நூல் அறிமுகம்: *“மீண்டும் ஒரு தொடக்கம்”* சிறுகதைத் தொகுப்பு | அமைதியான குமுறல்களும், அறம் சார்ந்த நம்பிக்கையும் – எஸ். ஜெயஸ்ரீநூல்: மீண்டும் ஒரு தொடக்கம் – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: வளவ. துரையன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை ரூ.125/

வளவ. துரையன் அவர்கள், சிறுகதை, நாவல், கவிதை என பல தளங்களில் இயங்குவதோடு, மரபு, நவீனம் என இரண்டு விதங்களிலும் சிறப்பாக இயங்குபவர். சங்கப் பாடல்கள், கம்ப ராமாயணம் ஆகியவற்றிலும் புலமை பெற்றவர். ஆன்மிக இலக்கியத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு “ மீண்டும் ஒரு தொடக்கம்”.

        இந்தத் தொகுப்பில் பதினாறு கதைகள் உள்ளன. அத்தனை கதைகளிலுமே வாசகன் ஒரு நெருக்கத்தை உணர முடியும். காரணம், அத்தனை கதைகளிலும் வரும் கதை மாந்தர்கள் அந்நியர்களே அல்லர். ஒவ்வொரு பாத்திரமும் அன்றாடம் நாம் பார்க்கும், பழகும் மனிதர்களே.

தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களை, உற்று நோக்குவதில், நிகழ்வுகளை, ஆத்மார்த்தமாக அசை போடுவதால், வளவ. துரையன், அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறார். எனவே, கதைகளை வாசிக்கும்போது ஏதோ, கதை வாசிப்பதாகவே தோன்றுவதில்லை

முக்தாபாய் காத்திருக்கிறாள் கதையின் நாயகி, ஒரு முதிர்கன்னி. குடும்பத்திற்காகப் பொருளாதாரம் ஈட்ட வேலைக்குப் போகிறாள். ஆனால், அவள் ஒரு பெண்ணாக மதிக்கப்படுவதை விட பொருள் ஈட்டும் இயந்திரமாகவே பார்க்கப்படுகிறாள். பெற்றோருக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், அவள் ஈட்டி வரும் சம்பளப் பணம் போய் விடுமே என்று வருத்தம். அவளைத் திருமணம் செய்து கொள்ள வருபவர்களுக்கோ அவள் சம்பாதிக்கிறாள் என்பதே முக்கிய காரணம். ஆக, அவளுடைய திருமணம் என்பது தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது.  அவள் தனது விருப்பத்திற்குத் திருமணம் செய்து கொள்வதற்கும், சாதி ஒரு பெருந்தடையாக இருக்கிறது. ஆக, பெண் என்பவள் சமூகத்தின் சூழலில் எவ்வளவு துன்பப் படுகிறாள் என்பதை வளவ. துரையன், மிக அழகாக எடுத்துக் காண்பிக்கிறார்.  அவர் கதை சொல்லியாக புலம்பவில்லை. இப்படியெல்லாம் இருக்கிறது என்று புகார் சொல்லவில்லை. ஆனால், வாசகனை உணர வைக்கிறார். இதுவே கதையின் வெற்றி.         அதே போல பால்கார வாத்தியாரு கதையும் அழகானது. மாகு கறந்து, பால் விற்று, தன் பையனைப் படிக்க வைக்கிறாள் ஒரு தாய். அவனும் நன்றாகப் படித்து, தங்கள் கிராமத்திலேயே ஒரு பள்ளிக் கூட வாத்தியாராக வேலைக்குச் சேருகிறான். அவன், அவராக மாறியபோதும், அந்த கிராமத்தில் அவருக்கு” பால்கார வாத்தியாரு” என்றே பெயர் வழங்கப் படுகிறது. இது இந்த சமூகத்தில் ஊறிப் போயுள்ள பொதுப் புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஊராட்சித் தலைவியாகவே இருந்தாலும், அவர் சார்ந்த இனப்பிரிவைச்  சார்ந்தே அவருக்கான மரியாதையை இந்த சமுதாயம் வழங்குகிறது.  புரையோடிப் போயிருக்கும் இந்த கெட்ட பழக்கத்தைச் சாட வரும் வளவ. துரையன், தான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கதையின் போக்கில் வாசகனால் உணர முடிவதுதான் கதையின் பலம்.

