மேய்ச்சல் காடு (நாவல்) – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல்: மேய்ச்சல் காடு (நாவல்)
ஆசிரியர்: குமாரகேசன்
வெளியீடு: இருவாட்சி
பக்கம்: 208
விலை: ரூ.200
16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இருவாட்சி பதிப்பகம் 2015இல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலான கதைகளின் காலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமோ அல்லது மத்திய காலமோ இருக்கலாம். செம்மண் ரோடு, கயிறு கட்டி இழுக்கும் ரோடு ரோலர், கரியில் ஓடும் பஸ் போன்றவற்றிலிருந்து இதை ஊகிக்க முடிகிறது. திண்டுக்கல்,கரூர் பகுதி கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கை கதைகளின் களமாகவும் அவர்களின் பேச்சுமொழியும் மிகச் சிறப்பாக சித்தரித்துள்ளார். மொழி மட்டுமல்ல பயிர்கள், மரங்கள்,பொழுதுகள், பருவங்கள், விலங்குகள் அனைத்தையும் இணைத்து அந்த வட்டார புவியியலை மிக மிக தத்ரூபமாக சித்தரித்துள்ளார். அதே சமயம் மனித உறவுகளும் எதார்த்தமாக விவரிக்கப்படுகின்றன.
இரண்டு கதைகள் தவிர மற்றவை அனைத்தும் சோகமான முடிவுகளாக உள்ளன. அந்த சோகம் அம்மக்களின் வாழ்க்கையிலேயே பின்னிப் பிணைந்தது. ஒரு சிலவை மட்டுமே தனி நபர்களால் ஏற்படுகின்றன. ‘புதுக்கலப்பை’ கதையில், வாங்கிய கடனுக்காக வட்டிக்காரரின் ஆட்கள் சைக்கிளை எடுத்து செல்ல முயல்கிறார்கள். தந்தை வயலில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். தாயும் மகனும் சைக்கிளை விடாமல் இழுத்துப் பிடிக்கின்றனர். ஆட்களின் பலத்தின் முன்னால் முடியவியல்லை. எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் மீது மகன் ஒரு கல்லை எடுத்து வீச முயற்சிக்கிறான்.’வேண்டாம்.
கல்லு குறி தவறி சைக்கிள் மீது பட்டுறப் போகுது.’ என்கிறாள் தாயார். கதை முழுவதும் ஒரு சிறுவனின் சைக்கிள் ஓட்டும் ஆசையும் புதுக்கலப்பை செய்ய வேண்டிய விவசாயியின் கவலையும் விவரிக்கப்படுகிறது. ‘எலெக்ஷன் டியூட்டி’ மற்றும் ‘கடைசி பஸ்’ இரண்டிலும் லாரி டிரைவர்கள் வில்லன்களாக மாறி பெண்களை கடத்திக் கொண்டு போகிறார்கள். கடைசி பஸ் கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் காத்தவராயன் பாத்திரமும் ஒரு ஆபத்து என்றால் ஊர் முழுவதும் திரண்டு வருவதும் நேர்மறையான சித்தரிப்புகள்.
‘ஊர் செக்கு’, ‘கோட்டோவியம்’, சிற்பக்கூடம்’ மூன்றிலும் ஒரு கலைஞன் தன் படைப்பின் மீது வைத்திருக்கும் தீவிர பிடிப்பை சக கால சூழலுடன் காட்டியிருக்கிறார். ‘வெள்ளாவிப் பானை’, ‘மேய்ச்சல் காடு’ போன்ற கதைகள் கிராமத்தில் அடித்தட்டு பிரிவு மாணவர்கள் எந்த சூழலில் கல்வி கற்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவற்றின் முடிவு நம்மை நடுங்க வைக்கிறது. ‘மேய்ச்சல் காட்டில்’ வரும் ஆசிரியர் தமிழ்சசெல்வனின் ‘பதிமூணில் ஒன்று’ கதை ஆசிரியர்களை சிறிது நினைவூட்டுகிறார்.
‘கரிவண்டி’ யும் ‘சோடிப்பேய் ‘ ‘குபேர யோகம்’ ஆகியவை மட்டுமே நகைச்சுவையானவை. சோடிப்பேயில் பேய் குறித்த நம்பிக்கையை அசைத்துக் காட்டுகிறார். குபேர யோகத்திலும் சாமியார்கள் ஜோசியர்கள் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையையும் அவர்களது போலித்தனத்தையும் அம்பலப்படுத்துகிறார்.
‘பழைய உலகம் வீழ்ந்து புதிய உலகம் எழுவதை வரவேற்கிற கருத்துலக வெளிச்சம் மட்டும் இவரிடம் ஏற்பட்டுவிட்டால் …காலத்தால் கரைத்துவிட முடியாத நிரந்தரப் புகழ்மிக்க படைப்புகள் பரிபூரணத்தன்மையுடன் வெளிப்படும்’ என்கிற மேலாண்மை பொன்னுசாமியின் அணிந்துரை பொருத்தமாக இருக்கிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

