மிதக்கும் உலகம் (Mithakkum Ulagam) – நூல்அறிமுகம்
மிதக்கும் உலகம் என்னும் நூல் ஜப்பானிய மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட கவிதைநூல். இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர்கள் பேரா. பா. இரவிக்குமார் மற்றும் பேரா. ப. கல்பனா. இந்தக் கவிதை நூலின் வயது 300 ஆண்டுகள். இது ஒருபுறம் கவிதையால் பெருமை அடைகிறது என்றால் மற்றொரு புறம் அந்த கவிதைகளை தத்துவமாக முறையில் மர அச்சு ஓவியத்தில் காட்சி படுத்துவதிலும் கவிதைக்கு வலுசேர்க்கிறது.
இந்த அற்புதமான படைப்பு தமிழில் எளிய நடையில் அதேசமயம் ஆழமாகவும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. நூலை வாசிக்கும் பொழுது ஜப்பான் மொழி அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் கவிதையைப் படிக்கக்கூடிய மனோபாவம் போதும். அது நம்மை அவ்வந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
மொழிக்குள் ஒளிந்திருக்கும் அனுபவ அறிவே நம்மை இயல்பாக வந்தடைந்து விடுகிறது. அதனால் நாம் பன்மொழி வித்தகராகவும் மொழியியல் அறிஞராகவும் இருக்க வேண்டிய அவசியம் வேண்டியதில்லை. தாய்மொழி அறிவே போதுமானது. இன்றும் ஜப்பானிய மக்கள் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்கின்றனர். அதனால் மற்ற மொழிக்கு எதிரானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் தங்கள் தாய்மொழியில் கண்டறியும் அறிவுதான் எந்த பாசாங்கும் இல்லாமல் எளிமையாக உணரவைக்கும். இதை நன்கு அறிந்தவர்கள் ஜப்பானியர்கள்.
கல்வி, வேலை வாய்ப்பு இன்ன பிறவற்றால் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக வளம் வரும் ஜப்பான், அரசியல் பொருளாதரத்தில் தனக்கான ஓர் இடத்தைத் தக்கவைத்து கொண்டிருப்பதைப் போலவே இலக்கியத்திலும் தன்னுடைய இடம் எதுவென்பதை அறிந்து வைத்துள்ளது. காலச்சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ளும் சக்தி ஜப்பான் நாட்டுக்கும், அம்மொழிக்கும் உண்டு. இன்றைக்கு எத்தனையோ பழமையான மொழி சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள விரும்பாத போது அந்த மொழி காணாமல் போய்விட்டன. ஆனால் ஜப்பான் மொழி தன்னை வளர்த்தெடுக்கும் மொழியாகவும் புதியபுதிய சிந்தனைகளை உள்வாங்கப்படும் மொழியாகும் விளங்குகிறது. அந்த வகையில் ஹைக்கூக் கவிதை சொல்ல முடியும்.
ஹைக்கூக் கவிதை வடிவம் என்பது மிகக்குறைந்த சொற்களைக் கொண்டு குறிப்பாக 17 சீர்களையும் மூன்று வரிகளில் அடக்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜென் தத்துவத்தையும், எதார்த்த வாதத்தையும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதக் கலைப் படைப்பு. ஜப்பானின் ஹைக்கூ தந்தை மாட்சுவோ பாக்ஷோ. அவர் எழுதிய ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று சொல்ல முடியும்.
இந்திய மொழிகளில் கவிதை நூல்கள் அதிகமாக வெளிவரும் மொழி தமிழ்மொழி. ஹைக்கூக் கவிதை நூல்கள் கூட அதிகம் வெளிவந்தவை தமிழில் மட்டுமே. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளியாகி உள்ளன.
