தொலைந்து போன வாழ்வு  – நிகழ் அய்க்கண்

மக்களுடைய – மக்களுக்காக – மக்களால் எனக்கூறி ஆளப்படுகிற தேசமிது. உழைக்கும் மக்களுக்கு இந்த தேசத்தில் இரண்டுவித கடமைகள் இருக்கின்றன. ஒன்று, தேர்தல் காலத்தில் அனைவருக்கும் ஒரு வாக்குஒரு மதிப்பு எனும் அடிப்படையில் வாக்களித்து தனது ஜனநாயகக்கடமையை ஆற்றுவது. அடுத்தது, தனது உழைப்பின் மூலம் இந்த நாட்டினது வளங்களைப் பெருக்கி துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவது. முன்னதில், தேர்தல் முடிந்த கையோடு ஆட்சியில் அமருபவர்கள் தற்போதெல்லாம், மக்களை மறந்து கார்ப்பரேட்டுகளின் நலன் காப்பவர்களாக மாறிக்கொள்கின்றனர். பின்னதில் கார்ப்பரேட்டுகள், அரசின் ஆதரவுடன் தொழிலாளர்களின்  உழைப்பைச்சுரண்டி தன் லாபத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொள்கின்றனர்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நாட்டை ஆளுகிறவர்களும் கார்ப்பரேட்டுகளும் இதைத்தான் செய்து வருகிறார்கள்.எந்தெந்த நாடுகளிலெல்லாம் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள் வலுவாக அமலில் உள்ளதோ அங்கெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றுவதில் தயக்கம் கொள்கின்றன. தொழிலாளர்களின் சட்டங்களையும்  உரிமைகளையும் எங்கெல்லாம் ஆட்சியாளர்களின் துணைகொண்டு இலகுவாக வளைக்கமுடியுமோ, அங்கெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகளவு வேரூன்றியிருக்கின்றன.

இந்த நாடு, சந்தைமயத்திற்கு மாறிப்போய் இதுநாள் வரையிலுமான காலத்தைச்சற்று பின்னோக்கிப்பார்த்தால்,அது தொழிலாளர்களின் உரிமைகளை பறிகொடுத்தே தன்னை  ஒரு வளமிக்க நாடாக, ஆக்கிக்கொண்டிருப்பது தெரிய வரும். இன்று வரைக்கும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மருத்துவ வசதியின்றி, வேலை பாதுகாப்பற்று, தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டு, குறைந்த கூலிக்கு அதிக நேரம் தன் உழைப்பைச் செலுத்தி வருவதிலிருந்தே மேற் சொன்ன கூற்றினை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ, லாபம் என்று  வரும் போது மட்டும் அதனை தனதாக்கிக்கொள்கிறது. நஷ்டம்  என்று வரும்போது, தொழிலாளர்களை வேலையிழக்கச்செய்து  நட்டாற்றில் விட்டுவிடுகிறது.

Coronavirus lockdown hits India migrant workers' pay, food supply ...

நாட்டின் தொழில் வளம் பெருகுவதற்கு தொழிலாளர்களின் உரிமைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கும் ஆட்சியாளர்கள் யாவரும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை முறையாக அமல்படுத்திடுவதில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதி ! தொழிலாளர்களுக்கு ஒரு நீதி !!

கொரோனா தாக்குதல், பொருளாதார மந்த நிலை போன்ற காலங்களில் தொழிலாளர்கள்  வேலையிழக்கும் போதுதான், ஆட்சியாளர்கள் செய்யத்தவறியதும்  கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வந்த சூழ்ச்சியும் வெளிச்சத்திற்கு வருகிறது. இதன் விளைவாக, தொழிலாளர்களின் வாழ்வாதாரமும்  கேள்விக்குறியாவது மட்டுமின்றி, அவர்களை திக்கற்ற நிலைக்கும் தள்ளிவிட்டு விடுகிறது.

