மேலும் கீழும் பறந்தபடி – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
ஆசிரியர் : கல்யாண்ஜி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
பக்கங்கள் : 130
விலை : ரூபாய் 150
கரை புரண்டு ஓடுகிற ஒரு நதியில் உங்கள் பாதங்களை வைத்ததும் அதன் குளுமையில் உங்களை இழந்து, நதியில் கரைகிறீர்கள் அல்லவா? அது போலத்தான், மேலும் கீழும் பறந்தபடி என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் இந்த முதல் கவிதையே, வாசிப்பவரை, அவரே சொல்வது போல நெஞ்சுச் சதைகள் அமுங்கக் கட்டிக் கொள்கிறது.
வெயில் தணிந்த பின்
போகச் சொல்வார்கள்
மழை நின்ற பின்
போகச் சொல்வார்கள்
எதுவும் தணியுமுன்
எதுவும் நிற்கு முன்
போய்க் கொண்டே இருங்கள்
உங்கள் நெற்றியும் கன்னமும்
மழை விழுந்து தெறிக்கும் படியும்
உங்கள் புறங்கைகளின் மேல் தோல்
வெயிலில் பிசுபிசுக்கும் படியும்
தரப்பட்டிருக்கின்றன
குடை வைத்திருக்கும் பைத்தியக்காரர்களை
இதுவரை யாரும் பார்த்திருக்கிறோமா?
இந்தக் கவிதையைப் பாருங்கள்.
எங்காவது
எங்காவது
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஏதாவது
ஒரு சிலை முலைக் காம்பில்
அமராமலா இருந்திருக்கும்?
ஒரு பறவை என்றால் எடையற்றது என்று ஒரு கற்பிதம்
இவ்வளவு அளவில் பெரிய ஒன்று
என் புறங்கையில் வந்து அமரும் என்பதும் எதிர்பாராதது
ஒரே ஒரு முறை அதை நீவினேன்
அதற்கே காத்திருந்தது போல் அது பறந்தது
அதனுடைய எடையுடன்
என்னுடைய எடையும் தூக்கிப் போய் விட்டிருந்தது
இப்படியான ஒரு நல்ல கவிதை, வாசிக்கிறவனுடைய மனதின் பாரத்தையும் தூக்கிப் போய் விடும்தானே?
உணவு விடுதிகளில் குழந்தைகளுக்கு வசதியான உயரத்தில் கை கழுவுவதற்காக ஒரு சிறு தொட்டி வைத்திருக்கிறார்கள்.நம்மில் எல்லோரும் பார்த்திருக்கிறோம். அட, என்று வியந்திருக்கிறோம். கவனமின்றிக் கடந்திருக்கிறோம்.யாராவது இதைச் செய்தவருக்கு ஒரு பூங்கொத்தை நீட்டியிருக்கிறோமா?அதை இந்தக் கவிதை செய்கிறது.
உணவு விடுதிகளில்
குழந்தைகளுக்கு வசதியான உயரத்தில்
கை கழுவு தொட்டி வைத்திருக்கிறார்கள்.
தொட்டி மட்டத்திலிருந்து
நீண்ட ஒரு உச்சி தண்டில் பூக்கிறது லிலிப் பூ
அதே அவர்களுக்காக.
மஞ்சள் நிற டென்னிஸ் பந்துகளை பொறுக்கிப் போடுகிற அப்பு, சுருட்டுப் பிடிக்கும் பெட்டிக்கடை தாத்தா, இது போன்ற மனிதர்களோடு புங்கை மர நிழலை,தன் கீழ்த் தாடையில் கோணலாகக் கடித்திருந்த, சற்று வாழ்ந்து முடிந்த பசுவையும், பொரு பொருவெனச் செம்மண் உதிர கலைந்து தவிக்கின்ற மாசறு கரையான்களையும், விமோசனத்திற்காக பதற்றத்தில் இருந்த ஒரு சிறு பறவையையும் கவிதைகளில் அழகிய கோட்டோவியங்களாகத் தீட்டியிருக்கிறார்.
