வாழ்க்கையில் அனுபவத்தின் வழியாக ஓர் உண்மையைப் புரிந்துகொள்வது ஒரு வழி. அனுபவங்களின் அடிப்படையில் எழுதும் படைப்பாளிகள் அவற்றையே முன்வைக்கிறார்கள். அதே சமயத்தில் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிரான உண்மையும் வாழ்க்கையில் எப்போதும் உண்டு. அது இன்னொரு வழி. கையறுநிலையில் மனிதர்களைக் கொண்டு சென்று நிறுத்தும் அத்தகு தருணங்களே படைப்புத்தருணங்கள். அவனுடைய அறிவு, தகுதி, உயர்வு, மதிப்பு அனைத்தும் அத்தகு தருணங்களில் அவனைக் கைவிட்டுவிடுகின்றன. அந்த வெப்பத்தின் அனல் அவனைத் திகைக்கவைத்து மெளனத்தில் ஆழ்த்துகிறது. அல்லது மன்றாடவைக்கிறது. அனுபவக்கதைகளையே அதிக அளவில் எழுதி வந்த வளவ.துரையனின் எழுத்துப்பயணம் படைப்புத்தருணங்களை நோக்கி நகர்ந்துவந்து வெற்றி பெற்றிருக்கிறார். மீண்டும் ஒரு தொடக்கம் தொகுதியில் உள்ள சில கதைகள் அவருடைய வெற்றிப்பயணத்தின் சாட்சியாக உள்ளன.
செவ்வியான் கேடும் சிறுகதை தொடங்கும்போது இரு நண்பர்களின் கதையைப்போல தொடங்குகிறது. ஒருவர் துயரத்தை இன்னொருவரிடம் சொல்லி ஆற்றிக்கொள்கிறார்கள். இருவருமே விவசாயிகள். விவசாயத்தால் குடும்பத்தை நிலைநிறுத்தியவர்கள். மழை தொடர்ச்சியாக பொய்த்துப்போனதால் விவசாயம் பொய்த்துப்போகிறது. விவசாயம் பொய்த்ததால் குடும்பத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்குகிறது. ஒரு நண்பரால் பிரசவத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் சீர்செய்து அனுப்ப இயலவில்லை. பல மாதங்கள் காத்திருந்தும் பயனில்லை. அழைத்துச் செல்ல வந்த சம்பந்தி வீட்டாரின் சொற்களைக் கேட்டு கூனிக் குறுகி நிற்கிறார். இன்னொரு நண்பரோ, படித்து வேலை கிடைக்காத தன் மகனுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் துயரத்தில் மூழ்குகிறார். அவன் விரும்பிய முன்பணத்தைத் திரட்டிக் கொடுக்கமுடியாமல் திகைத்து நிற்கிறார். முதலில் இயற்கை கைவிடுகிறது. பிறகு உறவும் கைவிடுகிறது.
தினசரி வாழ்க்கையில் வறுமையின் வெப்பம் மனிதனின் உடலாற்றலை மட்டுமல்ல, மன ஆற்றலையும் வற்றிவிடச் செய்துவிடுவதை பல இடங்களில் பார்த்திருப்போம். இரு நண்பர்களின் ஆற்றலும் அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. அதை உணர்த்த வளவ. துரையன் கதையில் ஒரு சாரைப்பாம்பு நகர்ந்துவரும் காட்சியை இணைக்கிறார். சாரைப்பாம்பு இயல்பிலேயே வேகமாக ஊர்ந்து செல்லும் ஆற்றலுடையது. கதையில் நண்பர்கள் பார்வையில் நகரும் சாரைப்பாம்பு மிகமிக மெதுவாக ஆற்றலின்றி நகர்ந்து செல்கிறது. மழையையே காணாத மண்ணின் வெப்பம் பாம்பின் ஆற்றலையும் உறிஞ்சிவிடுகிறது. வலிமை குன்றி ஊர்ந்துபோகும் பாம்பையும் மனம் குன்றி நடக்கும் நண்பர்களையும் அருகருகில் முன்வைக்கும் சித்தரிப்பு மிகமுக்கியமானது.