1990 களிலிருந்து  ஆட்சியாளர்களின் வீரமிக்க  வாய்ச்சொல்லை தொடர்ந்து கவனித்திருப்போமேயானால், இரண்டு விஷயங்கள் தெளிவாகப் புலப்படும். அதாவது.சந்தைமயக் கொள்கைக்கு மாற்றே இல்லை என்பதால், இனிமேல், இக்கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிற போக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றது. அடுத்து, ஒவ்வொரு ஆண்டிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது ஆண்டொன்டிற்கு எட்டு சதவீதத்திற்கு மேலாக இருக்கும் பட்சத்தில், அவ்வளர்ச்சியின் மூலம், நாட்டில் நிலவும் வறுமையை  கிட்டத்தட்ட பண்ணிரெண்டு ஆண்டுகளில்  முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் எனக்கூறியது.

இதில், ஆட்சியாளர்களின் மேற்கூறிய கூற்றினை ஆய்ந்து பார்க்கும் போது, சந்தைமயத்தின் விளைவால் மக்கள் நலன், ஜனநாயக உரிமைகள், பறிபோய் இருப்பதும், வேலைவாய்ப்பின்மை பெருகி சமூக-பொருளாதாரத்தளத்தில் சமத்துவமின்மையின் இடைவெளி அதிகரித்திருப்பதும் புரியும். அதுமட்டுமல்லாது, ஆட்சியாளர்கள் கூறியபடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதமானது இதுவரை எட்டு சதவீதத்திற்கும் மேலாக உயரவில்லை என்பதையும் கவனித்திருக்கமுடியும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம்  மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் பெருகிக்கொண்டே வந்திருப்பதிலிருந்து, பொருளாதார வளர்ச்சி யாருக்குக்கூடுதலாக பலனளித்திருக்கிறது என்பது சொல்லாமலேயே விளங்கியிருக்கும்.

ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசின் ஒத்துழைப்புடன், இந்த நாட்டின் வளத்தை மட்டும் கொள்ளையடிக்கவில்லை, மதிப்புமிக்க தொழிலாளர்களின் உழைப்பையும்  சேர்த்துச் சுரண்டித்தான் இவ்வளவு லாபம் ஈட்டியிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

தொழிலாளர்களும்,வேறு வழியற்று, தங்களது வாழ்வாதாரச்செலவுகளுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உழைப்பினை விற்பதினூடாக, ஒருவகையில், விற்பனைக்குரிய பண்டமாகவும்.மறுவகையில் அதே கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்திசெய்த பொருட்களை வாங்குவதின் மூலம் நுகர்வோராவும் இருக்கவேண்டியுள்ளது.

Migrant crisis amid coronavirus lockdown: 'Slave' cry after travel ...

சந்தைமயத்தினால், தொழிலாளர்கள் எந்த அளவுக்கு பயனடைந்திருக்கிறார்கள் என்பதனைக் காட்டுவதற்கு,அதன் ஆதரவாளர்கள் இரண்டு முக்கிய விஷயங்களைப் பொதுவெளியில் தவறாது பிரச்சாரம் செய்வதுண்டு. அதாவது, தொழிலாளர்களிடையே நுகர்வு சக்தி அதிகரித்து வருகிறது என்றும், வறுமைக்கோட்டினைத் தாண்டியவர்கள் பற்றிய புள்ளி விபரக்கணக்குகளையும் அடுக்கடுக்காக எடுத்துக்கூறுவர். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், எளியவர் ஒருவர் ஒருநாளைக்கு இரண்டு அமெரிக்க டாலர் அளவுக்கு சம்பாதித்துவிட்டால் அவர் வறுமைக்கோட்டினை தாண்டியவராகிவிடுவார் அவ்வளவுதான்.

2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவில், 271 மில்லியன்(27 கோடி ) தொழிலாளர்கள் வறுமைக்கோட்டின் எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்டனர் என்கிறது ஐ.நா.அமைப்பின் சமீபத்திய அறிக்கை.