       ”கன்னி கழியாச் சாமி” கதை வித்தியாசமானது. எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் நடக்கின்ற ஒரு மூட வழக்கத்தைக் கதையாக எழுதியிருக்கிறார். இது இப்போதும் இருக்கிறதா, அல்லது பழைய காலமா என்று பிரித்தறிய முடியவில்லை. காலக் குறிப்பைக் காட்டும் வரிகள் இல்லை. ஆனாலும், இப்படி ஒரு மூடப் பழக்க வழக்கம் பெண்களை வாழ விடாமல் செய்கிறதே என்றும், பெண்களை முடக்க அவர்களைத் தெய்வமாக்கி விடும் இந்தச் சமூகத்தின் பார்வையையும், ஜாதகம், ஜோசியம் என்று காரணம் காட்டி, பெண்கள் அவர்கள் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைப் பெற முடியாமல், சமூகத்தின் பிடியிலேயே இருக்க வேண்டிய அவலம் தொடர்கிறதே என்றும் வாசகனால், கதையின் நீட்சியாக உணர முடிகிறது.

        ”உழுதுண்டு பின் செல்பவர்’ கதை, என்ன நஷ்டம் வந்தாலும் ஓர் விவசாயியால் பயிர் செய்யாமல் இருக்க முடியாது என்பதையும், அவனுடைய வாழ்வு என்பது அதிலிருந்து பிரிக்க முடியாதது என்பதையும் சொல்லும் அதே வேளையில், “ செவ்வியான் கேடும்” கதை, பருவ நிலை மாற்றங்களும், காலச் சூழல்களும், ஒரு விவசாயியை, அதை விட்டு விட்டு தன் பிழைப்புக்காகக் கூலி வேலைக்குத் தள்ளப்படுவதைச் சித்தரிக்கிறது. அது, அவனைச் செய்யாத குற்றத்தில் மாட்டி விடுகிறது என்பது அதை விடக் கொடுமையான அவலத்தைச் சித்தரிக்கிறது.        இப்படி பல கதைகள் வாசகனை தொகுப்பில் ஒன்றி விடச் செய்வது இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெற்றி. எல்லாக் கதைகளுமே வாழ்வியல் அறத்தைப் பேசுகின்றன என்பதும் தொகுப்பு பற்றிச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று. ஆன்மிகம் போதிக்கும் எல்லா குருமார்களுமே, இறையை வேறு எங்கும் தேடுவதை விட, நீயே அது என உணர் என்றும். நான் என்பதும், இறை என்பதும் வேறு வேறு அல்ல என்றும் போதிக்கிறார்கள். அவரவர் அறம் சார்ந்து வாழ்ந்து விட்டால், வேறு இன்பம் என்ன வேண்டும்? இந்தப் போதனை, ஒவ்வொருவருக்கும் தினசரி வாழ்க்கையில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அனுபவங்களும் கிடைத்துக் கொண்டேதன் இருக்கின்றன. இப்படி தினசரி வாழ்க்கையில் கிடைக்கும், தான் தரிசிக்கும் அனுபவங்களை, மனிதர்களை எல்லாம் வளவ. துரையன் தன் கதைக் கருக்கச்ளாக்கி, பொருளாக்கி படைத்துக் காட்டுகிறார்.

இவருடைய கதைகளை வாசிக்கும் எந்தவொரு, இளம் வாசகனும், கதை எழுதுதல் என்பது நமக்கும் கை வரக் கூடிய கலைதான் என்று நம்பிக்கை கொள்ள முடியும். இவரே, “நீச்சல்” கதையில்; சொல்லும்போது, “எதையாவது சாதிக்கணும்னா, மனசில ஒரு தாக்கம் வேணும், அதாவது ஒரு தூண்டுகோல் வேணும்’ என்றும், ”வாழ்க்கையிலதான் நீச்சலும் இருக்கு” என்று முடிப்பதும் எல்லோருக்குமான வார்த்தைகளாக இருக்கின்றன.

       சிறப்பான, பல்வேறு விதமான சிறுகதைகளைப் படைத்திருக்கும் வளவ. துரையன் அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். சிறந்த முறையில் அச்சாக்கம் செய்து வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தினரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

எஸ். ஜெயஸ்ரீ, கடலூர்

                        ——————————–