காலையில் பரபரப்பாக வேலையில் இருந்த சமயம் மெதுவாக தூறல் வர ஆரம்பித்தது. கன மழைக்கு முன் அலுவலகம் சென்று விட வேண்டும் என்று கிச்சனில் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தேன்.தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னால் என நா முத்துக்குமார் அவரின் பாடல் வரிகள் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. என் மகளை எழுப்புவதற்கு ரூம் நோக்கி நகர்ந்தபடியே அப்படியே என் மனமும் பின்னோக்கி நகர்ந்தது .
தாயும் தந்தையும் ஆன தருணத்தை நினைவுக் கூர்ந்தது.போன வருடத்தில் இது போன்று ஒரு காலைவேளையில் வேகமாக சமையலறையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது பெட்ரூமில் இருந்து என் இணையரின் குரல் தீனமாக கேட்டது போய் பார்த்த பொழுது மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் என்னவென்று அருகில் சென்று என்ன பார்க்கும் பொழுது மூச்சு விட முடியவில்லை என்று கூறினார் ஒரு வாரமாக அவருக்கு உடம்பு முடியாமல் இருந்தது. அவரின் தந்தையின் இழப்பு அவரை வெகுவாக பாதித்து இருந்தது. அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட புறக்கணிப்பும் அவரை மனதளவில் தொய்வை ஏற்படுத்தியது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவைப்படும் முதலுதவிகளை கொடுத்தோம் பிறகு திரும்பவும் தன்னால் முடியவில்லை என்று கூறியதால் அங்கிருந்த ஆம்புலன்ஸ் உதவியோடு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் சிகிச்சை பலனின்றி எங்களை தவிக்க விட்டு அவர் விட்டு சென்றது இன்று நடந்தது போல நெஞ்சை அடைக்கிறது
அதற்குப் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்துமே தன்னியல்பாக விருப்பு வெறுப்புகள் அன்றி தானாகவே நடந்தேறியது. பள்ளி செல்லும் என் பெண்ணை கவனித்துக் கொள்வதா அல்லது என்னை கவனித்துக் கொள்வதா எங்களைப் புறக்கணித்த உறவினர்களின் எதிரில் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று போராடுவதா என் இணையரின் ஆசையே அதுதான் ஆனால் அவருமே கடைசியில் தந்தையின் இறப்பில் மிகவும் பலகீனமாக ஆகிவிட்டார் அதுவே அவரின் இறப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது
தந்தையை சரியாக கவனிக்காததால் அவர் இறந்து விட்டார் என்ற எண்ணம் அவர் மனதில் அதிகமாக பதிந்ததால் அவரை அதிலிருந்து வெளிக்கொண்டுவர என்னால் முடியவில்லை அதுவே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தது.
காதல் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்வது கேள்விக்குறியானது. பல சிக்கல்களில் நான் சிக்கினேன். என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கினேன். என் அலுவலகம் என்னை தாங்கிக் கொண்டது. அதன்மூலம் என்னால் துயரங்களில் இருந்து வெளிவர முடிந்தது. வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து என்னால் பழைய வாழ்க்கையை வாழ முடிந்தது ஏனென்றால் நானும் என் இணையரும் காதல் திருமணம் என்பதால் எங்கள் இரு வீட்டு குடும்பங்களில் இருந்தும் இதுவரைக்கும் புறக்கணிப்பு இருந்தது அதனால் யார் முகத்திலும் விழிக்காமல் தெரியாத மாநிலத்தில் தெரியாத ஊரில் தெரியாத மனிதர்களுடன் அன்புடன் பழகிக் கொண்டிருக்கிறோம்.
நினைவலைகளில் இருந்து மீண்டு என் அலுவலகம் நோக்கி பயணித்துக் கொண்டு உள்ளேன். என் மகளும் என்னுடன்! இயற்கையும் எங்களை ஆசிர்வதிப்பது போல் சிறு தூறல்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