எதிர்பாராத நேரத்தில் ஆந்திராவில் கரும்புவெட்ட ஆட்களைத் திரட்டியனுப்பும் ஆளின் ஆதரவான சொல்லுக்கு உடன்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மாதக்கணக்கில் தொடர்ச்சியான வேலை ஓரளவு பணத்தைச் சேமிக்க உதவும் என்று நம்பி அந்த முகவரின் பேச்சைக் கேட்டுப் புறப்படுகிறார்கள். ஆந்திரத்தின் எல்லையிலேயே ரயிலடியில் செம்மரம் வெட்ட வந்த கூட்டம் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவர்களை காவலர்கள் கைது செய்து வண்டியில் ஏற்றுக்கொண்டு செல்கிறார்கள். ஒவ்வொரு படியிலும் உருண்டு உருண்டு வந்து தரையில் வந்து விழும் நிராதரவான வாழ்க்கையின் சித்திரத்தை முன்வைக்கிறார் வளவ. துரையன்.
தொகுதியில் மற்றொரு சிறந்த சிறுகதை ஒட்ட ஒழுகல். மாலதியும் ராகவனும் காதலர்கள். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தக் காதலை ஏற்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறான் ராகவன். ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோரின் ஒப்புதலைப் பெற மீண்டும் மீண்டும் முயற்சி செய்யலாம் என சொல்கிறாள் மாலதி. சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்தில் வரவில்லை என்னும் ஏமாற்றத்தில் மனம் கசந்து ஊரைவிட்டே செல்கிறான் ராகவன். வடக்கே ஹரித்துவார், ரிஷிகேஷ் என ஏழாண்டு காலம் அலைந்து துறவியென திரிகிறான். ஒரு துறவியாகத்தான் அவன் பாவ்நகருக்கு வந்து சேர்கிறான்.
அதுவரை அவன் நெஞ்சத்தில் எங்கோ ஆழத்தில் மறைந்துபோயிருந்த நினைவுகளெல்லாம் அந்த ஊர் கடலோரத்தில் மேலெழுந்து வருகின்றன. பாவ்நகரத்துக் கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் கடல் வெகுதொலைவுக்கு உள்வாங்கி அதுவரையில் கடலுக்குள் மூழ்கியிருந்த ஒவ்வொன்றையும் தென்பட வைக்கிறது. குறிப்பிட்ட நேரம் வரைக்கும் நீடிக்கும் இந்தக் காட்சி மீண்டும் கடல் பொங்கி அலையடிக்க உருண்டோடி வந்து கரையைத் தொடுகிறது. தினந்தோறும் நடக்கும் அந்த அதிசயம் அதுவரை அவன் மன ஆழத்தில் மறைந்திருந்தவற்றை அவனே ஒரு பார்வையாளனாக நின்று பார்க்கும்படி வைத்துவிடுகிறது. அது ஒரு முக்கியமான திருப்பம். போதாக்குறைக்கு தோற்றத்துக்கு மாலதியைப்போலவே இருக்கும் ஒரு பெண் அவன் பார்வையில் பட்டுவிடுகிறாள். மாலதியின் நினைவால் ஆட்கொள்ளப்பட்ட துறவியான ராகவன் சொந்த ஊருக்கு வந்து சேர்கிறான்.
