இந்தக் கொரோனா பேரிடர் காலத்திலும் “ரோஸா பார்க்ஸ்” ( உப தலைப்பு: மிருதுவாய் ஒரு நெருப்பு) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கு நன்றி!
புத்தக ஆசிரியர்கள் திருவாளர்கள். மா.லைலா தேவி- ச.மாடசாமி இணையர்கள்.
அமெரிக்க கறுப்பின மக்களின் மகத்தான தலைவர்களில் ஒருவர் ரோஸா பார்க்ஸ். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்தான் இப் புத்தகம்.சிறு நூல். ஆனால் அடர்த்தியான புத்தகம். ஒரு காவியத் தலைவியின் வரலாற்றை இலக்கிய அலங்கார மொழி நடையில் படைப்பது இரு எழுத்தாளர்களுக்கு எளிதானது.ஆனால், எளிமையான மொழிநடையே எழுத்தாளர்களின் பிரக்ஞைப் பூர்வமான முடிவு. எளிமையான எழுத்து நடை நம்மிடம் மிக வலிமையான உணர்வை ஏற்படுத்துகிறது. நீரோடை போன்று புத்தகம் செல்கிறது. படித்து முடித்ததும் நெஞ்சை விட்டு நீங்காத நினைவலைகள்.
“என்னால் மூச்சு விட முடியவில்லை” எனும் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரண ஓலம் அமெரிக்க நிறவெறி ஆதிக்கத்தின் குறியீடாகவே மாறியுள்ள இன்றைய நிலையில் ரோஸா பார்க்ஸ் புத்தகம் வந்துள்ளது.
புத்தகம் 1960கள், 1970 களில் அமெரிக்காவில் நிலவிய பாகுபாடு களையும், அதற்கெதிராக அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் சட்டப் போராட்டம், களப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதையும் ஆசிரியர்கள் உணர்வுப் பூர்வமாக சொல்லி உள்ளனர்.
நிற அடிப்படையில் தனிப் பள்ளி-ஆசிரியர்க ளுக்கு தனி ஊதியம், வாக்குரிமையில் பாகுபாடு,பஸ் பயணத்தில் பாகுபாடு என ஏராளமான பாகுபாடுகள்.
ரோஸா பார்க்ஸ் மையமான பஸ் புறக்கணிப்பு போராட்டம்.
தந்தையின் குடும்ப புறக்கணிப்பால் அம்மாவின் அரவனைப்பில், அடிமை வாழ்வை அனுபவித்த வெள்ளை ஆதிக்க எதிர்ப்புணர்வும், சுய மரியாதையையும் கொண்ட தாத்தாவின் வீட்டில் இருந்து ரோஸா மேள்கொள்ளும் கடுமையான கல்விப் பயணம்; நிறவெறி ஆதிக்க வன்முறையில் வெள்ளையினச் சிறுவர்களும் ஈடுபடுவதைப் பார்த்து திகைக்கிறோம். மென்மையானவர். ஆனால் உறுதி மிக்க ரோஸா எல்லா வற்றையும் அஞ்சாமல் எதிர் கொள்கிறார்.
ஒரு பெண்ணின் வாழ்வில் சிறப்பான கணவரும்,அமைப்பும் வாய்த்துவிட்டால் அவரின் வாழ்க்கை எவ்வளவு மகத்தானதாக மாறும் என்பதை …
ரோஸாவின் கணவர் ரேமாண்ட் பார்க்ஸ் மற்றும் கறுப்பர்களின் உரிமைகளுக்கான அமைப்பு ( NAACP) மூலமாகவும் காண்கிறோம். இயல்பான வெள்ளை ஆதிக்க எதிர்ப்புணர்வு டன் கணவரும் அமைப்பும் அமைந்ததால் மென்மையான ரோஸா பார்க்ஸ் வரலாற்று தலைவியாவதை மிக அழகாக சொல்கின்றனர் ஆசிரியர்கள்.
பஸ் நடு இருக்கையில் உட்கார்ந்தார் ரோஸா பார்க்ஸ் (1955,டிச.). வழக்கு பதிவு. நீண்ட சட்டப் போராட்டத்துடன் மாண்ட்காமரி கறுப்பர்கள் பஸ் புறக்கணிப்பு போராட்டம். 42000 கறுப்பினத்தவர்கள் 386 நாட்கள் நடந்தனர். மலைப்பாக உள்ளது இன்று இப்படிப் பட்ட போராட்டத்தை நடத்த முடியுமா என்று!
இந்தப் போராட்டத்தில் முன்னுக்கு வரும் மார்ட்டின் லூதர் கிங்கை (ஜீனியர்) சந்திக்கிறோம். அதே போது கேமரா வெளிச்சத்துக்கு கூசும் ரோஸா பார்க்ஸ் தனக்குரிய பங்கை செலுத்தி விட்டு இடத்தை அடைக்காமல் ஒதுங்குவதையும் பார்க்கிறோம்.
பேரா.ச.மாடசாமி- மா.லைலா தேவி இணையர் முன்னுரையில், ஒரு விதத்தில் இப் புத்தகம் தங்களின் அடையாளம் என்கின்றனர்.ரோஸா- ரேமாண்ட் பார்க்ஸின் வாழ்வைப் படித்த பின்னர் இது முற்றிலும் உண்மை என்று உணர்கிறோம்.
இச் சிறு புத்தகம் ரோஸா பார்க்ஸின் My Story உள்ளிட்ட அமெரிக்க ஆப்பிரிக்கர்களின் பல்வேறு இலக்கியங்களையும் படிக்கத் தூண்டுகிறது.
ம.கதிரேசன்.
Leave a Reply