கொரோனா தாக்குதலுக்கு முன்பான காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமும் ஆறு சதவீதத்திற்கும் கீழாகிவிட்டது.அது மட்டுமின்றி, வேலை வாய்ப்பின்மையும் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இதற்குக்காரணம் அன்னிய தொழில் முதலீடுகளின் வருகை குறைந்ததும், வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன் இல்லாததும், வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதும்தான்.

மேற்கூறியவற்றிலிருந்து, வறுமைக்கோட்டின் அளவைத்தாண்டிய ஐ.நா.வின் புள்ளி விபரஅறிக்கைக்கும், நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை அளவுக்கும் வேறுபாடு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இது ஒரு புறமிருக்க,  கடந்த மார்ச்-24 ந்தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, நாடுமுழுக்க ஊரடங்கு அமலாகிறது. அனைத்துவகை தொழில்களும் முடங்குகின்றன. இதனால் வேலைவாய்ப்பினை இழந்த, இடம்பெயர் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாகிறது. ஒரு பக்கம் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் பிரச்சனை. மறுபக்கம் வீட்டிலேயே இருக்கவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவுமான ஆட்சியாளர்களின் அறிவிப்பு வேறு.

இப்போதுதான், ஆட்சியாளர்களுக்கு, இடம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய பிரச்சனை எழுகிறது. இது நாள் வரையில் இவர்களோ,கார்ப்பரேட் நிறுவனங்களோ தொழிலாளர்களின் நலனுக்காக என்னென்னெ பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி வைத்திருக்கிறது என அறியும்போது, பேரதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இக்கொரோனா காலத்தில், மட்டும் இந்தியாவில் மொத்தமாக வேலையிழந்தோர் 14 கோடிப்பேர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் எட்டுக் கோடிப்பேர் இருக்கலாம் என்கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்.

The Formal-Informal Labour Nexus and Growth

ஆட்சியாளர்களின் அறிவிப்புக்கிணங்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபக்கம் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முன்வரவில்லை. இன்னொருவகையில் ஆட்சியாளர்களின் உதவியுடன் அத்தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு திரும்பவிடாமல் தடுக்கவும் செய்கின்றன.

போக்குவரத்தை நிறுத்தினால் இடம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச்செல்லாமல் தடுத்துவிடலாம் என்பதும் கூட அவர்களது எண்ணமாக இருந்திருக்கக்கூடும்.

ஊரடங்கிற்கு முன்பாக குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் வேலைபார்த்துவந்த தொழிலாளர்கள் ஊருக்குப்போய்விட்டால், ஊரடங்குக்குப் பிறகான காலத்தில் தங்களது உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடும் என்பது மட்டுமின்றி, தொழிலாளர்கள் பற்றாக்குறையால்,கூடுதல் ஊதியத்திற்கு புதிதாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்தவேண்டியிருக்கும். இதனால் லாபம் குறைந்து விடும் என்கிற கார்ப்பரேட் சுய நலனும் இதில் அடங்கியுள்ளது.

ஊரடங்கானது, சில இடங்களில் இரண்டு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும்,ஒவ்வொரு மாநிலத்திலும் வேலையிழந்து பட்டினியுடன் முடங்கியுள்ள தொழிலாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியாளர்களும் வேறுவழியின்றி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். தொழிலாளர்களில் சிலர், இரயிலில் தனது சொந்தச்செலவிலும்,மற்றும் சிலர் ஆட்சியாளர்களின் உதவியுடன் பேருந்திலும் தங்களது ஊரை நோக்கி புறப்பட்டுச்செல்கின்றனர். எஞ்சிய பெரும்பாலான தொழிலாளர்கள் தன் சொந்த ஊர் போவதற்கு ஒருபுறம் தவித்துக்கொண்டுள்ளனர். மற்றொருபுறம், தொழிலாளர்களில் பலர்,யார் உதவியையும் எதிர்பார்க்காமல், நாடுமுழுக்க தங்க நாற்கர சாலைகள் தோறும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி,உடுத்த மாற்று உடையின்றி,தங்க இடமின்றி,காலில் சிலருக்கு செருப்புமின்றி சிறார்கள் முதல் முதியோர் வரை சாரைசாரையாக தங்களது ஊருக்கு அணிவகுத்துச் செல்கின்றனர்.இந்தக் காட்சியைக்காணும் போது தான் தொழிலாளர்களின் ஆற்றாமையும்  ஆட்சியாளர்களின் வஞ்சகமும் தெரிகிறது.