முங்கு நீச்சலில் போய்
ஆற்றுக்குள் மறைந்து
அங்கங்கே ஆற்றுப் பரப்பில் முளைத்து,
தலை தூக்கி முகம் வழித்து
நீர் துடைத்து சிரிக்கிற நாச்சியார் அத்தை
பூக்கப் பூக்கப் பறித்தும்
ஒரு பூ பூக்கிறது புனல்காடு
இந்தக் கவிதையை வாசிக்கையில் எனக்கு கண்ணனேந்தல் கண்மாயில் நான் அடிக்கடிப் பார்க்கிற,இதே போல், முங்கு நீச்சலில் போய் ஆற்றுக்குள் மறைந்து அங்கங்கே ஆற்றுப் பரப்பில் முளைத்து, தலை தூக்கிப் பார்க்கிற அழகான முக்குளிப்பான்கள் நினைவுக்கு வந்தன.பிறிதொன்றைப் பார்ப்பதில் பிழையொன்றுமில்லையே என்று முன்பொரு முறை கல்யாண்ஜி எழுதியிருப்பார்.அதே போல்,பிறிதொன்றை நினைப்பதிலும் பிழையொன்றுமில்லைதானே?
நான் உங்களைப் பார்த்து சிரிக்க வில்லை
என்ற பராதி உங்களுக்கு.
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்
ரொம்ப காலத்திற்கு பின்பு
நான் மைனாவை பார்த்தேன் என்று சொல்வது
இந்த உலகத்திற்கு தேவையே இல்லாத தகவலா?
இது எல்லாம் ஒரு சந்தோஷமா?
நீங்கள் கேட்கிற அளவுக்கு
இது ஒரு சிறிய சந்தோஷமே
இப்படி தன்னைக் குறித்த,தன் கவிதைகள் குறித்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கவிதைகள் தொகுப்பில் உள்ளன.அதன் உச்சமான இந்தக் கவிதையைப் பாருங்கள்.
அந்தரத்தில் முறுக்கேறியிருக்கிறது கயிறு
ஆளுக்கொரு கயிற்றைப் பிடித்து
மேலேறுகிறார்கள்.
நான் பாட்டுக்கு
ஆலம் விழுதில் தொங்கி
ஆடிக் கொண்டு இருக்கிறேன்
ஒரு புகைப்படம் எடுப்பவர்
சொல்வது போல்
சாதாரணமாகப் பார்ப்பது போல் பாருங்கள்
யாரும் என்னிடம் சொன்னதில்லை
நான் சாதாரணமாகவே
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சரியாகவும்
இப்படி ஒரு கவிதையில் சொல்கிறார்.
ஒற்றக் கள்ளப் பருந்து
சுற்றிக் கொண்டே இருந்தது
வானம் அழகாக இருந்தது
சிறு பொழுதில்
கள்ளப் பருந்தைக் காணோம்
வானம் இப்போதும் அழகாகவே இருந்தது
அழகு என்பது சற்று நேரக் கள்ளம்
சற்று நேரக் கள்ளமின்மை.
இப்படிப் பார்க்கிற ஒருவர், நான் சாதாரணமாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் யார் ஒத்துக் கொள்வார்கள்? சரியாகவும் என்ற கடைசி வரி இருக்கிறதே,அது மிகச் சரியாக இருக்கிறது.
உண்ணாழி,கருவறைக்கு என்னவொரு அழகிய மாற்றுப் பெயர்.இந்தக் கவிதைதான் எனக்கு இதை அறியத் தந்தது.
ஆளற்ற கோவில் பிரகாரத்தில்
தனித்தேகி நிற்கிறாள்
பெருந்தட முலையுடன்
கருந்தடங்கண்ணி.
உண்ணாழிச் சரவிளக்கில்
ஒளிர்கிறது
உருவாய் ஒரு அரு.
உயிர் முளைத்துப் பறக்கிறது
கல் தூண் கிளி
பறவைகளும்,பரவசங்களும்,மரணங்களும்,மனிதர்களும்,நினைவுகளும்,கனவுகளும் நிறைந்த வாழ்வினை, கீச் கீச் எனப் பாடி மேலும் கீழும் பறந்தபடி இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பின் வரிகள்,முன்னுரையில் கல்யாண்ஜியே சொல்வது போல்,அத்தனை அழகுதான்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
ஜி சிவக்குமார்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும்
யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.