மெய்யழகன் (Meiyazhagan) – ஒரு (ஓடிடி) திரைப்பட விமர்சனம்
எப்போதுமே பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்வது மனம் லயிக்கும் பயணமாக அமைகிறது. அண்மையில் செவ்வாப்பேட்டை – திரூர் கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தபோது, இங்கேதானே செங்கொடி ஏற்றியிருக்கிறோம், இங்கேதானே தேர்தலில் வாக்களிக்க வந்திருக்கிறோம், இந்தக் கொட்டகையில்தானே கிராமத்து இளைஞர்களுக்கு மனிதகுல வரலாறு பற்றி வகுப்பெடுத்தோம், இந்தத் தெருவில்தானே பொங்கல் விழாவையொட்டிக் குழந்தைகளுக்கு பொது அறிவுப் போட்டி நடத்தினோம், இந்தப் புதர்களுக்குப் பின்னால்தானே “தோழர் வீடு” இருந்தது, இந்த வழியாகக் போகும்போதுதானே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி காரை நிறுத்தி அன்புடன் விசாரித்தார், இங்கே இருந்த காவல் நிலையத்தில்தானே ஒரு தலித் குடும்பம் நிற்கவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம், இந்தக் கட்டடத்திற்குப் பக்கத்தில்தானே ஒரு கொலை தொடர்பாகப் பரபரப்பாக இருந்தது, இந்தக் கால்வாய்க் கரையில்தானே அந்தக் காதல் இணையைப் பார்த்தோம், இந்தக் கோவிலில்தானே அவர்களுடைய திருமணம் நடந்தது என பின்னோட்டக் காட்சிகள் மனதை என்னவோ செய்தன.
கடந்தகால அனுபவங்கள் அப்போது சோகமானவையாக இருந்திருந்தாலும் இன்று அந்த நினைவுகள் வருடிக்கொடுக்கவே செய்யும். அப்படியான அனுபவக் கிளறல்தான் மெய்யழகனாக வடிவெடுத்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுக் குடும்பத்துடன் வெளியேற நேர்ந்து, உறவுத் தங்கையின் திருமணத்திற்காக வருகிற அருள்மொழி அத்தகைய அந்நாள் நிகழ்வுகளால் மட்டுமல்லாமல், இன்னாள் உறவுகளின் அன்பு மழையாலும் நெகிழ்ச்சிக் கடலில் மூழ்குகிறான்.
மண்டபத்தில் இவனைப் பார்த்ததும் அருகில் வரும் முன்னாள் காதலிக்கும் இவனுக்குமான உரையாடலிலல் “எப்படி இருக்குற” என்று கேட்பவனிடம் அவள் , “இருக்கேன், நான் உன்னையே கட்டியிருந்திருக்கலாம்,” என்று ஆதங்கத்தோடு கூறுவது, பெண்ணின் ஆயிரமாண்டுப் புண் வலி. திருமண வரவேற்பு மேடையில் அவன் பரிசளித்த வளையலையும் கொலுசையும் அவனையே மாட்டிவிடச் சொல்கிறாள் தங்கை. அந்தக் கட்டத்தில் படம் பார்க்கிறவர்களின் கண்கள் துளிர்ப்பதன் பிரதிபலிப்பாக, திருமண மண்டபத்தில் அமர்ந்திருக்கிறவர்களும் கண்கலங்குகிறார்கள். கிட்டத்தட்ட இடைவேளை வரையில் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளாகவே படம் நகர்கிறது.
அருள்மொழியின் கண்களைப் பின்னாலிருந்து மூடியபடி, தன்னை யாருன்னு கண்டுபிடிக்கச் சவால் விடுகிறான், இவனை அத்தான் அத்தான் என்று அழைத்து பாசத்தைக் கொட்டுகிற இளைஞன். இவனுக்கோ அவன் சொல்கிற நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தாலும் அவன் யாரென்பது மட்டும் நினைவுக்கு வர மறுக்கிறது. இப்படியொரு எளிய புதிரை வைத்தே வலிமையான கதை பின்னப்பட்டிருக்கிறது.
இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களின் உரையாடல்களாகவே முழுப்படம் அமைந்திருக்கிற ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறேன். திடீர்த்திருப்பங்களோ, அதிரடி மாற்றங்களோ இல்லாமல் பேச்சிலேயே சுவையான திரையனுபவத்தைத் தருகிறார்களே என்று வியந்திருக்கிறேன். தமிழ் சினிமாவிலும் அதை சாத்தியமாக்கியிருக்கிறார் மெய்யழகன் (Meiyazhagan) திரைப்பட இயக்குநர் பிரேம் குமார்.
அருள்மொழியின் மகளால் ஒரு திருப்பம் வருவதையும், கட்டக்கடைசியில் புதிர் அவிழ்வதையும் முன்கூட்டியே ஊகிக்க முடிகிறது. அப்படி ஊகித்தபடியே நிகழ்வது சலிப்பூட்டுவதற்கு மாறாக நம்மையும் படைப்பின் பங்காளியாக்குகிறது.
அரவிந்த் சாமி, கார்த்தி, ராஜ்கிரன், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீரஞ்சனி, சரண் சக்தி எல்லோருமாகப் படத்திற்கு மெய்யாகவே அழகு சேர்த்திருக்கிறார்கள்.
பல படங்களில் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கிற பாடல்கள் ஒட்டுவதில்லை. இதில் கமல்ஹாசன் பாடியிருக்கும் “யாரோ இவர் யாரோ” என்று இதமாக ஒட்டுகிறது. இசைப் பசையைக் குழைத்திருப்பவர் கோவிந்த வசந்தா. தஞ்சை வயல்களுக்கு ஊடே வளைந்து வளைந்து செல்லும் சாலையில் பயணிக்க வைக்கிறது மகேந்திர ராஜ் ஒளிப்பதிவு. மெய்யழகன் (Meiyazhagan) திரைப்படம் திரையரங்கத்திற்கு வந்தபோது பொருந்தா இழுவையாக இருந்த உரையாடல் பகுதிகளை நீக்கி, ஓடிடி திரைக்கு நேர்த்தியாக மறுதொகுப்பைச் செய்திருக்கிறார் ஆர். கோவிந்தராஜ்.
நல்ல படங்களைக் கொடுக்கிற முடிவில் உறுதியாக இருப்பதைக் காட்டியிருக்கிறார்கள் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் ஜோதிகா-சூர்யா இணையர். ஆழமான சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பேசவில்லைதான். ஆனால் மனித உறவின் உணர்ச்சிகள் சமூகத்தின் அழகான அலகேயல்லவா?
-அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.