ஊரில் வீட்டுக்குச் செல்ல மனமின்றி கோவில் மண்டபத்தில் தங்குகிறான். அவன் அம்மாவும் தங்கையும் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். எங்கோ வேலை தொடர்பாக வெளியூருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அவன் அப்பாவும் கோவிலுக்கு வந்து அவனைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். அவன் நண்பன் வந்து பேசிவிட்டுச் செல்கிறார். நண்பன் வழியாக மாலதியின் திருமண விவரங்களையும் அவன் தெரிந்துகொள்கிறான். இறுதியாக அவனுடைய ஆசிரியர் வந்து பார்க்கிறார். அவன் அப்பாவின் அழுகைக்கான முதல் காரணம் மறுநாள் காலையுல் அவன் தங்கையைப் பெண் பார்க்கவருவோர் முன்னிலையில் தன் மகன் வீட்டைவிட்டு ஓடிப் போனவன் என்றும் கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் துறவியே தன் மகனென்றும் சொல்லமுடியாத அவருடைய நெருக்கடியே என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அந்த உண்மை அவனுக்கு இன்னொரு ஞானத்தை வழங்குகிறது. வெகுதொலைவு உள்வாங்கிச் சென்ற கடல் மீண்டும் பொங்கிவந்து கரையை நிறைத்துவிடுகிறது. புரிதலுக்கு அப்பாற்பட்டவர்களாக ஒவ்வொருவரும் ஒவொரு விதத்தில் தம் எண்ணங்களில் திளைத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.
மீண்டும் ஒரு தொடக்கம் சிறுகதையிலும் இப்படி ஒரு புதிர்த்தன்மை வெளிப்படுவதை உணரலாம். ஏழுமலையும் உதயணனும் நண்பர்கள். படிப்பு முடிந்த கையோடு வேலை கிடைத்து மும்பை சென்றுவிடுகிறான் ஏழுமலை. வேலை கிடைக்காத உதயணன் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். நகரத்திலிருந்து மீண்டுவர வாய்ப்பே கிடைக்காத சூழலில் கூட உதயணன் தொடர்பான செய்திகளை அவ்வப்போது தெரிந்துகொள்கிறான். கிராம மேம்பாட்டுக்கு அவனுடைய உழைப்பே முக்கிய காரணம் என்பதை நினைத்து அவனுக்கு எப்போதும் பெருமையுண்டு. அதனாலேயே அவன் ஊர்த்தலைவராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கிராமத்தில் சத்துணவுக்கூடம் அமைக்கவும், நீர்த்தேக்கம் அமைக்கவும், தெருவிளக்குகளை எரியவைக்கவும், சாக்கடையைச் சரிசெய்யவும் நூலகத்தைக் கொண்டுவரவும் வாரச்சந்தையை உருவாக்கவும் அவன் உரிய காலத்தில் எடுத்த நடவடிக்கைகளால் ஊருக்கு நன்மையே விளைந்தது.
பணியிலிருந்து ஓய்வு பெற்று ஊருக்குத் திரும்பிவரும் ஏழுமலைக்கு கிராம முன்னேற்றம் சார்ந்த செய்திகள் அனைத்தும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றன. அதே நேரத்தில் நண்பனின் அணுகுமுறைகளில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்தஸ்து என்னும் ஏணிப்படிகளில் ஏறஏற, அவனுடைய நேர்மையும் நற்பண்பும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துவிடுகிறது. ஒரு புதிர்போல மனித இயல்புகளில் ஏற்படும் இந்த விசித்திர மாற்றத்தை அடையாளப்படுத்துவதுதான் கதை. அந்தப் புள்ளியிலிருந்து மேலும் நீட்டிச் சென்று தானே களத்தில் இறங்கி எதிர்க்கப்போவதாக ஏழுமலையை சொல்லவைப்பது கதையை சற்றே கீழிறக்கிவிடுகிறது.