இங்கும் மிதக்கும் உலகம் எனும் நூல் ஜப்பான் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்றாலும் இதை ஹைக்கூக் கவிதை என்று சொல்ல முடியாது. ஹைக்கூக் கவிதை இலக்கணத்தை மீறி எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம். ஹைக்கூ 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. மிதக்கும் உலகம் சற்றொப்ப அதற்கு முன்பாக தோன்றியது. இந்நூலில் மொத்தம் 47 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட முடியும். ஆனால் அப்படி படித்தால் இந்தக் கவிதையின் ஆழத்தையும், அழகையும் நம்மால் உணர முடியாது. ஒரு கவிதையை மட்டும் படித்து விட்டு அந்த கவிதைக்கு பின்னால் நாம் பயணிக்க வேண்டும். இதில் காதல், தத்துவம், இசை உள்ளிட்ட பொருண்மைகளில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் காதல் கவிதையே அதிகம். காரணம் வெறும் காதல் என்பது பாலினம் சார்ந்தது மட்டுமல்ல மாறாக அது இயற்கையை காதலிப்பதாகவும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு கவிதையை விளக்கும் வண்ணம் அதற்குண்டான மர ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியம் கவிதையின் பிரதிபலிப்பு என்று கூறமுடியும். இதில் உள்ள ஓர் ஆச்சரியம் என்னவெனில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட மர ஓவியத்தை இந்த நூற்றாண்டுக்கு எப்படி கடத்தினர் என்பதுதான். ஒருபுறம் கவிதை வரிகளால் மிதக்கும் உலகம் அழகு மிளிர்கிறது என்றால் மற்றொருபுறம் ஓவியத்தாலும் அழகு கூடுகிறது. நாகடோமி யாகாமேரி என்னும் கவிஞர் காதலைப் பற்றி
பூமிக்குக் கீழே
சொர்க்கத்திற்கு மேலே
கடவுளர்கள்
இல்லாத போதும்
மீண்டும் ஒருமுறை
என் காதலியை சந்திக்காத
அந்தப் பொழுதில் தான்
நான் மரிப்பேன் (ப. 30).
இந்தக் கவிதை கடவுளின் உயர்வை பூமிக்கும் கடவுளுக்கும் ஒரு நேர்கோட்டுப் பாதியை உருவாக்குகிறது. அதேபோன்று,
காதலருக்கு அந்தப் பெயரை
முதன் முதலில் சூட்டியவன்
யாராக இருக்கக்கூடும்?
மரணம் என்னும்
சொல்லையே
காதலுக்கு பதிலாக
அவன் வைத்திருக்கலாம் (ப. 93)
போகின் க்ஷூ என்னும் கவிஞர் சொல்லிய கவிதையைப் போன்று தமிழில் கவிஞர் அறிவுமதி அவர்களும் நட்பு காலத்தில்,
அணுவணுவாய்
சாவதற்கு முடிவெடுத்த பிறகு
காதலைத் தவிர வேறொன்றும் இல்லை
என்பார். காதல் வாழவே கற்றுத் தருகிறது. வாழ்க்கையின் ஆழத்தை உணர்த்துகிறது. வாழ்க்கை மீது ஒரு பற்றை உருவாக்குகிறது. அது ஒரு வசந்த காலம் போலவே வாழ்க்கை இனிமையானதாகவும், அர்த்தமுடையதாகவும் காதல் கற்பிக்கிறது. அதேபோன்று மரணம் குறித்த தத்துவ உரையாடல் இவ்வுலகில் நீக்கமற நிறைந்து இருப்பதையும் காணலாம். அந்த வகையில் ஓடோமா தபிடோ என்னும் கவிஞர் மரணம் பற்றி பதிவு செய்யும் கவிதை ஒன்றில்
உயிர்கள் அனைத்தும்
என்றோ ஒரு நாள்
மரணத்தை தழுவும்
ஆதலால்
எனக்கு நானே
அனுபவிக்க வேண்டும்
இந்த உலகத்தில்
எஞ்சி இருக்கும் காலம் வரை (ப. 37)
இந்த சிந்தனை இன்னும் மாற்றி யோசித்தால் வாழ்க்கை எத்துனை அர்த்தமுடையதாக மாறும் என்பதை பின்வரும் கவிதைச் சுட்டுகிறது.
