நூல் அறிமுகம்: ஓல்காவின் *மீட்சி* – கோவை பிரசன்னாநூல்: மீட்சி
ஆசிரியர்: ஓல்கா (தமிழில்) கௌரி கிருபானந்தன்
விலை: ₹90
வெளியீடு: பாரதி புத்தகாலயம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

புராணக் கதாபாத்திரங்களை தற்காலத்து சிந்தனைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்வதில் இந்த நூலுக்கு முதலிடம் தரலாம். பெண்ணியச் சிந்தனைகளை ராமாயணத்தின் சீதை வழியே பேச வைத்திருப்பது இந்த நாவலின் களம்.

தெலுங்கு மூலத்திற்கும், அதன் மொழிபெயர்ப்புக்காக தமிழுக்கும் என இரண்டிலும் சாகித்திய அகாடெமி விருது பெற்றது. ஓல்காவைப் பற்றி யசோதரை நாவலில் அறிந்தேன். அதைப் பற்றிப் பேசும்போது, நண்பர்கள், குறிப்பாக திருப்பூர் பழனிவேல் Palanivelsamy Manimuthu மீட்சி படித்திருக்கிறாயா என்று கேட்டார். அப்போது துளிர் விட்டதை, இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாரதி புத்தகாலயம் கொடுத்த சிறப்புத் தள்ளுபடியில் வாங்கினேன்.

சீதை தன் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது, ஊடாக நான்கு பேரைச் சந்திக்கிறாள். லவ குசன்களுடன், இராமனால் கைவிடப்பட்டு வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும் போது சூர்ப்பனகையும், வனவாச காலத்தில் அகல்யாவையும், ரோகிணி தேவியையும், பட்டாபிஷேகத்திற்கு திரும்ப வரும் போது, லஷ்மணன் மேல் கோபத்தில் ஒரு அறைக்குள் சென்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மற்றவர்களால் தூங்கிவிட்டாள் என்று சொல்லப்பட்ட ஊர்மிளாவையும் சந்தித்து, அவர்களுடன் உரையாடுதல். இதன் மூலம் அவர்களின் நியாயங்களை செவிமடுத்தல்.லவ குசர்கள் ஒரு அழகான பூக்களால் நிரம்பிய தோட்டத்தைப் பார்த்ததாகவும், ஆனால் அந்தத் தோட்டத்தின் எஜமான் கோரமானவள் மூக்கறுபட்டவள் என்று கூற, சூர்ப்பனகை என்று அறிந்து அவளைச் சந்திக்கிறாள். இயல்பாகவே தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவள், அந்தக் கோரத்தில் இருந்து எப்படி மீண்டாள் என்று சீதை வினவுகிறாள். இயற்கையை நேசித்தேன், விலங்குகள் எப்படி அவற்றுக்கே உரிய குணங்களுடன், தோற்றங்களுடன் மகிழ்வாய் இருக்கின்றன என்று கண்டேன்.. இயற்கையோடு ஐக்கியமாகி விட்டேன் என்கிறாள் சூர்ப்பனகை. சீதையின் எண்ணங்கள் கரை புரண்டு ஓடுகின்றன. இந்தப் பெண்ணை இவ்வாறு செய்ய ராமனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.. தன் ஆரிய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதாக பரசுராமனுக்கு தன் திருமணத்தின் போது சத்தியம் செய்ததை, ராமன் உயயோகித்துக் கொண்டானா, இலங்கையின் இராவணன் தங்கையாக இல்லாவிட்டால் இவளுக்கு இந்த கதி நேர்ந்திருக்குமா.. ஆண்கள் எதற்காகவும் பெண்களை உபயோகித்துக் கொள்வார்கள் என்பது உண்மைதானோ.. என்றெல்லாம் யோசிக்கிறாள்.