இப்படியாக,மார்ச் -15 முதல் மே- 16 வரையில் நாடெங்கிலும் பரவியுள்ள  தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து சென்ற இடம் பெயர் தொழிலாளர்கள்  2000 விபத்துக்களைச் சந்தித்திருக்கின்றனர். அந்த விபத்துக்களால் 368 தொழிலாளர்கள்  தங்களது உயிரைப் பறிகொடுத்திருக்கின்றனர்.

தொழிலாளர்கள் ஒரேசமயத்தில், பட்டினியையும்  சாவினையும் கடக்கவேண்டியிருக்கிறது. இதுதான் துயரமே.

UP to employ migrants reaching home for making 10K km roads under ...

கொரோனா தொற்று அதிகரித்துவரும் வேளையில், இத்தொழிலாளர்கள் தங்களது ஊருக்குப் பயணத்தைத் துவக்கியிருக்கின்றனர். இதனால், தனிமனித இடைவெளி மற்றும் வீட்டிலே பாதுகாப்பாக இருப்பது எனும் ஆட்சியாளர்களின்  அறிவுரையைக் கடைபிடிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இவர்களில் யாராவது நோய்த்தொற்றுடன் ஊருக்குச் சென்றிருந்தால், அது மேலும் பரவி சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கிவிடக்கூடும். அது மட்டுமின்றி , வேலைவாய்ப்பினை இழந்து ஊருக்குச்செல்வதால், வாழ்வாதாரச் செலவுகள் இன்னும் சிக்கலை உருவாக்கிடலாம்.சுருக்கமாகக்கூறின், நோய்தொற்றும் வேலைவாய்ப்பின்மையும் சமூக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தவே செய்யும்.

கொரோனா காலத்தில், ஆட்சியாளர்களின்  மீட்பு நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, பொது நிறுவனங்களை தனியாருக்கு அனுமதித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்கிக்கொள்ளவும்,வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பளித்திடவும் எண்ணுகின்றனர். ஆனால், யதார்த்தத்தில்  ஆட்சியாளர்கள் நினைப்பதைவிட மேலும் நிலமை சிக்கலாகுவதற்கே வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

ஆட்சியாளர்கள், தொழிலாளர்களுக்கு வெறும் வேலைவாய்ப்பினை அளிப்பதில் மட்டும் கவனம் கொள்ளாமல்,அவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்படவும், வாழ்வாதாரம் மேம்படவும் வழிகாண வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்மை எனும் துயரம் மேலும் அதிகரித்துவிடக்கூடும்.

தொழிலாளர்களின் வாழ்வு என்பதை விட, தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெரிதாக எண்ணுகிற காலமிது. தனது லாபத்தின் சிறு பங்கினைக்கூட தொழிலாளர்களுக்காக இழக்க விரும்பாத இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் குறைந்த பட்ச உதவிகளைக்கூட அளிக்கத்தவறிய அல்லது உதவ   முன்வராத ஆட்சியாளர்களை எப்படிச்சொல்லி அழைப்பது எனத்தெரியவில்லை.

அனைத்து மக்களுக்கும் நீதி – சமத்துவம் – சுதந்திரம் – சகோதரத்துவம் யாவும் பொதுவே. இருப்பினும் ஜனநாயகத்தின் அங்கமாக விளங்குகின்ற நால்வகைத்தூண்களும், இது போன்ற பேரிடர் காலங்களில் கூட எளியமக்களுக்கு நம்பிக்கைக்குரியவைகளாக இல்லாதிருப்பதுதான் மிகவும் கவலையளிக்கிறது.