பால்கார வாத்தியாரு ஓர் உருக்கமான சித்தரிப்பு. ஐந்து வயதில் அப்பாவை இழந்துவிட்ட பிள்ளை முருகனை தனியொருத்தியாக பாடுபட்டு வளர்த்து ஆளாக்குகிறாள் அம்மா. வீட்டில் ஒரே சொத்தாக இருந்த பசுக்களை மேய்த்து பால்கறந்து வீடுகளுக்கு ஊற்றி பொருளீட்டி பிள்ளையைப் படிக்கவைத்து ஆசிரியராக உருவாக்கிய அவளுடைய தியாகம் போற்றுதற்குரியது. சொந்த ஊரிலேயே ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு முருகனுக்குக் கிடைக்கிறது. தன் கடுமையான உழைப்பின் வழியாக மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராக தலையெடுக்கிறார் முருகன். அதே பள்ளியில் பணிபுரியும் கோபாலன், சேதுமாதவன் என்னும் இரு ஆசிரியர்கள் முருகன் அடையும் புகழையும் பெருமையையும் பொறுத்துக்கொள்ள இயலாமல் பொருமுகிறார்கள். அவர்கள் முருகனை ஆசிரியராகவும் மதிப்பதில்லை. நண்பராகவும் மதிப்பதில்லை. ஊருக்குப் பாலூற்றும் ஒருத்தியின் மகன் என்னும் எண்ணமே அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் பால்காரர் என்னும் அடைமொழியைப் பயன்படுத்த அவர்கள் தயங்குவதில்லை. அவர்கள் பேசிப்பேசி அந்த ஆசிரியருக்கு அப்படி ஒரு பட்டப்பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார்கள். முதலில் துயரமடைந்த முருகன் படிப்படியாக அவர்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொண்டு தன்னை நிறுவிக்கொள்கிறார். தன்னை முருகன் எப்படி நிறுவிக்கொள்கிறார் என்பது கதையின் ஓர் இழை. முருகனை ஒரு மனிதராகக்கூட மதிக்க விரும்பாத அலட்சியமும் அகங்காரமும் கொண்ட கோபாலனும் சேதுமாதவனும் செயல்படும் விதம் இன்னொரு இழை. இந்த முரணை கூர்மையுடன் வளர்த்தெடுக்க வாய்ப்பிருந்தும் வளவ துரையன் அதைச் செய்யவில்லை என்பது ஒரு குறையேயெனினும் இரு இழைகளாலும் பின்னப்பட்ட நல்ல சிறுகதை இது.
பதினாறு சிறுகதைகள் கொண்ட இத்தொகுதியில் வெவ்வேறு விதமான மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் வளவ துரையன். கரையோரத்தில் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் சிறுமியின் சிரிப்பைப் பார்த்து ரோஷம் கொண்டு நீச்சல் கற்றுக்கொள்ளும் சிறுவன், தான் விரும்பிய இளைஞன் சாமியாக தன்னைக் கருதி தன் காலி விழுவதை விரும்பாமல் ஓட்டமெடுக்கும் பெண், தேவையே இல்லாத சடங்கை ஒரு முக்கியத்தேவை என்பதுபோல பொய்யுரைத்து பணம் பறிக்க நினைக்கும் ராமேஸ்வரத்து சாஸ்திரி, கடன் கொடுப்பவர் வேண்டாம் என்றாலும் கடன் பத்திரத்தை வாங்கிக்கொண்டால்தான் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வேன் என கண்டிப்பாகச் சொல்லும் மனிதர், கோவில் வாசலில் ஒதுங்கிச் செல்ல போதுமான இடமிருந்தும் தரையில் கிடத்தப்பட்ட வாழை மரத்தை ஒரு காரணமாகக் காட்டி காவல் நிலையம் வரைக்கும் சென்று வம்பிழுக்கும் அதிகாரி என பலவிதமான மனிதர்களை வளவ துரையனின் சிறுகதைகளில் நம்மால் பார்க்கமுடிகிறது. கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல, படைப்பூக்கம் கொண்ட வளவ துரையன் இத்தகு மனிதர்களின் வாழ்க்கையில் மூழ்கி, வாழ்க்கை புதிராகும் தருணங்களைத் தேடித்தேடிக் கண்டடைகிறார்.
( மீண்டும் ஒரு தொடக்கம். வளவ. துரையன். சிறுகதைகள். சந்தியா பதிப்பகம், ஒன்பதாவது அவென்யு, அசோக் நகர், சென்னை- 83. விலை. ரூ.125)