மிதிலையில் திருமணமான புதிதில் இராமன் மூலமாகவே அகல்யாவைப் பற்றி கேள்வி படுகிறாள். அகல்யா ஒரு பேரழகி என்றும், ஆனால் ஒழுக்கம் குறைந்தவள் என்றும் அறிமுகப் படுத்துகிறான் இராமன். ஆனால் கௌசல்யா, அகல்யாவின் கதையைச் சொன்ன பின்னர் அகல்யாவைச் சந்திக்க ஆவல் கொள்கிறாள் சீதை. வனவாசத்தின் போது சந்திப்பு நிகழ்கிறது. என் கதை உனக்குத் தெரியுமா என்று அகலிகை கேட்க, தெரியும் என் மாமியார் சொன்னார்.. என்னவொரு அநியாயம் என்கிறாள் சீதை. எது என அகலிகை வினவ, செய்யாத தவறுக்கு உங்களை குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்.. என்று பதிலளிக்கிறாள் சீதை. இந்த உலகில் பெரும்பாலான பெண்கள் அப்படி குற்றவாளி ஆக்கப் பட்டவர்கள்தானே சீதை என்கிறாள். இறுதியில் சொல்கிறாள் அகல்யா, ஆண்கள் எல்லோரும் ஒன்றுதான் சீதை, முக்கியமாக மனைவியர் விஷயத்தில். ஆனாலும் சீதை, எக்காலத்திலும் விசாரணைக்கு சம்மதித்து விடாதே.. விசாரணை என்பதே அவநம்பிக்கைதான். அதிகாரத்திற்கு அடிபணிந்து விடாதே… என்கிறாள். இது லவ குசர்கள் இளவரசர்களாக ஏற்றுக்கொள்ளப் பட்ட பின்னர், சீதை வந்து இந்த அறிஞர்கள் நிறைந்த சபையில் தான் குற்றமற்றவள் என்று உரைக்க வேண்டும் என்று இராமன் சொன்னதாக வால்மீகி முனிவர் சொன்னபோது ஞாபகத்துக்கு வருகிறது. இராமனிடம் போக மறுத்து விடுகிறார். தான் பூமியின் புத்திரி. பூமியே எனது தாய்வீடு என்று அறிவித்து விடுகிறார்.

ரோகிணிதேவி குடில் ஞாபகம் வருகிறது. அவரைச் சந்தித்த போது அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கே வா அம்மா என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. ரோகிணி தேவி தந்தையின் சொல்பேச்சு கேட்டு, தாயைக் கொல்ல வந்தவன். ரோகிணி தேவி கூறிய மண்குடம் கதை… அதில் காணும் பெண்களின் வாழ்க்கை பற்றிய படிமம்…

இவையெல்லாம் படித்து இன்புறத்தக்கது.ஊர்மிளையுடன் ஆன மற்றொரு நிகழ்வு…. நான் தூங்கிக் கொண்டிருந்தேனாம்.. இவர்கள் சொல்கிறார்கள்.. நான் ஞானம் தேடிக் கொண்டிருந்தேன்.. நீ ஒருவள் தான் அக்கா என்னைப் புரிந்து கொள்வாய்.. ஒரு பரிட்சையை சந்திக்கும் நெருக்கடி வந்தால் அது உன்னை சாதாரணத் தன்மைக்கு, அழுக்குக் குட்டையில் தள்ளி விடாமல் துவேஷத்தாலோ கோபத்தாலோ உன்னை தகித்துக் கொள்ளாமல் உன்னை நீ காப்பாற்றிக் கொள். உன் மீது அதிகாரத்தை நீயே எடுத்துக் கொள்.. மற்றவர் மீது உன் அதிகாரத்தை விட்டுவிடு… பின்பு உனக்கே நீ சொந்தமாவாய்.. தீர்மானித்துக் கொள்… என்று அறிவுறுத்துகிறாள்.

இப்படி நான்கு பேர்களின் சந்திப்பு வழியே இராமனை, நிராகரிக்கும் முடிவுக்கு வருகிறாள் சீதை. கதாசிரியர் தன் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில், இராமன் சீதையைப் பற்றி சிந்திக்கும் விதத்தில் சிறைப்பட்டவன் என்றொரு அத்தியாயம் சேர்க்கிறார். அதில் சீதை வரமாட்டாள் என்று எனக்குத் தெரியும்… சே.. என் ராஜபரிபாலனம் காக்கும் பொருட்டு என்னை மிகவும் அறிந்த, என்னை விட்டே இருக்க முடியாத சீதையைப் பிரியும் நிலை வந்ததே…. அவளுக்கென்ன, கடமை முடிந்தது… லவ குசன்களை நாட்டிற்குத் தந்து விட்டாள். சென்று விட்டாள்.. எனக்குத்தான் இன்னும் கடமைகள் உள்ளனவே என்று புலம்புகிறான்.
மிகவும் அருமையான நூல். பெண்ணியம் பேசுபவர்களும், ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

-கோவை பிரசன்னா.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)