அம்மாவின் நேசம்
***********************
காப்பு கட்டி விரதம் பிடித்த
ஊர் திருவிழாக் காலங்களில்…
பரவால்லா
வீட்ல தான் சமைக்க கூடாது
ஆசைபட்டா ஹோட்டல்ல நீ சாப்டுக்க…
வீட்டு குள்ள வரயில
கைய கால நல்லா தேச்சி கழுவிரு
என்னும் போதும்…
எப்போதாவது பக்கத்து தாத்தா கடைக்கு
விற்பனைக்கு வரும்
எனக்கு பிடித்த முட்டை பப்ஸை வாங்கி கொடுத்து
உஷ்ஷ் வாய மூடி ட்டு சாப்டு கைய கழுவிரு
என்று சொல்லும் போதும்
எப்படியோ வெளிபட்டுவிடுகிறது
என் அப்பாவிற்கு முட்டையின் வாசமும்
எனக்கு அம்மாவின் நேசமும்…
உனது பெயர்
*****************
உனது பெயர் எனது கவிதையின் அடையாளம்…
பெயரின் பிற்பாதி…
விரல்களுக்கு விருந்து…
நாவிற்கு ருசி…
இதழின் படப்படப்பு…
இனியதொரு நாளில் என் இடக் கையை இறுகப் பற்றிய இதயம்
உனது பெயர்…
எம் மண்ணின் பெருமை
தேசத்தின் கிளவி…
வீரத்தின் பதம்…
இப்பெண்மையின் பெருமதிப்பு…
நான் ஆடிய சிறுபிள்ளை விளையாட்டு…
உனது பெயர்…
என் மகவின் முதலெழுத்து…
எழுத்துக்கள் என் வசம்
*****************************
எழுத்துக்கள் இப்போது என் வசம்…
ஓய்வில்லாது ஓட விடுகிறேன் எழுத்துக்களை
எனது பால்யம் தேடி பொம்மைகளை அணைக்கிறது…
இலைகள் பறித்தும் பூக்கள் கோர்த்தும்
விளையாடுகிறது…
மரக்கன்றுகளில் கூடு அமைக்கிறது…
மாமரங்களில் ஊஞ்சல் கட்டி
தூக்கணாங்குருவியாகத் தொங்குகிறது…
ஆண் பப்பாளிகளின் பூக்கள் காய்க்குமென்று காத்திருக்கிறது…
மெயின் ரோடுகளை கடக்க இயலாமல் தவித்திருக்கிறது…
மிதிவண்டி பழக இடமில்லாமல்
சிரமப்படுகிறது…
ஆற்று மணலை அள்ளி விளையாடத் துடிக்கிறது…
அண்ணனுக்கொன்றும் எனக்கொன்றுமாய் பகிர்ந்தளிக்கப்பட்ட வீட்டு மாடங்களில் ஒளித்து வைத்த சிலேட்டுக் குச்சிகளைத் துழாவுகிறது…
பேனாக்களுக்காய்ச் சண்டையிடுகிறது…
அண்டை வீட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சக்திமான் தேடி ஓடுகிறது…
அவ்வப்போது தோழி ப்ரியாவோடு கோபித்துக் கொள்கிறது…
பள்ளிப் பருவத் தோழிகளோடு புகைப்படமொன்றை எடுக்கிறது…
நினைவுகளை எழுதிப் பார்க்கப் பழகியிருக்கும் என் பேனா பிரசவிக்கும் எழுத்துக்கள் இப்போது என் வசம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments