எரிமலைகளும் எல் நினோவும் இணைந்து நடத்திய நடனம்
– உலகின் மிகப்பெரிய பேரழிவின் கதை
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 5
நாமறிந்த வரையில், பூமியின் வரலாறு ஐந்து பெரும் பேரழிவுகளைக் கண்டிருக்கிறது. இந்த பேரழிவுகள் பூமியின் தோற்றத்தையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையும் பெரிதும் பாதித்திருக்கின்றன.
சுமார் 25.2 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெர்மியன்- ட்ரையாசிக் பேரழிவு பூமியின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாகக் கருதப்படுகிறது. பூமியில் வாழ்ந்த 90% கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் 70% நிலவாழ் உயிரினங்கள் இந்த பேரழிவில் அழிந்து போயின.
புதிய ஆய்வு எல் நினோ எவ்வாறு இந்த மிகப்பெரிய பேரழிவுக்குக் காரணமாக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் சீன புவிஅறிவியல் பல்கலைக்கழகம் (வூஹான்) இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

அறிவியலாளர்கள் நீண்ட காலமாக இந்த பேரழிவை இன்றைய சைபீரியாவில் உள்ள எரிமலைகளின், பெரிய வெடிப்புகளுடன் தொடர்புபடுத்தி வருகின்றனர்.
எரிமலை வெடிப்பின் விளைவாக வெளியேறிய கார்பன் டை ஆக்சைடு வெப்பமயமாதலை விரைந்து அதிகரித்தது. கடல் மற்றும் நிலப்பரப்பின் சூழல் மண்டலங்களில் ஏற்பட்ட குழப்பமும், தேக்கநிலையும் பேரழிவை நோக்கி உயிரினங்களை இட்டுச் சென்றன.
சைபீரியாவில் ஏற்பட்டதைப் போன்ற எரிமலை நிகழ்வுகள் பூமியின் வரலாறு முழுவதும் பலமுறை நிகழ்ந்துள்ளன. அவற்றில் பல பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் எதுவுமே, பெர்மியன்-ட்ரையாசிக் நிகழ்வினைப் போல பெரிய அளவிலான நெருக்கடியை ஏற்படுத்தவில்லை.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் முதன்மை இணை ஆசிரியர் டாக்டர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், “வெப்பம் அதிகமாதல் மட்டும் இத்தகைய பேரழிவுகளைத் தூண்ட முடியாது, ஏனெனில் இன்று நாம் பார்க்கிறபடி, வெப்பமண்டலப்பகுதிகள் மேலும் வெப்பமாகும்போது, உயிரினங்கள் குளிரான, உயர்ந்த அட்சங்களுக்கு இடம்பெயர்கின்றன.”

பொதுவாக இதையெல்லாம் தாங்கக்கூடிய பூச்சிகள் உள்ளிட்ட நிலத்தில் வாழும் உயிரினங்களும், தாவரங்களும் இப்பேரழிவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் நமக்கு ஒரு புதிராகவே உள்ளது. மேலும் இந்த உயிரினங்கள் குளிர்ந்த துருவங்களுக்கு ஏன் செல்ல முடியவில்லை என்பதும் நமக்குத் தெளிவாக இல்லை.
இந்த கேள்விகளுக்கும், பெர்மியன்-ட்ரையாசிக் பேரழிவின்போது, கடல்களைக் காட்டிலும், பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் அழிவு நிகழ்ந்ததற்கான காரணங்களையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
சீன புவிஅறிவியல் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியலாளரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான யாடாங் சன், நீண்ட காலமாக கொனோடான்ட்ஸ் என்றழைக்கப்படும், மீன் போன்ற பல பெர்மியன் உயிரின படிமங்களின் பற்களைக் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறார். ஏனெனில் பற்கள் கடல் வெப்பநிலை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. பற்களில் உள்ள ஆக்சிஜனின் வெவ்வேறு ஐசோடோப்புகளின் விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலம், கடல்நீரின் வெப்பநிலையை அளவிட முடியும்.

அவரது தரவுகள், ஆரம்பத்தில் இன்றைய பசிபிக் கடலின் முன்னோடியான பான்தாலாசா கடலின் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதியை விட வெப்பமாக இருந்ததைக் காட்டுகின்றன. இருப்பினும், பெர்மியன் காலத்தின் இறுதியில் இந்த வித்தியாசம் பலவீனமடைந்து, கிழக்கில் வெப்பநிலை அதிகரித்திருந்தது.. இது இன்றைய எல் நினோ நிகழ்வுகள் பசிபிக் கடலில் நிகழ்கின்றது போலவே உள்ளது.
மிகவும் தீவிரமான எல் நினோக்கள் தொடராக, மிக நீண்ட காலத்திற்கு நிகழ்ந்தன என்று இந்த தரவுகள் நமக்குக் கூறுகின்றன.
உலகளாவிய வெப்பமயமாதலின் பிரச்சனை வெறுமனே புவியை அதிக வெப்பமாக மாற்றுவது மட்டுமல்ல, பல தசாப்தங்களாக கால நிலையில் தீவிர ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதும் கூட என்பதை பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு நமக்குக் காட்டுகிறது.
எரிமலை வெடிப்பினால் ஏற்கனவே, காற்றில் அதிகளவு கார்பன்டை ஆக்சைடு அதிகரித்திருந்தது. இதனால் ஏற்பட்ட கட்டாய வெப்பமயமாதலை இந்த மெகா எல் நினோக்கள் மேலும் அதிரித்தன. காடுகள் மற்றும் அவை சார்ந்த இனங்கள் முதலில் போராடி இறந்திருக்கும்.
“வறட்சியான காலநிலை இருந்தால் காட்டுத்தீ மிகவும் பொதுவானதாகிவிடும். நிலப்பகுதி இவ்வாறு தொடர்ந்த காட்டுத்தீக்களில் சிக்கிக் கொண்டு, உயிரினங்கள் வலுவான நெருக்கடி நிலையில் சிக்கிக்கொண்டன. மறைவதற்கு எங்கும் இடம் இல்லை” என்று ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் டேவிட் பாண்ட் கூறினார்.
இந்த ஆய்வில் வடிவமைக்கப்பட்ட காலநிலை மாதிரியானது, பெர்மியன்-ட்ரையாசிக் காலத்தின் பாறை அடுக்குகளில் காணப்படும் ஏராளமான கரி அடுக்குகளுக்கான காரணத்தினை விளக்க உதவுகின்றது.
காடுகள் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றுகின்றன. மற்றும் உணவு வலையின் அடித்தளமாகவும் இருக்கின்றன. காடுகள் அழிந்தபின்பு, தொடர்ச்சியான எரிமலை செயல்பாட்டின் விளைவாக கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் உருவாவதைத் தடுக்கும் பூமியின் இயற்கையான வழிமுறைகளில் ஒன்று இல்லாமல் போனது.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு முதலில் சுமார் 410 ppm இலிருந்து 860 ppm ஆக இரட்டிப்பானது (ppm – Parts per million). நமது வளிமண்டலத்தின் தற்போதைய கார்பன் டை ஆக்சைடு அளவு சுமார் 422 ppm ஆக இருப்பதோடு இதை ஒப்பிட்டுப்பாருங்கள்.

இது மேலும் வெப்பநிலையை அதிகரிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்தது. வளிமண்டலத்தில் உள்ள வெப்பம் இறுதியில் பான்தாலாசா கடல் பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. இது பெரும்பாலான கடல் உயிரினங்களின் வெப்ப சகிப்புத்தன்மை வரம்பை விட அதிகமாகும். வெப்பநிலை உயர்ந்தால், கடலில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனைத் தக்கவைக்கும் திறன் வெகுவாகக் குறையும். கடல் உயிரினங்களுக்கு இது பேரழிவாக இருந்திருக்கும்.
எல்நினோக்களின் காரணமாக, சிறிது காலம் கொதிக்கும் வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத்தீயும், அடுத்த சிறிது காலம் சூறாவளி மற்றும் வெள்ளம் என மாறி மாறி, உலகின் பெரும்பகுதியில் காலநிலை விரைவான ஊசலாட்டத்தில் இருந்தது.
நிலைமைகள் மோசமாக இருந்தாலும், நிலையானதாக இருந்தால், உயிர்கள் அதற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடியும். மெகா எல் நினோக்கள் அந்த வாய்ப்பை உயிரினங்களுக்கு வழங்கவில்லை.
வெப்பம் இறுதியில் உயர்ந்த அட்சரேகைகளையும் ஆக்கிரமித்தது, அதிகரித்து வரும் தீவிர சூழல்களிலிருந்து தப்பிக்க சில இடங்களே இருந்தன.
“எல்லா இடங்களிலும் மிகவும் வெப்பமாகிவிட்டது, அதனால்தான் உயிரினங்கள் வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளை நோக்கி இடம்பெயர முடியவில்லை” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அத்தகைய தீவிரமான சூழல்களில், விரைவாக இடம்பெயர முடிந்த இனங்களால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். ஆனால், துர்வாய்ப்பாக, அவ்வாறு செய்யக்கூடிய தாவரங்கள் அல்லது விலங்குகள் அதிகமாக இல்லை.
இந்த ஆய்வு, காலநிலை மற்றும் சூழல் இயக்கவியல் எவ்வளவு சிக்கலானது மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதற்கும், அத்தகைய செயல்முறைகள் எவ்வாறு சுற்றுச்சூழல் சமநிலையை தீவிரமாக பாதிக்க முடியும் என்பதற்கும் வலுவான ஓர் உதாரணத்தை நமக்கு வழங்குகிறது.
சில ஆராய்ச்சியாளர்கள் இன்று நாம் ஆறாவது பேரழிவின் நடுவில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். பெர்மியன் காலத்தின் இறுதியில் நிகழ்ந்த பேரழிவு தற்போதைய காலநிலை நெருக்கடி சார்ந்த பாடங்களை நமக்கு வழங்கக்கூடும்.
25.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது, பாஞ்சியா என்ற பெரிய சூப்பர் கண்டம் மற்றும் ஒரு பெரிய கடல் என புவியியல் ரீதியாக வேறு மாதிரியான இடமாக இருந்தது. இதன் காரணமாக பெரும் எரிமலை வெடிப்புகளால் வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடுக்கு பூமி மிகவும் உணர்திறன் கொண்டதாக இருந்திருக்கலாம்.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பாலியோ சூழலியல் பேராசிரியர் பால் விக்னால் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“உயிரின் பார்வையில், பெர்மியன் காலத்தின் இறுதி என்பது பூமியின் வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடி. ஆனால் நாம் மீண்டும் அந்த நிலைமைகளுக்குச் செல்ல மாட்டோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போது பூமி ஒரு பக்கத்தில் ஒரு கண்டம் மற்றும் மறுபுறத்தில் ஒரு பிரமாண்டமான கடலுடன் கூடிய மிகவும் விசித்திரமான கிரகம்”
பால் விக்னாலின் இந்த நம்பிக்கை ஒருபுறமிருக்கட்டும்.
உண்மையில் பேரழிவுகள், கொடுமையானவையாக இருந்தாலும் கூட, அவை, பூமியின் இயற்கை அமைப்பின் இதயத்துடிப்பு போல இருக்கின்றன. உயிரினங்களைப் புதிதாக மீட்டமைத்து பரிணாமத்தை வெவ்வேறு பாதைகளில் செலுத்துகின்றன.
இந்த ஆய்வு சயின்ஸ் இதழில் 12, செப்டம்பர், 2024 அன்று வெளியிடப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! தொடர்ந்து அறிவியல் பேசலாம்!
கட்டுரையாளர் :

த. பெருமாள்ராஜ்.
ஆய்வுக்கட்டுரை இணைப்பு : Mega El Niño instigated the end-Permian mass extinction
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