பிறப்பெடுத்த நாம் அனைவரும்
என்றோ ஒரு நாள்
இறந்தே ஆக வேண்டும்
அப்படிப்பட்ட பொருட்களாய்
நாமிருக்கும் போது
நமக்கு நாமே
மகிழ்வோடு இருப்போம்
இந்த வாழ்க்கை
நீடிக்கும் காலம் வரை (ப.57)
எவ்வளவு உன்னதமான வரிகள். வாழ்க்கையில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழும் வாழ்நாள் எவ்வளவு தூரம் என்று தெரியாது. ஒருவேளை இன்று, நாளை, நாளை மறுநாள் அல்லது என்றோ ஒரு நாள் இப்பூமி பந்தில் இருந்து செல்ல வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அல்லது துடைத்தெரியப்படுவோம் இது நிதர்சனமான உண்மை. அதனால் மற்றவர்களின் எதிர்பார்ப்பு அல்லது அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வதிலேயே காலத்தை செலவிடாமல் நம்முடைய வாழ்நாளை நாமே வாழ்ந்து முடிக்க வேண்டும். அடுத்து கடவுளைப் பற்றியே தத்துவார்த்த கவிதை ஒன்று
எங்கோ
தொலைவிலுள்ள
ஏதோ ஒரு பொருள் என்று
கடவுளை என்ன வேண்டாம்
உங்கள் மனங்களால்
அவரைத் தேடுங்கள்
ஏனெனில்,
இதயம் தான் கடவுளின் மேடை (ப.58)
கியோஸோ எனும் கவிஞர் கடவுளைத் தேடிச் செல்வோருக்கு மிக எளிய வழியை காண்பித்துள்ளார். மனிதனுக்கு இதயம் தான் ஆன்மா. இதயம் சீராகவும் செரிவாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவதை மேலோட்டமாக இக்கவிதை உணர்த்துகிறது. ஆனால் அதன் அடி நாதத்தில் அன்பு என்னும் தாரக மந்திரத்தாலே கட்டப்பட்டதை உணர்த்துகிறது. இறைவன் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மட்டும் இருப்பதில்லை. அவ்விடத்தை நாடு செல்வதிலும் தேடி ஓடுவதிலும் உண்மையான கடவுளை கண்டடைய முடியாது. உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் நீங்கள் தேடும் கடவுள், நீங்கள் வணங்கும் தெய்வம் உங்கள் இதயத்தில் உறைந்துகூட இருக்கலாம் என்பதை வலியுறுத்துகிறது.
இப்படி மிதக்கும் உலகம் நூலில் இடம் பெற்றுள்ள 47 கவிதைகளும் வாழ்க்கையைப் போதிக்கிறது. வாழ்க்கைக் குண்டான அர்த்தங்களை கற்பிக்கிறது. வாழ்க்கையை நேசிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. வாழ்க்கையில் உன்னத குறிக்கோளையும் அதன் தத்துவ சிந்தனைகளையும் அழகையும் கவிதைப் படிக்கும் போது வெறும் கவிதை என்று கடக்க முடியவில்லை. மறந்து போன வாழ்க்கையின் அர்த்தங்களை போதிக்கிறது என்றுதான் கூற முடியும்.
இப்படி ஒரு சிறந்த கவிதை நூலை மொழிபெயர்ப்பு செய்த தமிழ்மொழிக்கு கொடுத்ததற்காக பேராசிரியர் முனைவர் பா. இரவிக்குமார் மற்றும் பேராசிரியர் முனைவர் ப. கல்பனா ஆகிய இவ்விருவருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றி கடன் பட்டுள்ளது.
நூல் அறிமுகம் :
பேரா. எ. பாவலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.