அரிதாரம் பூசிய அழகு நங்கையராய் இயல்பாய் மிளிரும் தமிழ் வார்த்தைகளின் மீது தங்களின் கவித்திறனையும், கற்பனை வளத்தையும் புகுத்தி வார்த்தைகளுக்கு வசீகரம் சேர்க்கும் பாணியிலான எழுத்தாளர்கள் ஒருபுறமென்றால், தங்களின் இயல்பான எழுத்துநடையால் அன்றாட வாழ்க்கைச் சூழல்களையே கதைக்களமாக்கி எவ்வித அதீத மெனக்கெடலுமின்றி நம்மை தங்களின் வார்த்தைகளுக்குள் இழுத்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் மறுபுறம்.
இதில், இச்சிறுகதை தொகுப்பினை எழுதிய ஜி. மீனாட்சி அவர்கள் இரண்டாம் வகை. நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையே கதைகளாக்கி இப்படியும் ரசிக்கத்தக்க வகையிலான சிறுகதைகளை எழுதமுடியுமென நிரூபித்திருக்கிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு கடந்து செல்லும் கதைகளாகவோ, நம் தவறுகளை நாம் திருத்திக் கொள்வதற்கான பாடங்களாகவோ அமைந்துவிடுவது இயற்கைதானே. இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஏதோவொரு வகையில் நமக்கான படிப்பினைகளை அளிக்கின்றன.
தான் ஒரு பெண் பிள்ளை என்பதால் தன்னைக் கட்டுப்பெட்டியாய் வீடு, பள்ளி, கல்லூரி என்று மட்டுமே வளர்த்த தன் பெற்றோர் போல் இல்லாமல் தன் மகளுக்கு அவளுக்கான உரிமையைக் கொடுத்து சுதந்திரமாய் வளர்க்க வேண்டுமென விரும்பும் ஒரு பெண்ணின் ஆசைகளை விவரிக்கும் சிறுகதை – *ஒரு பறவையைப் போல….*
எதிர்பாரா விதமாய் நம் செருப்பு தொலைந்துவிட்டால் நாம் பார்க்கும் அத்தனை பேரின் முகங்களிலும் ஒரு திருட்டுக்கலை தெரியும் பாருங்கள். இவன் தான் திருடியிருப்பானோ? இவனோ இல்லை அவனோவென்று அவர்களின் கால்களையே கவனிப்போம் அல்லவா? அதைப்போன்றதொரு கதை தான் – *வெள்ளிக்கிழமையும், லஞ்ச் பேக்கும்.* காலை எழுந்து அவசர அவசரமாய் பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து, கணவரை அலுவலகத்துக்கு அனுப்பி, தானும் உடன் கிளம்பி அலுவலகத்திற்கு வரும் வழியில் தான் சந்திக்கும் இடர்களையும் அதில் தான் கொண்டு வந்த லஞ்ச் பேக்கை எங்கே வைத்தோமென்றே மறந்து தொலைத்துவிட்டு தவிக்கும் பெண்ணின் கதை இது.
பேருந்துகளில் பாடி அதனால் கிடைக்கும் வருமானத்தில் உண்ணும் வறுமை நிலையில் இருந்தாலும் உழைக்காமல் உண்ணக்கூடாது என்ற தன்மான உணர்ச்சியோடு வாழும் பெண்ணின் வாழ்வினைப் பேசும் சிறுகதை தான் – *காற்றில் கரைந்த கானம்.*
![]()
வசதியாய் வாழ வேண்டும் என்பதற்காக தன் மனைவி, பிள்ளைகளைக் கூட பிரிந்து வெளிநாட்டிற்குச் சென்று உழைத்து வாழும் மனிதர்களின், உறவுகளின் பிரிவின் கொடுமையின் உண்மை நிலையினைத் தெளிவாய் எடுத்துரைக்கும் சிறுகதை – *தொலைதூரக் கனவுகள்.*
*கலெக்டர் வீட்டுக்கு எதிர்வீடு* என்ற சிறுகதையில் தன் வீட்டிற்கு எதிர்வீட்டில் குடிவரும் ஒரு கலெக்டரைப் போல தன் பிள்ளைகளும் வளர வேண்டுமென விரும்பி அவர்களுக்கு படிப்பின் மேன்மையை விளக்கி, ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாய் வளரச்செய்ய ஒரு தந்தையும், தாயும் எடுக்கும் முயற்சியினை விளக்கியிருப்பார் நூலாசிரியர்.
அப்பா, அம்மாவின் வற்புறுத்தலினால் காதலித்த பெண்ணைக் கைவிட்டு ஆர்த்தியை மணக்கிறான் ஸ்ரீதர். எனினும் ஆர்த்தியுடன் மகிழ்வாய் இல்லாமல் அவளையும் துன்புறுத்துகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாதவளாய் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் ஆர்த்தி, சட்டபூர்வமாய் அவனைப் பிரிய முடிவெடுத்து புதுமைப் பெண்ணாய் கம்பீரமாய் புறப்படுகிறாள் – *நிறமற்ற வானவில்* எனும் சிறுகதையில்.
*விரியும் சிறகுகள், மன நாட்டிய மேடை, கூண்டுக்கிளி* என அனைத்து சிறுகதைகளும் ஏதொவொரு வகையில் நம் மனதினைக் கீறி பெண்களின் வலிகளையும், அவர்களின் உள்ளக்கிடக்கினையும் அறிய வைக்கும் அற்புத கதைகளாய் அமைந்துள்ளன.
இச்சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை – *டாமி’ஸ் டே அவுட்.* தங்கள் இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாடுவதற்காக தங்கள் வளர்ப்பு நாயினை, நாய்களை பராமரிக்கும் இடமான க்ரெச்சில் கொண்டு போய்விடும் தாய், மகள், அவர்களது நாய் மூவரின் மன ஓட்டத்தையும் அவர்களின் வாய்வழியாய் கூறும் கதையிது. அதிலும் கிரெச்சில் டாமிக்கு ஏற்படும் காதல், காதலென்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைத்து உயிர்களுக்குமானது என்பதை நிறுவுகிறது.
எளிய மனிதர்களின் வாழ்வினை இயல்பான வார்த்தைகளில் வாசிக்க விரும்புவோருக்கான நூல் – மெல்லத் திறந்தது கதவு.
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
கணித ஆசிரியர்
காஞ்சிபுரம்
நூல் : மெல்லத் திறந்தது கதவு
ஆசிரியர் : ஜி. மீனாட்சி
வெளியீடு : தாமரை பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 117
விலை : ₹ 105
வகை : சிறுகதைகள்

