கோர்த்து சக மனிதர்களோடு தோள் கொடுத்து நகர்த்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது நூலின் கட்டுரைகள்.சமூக மாற்றத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் நாமும் நம்மால் இயன்ற செயல்களைச் செய்து முன்னகர்ந்து செல்ல தூண்டுகோல் அமைக்கிறது நூலாசிரியரின் எண்ணங்கள்.

நூலின் தகவல்கள்:- 

நூல் : புறத்தொடு நிற்றல்

நூலாசிரியர் : மீனா சுந்தர்

வெளியீடு : யாப்பு வெளியீடு

முதல் பதிப்பு : ஜனவரி 2023

விலை : ரூ.120/-

பக்கம் : 108

நூலறிமுகம் எழுதியவர்:- 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *